February

February

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணைக்குழுவில் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்த கருத்துக்களுக்கு வெளிவிவகார அமைச்சு மறுப்பு !

மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணைக்குழுவில், நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்த கருத்துக்களுக்கு வெளிவிவகார அமைச்சு மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 27ஆம் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவில், இலங்கையின் மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளின் நிலைமை குறித்த கருத்துப் பரிமாற்றத்தின் போது, அம்பிகா சற்குணநாதனின் சாட்சியத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல தவறான அறிக்கைகள் குறித்து, வெளிவிவகார அமைச்சு கவலையுடன் குறிப்பிட விரும்புவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம், பல முனைகளில் அடைந்துள்ள முன்னேற்றத்தை, அம்பிகா சற்குணநாதனின் சாட்சியம், முற்றாகப் புறக்கணிக்கிறது.

மனித உரிமைகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் தமது ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைப் பயன்படுத்த வேண்டும் என அவர் வழங்கிய பரிந்துரைகளில், அமைச்சு ஏமாற்றம் அடைந்துள்ளது.

இலங்கை போன்ற பல்லின மற்றும் பல மதங்கள் கொண்ட மக்கள் வாழும் நாட்டில், சமூக நல்லிணக்கத்தைக் கருத்திற்கொண்டு, சர்வதேச சமூகத்தில் இலங்கை குறித்த ஆபத்தான தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்படல் வேண்டும்.

‘சிங்கள பௌத்த தேசியவாதம்’ மற்றும் ‘இராணுவமயமாக்கல்’ போன்றவற்றை, அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு உந்துதலாக அம்பிகா சற்குணநாதன் குறிப்பிடுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு குறித்த உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், இனம் குறித்த தெளிவற்ற கூற்றுக்களை அவர் முன்வைத்துள்ளார்.

இலங்கையில் ‘மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் கோரும் அரசுகளின் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காக’ சீனாவுடனான தனது நட்பை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்வதாக அம்பிகா சற்குணநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்து – பசிபிக் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் மூலோபாயப் போட்டியைக் கவனத்தில் கொண்டு, சுதந்திரத்திற்குப் பின்னர் நாங்கள் ஏற்றுக்கொண்ட அணிசேரா வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்ப, நடுநிலைமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே எமது முக்கிய வெளியுறவுக் கொள்கை சார்ந்த நோக்காகும்.

தேசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்காக, சீனாவைத் தவிர, இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற பல நாடுகளுடன், இலங்கை கூட்டுறவை மேற்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு செயன்முறைகள் மற்றும் நிறுவனங்களின் மூலம், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பில், இத்தகைய கூட்டாண்மைகள், எந்தவித தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்றும், வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன ரீதியாக சமூகங்களுக்கு பாகுபாடு காட்டப்படுவது குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் ஒரு காலத்தில் சமூகங்களுக்கிடையில் வெறுப்பைத் தூண்டிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரத்தை நினைவூட்டுவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.

அத்தோடு சிங்கள பௌத்த தேசியவாதம் மற்றும் இராணுவமயமாக்கல் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சு, நாட்டில் அனைத்து தரப்பினருக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அடுத்தடுத்து பதவி விலகிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் மூத்த உதவியாளர்கள் !

பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் நான்கு மூத்த உதவியாளர்கள், டவுனிங் ஸ்ட்ரீட்டில் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

கொள்கை திட்ட தலைவர் முனிரா மிர்சா தனது பதவியை இராஜினாமா செய்த சிறிது நேரத்திலேயே தகவல் தொடர்பு இயக்குனர் ஜெக் டோய்ல் தனது இராஜினாமாவை உறுதிப்படுத்தினார்.

