22

22

பல்கலைக்கழகங்களின் கல்விநிலை ‘பாஸ் பண்ண வேண்டும் என்றால் படுக்க கேட்கும் பேராசிரியர்கள்!’ – தென்கிழக்கு – யாழ் மற்றும் பல்கலைக்கழகங்கள்

கடந்த அரசாங்கத்தில் உயர் கல்வி அமைச்சராகப் பதவி வகித்த விஜேதாஸ ராஜபக்ஷ, 2018ஆம் ஆண்டு நாடாளுமன்றில் ஒரு தடவை பேசும்போது; “தென்கிழககுப் பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்களுக்கு, அங்குள்ள மாணவிகள் பாலியல் லஞ்சம் கொடுக்காமல், சில பாடங்களில் தேர்ச்சியடைய முடியாது” என்று, பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். இதனை அப்போது ஊடகங்கள் பெரிதாக பேசியிருந்தாலும் கூட தொடர்ச்சியான அவதானிப்புக்களை மேற்கொள்ள மறுத்துவிட்டன. ஆன போதும் இலங்கையின் பல பல்கலைகழகங்களில் சிறப்புத்தேர்ச்சியை பெற பாலியல் லஞ்சம் கோருவது தொடர்கதையாகிவிட்டது. விரிவுரையாளர்களின் பாலியல் அத்துமீறல்களுக்கு சம்மதித்து இணங்கினால் மட்டுமே பல்கலைகழகத்தில் நன்றாக படிக்கலாம் – அடுத்தகட்ட அனுமதிகளை பெறலாம் என்றவாறாக மாணவர்கள் பயமுறுத்தப்படுகின்ற அவலம் தொடர்கின்றது. அண்மையில் நடைபெற்ற சம்பவம் கூட இதே மாதிரியானதே.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அறபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தில் அரசியல் விஞ்ஞானம் கற்பிக்கும் விரிவுரையாளர் ஒருவர், அங்குள்ள முதலாமாண்டு மாணவி ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், குறித்த விரிவுரையாளரின் விருப்பத்துக்கு இணங்காத அந்த மாணவி – பல்கலைக்கழக விடுதியிலிருந்து வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில், மேற்படி விரிவுரையாளரால் தனக்கு ஏற்பட்ட துன்புறுத்தல் பற்றி, அந்த மாணவி தனது குடும்பத்தாருக்குத் தெரியப்படுத்தியதோடு, பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் எழுத்து மூலம் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து இவ்விவகாரத்தில் கவனம் செலுத்திய பல்கலைக்கழக உபவேந்தர், அந்தப் பல்கலைக்கழத்தின் பேரவையைக் கூட்டி – விடயத்தைத் தெரியப்படுத்தியிருந்தார். அதனையடுத்து, ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, குறித்த விரிவுரையாளரை – பல்கலைக்கழகப் பேரவை, பணி இடைநீக்கம் செய்துள்ளதோடு, அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பேரவை உறுப்பினர் ஒருவரையும் நியமித்துள்ளது.

இந் நடவடிக்கைகளுக்கு முன்னர், குறித்த மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சம்பந்தப்பட்ட விரிவுரையாளர், தான் தவறாக நடந்து கொண்டமையை வெளிப்படுத்த வேண்டாம் எனக் கேட்டு, அழுது – மன்னிப்புக் கோரியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பில் மாணவிக்கும் – விரிவுரையாளருக்கும் இடையே இடம்பெற்ற உரையாடல் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியிருந்தது.

(குறித்த தொலைபேசி உரையாடல் https://www.facebook.com/100053082310310/videos/678356666665554/ )
குறித்த உரையாடலுடன் கூடிய காணொளியில் இணைக்கப்பட்டிருந்த படம்)
No description available.

இது இவ்வாறிருக்க, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் மாணவி, சம்பந்தப்பட்ட விரிவுரையாளருக்கு எதிராக செய்த முறைப்பாட்டை வாபஸ் பெற்றுக் கொள்வதாக, தற்போது பல்கலைக்கழகத்துக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். இதனை பல்கலைக்கழகத்தின் நிருவாகம் உறுதிப்படுத்தியது.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி மற்றும் அவரின் குடும்பத்தினரை குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விரிவுரையாளர் சார்பாகச் சந்தித்த ஒரு தரப்பினர், கருணை அடிப்படையில் கேட்டுக் கொண்டமைக்கு அமைவாக, அந்த மாணவி தனது முறைப்பாட்டை வாபஸ் பெறுவதற்கான கடிதத்தை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விடயமும் வழமைபோல பெரிய பூதாகரமாக பேசப்பட்டு நாளடைவில் மறந்து போய்விடக்கூடிய விடயமாக தென்படுகின்றது. குறித்த பிரச்சினையிலிருந்து தப்பிக்க விரிவுரையாளர் அரசியல் பிரமுகர்களை நாடியுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

பிரச்சினைகள் இவ்வாறு இருக்க குறித்த மாணவி தொடர்பில் இஸ்லாமிய கலாச்சார காவலர்கள் என்ற பெயரில் பலர் முன்வைக்கின்ற விமர்சனங்கள் குறித்த சமூகத்து பெண்களின் எதிர்காலம் தொடர்பிலும் – அவர்கள் வாழக்கூடிய சூழல் தொடர்பிலான அச்சத்தையும் ஏற்படுத்துகின்றது.

