16

16

இசையமைப்பாளரின் இசைக்கருவிகளை பிடுங்கி நடு வீதியில் தீயிட்டு எரிக்கும் தலிபான்கள்- வைரலாகும் கலைஞரின் கண்ணீர் !

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்நாட்டில் பல்வேறு சமூக, கலாச்சார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக இசையும் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.
வாகனங்களில் செல்வோர் இசை கேட்கவும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இசை வாத்தியங்களை ஒலிக்கவும் தலிபான்கள்  தடை விதித்திருந்தனர். இந்நிலையில் தற்போது உள்ளூர் இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை பிடுங்கி நடு வீதியில் தீயிட்டு எரிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் பாக்தியா மாகாணத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் இசையமையாளர் ஒருவரிடம் இருந்து இசைக்கருவி பிடுங்கப்பட்டு, நடுரோட்டில் தீயிட்டு எரிக்கப்படுகிறது. இதை கண்டு அந்த இசையமைப்பாளர் அழுகிறார். ஆனால் தலிபான்கள் அவரின் அவல நிலையை கண்டு சிரிக்கின்றனர்.
https://twitter.com/AbdulhaqOmeri/status/1482222803906617347?s=20
இந்த வீடியோவை ஆப்கானிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

“தாத்தா, அப்பா ஏமாற்றியதுபோல பேரனும் எமது மக்களை ஏமாற்றுகிறார்.” – பழனி திகாம்பரம் சாடல் !

” அவர்களின் தாத்தாவும், அப்பாவும் எமது மக்களை ஏமாற்றியதுபோல பேரனும் இப்போது ஏமாற்றி வருகின்றார். நான் அமைச்சராக இருந்த போது நிர்மாணித்த வீடுகளின் சாவிகளை பலவந்தமாக பெற்று அதனை மக்களுக்கு மீள வழங்கும் அரசியலே முன்னெடுக்கப்படுகின்றது.” என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (16) நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே திகாம்பரம் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறிய போது ,

” நல்லாட்சியே மலையகத்துக்கு பொன்னான காலம். அக்காலத்தில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தற்போதைய கோட்டா அரசானது, மலையகத்துக்கு மட்டுமல்ல முழு இலங்கைக்குமே சாபக்கேடானதாகும். மக்களுக்கு பல பிரச்சினைகள். பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.

கூட்டு ஒப்பந்தம் இருந்தால்தான் மலையக மக்களின் பிரச்சினை தீருமென சிலர் கொக்கரித்து வருகின்றனர். தாத்தா, அப்பா ஏமாற்றியதுபோல பேரனும் எமது மக்களை ஏமாற்ற முற்படுகின்றார். அதனால்தான் நாங்கள் கட்டிய வீடுகளுக்கு, திறப்பு விழா நடத்துகிறார். அதுவும் சாவிகளை பலவந்தமாக பறித்தெடுத்து மீள வழங்கப்படுகின்றது. எமது மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும். அவர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழியை வருங்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாச மீண்டும் வழங்கியுள்ளார். இந்த ஆட்சியின் கீழ் எமது மக்களுக்கு நன்மை பயக்கவில்லை. புதிய ஆட்சியின்கீழ் மலையக மக்களுக்கு எல்லாவற்றையும் பெற்றுக்கொடுப்போம்.” – என்றார்.

“தமிழ் கட்சிகள் இணைந்து இந்திய பிரதமருக்கு அனுப்பும் கடிதம் தொடர்பில் எனக்கு எதுவுமே தெரியாது.” – எம்.ஏ.சுமந்திரன்

 தமிழ் கட்சிகள் இணைந்து இந்திய பிரதமருக்கு அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள வரைபை இந்தியாவிடம் கொடுக்க இப்போது ஏன் அவசரம் காட்டப்படுகிறது..? என்பது குறித்து தன்ககு எதுவும் தெரியாது எனவும்  இவ்விடயம் தொடர்பில் தனக்கு பல கேள்விகள் இருப்பதாகவும் த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தைப் பொங்கல் விழா நேற்று வெள்ளிக்கிழமை (14) வடமராட்சியில் உள்ள தமிழரசுக் கட்சியின் வடமராட்சி கிளை அலுவலகத்தில் இடம் பெற்றது. இதன் போது

இந்தியாவுக்காக திருகோணமலை எண்ணைக் குதங்கள் மற்றும் மொழும்பு மேற்கு முனையம் என்பன வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ள இவ் வேளை, தமிழ் தரப்பு அரசியற் கட்சிகளின் 13 து தொடர்பான பிரேரணையை இந்திய தூதுவர் ஏற்றுக் கொண்டால் இந்திய, இலங்கைக்கிடையேயான உடன்படிக்கையில் பாதிப்புகள் ஏற்பட வாய்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் காரணத்தாலேயே குறித்த வரைபை இந்தியதூதுவர் ஏற்க இழுத்தடிப்பு செய்து வருவதாக கூறப்படுகிறது இது உண்மையா? உங்கள் நிலைப்பாடு என்ன?