வியாழக்கிழமை, தலைமைப் பணியாளர் டான் ரோசன்ஃபீல்ட் மற்றும் மூத்த சிவில் ஊழியர் மார்ட்டின் ரெனால்ட்ஸ் ஆகியோரும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

பிரதமர் ஜோன்சன் தனது கட்சிக்குள்ளேயே அவரது தலைமை குறித்து கேள்விகள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த உயர்மட்ட உதவியாளர்களின் இந்த இராஜினாமா அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

தகவல் தொடர்பு இயக்குனர் ஜெக் டோய்ல், ‘சமீபத்திய வாரங்கள் எனது குடும்ப வாழ்க்கையில் பயங்கரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது’ என்று கூறினார்.

10ஆம் எண் அலுவலக செய்தித் தொடர்பாளரின் அறிக்கையில், ‘ரோசன்ஃபீல்ட் தனது இராஜினாமாவை வியாழக்கிழமை பிரதமரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அவரது இடத்திற்கு இன்னொருவரை நியமிக்கும் வரை அவர் தொடர்ந்து பணியில் இருப்பார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் முதன்மை தனிப்பட்ட செயலாளரான ரெனால்ட்ஸ், பின்னர் வெளியுறவு அலுவலகத்தில் ஒரு பணியை தொடருவார்.

தரையில் இறங்கி போராட தடை – போராட கடலில் இறங்கிய வடமராட்சி மீனவர்கள் !

வடமராட்சி மீனவர்கள் தமது போராட்ட முறையை மாற்றி கடலில் இறங்கி போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவர் இந்திய மீனவர்க்ளின் படகு மோதி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரியும் ஐந்தாவது நாளாக இன்றைய தினமும் வடமராட்சி மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

மீனவர்கள் கடந்த 31ஆம் திகதி முதல் பருத்தித்துறை – பொன்னாலை வீதியினை வழி மறித்து நேற்றைய தினம் வியாழக்கிழமை வரையில் நான்கு நாட்களாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருந்தனர்.

அந்நிலையில் நேற்றைய தினம் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளமை, பொதுமக்களின் இயல்வு வாழ்வுக்கு இடையூறு விளைவித்தல், கொரோனா அபாயம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பருத்தித்துறை காவற்துறையினர், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் போராட்டத்திற்கு எதிராக தடையுத்தரவை பெற்று இருந்தனர்.

நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து நேற்றைய தினம் இரவு மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தினை கைவிட்டனர். இந்நிலையில் இலங்கையின் சுதந்திர தினமான இன்றைய தினத்தினை கரிநாளாக அனுஷ்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த மாதம் 27ஆம் திகதி கடலுக்கு சென்ற வத்திராயன் மீனவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும் , இதுவரை காலமும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து மெழுகு திரிகளை ஏந்தி, கறுப்பு கொடிகளுடன் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் – சுமந்திரன் அறிவிப்பு !

இழுவை மடி சட்டத்தை உடன் அமுல்படுத்துமாறும் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – வடமராட்சியில் கடற்தொழிலாளர்கள் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய கடற் தொழிலாளர்களின் அத்துமீறல் மற்றும் கடற் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வடமராட்சி – சுப்பர்மடம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடைவித்திருந்த நிலையில், நேற்று மாலை பொலிஸாரினால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், இன்றைய தினம் வடமராட்சி – சுப்பரமடம் பகுதியில் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டித்த கடற் தொழிலாளர்கள், உயிரிழந்த மீனவர்களுக்கும் அஞ்சலியும் செலுத்தினர்.

மேலும், நூற்றுக்கணக்கான கடற் தொழிலாளர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் கஜேந்திரன் ஆகியோரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது உரையாற்றிய சுமந்திரன். கடற் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாமல் தொடர்ந்தும் நீடித்துக் கொண்டிருக்கிறது. இது குறித்த சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படத்த வேண்டும் என்று தெரிவித்ததுடன், நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்போவதாகவும் தெரிவித்தார்

“அரச புலனாய்வு துறையினரால் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மீது தொடர்ந்து அழுத்தம்.” – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்

