January

January

“இலங்கையை பாதுகாப்பற்ற இடமாக சித்தரிப்பதற்கு முயலுவோர் கைது செய்யப்படுவர்.” – சரத்வீரசேகர

பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னால் முக்கிய சூத்திரதாரி ஒருவர் உள்ளார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

கர்தினால் மல்கம் ரஞ்சித் வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து பதலகமவில் தனது கருத்தினை வெளியிட்டுள்ள சரத்வீரசேகர மேலும் தெரிவித்த போது,

தேசிய பாதுகாப்பினை கட்டியெழுப்புவதில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கான சதியாக இது இருக்கலாம். ஐந்து மணியளவிலேயே சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டதால் சந்தேநபரை கைதுசெய்வதற்காக சிசிடிவியில் மூன்று மணிக்கு பின்னர் பதிவான காட்சிகளையே பொலிஸார் விசாரணை செய்தனர்.

கொழும்பில் மருத்துவமனையொன்றில் கைக்குண்டு மீட்கப்பட்டது போன்ற சம்பவமாக இது இருக்கலாம். பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் முன்னேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம். இலங்கை அரசாங்கத்தை செயல் இழக்கச்செய்வதன் மூலம் இலங்கையை பாதுகாப்பற்ற இடமாக சித்தரிப்பதற்கு முயலும் தனிநபர் அல்லது குழுவினரை கைதுசெய்வதற்கான முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

‘கியூபாவிலும் வெனிசுவேலாவிலும் படைகளை குவிப்போம்” – அமெரிக்காவை எச்சரிக்கிறது ரஷ்யா !

அமெரிக்காவுடனான பதற்றம் அதிகரித்தால் கியூபாவிலும் வெனிசுவேலாவிலும் படைகளை குவிப்போம் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவின் வெளியுறவுத் துறை இணையமைச்சர் செர்கெய் ரியப்கோவ் கூறுகையில்,

‘உக்ரைனையோ சோவியத் ஒன்றியத்தில் அங்கம் வகித்த மற்ற நாடுகளையோ நேட்டோ அமைப்பு தன்னுடன் இணைத்துக் கொள்ளக் கூடாது என்று ரஷ்யா வலியுறுத்தி வருகிறது. அத்தகைய கூட்டுறவை ஏற்படுத்திக்கொள்ளப் போவதில்லை என்ற உத்தரவாதத்தை ரஷ்யா எதிர்பார்க்கிறது.

ஆனால், அவ்வாறு உத்தரவாதம் அளிக்க நேட்டோ அமைப்பும் அமெரிக்காவும் பிடிவாதமாக மறுத்து வருகின்றன. அந்த வகையில், ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான அணுகுமுறை எதிரும் புதிருமாக உள்ளது. எனவே, இரு தரப்பினருக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படுவது சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் நேட்டோவுடனான பதற்றம் தொடர்ந்து அதிகரித்தால், அதனை எதிரகொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ரஷ்யா மேற்கொள்ளும்.

அந்த நடவடிக்கைகளில் ஒன்றாக, அமெரிக்காவுக்கு அருகே அமைந்துள்ள கியூபாவிலும் வெனிசுவேலாவிலும் ரஷ்யப் படைகளைக் குவிக்கப்படுவதற்கான வாய்ப்புகளையும் மறுக்க முடியாது’ என கூறினார்.