என ஊடகவியலாளர் எழுப்புய கேள்விக்கு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்தியத் தூதுவருக்கு கையளிக்கப்பட இருந்த கடிதம் மலையக,  முஸ்லிம் கட்சிகளும் சேர்ந்து தான் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருந்தது. இலங்கை தமிழரசுக் கட்சி இந்த வேலைத்தட்டத்திற்கு வந்ததன் பிறகு ஒற்றுமையை எப்படியாவது பேண வேண்டும் என்ற நோக்கிலே நாங்களும் இணங்கி இணைந்து செயற்பட்டோம். அப்படியான பொது கடிதத்தை தயாரிக்கின்ற போது அந்த இரண்டு மக்கள் கூட்டங்களின் அரசியல் அபிலாசைகளுக்கு மத்தியில் மதிப்பு கொடுக்கும் வண்ணமாக கடிதத்தில் இருந்து ஒரு சில விடயங்கள் நீக்கப்பட்டுத்தான் ஒரு ஒற்றுமை நிலைமை கடந்த 21 ஆம் திகதி மாலை ஐந்து முப்பது மணி வரை எட்டப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகள் தாங்கள் கையொப்பம் இடவில்லை என விலகிய பிறகு அப்படியான விட்டுக்கொடுப்புக்கள் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. அதனாலே மிக முக்கியமாக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கொடுத்து வருகின்ற மக்கள் ஆணை எதுவென்று விவரிக்கின்ற பகுதி அங்கே இருக்கிறது. அது மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஏனெனில் தற்போது கைச்சாத்திடும் பிரதிநிதிகள் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள். இதனால் இறுதியிலும் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு கையளிக்கப்பட இருந்த கடிதம் 12 ஆம் திகதி கொடுப்பதாக இருந்தது. ஆனால் 11 ஆம் திகதி கொடுப்பதாக இருந்தது ஆனால் துரதிஷ்டவசமாக 10 ஆம் திகதியன்று இந்திய தூதுவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்திலே இப்படியான ஒரு கடிதம் கொடுக்கப்பட வேண்டுமா..? என்பதற்கு நான் பதில் சொல்ல முடியாது. அது சம்பந்தமாக எனது மனதிலும் பலவிதமான கேள்விகள் இருக்கின்றன. ஏன் இப்படியான தருணத்தில் இப்படியான முயற்சி முன்னெடுக்கப்பட்டது என்பதற்கு விடை எங்களுக்கு தெரியாது. அதை முன்னெடுத்தவர்களிடம்தான் கேட்கவேண்டும். கட்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரே விடயத்தை ஒரே குரலில் வலியுறுத்தி முன்வைத்து ஒரு முக்கியமான நிகழ்வு. அந்த ஒரு ஒற்றுமையை குலைக்ககாத வண்ணமாக மக்களது அரசியல் அபிலாசைகளை எந்த வண்ணமும் குறைக்காத வண்ணமாக இலங்கை தமிழரசுக்கட்சி இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றி இருக்கின்றோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் அக் கட்சியின் உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

“ஒரு நாள் போராட்டத்தை அன்றி தொடர் போராட்டத்தை கஜேந்திரகுமார் முன்னெடுக்க வேண்டும்.” – மனோ கணேசன்

“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் போராட்ட அறிவிப்பை நான் முழு மனதுடன் வரவேற்கின்றேன். அது ஒருநாள் போராட்டமாக இல்லாமல், தொடர் போராட்டமாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன்.” என  தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

13ஆம் திருத்தம் தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட சதி எனவும் அதற்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்திருந்தார். இது தொடர்பில் பேசிய போதே மனோகணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்த போது,

“நண்பர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இம்மாத இறுதியில் அரசியல் போராட்டத்தை அறிவித்துள்ளார். உண்மையில் அவரது கட்சி நிலைப்பாட்டின்படி இது மிக சரியான முடிவாகும். 13 மற்றும் மாகாண சபைகள் வேண்டாம்’ என்றால் மாற்றுப் பயணம் இருக்க வேண்டும்.

