February

February

களனி பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல் – அமைச்சரின் மகன் உட்பட 9 பேருக்கு பிணை !

களனி பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் உள்ளிட்ட 9 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று (திங்கட்கிழமை) வத்தளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராகம மருத்து பீட மாணவர் விடுதி வளாகத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத குழுவினரால் கடந்த முதலாம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தாக்குதலில் 4 மாணவர்கள் காயமடைந்த நிலையில் சம்பவம் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் மற்றும் மருத்துவ பீட மாணவர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

135 இந்திய மீனவர்களின் படகுகள் ஏலத்தில் விற்பனை !

யாழ்ப்பாணம் – காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 135 இந்தியப் படகுகள் இன்றைய தினம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

இதன்போது 48 அடி நீளமான படகொன்று அதிக தொகைக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. இந்த படகு 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனையானது.

கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள தலைமையகத்தின் அதிகாரிகளால் காரைநகரில் இந்த ஏலம் நடத்தப்பட்டது.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்தவர்கள் ஏலத்தில் ஆரம்ப வைப்பு தொகையாக 1,000 ரூபா பணத்தை செலுத்தி ஏலத்தில் பங்கேற்றனர்.

இலங்கையின் 5 துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்ளுக்குச் சொந்தமான குறித்த மீன்பிடிப் படகுகள் இன்று முதல் 5 இடங்களில் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.

ஏலத்தில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த படகுகளை கடந்த ஒருவாரமாக பெருமளவானோர் பார்வையிட்டிருந்த அதேவேளை, இன்றைய தினமும் பலர் அவற்றை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குடும்ப வன்முறை குற்றச்சாட்டு – பதவி ஏற்ற ஒரு வாரத்தினுள் பதவி விலகிய பிரதமர் !

தென் அமெரிக்க நாடான பெருவின் பிரதமராக ஹெக்டர் வலர் பின்டோ (வயது 63), கடந்த 1-ந் திகதி பதவி ஏற்றார். ஆனால் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், அவர் 2016-ம் ஆண்டு குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக அவரது மனைவியும், மகளும் புகார் அளித்துள்ளதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதையெல்லாம் அவர் மறுத்தார்

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்த நாட்டின் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ மந்திரிசபையை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் பிரதமர் ஹெக்டர் வலர் பின்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர், “நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் என்பதை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்” என்று கூறியதாக அந்த நாட்டின் வானொலி அறிவித்தது. அவர் துஷ்பிரயோகம் செய்பவர் என வெளியான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என விளக்கினார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை அதிபர் பெட்ரோ காஸ்டிலோவிடம் அளித்து விட்டார்.

மேலும் தனக்கு எதிராக குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளை கூறியவர்கள் மீது அவர் வழக்கு தொடர திட்டமிட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. பதவி ஏற்ற ஒரு வாரத்திற்குள் பிரதமர் ராஜினாமா செய்திருப்பது பெரு நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் சடுதியாக அதிகரித்த வாகனவிபத்துக்கள் – 2021 ஆம் ஆண்டில் முறையற்ற விதத்தில் வாகனம் செலுத்தியோருக்கு எதிராக 79,904 வழக்குகள் பதிவு !

இலங்கையில் தற்போது வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும், 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டு வீதி விபத்துக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும் ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் நெடுஞ்சாலைகள் செயற்பாடுகள் பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் நிறுவப்பட்டுள்ள பொலிஸ் பிரிவு அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை ஆறு மாதங்களுக்குள் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிந்தக குணரத்னவிடம் பணிப்புரை விடுத்தார்.

2021 ஆம் ஆண்டில், பின்னதுவ, அபரெக்க, குருந்துகஹஹெதக்ம, அங்குனகொலபெலஸ்ஸ, அதுருகிரிய மற்றும் களனிகம ஆகிய இலங்கை அதிவேக நெடுஞ்சாலைகளில் 07 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விபத்துக்களினால் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். 2021 ஆம் ஆண்டில் மொத்த வீதி விபத்துகளின் எண்ணிக்கை 461 ஆகும் .

2020 ஆம் ஆண்டில், நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற மொத்த வீதி விபத்துகளின் எண்ணிக்கை 308 ஆகும். 2020 ஆம் ஆண்டில், களனிகம மற்றும் குருந்துகஹஹெதக்ம ஆகிய இடங்களில் ஐந்து அபாயகரமான வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் அவற்றில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிகளவான விபத்துக்கள் சாரதிக்கு உறக்கம் ஏற்பட்டதன் காரணமாக நிகழ்ந்துள்ளன. அதிவேக வீதிகளில் ஓய்வறைகளை அமைப்பது தொடர்பில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கவனம் செலுத்தியுள்ளார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல், அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றங்களில் ஈடுபடும் வாகன சாரதிகள் நெடுஞ்சாலைகளில் கைது செய்யப்படுவதாக பொலிஸ் அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர். 2021 ஆம் ஆண்டில் அவர்களுக்கு எதிராக 79,904 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 2020 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 66,252 என்றும் வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள பொலீஸ் பிரிவுகளில் பணியாற்றும் போலீஸார் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

“இலங்கையின் பொருளாதார நலிவுக்கு ராஜபக்ஷக்களே காரணம்.” – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்துக்கு பின்னர் தான் நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியானது என ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அங்கு பேசிய அவர்,

நாட்டின் பொருளாதாரம் கொரோனா காரணமாக பாதாளத்தில் சென்று விட்டது என சொல்கிறார்கள். அது உண்மை இல்லை. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் பின்னர் தான் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது.

