புதிதாக திறக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத்தின் மெரினா நடைபாதையில் பெரும் மக்கள் கூட்டம் அலைமோதுவது கொழும்பு துறைமுக நகர கொரோனா அலை உருவாகும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களின் நடத்தை புதிய கொரோனா அலையை உருவாக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எனவே, கொழும்பு துறைமுக நகரத்தின் மெரினா நடைபாதையில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது கண்டிப்பாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விடயம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஆங்கில ஊடகமொன்று, ஆதாரங்களின்படி, ஓமிக்ரோன் மாறுபாடு இலங்கையில் பரவி வருவதாகவும் கொழும்பு துறைமுக நகரத்தின் மெரினா நடைபாதையில் கூட்டம் கூடுவது தொற்றுநோய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக, சமூக விலகல் இல்லாமல் உல்லாசப் பாதையில் நுழைவதற்கான முறைக்காக பொதுமக்கள் காத்திருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
வளாகத்திற்குள்கூட சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றும் நீண்ட வார இறுதியில் நடைபாதையில் நுழைந்த பெருந்திரளான மக்கள் முகக்கவசம் அணியாமல் புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 50,000 பேர் பார்வைக்காக இந்த இடத்திற்கு வருகை தந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு துறைமுக நகர மெரினா நடைபாதை கடந்த வாரம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.