“எமது மக்கள் பொருளபாதார ரீதியாக பழமிழந்து போயுள்ளார்கள்.” – சி.வி.விக்னேஸ்வரன்

எமது பங்காளிக் கட்சிகளை நாங்கள் பாராட்ட வேண்டும்.எமது கட்சிக்கு முன்னுரிமை அளிப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அதனால் அவர்களுடன் இணைந்து செயற்படுவது இலகுவாக உள்ளதென தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயற் குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது கட்சியின் பதிவின் பின்னர் இன்று முதலாவது செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மக்கள் பொருளாதார ரீதியாகப் பலம் இழந்து காணப்படுகின்றார்கள். இந்த நிலையில் நாங்கள் எந்த அளவுக்கு கட்சி என்ற ரீதியில் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது சம்பந்தமாக பேசியுள்ளோம்.அந்த வகையில் வீட்டுத்தோட்டம் காளான் வளர்ப்பு பற்றி ஆராய்ந்தோம். எங்களால் முடிந்த புலம்பெயர் உறவுகளுடன் இணைந்து மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்ய முடியும் என்று பேசியுள்ளோம்.

தவழ்ந்துவிட்டு தற்பொழுது எழுந்து நிற்கும் கட்சியாக நாங்கள் இருக்கின்றோம்.அடிமட்டத்தில் மக்களின் ஆதரவை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். அடிமட்டத்தில் மக்களிடம் வேலை செய்ய வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.அதேவேளை தலைவர்கள் மூத்தவர்களின் அனுபவங்களும் அறிவும் அரசியல் ஞானமும் இளைஞர்களின் வீரியமும் சேர்ந்து எமது கட்சியைக் கொண்டு நடத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. கொரோனா, நாடாளுமன்ற நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஒரு வருடத்தில் எமது கட்சியின் செயற்பாடுகள் குறைந்தளவிலேயே நடந்திருந்தது. வேகமாக கட்சியின் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்

இதுவரை காலமும் நாங்கள் கூட்டணி என்ற வகையிலே ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டோம்.என்னுடைய கருத்து என்னவென்றால் ஒவ்வொரு பங்காளிக் கட்சியும் தம்மை பலப்படுத்த வேண்டும். பின்னர் தேர்தல் காலத்தில் எல்லோரும் சேர்ந்து பொதுச் சின்னத்தில் முன்னிறுத்தி முகம் கொடுக்கவேண்டும்.

எமது பங்காளிக் கட்சிகளை நாங்கள் பாராட்ட வேண்டும்.எமது கட்சிக்கு முன்னுரிமை அளிப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.அதனால் அவர்களுடன் இணைந்து செயற்படுவது இலகுவாக உள்ளது என்றார்.

தமிழ் கட்சிகள் பொதுவாக கூட்டிணைந்து போட்டியிடுவது தொடர்பில் கேள்வி எழுப்பிய போது, வஞ்சகம் இல்லாத நிலையில் ஒவ்வொரு கட்சியும் முன்வந்தால் இணைந்து செயற்படலாம். உள்ளே ஒரு காரணத்தை வைத்து கொண்டு சேர்ந்து செல்வோம் என்று கூறிக்கொண்டு இறுதி நேரத்தில் வெளியில் தள்ளுவதை ஏற்கமுடியாது. எல்லோரும் சேர்ந்து செயற்பட முடியும் என்றால் அதனை நான் வரவேற்கின்றேன். ஆனால் அதற்கு பல சிக்கல்கள் இருக்கின்றன என்றார்.

“பசியால் உயிரிழக்கும் ஆப்கானிஸ்தானியர்களை காப்பாற்ற முன்வாருங்கள்.” – சர்வதேசத்துக்கு ஐ.நா அழைப்பு !