விடுதலைப்புலிகள் 13ஐ நிராகரித்தார்கள். ஆனால், நிராகரித்து விட்டு, “எல்லாம் தானாக மாறும்” என அவர்கள் வாளாவிருக்க இல்லை. புலிகளது வழிமுறையை ஏற்காதவர்கள்கூட, மாற்றுப் பயணத் திட்டத்தை முன்னெடுத்த அவர்களது அரசியல் நேர்மையை மதித்தார்கள்.

2005 முதல் 2009 வரை இறுதிப் போர் காலத்தில் கொழும்பில் வந்து அடைக்கலம் புகுந்த வடக்கு – கிழக்கு புலத்து உடன்பிறப்புகளுக்காக நானும், எனது கட்சியும், நான் உருவாகிய ‘மக்கள் கண்காணிப்பு குழு’ என்ற மனித உரிமை இயக்கமும் வீதி போராட்டங்களை உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடத்திப் போராடினோம்.

மேற்கு நாடுகளில் தஞ்சம் புகுந்து, அங்கிருந்தபடி நான் அறிக்கை அரசியல் செய்யவில்லை. இது இங்கே சிங்கத்தின் குகையில் இருந்தபடி நான் நடத்திய என் நேர்மையான அறப் போராட்ட வரலாறு. ஆகவே, ’13 என்பது முதல்படி கூட கிடையாது. அதை தீண்டவும் மாட்டோம். அதற்கு அப்பால் போயே தீருவோம்’ என்பவர்கள் மாற்று போராட்ட பயணத்தை முன்னெடுக்க வேண்டும். 13 இற்கு அப்பால் செல்லும் அந்த மாற்றுப் பயணம் ஊடக சந்திப்புகளுக்கு அப்பால் செல்ல வேண்டும்.

‘அமெரிக்காவில் இருந்து இந்திரன் கொண்டு வருகின்றான். ஆபிரிக்காவில் இருந்து சந்திரன் கொண்டு வருகிறான்’ என்று அறிக்கை இடுவதெல்லாம் போராட்டம் அல்ல. ஆகவே, நண்பர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் போராட்ட அறிவிப்பை நான் முழு மனதுடன் வரவேற்கின்றேன். அது ஒருநாள் போராட்டமாக இல்லாமல், தொடர் போராட்டமாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன்” – என்றார்.

“13ஆம் திருத்தம் தமிழ் மக்களுக்கு உருவாக்கப்பட்ட சதி.” – போராட்டம் நடத்த போவதாக கஜேந்திரகுமார் அறிவிப்பு !

13ஆம் திருத்தம் தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட சதி எனவும் அதற்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்துள்ளார்.

கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கோரி மிக மோசமாக ஆவணம் தயாரிக்கப்பட்ட நிலையில், அதன் மூலம் சுயநிர்ணய உரிமையை தமிழ் மக்கள் அனுபவிக்கலாம் எனக் கூறுமளவுக்கு இந்த துரோகத்தனம் போகின்றது. புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்படுகின்ற பொழுது 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோருவது, இனப் பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டதாக உலகத்துக்கு காட்டும் நடவடிக்கையே ஆகும்.

இந்த விடயத்தை நாம் ஆழமாகப் பார்க்க வேண்டும். நாம் மீண்டும் மீண்டும் கூறுவதென்றால் இந்திய முகவர் அமைப்புக்கள் 12 வருடங்களாக மக்களிடம் பொய் சொல்லியதை இன்று உணரக்கூடியதாக உள்ளது. 13ஆம் திருத்தத்திற்குள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடங்குவதாக 12 வருடத்துக்கு முன் நாங்கள் சொன்ன பொழுது மக்கள் அதனை நம்பவில்லை. இன்று அதனை வெளிப்படையாக நிரூபிக்கும் வகையிலேயே காரியங்கள் நடைபெறுகின்றன.

ஒரு தேர்தல் முடிவடைந்து இன்னொரு தேர்தல் நடக்க இன்னும் சில வருடங்கள் இருக்கும் நிலையில் இலங்கை முகவர்கள், இந்திய முகவர்கள் இணைந்து 13ஆவது திருத்தத்தை ஏற்றுக் கொள்கின்ற நிலை உருவாகியிருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆணையை பெற்ற தமிழ் தரப்பும் 13ஆம் திருத்தத்தையும் ஒற்றையாட்சியையும் ஏற்றுக் கொண்டு இருக்கின்றார்கள்.