மத்தள விமான நிலையம் முதல், ஹம்பாந்தோட்டை துறைமுகம் வரை திட்டமிடப்படாத நிகழ்ச்சி நிரலின் கீழ் சென்றுவிட்டது. இப்படி தான் ஆட்சியாளர்கள் செய்துவிட்டு செல்கின்றனர். அரசிடம் சரியான திட்டமிட்டல் இல்லை.

இப்போது மின்சாரம், எரிபொருள் எல்லாமே பிரச்சினையாக உள்ளது. பொருட்களின் விலையை வியாபாரிகளே நிர்ணயிக்கின்றனர். இதற்கு நிதி அமைச்சரே பதில் கூற வேண்டும். அடுத்த தேர்தல் தான் இதற்கு பதில் கூற வேண்டும். பசில் ராஜபக்ச பொருளாதார கொள்கையை மீண்டும் ஒருமுறை திரும்பி பார்க்க வேண்டும். – என்றார்.

கள்ளச்சந்தை டொலர் மூலம் வாங்கப்பட்ட ஆயுதங்கள் – பசில் ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல் !

கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை இலங்கை வாங்கியதாகக் கூறிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, கறுப்புச் சந்தையில் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி, வடகொரியாவிடம் இருந்து இலங்கை ஆயுதங்களை வாங்கியதாக பசில் ராஜபக்ஷ கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

அதன் பின்னர் வெளிவிவகார அமைச்சு அதனை நிராகரித்து ஊடக அறிக்கையை வெளியிட்டது. ஆனால் நிதியமைச்சரால் எந்த மறுப்பும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையிலேயே, பசில் ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கறுப்புப் பணத்தை எவரும் பயன்படுத்துவதற்கு எமது சட்டங்களில் இடமில்லை என்றும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

சர்வதேச சமூகத்தால் தடைகள் விதிக்கப்பட்ட ஒரு நாட்டைக் கையாள்வதற்கான ஆணையை பொதுமக்கள் அரசாங்கத்திற்கு வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

தலையில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் – வவுனியாவில் சம்பவம் !

செட்டிகுளம் பகுதியில் தலையில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா, செட்டிகுளம், கங்கன்குளம் பகுதியில் இன்று அதிகாலை (07.02) குறித்த குடும்பஸ்தர் மீட்கப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செட்டிகுளம், கங்கன்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று (06.02) மாலை 4 மணியளவில் சண்முகபுரம் நோக்கிச் சென்ற இளம் குடும்பஸ்தர் இரவாகியும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் அதிகாலை 1 மணியளவில் கங்கன்குளம் சந்திப் பகுதியில் தலையில் வெட்டுக்காயங்களுடன் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் குறித்த குடும்பஸ்தர் வீதியில் கிடப்பதாக அவரது மனைவிக்கு கிடைத்த தகவலையடுத்து அவர் அங்கு சென்றுள்ளார்.

இதன்போது அப்பகுதி மக்களின் துணையுடன் நோயாளர் காவு வண்டி மூலம் குறித்த இளம் குடும்பஸ்தர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுப்பிரமணியம் கண்ணன் (வயது 33) என்ற இளம் குடும்பஸ்தரே தலையில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். வவுனியா வைத்தியசாலையில் குறித்த நபர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சுதந்திர தினத்துக்கு ஞானசார தேரரை அழைத்ததால் நேர்ந்த சோகம் !

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அழைப்பு விடுத்தமை போன்ற விடயங்களில் பாரம்பரிய முஸ்லிம்களுக்கும் வஹாபி முஸ்லிம்களுக்கும் இடையில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

நிக்கவெரட்டிய தும்மல சூரிய பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் கடந்த 4ஆம் திகதி இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தத் தேவஸ்தானத்தில் ஞானசார தேரர் தலைமையில் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வு முடிந்ததும் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது, மோதலில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

ஒரு அமைச்சருக்கு மாதாந்தம் 270,000 கொடுப்பனவு – குறையுங்கள் வலியுறுத்தல் !

நாட்டின் உற்பத்தி வீழ்ச்சி மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல் நடவடிக்கைகளால் பொதுமக்கள் தற்போது சிரமங்களை அனுபவித்து வருவதாக  நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் ஹேரத் தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர்  இதனை தெரிவித்தார். மேலும் பேசிய அவர்,

நிதி நெருக்கடிக்கு மத்தியில் அமைச்சர்கள் தியாகங்களைச் செய்து முன்மாதிரியாக இருக்க வேண்டும் என அரசாங்கம் கூறுகின்றது. இருப்பினும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட தேவைகளுக்காக அரச நிதியை பயன்படுத்துகின்றனர்.

ஒவ்வொரு அமைச்சருக்கும் மாதாந்த எரிபொருள் கொடுப்பனவில் இருந்து ஐந்து லீற்றரை குறைக்க நிதியமைச்சர் முன்மொழிந்ததார்.  எவ்வாறாயினும் ஒரு அமைச்சருக்கு மாதாந்தம் 270,000 கொடுப்பனவுகள் கிடைக்கும் நிலையில் எரிபொருளுடன் சேர்த்து இவற்றையும் குறைக்க முடியும் என விஜித் ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்கம் உண்மையில் மாற்றத்தையும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதிலும் ஆர்வமாக கொண்டிருந்தால் இவ்வாறான விடயங்களை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை விடுவிக்க பிணையில் பிணையில் நீதிமன்றம் உத்தரவு !

20 மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் சார்பில் பிணை கோரிய மீள்திருத்த விண்ணப்பம் மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதியரசர்களான மேனகா விஜேசுந்தர மற்றும் நீல் இத்தவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2020 ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட சட்டத்தரணிக்கு எதிராக புத்தளம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

பிணையில் விடுவிக்க கோரி தாக்கல் செய்த இரண்டு மணுக்கள் மேல் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அவர் நாடியிருந்தார்.