இலங்கை நாட்டின் 74 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். ஆனால், தமிழர்களுக்கு இன்றைய நாள் ஒரு கறுப்பு நாள் எனவும் அரசாங்கம் இனிமேல் மரண சான்றிதழ் வழங்குவோம் என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்துவதை முற்றாக தவிர்க்க வேண்டும் என்றும், கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது

திருகோணமலை அன்புவெளிபுரம் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சங்கத்தின் தலைவி ஜே.நாகேந்திரன் ஆஷா இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நாட்டில் எமக்கு எந்த ஒரு சுதந்திரமும் இல்லை. நாங்கள் இன்றுவரை நிம்மதியாக இந்த நாட்டில் வாழவில்லை. அரசாங்கத்தின் அழுத்தங்களின் காரணமாக இன்றுவரை அரச புலனாய்வு துறையினர்களின் பல கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டு, பின் தொடரப்பட்டு அச்சுறுத்தல்களுக்கு உட்படுகின்றோம். நாட்டின் ஜனாதிபதி உட்பட அனைத்து அரசியல் தலைமைகளும், அரச அதிகாரிகளும் இவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஒவ்வொரு தீர்க்கமான கருத்துக்களும் தெரிவிக்காத நிலையில் ஆண்டுதோறும் தரவுகள் மாத்திரம் பெற்ற வண்ணம் இருக்கின்றார்கள்.

அவ்வாறு பெறப்பட்ட தரவுகளுக்கு இதுவரை எந்த ஒரு தீர்வும் கிட்டாத நிலையில் நீதியமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டு, ஊடகங்களுக்கு காணாமல் ஆக்கப்பட்டோர்கான மரண சான்றிதழ்கள் வழங்குவதாக தெரிவித்த விடயத்தை இன்றைய சுதந்திர தினத்தில் வன்மையாக கண்டிக்கிறோம்.

தமது உறவுகளுக்கு நீதி விசாரணை இல்லாமல் எவ்வாறு மரண சான்றிதழ் வழங்க முடியும். எமக்கு மரண சான்றிதழ் தேவையில்லை. அவர்களுக்கான சரியான ஒரு நீதி மாத்திரமே வேண்டும். ஜனாதிபதி கூறிய அதே வார்த்தையை மனப்பாடம் செய்துகொண்டு நீதியமைச்சர் மரண சான்றிதழ்கள் வழங்கப்படும் என்ற விடயத்தை கூறுவதை விட்டுவிட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சரியான ஆய்வுகளை மேற்கொண்டு எமக்கு சரியான நீதியை பெற்றுத்தர வேண்டும்.

நீதியமைச்சரின் குடும்பத்தினரோ அல்லது உறவினர்களோ இவ்வாறு கடத்தப்பட்டு அவர்களுக்கு நீதி கிடைக்காத பட்சத்தில் மரண சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றால் அவர் ஏற்றுக்கொள்வாரா? என அவர் கேள்வி எழுப்பினார்

மேலும், 1948 ஆம் ஆண்டு வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற இந்த நாட்டில் இன்று வாழும் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு சுதந்திரமும் இல்லை. இவ்வாறு இருக்கையில் நாம் எவ்வாறு சுதந்திர தினத்தை கொண்டாடுவது? நாட்டு மக்கள் என்ற வகையில் இவ்வாறான அநீதிகள் இழைக்கப்படாமல் இருந்தால் நாட்டின் அனைத்து மக்களும் ஒன்றாக இந்த சுதந்திர தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடியிருக்கலாம் என திருகோணமலை தமிழர் சமூகத்தின் இணைப்பாளர் ஆர்.நிக்லஸ் தெரிவித்தார்

இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள் – முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாபெரும் போராட்டம் !

இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள் எனும் தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள்" - முள்ளிவாய்க்கால் நினைவு  முற்றத்திலும் போராட்டம்..!!! - Yarldevi News

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து ஆரம்பமான இந்த கவனயீப்பு பேரணி முல்லைத்தீவு நகரை நோக்கி செல்கிறது

குறித்த போராட்டத்தில் மத தலைவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்

“ஹபாயா’ சர்ச்சை இனப்பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடாது.” – இரா.சம்பந்தன் வலியுறுத்தல் !