பல்கலைகழக மட்டத்தில் இது வெளிப்படையாக தெரிந்த ஒரு பிரச்சினை . இது போல தெரியாத பல விடயங்கள் இன்னமும் ஆழமாக உள்ளன. இது போன்றதான நிலை பல்கலைகழகங்கள் தொடர்பில் மேலும் அச்சமான சூழலை ஏற்படுத்துகின்றன. விரைந்து விசாரிக்கப்பட்டு தீர்வு எடுக்கப்பட வேண்டிய பிரச்சினை வழமை போல இழுபட ஆரம்பித்துள்ளது.

இது போன்ற பாலியல் சீண்டல்களை பல பெண்கள் சமூகத்துக்கு பயந்தோ – கல்வி தடைப்பட்டு விடுமோ என்ற அச்சத்தினாலோ – சமூகத்தின் கேலிக்கு உள்ளாக வேண்டி வருமோ என்றோ வெளியில் சொல்லாத நிலை தான் அதிகம் காணப்படுகின்றது. இந்த நிலையில் படுக்கைக்கு அழைத்த விரிவுரையாளர் தொடர்பில் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த மாணவி பகிரங்கப்படுத்தியது மிகப்பெரிய வரவேற்க வேண்டிய விடயம். அந்த மாணவியின் துணிவான முடிவால் பல மாணவிகளின் எதிர்காலம் பாதுகாக்கப்படக்கூடிய சூழலே உருவாகியுள்ளது.

கடந்த காலங்களில் கூட தென்னிந்தியாவில் பிரபல பாடலாசிரியர் வைரமுத்து பாலியல் தொல்லை வழங்கியதாக பாடகி சின்மயி பொதுவெளியில் பேசியதை தொடர்ந்து மீ டூ என்ற பெயரில் பல பெண்கள் தங்கள் மீதான பாலியல் சுரண்டல்கள் – தொல்லைகள் தொடர்பில் பொதுவெளியில் பேச முன்வந்திருந்தனர். அது போல ஆரோக்கியமான ஒரு தளத்தை பல்கலைகழக மாணவிகளின் விடயத்தில் இந்த பிரச்சினை உருவாக்கி தந்துள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சார்பாக கருத்துக்களை முன்வைத்து – அந்த பெண்ணுக்கு நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை வழங்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய பொறுப்புமாகும். ஆனால் அதை விடுத்து குறித்த சமூகத்தை சார்ந்த சமூக காவலர்களாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஆணாதிக்க சிந்தனையாளர்கள் கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாத வகையில் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக உண்மையான முஸ்லீமாக குறித்த மாணவி இருந்திருந்தால் இந்த பிரச்சினையை பொதுவெளியில் சொல்லியிருக்க மாட்டாள், மீனை மூடாமல் விட்டுவிட்டு அவள் பூனையை குற்றம் சொல்கிறாள், அல்லாவுக்காக இந்த பிழையை மறைத்து இனத்தின் மானத்தை காப்பாற்றியிருக்க வேண்டும், என்றவாறாக பல கருத்துக்களை காணமுடிந்தது. முக்கியமாக குறித்த மாணவியின் நடத்தை தொடர்பாக கேலியான பதிவுகளும் குறித்த இனத்தை சாரந்தவர்களால் பகிரப்பட்டுள்ளது இன்னும் வேதனையான விடயம்.

இப்படியான பிற்போக்குத்தனமான மனோநிலையில் இவர்கள் இருப்பது குறித்த சமூகத்தின் பெண்களின் நிலை சார்ந்தும் இன்னும் யோசிக் வைக்கின்றது. பெண்கள் உலகின் பல பகுதிகளிலும் அடுப்படியை விட்டு சுதந்திரமாக வெளியே வந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் அவர்களுடைய உரிமைகள் இன்னும் பாதுகாப்பு செய்யப்பட வேண்டுமே தவிர மதம் – குல மானம் என்ற பெயரில் அவர்கள் இன்னும் நோகடிக்கப்படக்கூடாது.

