January

January

10 மாதங்களுக்கு தேவையான நெல் இருப்பு இலங்கையில் இருக்கின்றது !

எதிர்வரும் 10 மாதங்களுக்கு தேவையான நெல் இருப்பு நாட்டில் இருப்பதாகவும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது எனவும் சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மாகாணங்களிலிருந்து நெல் அறுவடை கிடைப்பதன் காரணமாக இந்த வாரம் அரிசி விலைகளில் குறைவு ஏற்படக்கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் பி.கே ரஞ்சித் தெரிவித்துள்ளார்

சந்தைகளில் தற்போது சகல ரக அரிசிகளின் விலைகளும் அதிகரித்துள்ளன. கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்ட நாள் முதல் வர்த்தகர்கள் விரும்பியவாறு அரிசிகளின் விலைகளை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கே ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

சீனாவில் பிறப்பு விகிதம் ஐந்தாவது ஆண்டாகவும் சரிவு !

உலகிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடு சீனா. ஆனால், அங்கு சமீபகாலமாக குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதை சரிக்கட்ட சீன தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கி, இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அந்நாட்டு அரசு கடந்த கடந்த ஆகஸ்டு மாதம் அறிவித்தது.
மேலும், சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு, பேறுகால விடுமுறை உள்ளிட்ட சலுகைகளை மாகாண அரசுகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், சீனாவில் 2021-ம் ஆண்டு மக்கள் தொகை அறிக்கையை அந்நாட்டின் தேசிய புள்ளிவிவரத் துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:
கடந்த 2021-ல் சீனாவின் மக்கள் தொகை 141 கோடியே 26 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, 2020ல் 141 கோடியே 20 லட்சமாக இருந்தது. இதன்படி கடந்த ஒரு ஆண்டில் மக்கள் தொகை ஆறு லட்சம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில் குழந்தை பிறப்பு விகிதம் ஒரு கோடியே ஆறு லட்சமாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது என தெரிவித்துள்ளது.
சீனாவில் பிறப்பு விகிதம் சரிந்து வருவது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். வேலை செய்யும் திறன் உள்ளோர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் விகிதாச்சாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

கணக்கு பார்க்க தெரியாத ஜனாதிபதி கோட்டாபாயராஜபக்ஷ !

ஜனாதிபதிக்கு கணக்கு பார்ப்பதற்கு தெரியாது போல் விளக்குகின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற கருப்பு பொங்கள் நிகழ்வில் கலந்துகொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் ஜனாதிபதி அவருடைய விசேட உரையில் ஆவேசமாக பல கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றார். தனது அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து 95 ரூபாய்க்கு நெல்லினை கொள்வனவு செய்வதாக தெரிவித்திருக்கின்றார்.

நான் நினைக்கின்றேன் ஜனாதிபதிக்கு கணக்கு பார்க்க தெரியாது போல் விளங்குகின்றது. விவசாயிகளின் ஒரு கிலோ நெல்லுக்கு 95 ரூபாய் கூட கொடுத்தால் அவர்களுடைய முதலீடு கூட பெற முடியாது என்பது ஜனாதிபதிக்கு விளங்கவில்லை. கணக்கு வழக்கு தெரியாத ஒருவர் ஜனாதிபதியாக வந்தால் இந்த நிலை தான் வரும் .

அதுபோன்று அவருடைய அல்லக்கைகள் இந்த மாவட்டத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு ஒரு கணக்கும் தெரியாமல் போயுள்ளது என தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரை காண ஆயிரக்கணக்கில் அலை மோதும் மக்கள் !

புதிதாக திறக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத்தின் மெரினா நடைபாதையில் பெரும் மக்கள் கூட்டம் அலைமோதுவது கொழும்பு துறைமுக நகர கொரோனா அலை உருவாகும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்களின் நடத்தை புதிய  கொரோனா அலையை உருவாக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எனவே, கொழும்பு துறைமுக நகரத்தின் மெரினா நடைபாதையில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது கண்டிப்பாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விடயம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஆங்கில ஊடகமொன்று, ஆதாரங்களின்படி, ஓமிக்ரோன் மாறுபாடு இலங்கையில் பரவி வருவதாகவும் கொழும்பு துறைமுக நகரத்தின் மெரினா நடைபாதையில் கூட்டம் கூடுவது தொற்றுநோய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக, சமூக விலகல் இல்லாமல் உல்லாசப் பாதையில் நுழைவதற்கான முறைக்காக பொதுமக்கள் காத்திருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

வளாகத்திற்குள்கூட சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றும் நீண்ட வார இறுதியில் நடைபாதையில் நுழைந்த பெருந்திரளான மக்கள் முகக்கவசம் அணியாமல் புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 50,000 பேர் பார்வைக்காக இந்த இடத்திற்கு வருகை தந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு துறைமுக நகர மெரினா நடைபாதை கடந்த வாரம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம் – எச்சரிக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் !