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள ‘ஹபாயா’ சர்ச்சையால் அதிருப்தியடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், இது இனப்பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள ‘ஹபாயா’ சர்ச்சை தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.  மேலும் பேசியுள்ள அவர்,

தமிழ்பேசும் மக்கள் என்ற ரீதியில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அத்தியாவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, ஒவ்வொரு இனத்தினுடைய உரிமைகளையும் மற்றைய இனம் மதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

‘ஹபாயா’ அணிந்து வந்திருந்த குறித்த முஸ்லிம் பெண் ஆசிரியர் உண்மையில் அதிபர் மீது தாக்குதல் நடத்தியிருந்தால் அது தவறான விடயம் எனவும், இந்தக் கருமத்தை நாம் சமாதானமாகத் தீர்க்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“ஒருவரையொருவர் மதித்து மற்றவர்களுடைய கருமத்துக்கு – சுயமரியாதைக்கு – இறைமைகளுக்குப் பாதகம் இல்லாமல் நாம் செயற்பட வேண்டும். அனைவரும் இந்தக் கடமையை ஒற்றுமையாகச் செய்ய வேண்டும் என நான் மிகத் தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

பிரச்சினையை நாம் வளர்க்கக்கூடாது. தமிழ்பேசும் மக்கள் என்ற வகையில் வடக்கு – கிழக்கு என்பது எமது சரித்திர ரீதியான வதிவிடம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த அடிப்படையில் இறைமையை நாம் பாதுகாப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும்” – என்றார்.

பௌத்த விகாரைளாகும் தமிழரின் பூர்வீக நிலம் – தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் குருந்தூர் மலைக்கு விஜயம் !

தமிழர்களின் வரலாற்று வழிபாட்டு பூமியான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பௌத்தமயமாக்கு உட்பட்டுள்ளதுடன் அங்கு பௌத்த விகாரை அமைப்புக்கான தொடர்ச்சியான நடவடிக்கைக் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பல நூற்றாண்டுகளாக தமிழர் வழிபாட்டு தலமாக உள்ள இந்த நிலம் முழுமையாக பேரினவாத ஆக்கிரமிப்புக்குள் சென்று கொண்டிருக்கிறது. பல தரப்பினரும் இதனை எதிர்த்து வருகின்ற போதிலும் அரசு இதனை தடுப்பதாக தெரியவில்லை. இந்த நிலையில் சுதந்திர தின உரையில் பழைய தொல்லியல்பகுதிகளை பாதுகாக்க பிரயத்தன முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை தொடர்பில் அதிகம் சிந்திக்க வவேண்டிய தேவை தமிழரிடத்தில் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், இலங்கையின் 74ஆது சுதந்திரதினமான இன்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

குறிப்பாக இவ்வாறு விஜம்மேற்கொண்டவர்கள் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைக்கு முரணாக கட்டப்படுகின்ற கட்டடங்களை பார்வையிட்டதுடன்இ அங்கு ஆதி ஐயனார் திரிசூலம் இருந்தஇடத்தில் வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

 

 

 

மேலும் இந்த விஜயத்தில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் சிவஞானம் சிறீதரன் சாணக்கியன் ராசமாணிக்கம் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் எம்.கே.சிவாஜிலிங்கம் பச்சிலைப்பள்ளி பிரதேசசபை தவிசாளர் சுரேன் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ஜீவன் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் இளைஞர்அணி தலைவர் கி.செயோன்ஆகியோருடன் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“அமைச்சரின் மகனாகயிருந்தாலும் சரி சாதாரண பிரஜையின் மகனாகயிருந்தாலும் சரி எல்லாருக்கும் சட்டம் ஒன்றே.” – நாமல் ராஜபக்ஷ