இங்கு குறித்த பெண்ணை நோக்கி கேள்வி எழுப்பிய யாருமே தவறு செய்த செய்த விரிவுரையாளரை கண்டிக்க திராணியற்ற ஆணாதிக்கவாதிகளாவே இருக்கின்றனர். அரசு எங்களை அடக்குகின்றது . இஸ்லாமியர்கள் அடக்கப்படுகிறார்கள் என கூறி விட்டு பெண்கள் மீது இவ்வளவு வக்கிரத்தனமான இஅடக்குமுறைகளை திணித்துக்கொண்டிருக்கிற சமூகத்தில் நாமத் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
முன் எப்போதும் இல்லாத வகையில் பாலியல் சேட்டைகளும் – பாலியல் சுரண்டல்களும் அதிகரித்து வருகின்ற இந்த நேரத்தில் இது போன்ற விசமத்தனமான கருத்துக்களை நாம் பொதுவெளியில் பகிர்வதும் – பேசுவதும் தங்கள் மீது நடக்கும் பாலியல் தொல்லைகளை பல பெண்கள் வெளிக்கொண்டுவர தடையக அமைவதுடன் – பாலியல் சேட்டைகளிலும் – துஸ்பிரயோகங்களிலும் ஈடுபடுவோருக்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.

இந்த நிலை மாற வேண்டும். இன்னமும் பெண்களின் கால்களுக்கிடையில் கற்பையும் – தங்கள் தங்களுடைய இன – குல மானங்களையும் வைத்திரப்போர் கொஞ்சமாவது மாற முற்பட வேண்டும். இன்று யாரோ பெண்ணுக்கு நடந்தது நாளை உங்கள் வீடுகளிலுள்ள பெண்களுக்கும் கூட நடக்கலாம். எனவே பெண் அடக்குமுறை – பெண் மீதான பாலியல் சுரண்டல்கள்தொடர்பில் துணிந்து – எதிர்த்து குரல் கொடுங்கள். இன்னும் பழமையை பற்றிப்பிடித்து வாழ்ந்து கொண்டிருக்காது ஆரோக்கியமான ஒரு தலைமுறையை உருவாக்க இது தனித்து ஒரு சமூகத்தை தாக்குவதற்கான நோக்கத்துடன் எழுதப்பட்டது அல்ல. இந்த பிரச்சினை எல்லா இடங்களிலும் உள்ளதே. இது மாற்றப்பட்டு ஆரோக்கியமான ஒரு தலைமுறை உருவாக வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

இவ்வாறான பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மட்டும் தான் நடக்கின்றது என்றில்லை. இதே மாதிரியான பல சம்பவங்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் கடந்த இரு தசாப்தங்களாக நடைபெற்று வருகின்றது. லண்டன் குரல், தேசம்நெற் ஆகிய ஊடகங்களில் இவை விரிவாக எழுதப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வந்தது. யாழ் பல்கலைக்கழகத்தின் சில பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டமை நீதிமன்றம் வரை சென்றதும் அவர்களுடைய பெயர்கள் அம்பலப்படுத்தப்பட்டதும் தெரிந்ததே. இந்நிலைமைகளில் இன்னமும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படவில்லை. அதற்குக் காரணம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் எவ்வாறு தவறிழைத்தவர் மீண்டும் பல்கலைக்கழகத்தில் மீள நியமிக்கப்பட்டாரோ அவ்வாறே யாழ் பல்கலைக்கழகத்திலும் தவறிழைத்தவர்கள் தொடர்ந்தும் பணியில் உள்ளனர். அவர்கள் தொடர்ந்தும் தங்கள் பாலியல் இச்சைகளைத் தொடர அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இன்றும் யாழ் பல்கலைகழகத்தில் புதிய நியமனங்களை தெரிவு செய்யும் குழுக்களில் இவ்வாறான பாலியல் இச்சைகொண்டவர்களே உள்ளனர். அதனால் கடந்த இரு தசாப்தங்களாக யாழ் பல்கலைக்கழகம் சிறந்த பட்டதாரிகளை உருவாக்குவதில் தகுதியானவர்களை நியமிப்பதில் தவறிழைத்து வருகின்றது. அதனால் இன்று வடக்கின் கல்வி நிர்வாகம் மிகச் சீரழிந்துள்ளது. இதற்கான மிகப்பெரும் பொறுப்பு யாழ் பல்கலைக்கழகத்தையே சாரும்.

No description available.No description available.
No description available.No description available.

