February

February

“கடந்த கால காயங்களை குணப்படுத்த புலிச் சந்தேக நபர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும்.” – ஞானசார தேரர், ஜனாதிபதியிடம் கோரிக்கை !

நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு கலகொட அத்தே ஞானசார தேரர், ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 12 ஆண்டுகள் கடந்துள்ளதால், கடந்த கால காயங்களை குணப்படுத்த புலிச் சந்தேக நபர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை சுதந்திர தினத்தன்று இவர்களில் சிலருக்கு விடுதலை கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் சிறையில் இருக்கும் போது, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பலர் என்னை சந்தித்தனர். அவர்கள் என்னை தேடி வந்து அவர்களின் வாழ்க்கை கதைகளை கூறினர். அவர்களுக்கு நடந்தது என்ன, ஏன் இந்த நிலைமைக்கு ஆளாகினர் போன்ற விடயங்களை கூறினர்.

போர் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. காயங்களை மேலும் காயப்படுத்திக்ககொண்டிருக்காது, விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்வது முக்கியமானது என ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினரிடம் எடுத்துரைத்தோம்.

இல்லை என்றால், இதனை அடிப்படையாகவும் ஒரு காரணமாகவும் கொண்டு, மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ் பிரிவினைவாத சக்திகள் ஒருங்கிணைப்புகளை மேற்கொள்வார்கள்.

ஒரு நாடு – ஒரு சட்டம் ஜனாதிபதி செயலணிக்குழு என்ற வகையில் நாங்கள் வடபகுதிக்கு விஜயம் செய்தோம். குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் சிறையில் இருக்கும் பலரது பெற்றோர் எம்மை சந்தித்தனர்.

சிறையில் இருப்போரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே இவர்களில் கோரிக்கையாக இருந்தது. கடந்த 25 ஆம் திகதி ஒரு கலந்துரையாடல் நடந்தது, அப்போது நாங்கள் ஜனாதிபதிக்கு இதனை நினைவூட்டினோம்.

இந்த கைதிகள் விடுதலை செய்யப்படுவது முக்கியமானது என்பதை சுட்டிக்காட்டினோம். இதனை செய்தால், பிரிவினைவாத கரு நிழல் மீண்டும் ஒருங்கிணைய இருக்கும் சந்தர்ப்பை இல்லாமல் செய்யலாம். அந்த காலத்தில் எமது இளைஞர் ஒருவர் அங்கிருந்தாலும் அவரும் புலி உறுப்பினர்தான். இதுதான் உண்மை நிலை. நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. பெப்ரவரி 4 ஆம் திகதி சிலருக்காவது விடுதலை கிடைக்கும் என நாம் நம்புகிறோம். என தேரர் குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு துளியேனும் இரத்தம் சிந்தாமல் காலனித்துவ சுதந்திரத்தை அடைந்தோம்.” – சுதந்திரதின அறிக்கையில் பிரதமர் மஹிந்த !

வரலாறு முழுவதும் சுதந்திரத்தை அடைவதற்கு இலங்கையர்களாகிய நாம் பல தியாகங்களை செய்துள்ளோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

‘இலங்கையர்களால் பெருமிதத்துடன் கொண்டாடப்படும் 74வது தேசிய சுதந்திர தினம் உதயமாகியுள்ளது. வரலாறு முழுவதும் சுதந்திரத்தை அடைவதற்கு இலங்கையர்களாகிய நாம் பல தியாகங்களை செய்துள்ளோம்.

ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான இத்தகைய போராட்டங்கள் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. ஒரு துளியேனும் இரத்தம் சிந்தாமல் காலனித்துவ சுதந்திரத்தை அடைந்தமை இன, மத, கட்சி பேதமின்றி சிங்கள, தமிழ், முஸ்லிம், பர்கர் என அனைத்துத் தலைவர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் விளைவாகும்.

74 வருடங்களுக்கு முன்னர் கிடைத்த அந்த சுதந்திரத்தின் உண்மையான உத்வேகம் உள்நாட்டுப் போராட்டங்களினாலும், மூன்று தசாப்த கால பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தினாலும் இந்நாட்டு மக்களுக்கு இல்லாமல் போனது. போர்வீரர்களின் ஈடு இணையற்ற துணிச்சலுக்கும் அர்ப்பணிப்பிற்கும் தலைமைத்துவம் வழங்கி இத்தால் 13 வருடங்களுக்கு முன்னர் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து மக்களுக்கு அச்சம் இல்லாத நாட்டுக்கு மீண்டும் உரிமைக் கொள்ள முடிந்தது.