ஒமிக்ரோன் பிறழ்வால் நாட்டில் ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.

நீண்ட வார இறுதியில் பொது ஒன்றுகூடல்களால் அடுத்த இரு வாரங்களில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரான வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

ஒமிக்ரோன் பிறழ்வால் உலகம் முழுவதும் குறிப்பாக அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடாவில் நோய்த்தொற்று விகிதம் வெகுவாக அதிகரித்துள்ளது என்பது தெளிவாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையிலும் நோய்த்தொற்றுகள் சிறிதளவு அதிகரித்துள்ளது. ஒமிக்ரோன் பிறழ்வின் அதிகம் பரவும் தன்மையால் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் ஒரு உயர்வு ஏற்படும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

தடுப்பூசி திட்டத்தின் வெற்றியினால் , தொற்றுநோயுடன் தொடர்புடைய  இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், 12-15 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகள் தொடர்பில் தவறான தகவல்கள் பரவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார், மேலும் இதுபோன்ற கூற்றுக்கள் அறிவியல் சோதனைகள் மூலம் சரிபார்க்கப்படவில்லை.

எனவே வைரஸுக்கு எதிராக கணிசமான பாதுகாப்பை வழங்குவதால், அனைத்து நபர்களும் தடுப்பூசியைப் பெறுமாறும் அவர் வலியுறுத்தினார். கொரோனா வைரஸின் எதிர்காலம் நிச்சயமற்றதாக இருப்பதால், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் புதிய பிறழ்வுகளை அடையாளம் காணும் சோதனையை முன்னெடுப்பதற்கு நாட்டின் பிற பல்கலைக்கழகங்களிலும் வசதியை ஏற்படுத்துமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மாத்திரமே தற்போது இலங்கையில் தொடர்புடைய சோதனைகளை முன்னெடுக்கும் ஒரே இடம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் எரித்துக்கொலை செய்யப்பட்ட இலங்கையர் – நட்டஈட்டை வழங்கிய பாகிஸ்தான் !

பாகிஸ்தான் − சியல்கோர்ட் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கானோரினால் தீ வைக்கப்பட்ட பிரியந்த குமார தியவடனவிற்கு, பாகிஸ்தான் அரசாங்கம் நட்டஈட்டை வழங்கியுள்ளது.
பிரியந்த குடும்பத்திற்கு பாகிஸ்தான் கோடிக்கணக்கான ரூபாவை வழங்கியது
பிரியந்த குமார தியவடனவின் மனைவியின் வங்கி கணக்குக்கு பணம் பரிமாற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சியான PTI அறிவித்துள்ளது.

இதன்படி, 100,000 அமெரிக்க டொலர் (இலங்கை ரூபா. 20252320.00) மற்றும் அவரது முதல் மாத சம்பளமான 1667 அமெரிக்க டொலர் (இலங்கை ரூபா.337606.17) பணம், பிரியந்த குமார தியவடனவின் மனைவியின் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு வங்கி கணக்குக்கு வைப்பிலிட்டமைக்கான ஆவணங்களை PTI கட்சி, வெளியிட்டுள்ளது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடர் – இலங்கை அணி தொடர் வெற்றி !

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 37 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக துனித் வெல்லாலகே 52 ஓட்டங்களைப் பெற்று கொடுத்தார்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் நேர்ந்த சோதனை – உலகின் முதல் நிலை வீரரை திருப்பியனுப்பிய அவுஸ்திரேலியா !

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவில் தங்க அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. இதனால் அவர் அவுஸ்திரேலியாவில் இருந்து விரைவில் வெளியேற்றப்படுவார்.

இதன்மூலம் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் நடப்பு சாம்பியனான அவர் நாளை திட்டமிட்டபடி விளையாட முடியாது.

34 வயது ஜோகோவிச் டென்னிஸில் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ரோஜர் ஃபெடரர் மற்றும் ரஃபேல் நடால் மற்றும் நோவாக் ஜோகோவிச் ஆகியோர் அதிகபட்ச ஆண்கள் சிங்கிள் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர்களாக உள்ளனர்.

இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றால் மற்ற இருவரையும் இரண்டாம் இடத்துக்குத் தள்ளி, அதிக தனிநபர் கிராண்ட் ஸ்லாம் வென்ற ஆண் டென்னிஸ் வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பார் நோவாக் ஜோகோவிச்.

கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் அவருக்கு அளிக்கப்பட்ட விசா குடிவரவுத் துறையால் ரத்து செய்யப்பட்டது.