இதற்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மக்களை அணிதிரட்ட முடிவெடுத்து இருக்கின்றது. அந்த வகையிலே எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி போராட்டம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள இருக்கிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதனைக் கொண்டு செல்ல இருக்கின்றோம். இதனை முதற்கட்டமாக யாழ்ப்பாணத்தில் செய்ய இருக்கிறோம். இதனை கிராம ரீதியாகவும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். எமது கட்சி உறுப்பினர்கள் மூலம் கிராமம் கிராமமாகச் சென்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். தமிழர்களின் உரிமைக்காக தொடர்ந்தும் உறுதியாக இருக்கின்ற அனைத்து மக்களையும் அரவணைத்து இதனை நாங்கள் மேற்கொள்வோம்.

13ஆம் திருத்தம் தமிழ் மக்களுக்கு உருவாக்கப்பட்ட சதி. அந்தச் சதியில் இருந்து முப்பது வருடங்களுக்கு மேலாக உயிர்த்தியாகம் செய்து ஏதோ ஒரு வகையில் தக்க வைத்துக் கொண்டு இருக்கின்றோம். இந்த சதியை நாங்கள் மக்களாலேயே முறியடிக்க வேண்டும்” என்றார்.

“மலையகத் தமிழர்களை பாரத தாய் ஒருபோதும் மறக்காது.” – மனோ கணேசன்

“மலையகத் தமிழர்களை பாரத தாய் ஒருபோதும் மறக்காது.” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கை மக்களை, குறிப்பாக மலையகத் தமிழர்களை பாரத தாய் ஒருபோதும் மறக்காது என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தமதுரையின் போது குறிப்பிட்டார். ஆகவே, எமது மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்வதற்கு இந்தியத் தாயுடன் பேசுவதற்கும், சண்டையிடுவதற்கும், தொல்லைக்கொடுப்பதற்கும் எமக்கு உரிமை இருக்கின்றது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நோர்வூட் வந்திருந்தபோது 10 ஆயிரம் வீடுகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அவருடன் பேச்சு நடத்தி நாமே அதனை பெற்றோம். தற்போது 4 ஆயிரம் வீட்டுத் திட்டம் நிறைவுபெற்றுள்ளது. 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் எமது ஆட்சியின்கீழ் நிச்சயம் ஆரம்பமாகும்.

இனி நல்லாட்சி அல்ல, விரைவில் வல்லாட்சி அதாவது வல்லவர்கள் ஆளக்கூடிய ஆட்சி உருவாகும். பொங்கலுக்கு முன்னர் போகிப் பண்டிகை கொண்டாடப்படும். பழையவை எரிக்கப்படும். நாமும் இந்நாட்டிலுள்ள சில பழைய விடயங்களை எரிக்க வேண்டியுள்ளது.

இந்நிகழ்வில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவரும், எதிர்கால ஜனாதிபதியுமான சஜித் பிரேமதாச, மலையக மக்களுக்கு நில உரிமை வழங்கப்படும் என உறுதியளித்தார். வருங்கால ஜனாதிபதியிடம் அந்த உறுதிமொழியை பெற்றுள்ளோம்.” – என்றார்.

கனடாவின் அறிக்கையால் இலங்கை அதிருப்தியில் !

இலங்கையில் மோசடையும் பொருளாதார நிலைமை குறித்து தனது நாட்டிலிருந்து இலங்கை செல்பவர்களிற்கு கனடா எச்சரிக்கைவிடுத்துள்ளது. இலங்கைக்கான பயண ஆலோசனையில் கனடா இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துகள் உணவுகள் எரிபொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என கனடா தெரிவித்துள்ளது. பொருளாதார ஸ்திரதன்மை இன்மை சுகாதார சேவைகள் உட்பட பொதுச்சேவைகள் பாதிக்கப்படும் நிலைமையை ஏற்படுத்தலாம் என கனடா தெரிவித்துள்ளது.

பொருளாதார ஸ்திரதன்மை வளங்கள் குறைந்தளவில் கிடைக்கும் நிலையை ஏற்படுத்தலாம் பாதுகாப்பு நிலவரம் மோசமடையும் நிலையை ஏற்படுத்தலாம் எனவும் கனடா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு செல்பவர்கள் உணவு எரிபொருள் குடிநீர் போன்றவற்றை நீண்டகால குழப்பநிலை ஏற்படக்கூடிய ஆபத்தினை கருத்தில் கொண்டுபோதியளவிற்கு தம்வசம் வைத்திருக்கவேண்டும் எனவும் கனடா கேட்டுக்கொண்டுள்ளது.