ஒரு நாடு ஒரு சட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துகின்றது அது நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திகவின் மகனிற்கும் பொருந்தும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ராகமமருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோவின் மகனிற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமலிருப்பதற்கான காரணங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ள நாமல்ராஜபக்ச ஜனாதிபதியிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கும் ஒருநாடு ஒருசட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அருந்திக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார், ஏதோ நடந்துள்ளது. அவருடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார் ஆகவே நாங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சட்டத்தை மறைக்கவேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ள அமைச்சர், அமைச்சரின் மகனாகயிருந்தாலும் சரி சாதாரண பிரஜையின் மகனாகயிருந்தாலும் சரி அவருக்கு எதிராக ஒரேநாடு ஒரே சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் மக்கள்இதனையே ஜனாதிபதியிடமிருந்து எதிர்பார்க்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

இது இன்று இடம்பெறுகின்றது -தவறு செய்திருந்தால் அவர்தண்டிக்கப்படுவார் அப்பாவி என்றால் நீதிமன்றில் அவர் தன்னை நிருபிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் எனவும்அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் பகிடிவதையே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது பகிடிவதைக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்கவேண்டும்,எங்களால் ஒருபோதும்பகிடிவதையை அனுமதிக்க முடியாது-எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்ஃ

“அழிந்துகொண்டிருந்த  தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்களைப்  பாதுகாத்து அவற்றை மேம்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.” சுதந்திரதின உரையில் ஜனாதிபதி !

‘இனம், மதம் என்ற எவ்விதப் பேதங்களுமின்றி ஒவ்வொரு இலங்கைப் பிரஜைக்கும் இன்று நாட்டின் எப்பிரதேசத்திலும் சுதந்திரமாக, பாதுகாப்புடன் வாழும் உரிமையுண்டு. .” எனவும் நாட்டுக்கு சரியானதை செய்வதே தமது இலக்கே அன்றி, அனைவரையும் திருப்திப்படுத்துவது அல்லவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 74 வது தேசிய சுதந்திர தினம் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பம்!  (LIVE) - தமிழ்வின்

தனது சுதந்திர தின உரையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இனம், மதம் என்ற எவ்விதப் பேதங்களுமின்றி ஒவ்வொரு இலங்கைப் பிரஜைக்கும் இன்று நாட்டின் எப்பிரதேசத்திலும் சுதந்திரமாக, பாதுகாப்புடன் வாழும் உரிமையுண்டு. தாம் விரும்பும் மதத்தை வழிபடுவதற்கான சுதந்திரமும் உள்ளது. சுயாதீனமாக அபிப்பிராயங்களை கொள்வதற்கும், கருத்துக்களை வெளியிடுவதற்கும் சுதந்திரம் இருக்கின்றது. நாட்டினுள் முழுமையாக ஊடகச் சுதந்திரம் இருக்கின்றது.

சுதந்திரம் மிக்க சனநாயக ரீதியிலான நாடொன்றின் மக்கள் என்ற வகையில் நாம் எல்லோருக்கும் சிறப்புரிமைகள் இருப்பதுபோன்று பொறுப்புக்களும் இருக்கின்றன. எல்லோரும் நாட்டிற்காகத் தமது பொறுப்புக்களை நிறைவேற்றும்போதுதான் கிடைத்த சுதந்திரத்தின் உச்சக்கட்டப் பயன் கிடைக்கும். பொறுப்புக்களை மறந்துவிட்டு உரிமைகளைப் பற்றி மட்டும் பேசுவது பொருத்தமாக இருக்காது.

ஒரு நாட்டின் சுதந்திரமானது மிக அர்த்தமாக அமைவது, அந்த நாடானது சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய சகல அம்சங்களினாலும் வலுவடைந்தபோதே ஆகும். அதற்காக முனைப்பாகப் பங்களிக்கும் சந்தர்ப்பம் அரசைப் போன்று மக்களுக்கும் உள்ளது.