தலிபான்கள் ஆட்சிச் செய்து வரும் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பில் அவர்,
20 ஆண்டுகள் கழித்து, அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள் விலகலுக்கு பிறகு, தலிபான் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது ஆப்கானிஸ்தானின் உதவி சார்ந்த பொருளாதாரம் ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்தது. சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானின் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்கியது. பொருளாதார ஆதரவை நிறுத்தியது, தலிபான்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை.
பொருளாதாரத்தை காப்பாற்ற பணம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் விதிகள் மற்றும் நிபந்தனைகள் இந்த அவசர சூழ்நிலையில் நிறுத்தப்பட வேண்டும். உலகின் பெரும்பாலான நிதி அமைப்பு டொலரில் செயல்படுவதால் அமெரிக்காவிற்கு மிக முக்கிய பங்கு உள்ளது. முக்கியமாக அமெரிக்காவில் உள்ள ஆப்கானிய வெளிநாட்டு இருப்புகளில் 7 பில்லியன் டொலர்களை அமெரிக்கா முடக்கியுள்ளது. ஆப்கானிய பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை விரைவாக மீட்பது மிகவும் முக்கியமானது.
பசியால் உயிரிழக்கும் ஆப்கானிஸ்தானியர்களை காப்பாற்ற  ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி அந்த நாட்டிற்கு வழங்கப்பட வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் ஆப்கானியர்கள் மரணத்தின் விளிம்பில் உள்ளனர்.  8.7 மில்லியன் ஆப்கானியர்கள் பட்டினியினால் வாடி வருகின்றனர். மருத்துவர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மின் பொறியாளர்கள் மற்றும் பிற அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க சர்வதேச நிதி அனுமதிக்கப்பட வேண்டும்.
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவளிக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அதேவேளையில், அடிப்படை மனித உரிமைகளை அங்கீகரித்து பாதுகாக்கவும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை பாதுகாக்கவும், தலிபான் தலைவர்களுக்கு அவசர வேண்டுகோளை விடுக்கிறேன். இவ்வாறு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் குறிப்பிட்டுள்ளார்.

“அரசிலிருந்து வெளியேற நாம் தயங்க மாட்டோம்.” – நாமலுக்கு மைத்திரிபால சிறிசேன பதில் !

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டு அரசில் பிரதான வகிபாகத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வகிக்கின்றது. இந்த அரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறினால் அரசு கவிழ்வது உறுதி.” என  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எம்.பி. தெரிவித்தார்.

‘அரசின் கொள்கைகள் பிடிக்கவில்லையெனில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கௌரவமான முறையில் வெளியேறவேண்டும்’ என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்துகொண்டு எமக்குச் சவால் விடும் சிறியவர்களும், பெரியவர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்துதான் அரசியலை ஆரம்பித்தார்கள். சுதந்திரக் கட்சிதான் அவர்களின் அரசியல் வாழ்வுக்கு முகவரி கொடுத்தது. இதை மறந்து அவர்கள் செயற்படுகின்றார்கள்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டணி வெற்றியடைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே பிரதான காரணம். இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசில் பிரதான வகிபாகத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வகிக்கின்றது. அரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறினால் அரசு கவிழ்வது உறுதி.

இதை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமை புரிந்துகொள்ளும். அரசைக் கவிழ்ப்பது எமது நோக்கமல்ல. எனினும், அரசு தவறான பாதையில் தொடர்ந்து பயணித்தால் பிரதான பங்காளிக் கட்சியான நாம் அதிலிருந்து வெளியேறவும் தயங்கமாட்டோம்” – என்றார்.

தேசத்தின் இணைய வாசகர்களுக்கு தைத்திருநாள் வாழ்த்துக்கள் !

தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் வளமும் – நலமும் பெற்றிட தேசத்தின் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பை்பொங்கல் வாழ்த்துக்கள்.
தைப்பொங்கல் கட்டுரை#thaippongkal - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்

மீனவர் கொல்லப்பட்டமைக்கு நீதி வேண்டி யாழில் போராட்டம் !

யாழ்ப்பாணம் – மாதகல் கடற்பரப்பில் கொல்லப்பட்ட மீனவர் எட்வேட் மரியசீலனின் படுகொலைக்கு நீதி வேண்டி இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற குறித்த மீனவர் அதிகாலை மாதகல் கடற்பரப்பில் சடலாமாக மீட்கப்பட்டிருந்தார்.கடற்படையினரின் படகு மோதியே குறித்த மீனவர் கொல்லப்பட்டதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இன்றைய தினம் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கான இன்று, பொது மக்கள், மீனவர்கள், அரசியல் பிரமுகர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.‘கடல் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும்’, ‘கடல் விபத்துகளுக்கு இழப்பீடு’, ஆகிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

“நாம் கேட்ட திருத்தத்தை தந்து விட்டோம் என்று எங்கள் வாயால் சொல்ல வைப்பதற்கு அரசு முனைகிறது.” – கஜேந்திரகுமார் சாடல் !