வர்த்தக நிலையங்கள் எரிபொருள் நிலையங்கள் மருந்தகங்களில் நீண்ட வரிசைகளை எதிர்பார்க்கவேண்டிய நிலை காணப்படுகின்றது எனவும் கனடா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் , இலங்கைக்கு பயணம் மேற்கொள்பவர்கள் இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என கனடா அறிவுரை வழங்கியுள்ளமை குறித்து இலங்கை அரசாங்கம் தனது அதிருப்தியை வெளியிடவுள்ளது.

இலங்கை அரசாங்கம் இராஜதந்திரவட்டாரங்கள் மூலமாக தனது அதிருப்தியை வெளியிடவுள்ளது.

கனடா இவ்வாறான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளமை நியாயமற்ற விடயம் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் கொலம்பகே இந்த விவகாரம் குறித்து கனடா தூதுவருடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் தனது தூதரகம் ஊடாகவும் அதிருப்தியை வெளியிடும் என தெரிவித்துள்ளார்.

“என் மீது நம்பிக்கை வையுங்கள்.” – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

ஜனாதிபதி தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிச்சயம் நிறைவேற்றுவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக தெரிவித்த ஜனாதிபதி, வாக்குறுதிகளை நிறைவேற்ற மக்கள் தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தவறான விமர்சனங்களை முன்வைத்து மக்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரொனா பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டதாகவும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தால் நாட்டின் பொருளாதாரத்தை மீள சரிசெய்ய முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

விலை உயர்வால் பட்டினியில் மக்கள் – ஒரே வருடத்தில் 09 கோடிக்கு தின்று தீர்த்த இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் !

கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் பொருளாதார நிலை மிக கீழான நிலையில் காணப்படுகின்றது. மக்கள் அடுத்த வேளை உணவுக்காக அலை மோதிக்கொண்டிருக்கின்றனர். மக்களுடைய வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லாது விட்டாலும் கூட மக்களால் தெரிவு செய்யப்பட்ட இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மிக ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆடம்பரமான வீடுகள்- வாகன இறக்குமதி – வெளிநாட்டு சுற்றுப்பயணம் என இவர்கள் ஆடம்பர வாழக்கையில் திளைக்கின்றனர்.

இந்த நிலையில் பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களின் உணவு மற்றும் குடிபானங்களுக்காக மாத்திரம் கடந்த ஆண்டு சுமார் 9 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல்களை மேற்கோள்காட்டி, லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

 

பாராளுமன்றத்தில் செயற்படுகின்ற குழுக்களுக்கு முன்னிலையில் சமூகமளிக்கும் அரச அதிகாரிகளுக்கும் பாராளுமன்றத்தினாலேயே உணவு விநியோகிக்கப்படுவதாக தெரிய வருகின்றது. இதேவேளை, பாராளுமன்றத்தில் உணவு பொருட்களில் முன்னெடுக்கப்படுகின்ற மோசடிகள் மற்றும் வீண்விரயங்களை தவிர்ப்பதற்கு, பாராளுமன்ற செயலாளர் நாயகம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

இதன் ஒரு கட்டமாக, பாராளுமன்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பயண பொதிகள் எழுமாறாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என தகவல்கள் குறிப்பிடுகின்றன. அரிசி, மரக்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், பாராளுமன்றத்தில் உணவு சமைக்கும் நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான மணலை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம் !

நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான மணலை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

துறைமுக நகர அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நாட்டிலுள்ள ஆறுகளிலிருந்து மணலை வழங்க முடியாது என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டு வரையான இலங்கையின் மணல் தேவை 57 மில்லியன் கன மீற்றராக மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் நாட்டில் 42 மில்லியன் கனமீற்றர் மணலே உள்ளது. ஆறுகளில் மணல் எடுப்பது நிறுத்தப்பட்டு வருவதாகவும், கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவையில் இருந்து மணல் எடுப்பதும் படிப்படியாக நிறுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கடலில் ஆழமாக தோண்டுவதற்கு திட்டமிடப்பட்டாலும், மீனவர்களின் எதிர்ப்பு காரணமாக மணல் இறக்குமதி செய்வதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.