வெளிநாட்டவர்கள் அவுஸ்திரேலியாவில் நுழைய கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி போடாத ஒருவருக்கு விசா கொடுத்ததற்கு அவுஸ்திரேலியாவிலும் பரவலான எதிர்ப்பு எழுந்தது.

விசா ரத்து செய்யப்பட்டபின் நோவாக் ஜோகோவிச் தடுப்பு மையம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் நீதிமன்றத்தை நாடிய நோவாக் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதி பெற்றார்.

எனினும் தமது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் ஜோகோவிச்சின் விசாவை மீண்டும் வெள்ளியன்று ரத்து செய்தார். அவர் அந்நாட்டில் இருப்பது தடுப்பூசிக்கு எதிரான உணர்வைத் தூண்டும் விதமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

இதை எதிர்த்து ஜோகோவிச் ஆஸ்திரேலியாவின் உச்சபட்ச நீதிமன்றங்களின் ஒன்றான, மெல்பர்னில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தை நாடினார். டென்னிஸ் வீரர் தரப்பில் 268 பக்க பிரமாண பத்திரமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக, ஜோகோவிச் தடுப்பூசிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களுக்கு முன்மாதிரியாக உள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தரப்பு வாதிட்டது. ஆனால், இதற்கான ஆதாரங்கள் மிகவும் குறைவாகவே உள்ளதாக ஜோகோவிச் தரப்பு தனது வாதத்தை முன்வைத்தது.

அரசு மற்றும் ஜோகோவிச் தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஐ.நா. வின் ‘கோவேக்ஸ்’ திட்டம் – ஏழை நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகள் விநியோகம் !

கொரோனா நோய் தொற்று தொடங்கிய பிறகு பல ஏழை நாடுகள் அதற்கான தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நாடுகளுக்கு உதவும் வகையில் ஐ.நா. சபை ‘கோவேக்ஸ்’ என்ற உலகளாவிய தடுப்பூசி  திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது.

வளர்ந்த மற்றும் பணக்கார நாடுகள் இந்த திட்டத்தின் கீழ் நன்கொடையாக அளித்த தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கி வருகிறது. தடுப்பூசிகள் வினியோகத்தில் சமத்துவமின்மை நிலவுவதாக நீண்ட நாட்களாக குற்றம்சாட்டி வரும் உலக சுகாதார அமைப்பு, பிற நாடுகளும் கோவேக்ஸ் திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

கடந்த 13-ந்திகதி நிலவரப்படி 194 உறுப்பு நாடுகளில் 36 நாடுகள் 10 சதவீதத்துக்கு குறைவாகவும், 88 நாடுகள் 40 சதவீதத்துக்கு குறைவாகவும் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கடந்த மாதம் கூறுகையில்,

‘‘வருகிற ஜூலைக்குள் அனைத்து நாடுகளும் 70 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொள்வதாக இலக்கு நிர்ணயித்து புத்தாண்டு தீர்மானமாக எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

இந்தநிலையில் ஐ.நா. சபை மூலம் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் இதுவரை 100 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கி சாதனை படைத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு நேற்று தெரிவித்தது.

ருவாண்டாவுக்கு கடந்த 15-ந்திகதி 11 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் இந்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 100 கோடியை எட்டியுள்ளது.

“ஜனாதிபதியின் விவசாயக் கொள்கை பேரழிவாக மாறியுள்ளது.” – ஹரினி அமரசூரிய

“ஜனாதிபதியின் விவசாயக் கொள்கை பேரழிவாக மாறியுள்ளது.” என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

நாட்டின் கடன் தரமதிப்பீடுகள் தொடர்ச்சியாகக் குறைக்கப்படுவதால் முதலீட்டாளர்கள் ஊக்கமிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச தரப்படுத்தல் முகவர் நிலையங்கள் சுயாதீனமானவை எனவும் முதலீட்டாளர்கள் தீர்மானங்களை எடுப்பதற்கு அவற்றின் மதிப்பீடுகள் மிகவும் முக்கியமானவை எனவும் அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஹரினி அமரசூரிய, நாடு அந்நிய செலாவணி நெருக்கடிக்கு உள்ளாகி வருவதால் இறக்குமதி செலவுகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். அங்கு பேசிய அவர்,

காரணத்தினால் அடுத்த சில மாதங்களில், அரசாங்கம் பெரிய அளவிலான உணவை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இருப்பினும் ஏனைய நாடுகளுடனான இலங்கையின் உறவு மோசமடைந்துள்ளதாகவும் அதுவும் நாட்டுக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் ஹரினி அமரசூரிய சுட்டிக்காட்டினார்.