சமஸ்டி சமஸ்டி என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூறிக்கொண்டு ,ஒற்றை ஆட்சிக்குள் தமிழ் மக்களை அமுழ்த்துவதற்கு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணயின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாம் என்ன நினைக்கிறோம், முதலில் 13 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வரட்டும்.அதிலுருந்து இப்போது உள்ள இருப்புக்களை நாம் பாதுகாப்போம்.ஆனால் இது தீர்வாகாது என்று கூறி வருகின்றோம். ஆனால் கூட்டமைப்பு சமஸ்டி என்று கூறிக்கொண்டு,தேர்தல் நிறைவடைந்த பின்னர் தமிழ் இன நீக்கத்தை செய்யும்வகையில்,ஒற்றை ஆட்சிக்குள் முடக்கும் செயற்பாட்டை செய்து வருகிறது.

13 ஆவது திருத்தத்தை மக்கள் ஆதரிக்கும் வகையில்,என்ன செய்யலாம், என்ற நாடகம் இங்கு நடைபெறுகிறது. 34 வருடங்களாக நாம் மறுத்த வந்த இந்த திருத்தத்தை ,இனப் பிரச்சினைக்கு தீர்வாக நம்ப வைக்கும் நாடகமே இங்கு நடைபெறுகிறது. நாலாவது அரசியல் திருத்தத்தை ஒப்பு கொள்ள வைப்பதற்கு ,நாம் கேட்ட திருத்தத்தை தந்து விட்டோம் என்று எங்கள் வாயால் சொல்ல வைப்பதற்கு அரசு முனைகிறது.

இதை விடுத்து சி.வி .விக்னேஸ்வரன் அயோக்கிய தனமாக ,13 ஆவது திருத்தம் தொடர்பில் தாறுமாறாக கூறி வருகின்றார். இதை இந்திய முகவர்கள் எமக்கு திணிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.மக்கள் இதை விளங்கி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தல் !

இம்முறை அரச வெசாக் விழாவிற்கு முன்னதாக நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி சன்னஸ் பத்திரம் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

2022 அரச வெசாக் விழாவை இம்முறை பலங்கொட கூரகல வரலாற்று சிறப்புமிக்க தலத்தை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு தீர்மானித்து நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு அரச வெசாக் விழாவினை வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ரஜமஹா விகாரையில் நடத்துவதற்கு நாம் தீர்மானித்திருந்தோம். ஆனால் கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் சுகாதார பிரிவின் ஆலோசனைக்கேற்ப பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற்கு கொண்டு அரச வெசாக் விழாவினை நடத்த முடியாது போனது.

இம்முறை அரச வெசாக் விழாவிற்கு முன்னதாக நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி சன்னஸ் பத்திரத்தை வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை காலம் தாமதிக்காது முன்னெடுக்குமாறு பிரதமர் அமைச்சின் அதிகாரிகள் மத்தியில் குறிப்பிட்டார்.

கூரகல வரலாற்று சிறப்புமிக்க தலத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் அரச வெசாக் விழாவுடன், கூரகல வரலாற்று சிறப்புமிக்க தலத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்துமாறு பிரதமர் தெரிவித்தார்.