ஒரு நாட்டை உரிய திசையைநோக்கிக் கொண்டுசெல்லும்போது அதற்காக நாட்டின் அனைவரினதும் உதவியையும் எதிர்பார்க்க முடியாது என்பதை நாம் அறிவோம். மாற்றமடையாதவர்களைப் பார்த்திருந்து நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக நாம் திட்டமிட்டுள்ளவைகளைக் கைவிடுவதற்கு நாம் தயாரில்லை. எமது நோக்கமானது நாடு சார்பில் சரியானதைச் செய்வதே தவிர எல்லோரையும் திருப்திப்படுத்துவதல்ல.

எதிர்காலத்தை நற்சிந்தனையுடன் நோக்கும் ஆக்க முறையான சிந்தனையின்மூலம் மட்டும்தான் நாம் எமது வருங்காலப் பயணத்தில் வெற்றிபெற முடியும். வெற்றிகரமானதொரு பயணத்திற்கு வேண்டிய அர்ப்பணிப்புக்களைச் செய்தால் மட்டுமேதான் நாம் எதிர்கொள்கின்ற சவால்களை வெல்ல முடியும்.

எதிர்மறையான சிந்தனையுடையவர்கள் உலகை மாற்றிவிட மாட்டார்கள். அவர்களுக்கு அதற்கான ஆற்றலும் இல்லை. ஒரு பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைக்காமல் விமர்சனம் மட்டும் செய்யும் பழக்கமுள்ளவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நோக்கு இல்லை.

எமது நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளின்போது  முதலீடுகள் முக்கிய காரணியொன்றாகும். முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு அரசு  எப்பொழுதும் நடவடிக்கை எடுப்பதுடன், எமக்கு உள்நாட்டு முதலீடுகளைப்போல சர்வதேச முதலீடுகளும் அவசியமாகும். விசேடமாகப் பாரிய அளவிலான  கருத்திட்டங்கள், நவீன தெழில்நுட்ப அறிவு தேவைப்படும் கைத்தொழில்கள், உலகச் சந்தைக்கான சந்தர்ப்பங்களை  ஏற்படுத்தும் புதிய  வியாபரங்களுக்கு  சர்வதேச  முதலீடுகள் தேவைப்படுகின்றது.

அதற்காக அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு  முதலீடுகளுக்கு எதிராகத்  தவறான  அபிப்பிராயங்களை  மக்களிடம் கொண்டுசெல்லும்  தரப்பினர்பற்றி  மக்கள் மிகவும்  அவதானமாக இருத்தல் வேண்டும்.

கலாசாரச் சுதந்திரம் ஒவ்வொரு இனத்திற்கும் முக்கியமானது. ஆயிரம் வருடகால  வரலாற்றைக்கொண்ட பாரம்பரிய சம்பிரதாயங்கள், விழுமியங்கள் மற்றும் எமது பண்புகளைப் பாதுகாத்தல் என்பவற்றை எமது அடிப்படைப் பொறுப்பாகக் கருதுகின்றோம்.

கடந்தகாலத்தில்   பல  அச்சுறுத்தல்களுக்குள்ளாகி அழிந்துகொண்டிருந்த  தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்களைப்  பாதுகாத்து அவற்றை மேம்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். எமது நாடு சட்ட ஆதிக்கத்தைப் பாதுகாக்கும், சர்வதேச சமவாயங்களை மதிக்கும்  நடொன்றாகும். குறுகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு  இலங்கைக்குப் பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சார்த்துவதற்கு ஏதேனுமொரு தரப்பினர்  முயற்சிகளை மேற்கொண்டபோதும் எவ்விதத்திலுமான மனித உரிமை மீறல்களுக்கு அரசு உடந்தையாக இருக்கவில்லை என்பதுடன், எதிர்காலத்திலும் அத்தகைய நிகழ்வுகள் இடம்பெறுவதற்கும் இடமளிக்கப்படமாட்டாது என்றார்.