சமூக விஞ்ஞானக் கல்லூரி (T3S) மாணவனும் முன்னாள் போராளியுமான க பிரேம்சங்கரின் ‘கழுதை சுமந்த கவிதை’ நூல் வெளியீடு

தனது பள்ளிப் பராயக் கனவை நனவாக்கும் வகையில் தனது வாழ்க்கை அனுபவங்களை சிறு கவிதைகளாக தொகுத்து ‘கழுதை சுமந்த கவிதை’ என்ற தலைப்பில் வெளியிடுகின்றார் கவிக்கூத்தன் க பிரேம்சங்கர். இளம் பிராயம் முதல் அவர் கிறுக்கிய கவிதைகளை அவர் தனது பதின்ம வயதிலேயே வெளியிட ஆசைப்பட்டாலும் இப்போது தான் அது சாத்தியமாகியுள்ளது. “தொலைக்கப்பட்ட எழுத்துக்களை தோண்டி எடுக்கிறேன் நெஞ்சு வலிகளோடு வருகின்றது…” என்று அவர் இந்நூல் பற்றிய குறிப்பில் பதிவு செய்கின்றார்.

நூல் வெளியீடு பற்றிய விபரம்:
காலம்: January 23, 2022
நேரம்: மாலை 4:00 மணி முதல் 7 மணி வரை
இடம்: London Ayyappan Temple Hall, 36 Masons Avenue, Harrow, HA3 5AR

யாழ் சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியும் பின் யாழ் இந்துக் கல்லூரியில் உயர்கல்வியும் கற்ற கவிக்கூத்தன் பிரேம்சங்கர் எண்பதுக்களில் எழுச்சி பெற்ற விடுதலையுணர்வால் உந்தப்பட்டு தமிழ் மக்களின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணிக்க முன் வந்த ஆயிரம் ஆயிரம் இளைஞர்களில் ஒருவர். தமிழ் மக்களுக்கு விடுதலை வேண்டி தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து கொண்ட க பிரேம்சங்கர், சென்னையில் உருவாக்கப்பட்ட சமூக விஞ்ஞான கல்லூரியில் சமூக அரசியல் பொருளாதாரம் கற்றவர்.

அனுவம் என்பதே அறிவு. அந்த வகையில் க பிரேம்சங்கரின் வாழ்க்கை அனுபவம் என்பதும் ஒரு அருமையான புத்தகமாக அமையும். அதனை சிறு கவிதைகளாக தொகுத்து இருப்பது அவருடைய வாழ்வின் பிரதிபலிப்பாக அமையும் என்பதில் ஐயம்மில்லை. “பல இளமைக்காலக் கவிதைகள் தொலைந்தாலும்… முதுமையில் மீண்டும் முத்துக்குளித்திருக்கிறேன்” என்று இந்நூல் உள்ளடக்கம் பற்றி குறிப்பிடுகின்றார். “கற்பனை, நிசம் அனுபவமாகின்றது! இங்கு வரிகளாகிறது” என்று குறிப்பிடும் அவர் “நரை விழுந்த காலம் என்றாலும் உரைக்கிறது எழுதுகோல்” என்று தான் இந்நூலை கொண்டுவந்ததன் பின்னணியைக் குறிப்பிடுகின்றார்.

கவிக்கூத்தன் க பிரேம்சஞ்கரும் எனது சகோதரனும் சமூக விஞ்ஞானக் கல்லூரியில் – Thamileelam Social Science School (T3S) ஒன்றாகக் கற்றவர்கள். உற்ற நண்பர்கள். அதனால் நான் லண்டன் வருவதற்கு முன்னரே குடும்ப நண்பரானவர். லண்டன் வந்தபின் அந்த சகோதரத்துவமும் நட்பும் இன்றும் நிலைக்கின்றது.

கவிக்கூத்தன் க பிரேம்சஞ்கரின் வாழ்க்கை அனுபவம் என்பது பன்முகப்பட்டது. படைப்புகள் ஆக்க இலக்கியங்கள் அக்காலத்தினை பிரதிபலிக்கக் கூடிய கண்ணாடிகள். அந்த வகையில் இந்தக் ‘கழுதை சுமந்த கவிதை’ நூல் எமது வரலாற்றின் ஒரு கூறைச் சுமந்து வரும் என்ற ஆவலோடு இந்நூல் வெளியீட்டில் கலந்துகொள்ள உள்ளேன். கவிக்கூத்தன் க பிரேசம்சங்கர் வெவ்வேறு படிநிலைகளில் தன் வாழ்வைக் கடந்து செல்கின்றார். ஒரு துடிப்புள்ள இளைஞனாக போராளியாக பிற்காலத்தில் ஆன்மீகத்தின் வழித்தடங்களில் என்று அவருடைய பயணம் தொடர்கின்றது. நிச்சயமாக ‘கழுதை சுமந்த கவிதை’ எம்மைச் சிந்திக்க வைக்கும்.

நூல் வெளியீடு பற்றிய விபரம்:
காலம்: January 23, 2022
நேரம்: மாலை 4:00 மணி முதல் 7 மணி வரை
இடம்: London Ayyappan Temple Hall, 36 Masons Avenue, Harrow, HA3 5AR