அரச வெசாக் விழாவை முன்னிட்டு வெசாக் பக்தி பாடல் நிகழ்வு, தன்சல், வெசாக் அலங்கார கூடு போட்டி, சூழல் பாதுகாப்பு நிகழ்வுகள், விசேட சமய நிகழ்வுகள், கலாசார நிகழ்வுகளை நடத்துவது மற்றும் விகாரை, அறநெறி பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களை மேம்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இம்முறை அரச வெசாக் விழாவை முன்னிட்டு கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் வெசாக் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது குறித்து கவனம் செலுத்துமாறும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

கூரகல புண்ணிய தலம் அமைந்துள்ள பலங்கொட மற்றும் கல்தொட பிரதேசங்களை அண்மித்த பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்திய பிரதமர், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட துறையினருடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இம்முறை வெசாக் விழாவினை சுகாதார துறையினரின் ஆலோசனைக்கேற்ப நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் மேற்கொள்வோம். சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டம் என்பது விசேடமாக மரக்கன்றுகளை பகிர்ந்தளிப்பது மாத்திரமல்ல. அந்த மரக்கன்றுகள் முறையாக பாதுகாக்கப்படுகின்றனவா என்பது குறித்தும் ஆராயுமாறு பிரதமர் குறிப்பிட்டார்.

பெண்ணின் உடலுக்குள் 50 சென்ரிமீற்றர் நீளமுள்ள துணியை வைத்துத் தைத்த யாழிலுள்ள தனியார் வைத்தியசாலை !

நெல்லியடியில் உள்ள ரூபின்ஸ் தனியார் மருத்துவமனையில் சத்திர சிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சத்திர சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழு உள்ளிட்ட விவரம் அடங்கிய அறிக்கையை எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு பருத்தித்துறை நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் உத்தரவிட்டுள்ளார்.

பருத்தித்துறை யாக்கருவைச் சேர்ந்த மனோன்மணி குலவீரசிங்கம் (வயது-60) என்ற பெண்ணே உயிரிழந்தார்.

பெண்ணுக்கு கற்பப்பையில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக அதனை அகற்றுவதற்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. அதனால் நெல்லியடியில் உள்ள ரூபின்ஸ் தனியார் மருத்துவமனையில் கடந்த டிசெம்பர் 10 ஆம் திகதி பெண்நோயியல் சத்திரசிகிச்சை வல்லுநர் ஒருவரினால் பெண்ணின் கற்பப்பை அகற்றும் அறுவைச் சிகிச்சை இடம்பெற்றது.

இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் உயிரிழந்தார். மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் பெண்ணின் சடலம் நேற்று உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

சத்திரசிகிச்சையின் போது பெண்ணின் உடலுக்குள் 50 சென்ரிமீற்றர் நீளம் 10 சென்ரிமீற்றர் அகலமுள்ள துணி ஒன்று வைத்து தையலிடப்பட்டமை கண்டறியப்பட்டது. அவரது உயிரிழப்புக்கு அந்த துணியினால் ஏற்பட்ட கிருமித்தொற்றே காரணம் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் வழங்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன், தனியார் மருத்துவமனை பணிப்பாளர், மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் உள்ளிட்டோரை இன்று மன்றில் முன்னிலையாக உத்தரவிட்டார்.

பெண்ணின் உடலை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்திய மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவாவிடம் இன்று முற்பகல் வாக்குமூலம் பெறப்பட்டது. தொடர்ந்து இன்று பிற்பகல் ஒரு மணியளவில் தனியார் மருத்துவமனை சத்திரசிகிச்சை கூடத்துக்குச் சென்ற நீதிவான் விசாரணைகளை முன்னெடுத்தார்.

உயிரிழந்த பெண்ணுக்கு சத்திரசிகிச்சை முன்னெடுத்த மருத்துவ குழுவினரின் விவரம் உள்ளிட்டவை வரும் ஜனவரி 18 செவ்வாய்க்கிழமை பருத்தித்துறை நீதிவான் மன்றில் முன்வைக்கவேண்டும். அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு விசாரணை முன்னெடுக்கப்படும் என்று நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் உத்தரவிட்டார்.