அந்த சுதந்திரம் மீண்டும் சவாலுக்கு உட்பட்ட நிலையில் நாட்டின் ஆட்சியை மீண்டும் பொறுப்பேற்று நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்திய நாம் உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில் வீழ்ச்சியடைந்த மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும்  பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் மாபெரும் இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம்.

இந்த அழிவுகரமான தொற்றுநோயிலிருந்து உயிர்களைக் காப்பாற்றுவதற்கான அரசாங்கத்தின் தடுப்பூசி ஏற்றும் திட்டம் இப்போது உலக அளவில் பாராட்டப்பட்டிருப்பது ஒரு நாடாக நம் அனைவருக்கும் ஒரு பெரிய சாதனையாகும்.

சவால்களுக்கு மத்தியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணமிது. ஒருவரையொருவர் மதித்து, மற்றவரின் இருப்புக்கு இடையூறாக இல்லாத சமூக மாற்றத்தின் மூலம் சுதந்திரத்தின் அர்த்தத்தை விரிவுபடுத்த முடியும் என்பது எனது நம்பிக்கை.

இந்த தேசிய சுதந்திர தினத்தில், எமது தாய்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக தம் இன்னுயிர்களை தியாகம் செய்து மகத்தான தியாகங்களை செய்த அனைத்து மாவீரர்களையும் நாம் மரியாதையுடன் நினைவு கூர்வோம். சவால்களை முறியடித்து நாளைய விடியலுக்காக சுபீட்சமான நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 74வது சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியுள்ள யாழ்.பல்கலைகழக மாணவர்கள் !

யாழ் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் கறுப்பு வர்ண துணி கட்டபட்டு இன்றைய சுதந்திர தினத்தை கரி நாளாக மாணவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

இன்று முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் சிவில் சமூகங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமுகமாக பல்கலைகழக மாணவர்கள் முள்ளிவாய்க்காலிற்கு செல்வதற்காக பல்கலைகழகத்தில் தமது வாகனங்களை தரித்துவிட்டு செல்ல முற்ப்பட்ட நிலையில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டதோடு பரமேஸ்வரா ஆலயத்திற்கு செல்பவர்களிற்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய நாள் சுதந்திர தினம் என கொடியேற்றுகிறீர்கள் ஆனால் பல்கலைகழகத்திற்குள் மாணவர்கள், ஆலய வழிபாட்டை மேற்கொள்பவர்கள் செல்ல முடியாதா? என மாணவர்களால் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றுபவர்களையே நாங்கள் அனுமதிக்கவில்லை என பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மாணவர்களால் சுதந்திர தினம் கரி நாள் என தெரிவித்து மாணவர்களால் கறுப்பு வர்ண துணி பிரதான வாயிலில் கட்டப்பட்டது.

இயக்கங்களைவிட்டு வெளியேறியவர்கள் – பரந்தன் ராஜன் – தோழர் டக்ளஸ் இணைந்த புதிய இயக்கம் : பாகம் 27

களுதாவளையிலிருநது பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் (பகுதி 27 ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 12.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 27

தேசம்: பின்தள மாநாடு பற்றிய உரையாடல் போய்க்கொண்டிருக்கிறது. அப்ப நீங்கள் அறிக்கை ஒன்று விட்டிருக்கிறீர்கள். அதாவது கட்சியிலிருந்து உமா மகேஸ்வரனை கிட்டத்தட்ட வெளியேற்றி உள்ளீர்கள். அதைத் தொடர்ந்து என்ன நடக்குது? உமாமகேஸ்வரன் எப்படி அதற்கு ரியாக்ட் பண்ணுறார்?

அசோக்: ரியாக்சன் பயங்கரமாக இருந்தது. தெரியும்தானே அறிக்கைகள் எல்லாம் பத்திரிகைகளில் வந்துவிட்டது. முகுந்தனுக்கு பெரிய பிரச்சினையாக போய்விட்டது. மாநாட்டை குழப்புவதற்கான எல்லா முயற்சியிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அடுத்தது அவருடைய எல்லா கட்டுப்பாடுகளில் இருந்தும் நாங்கள் வெளியேறிவிட்டோம். வெளியேறி மெட்ராஸ் போய்விட்டோம். அங்க எங்களுக்கு பாதுகாப்பு டேவிட் ஐயா ஆட்கள்தான் செய்கிறார்கள்.

தேசம்: பாதுகாப்பு தாறத்துக்கு டேவிட் ஐயாட்ட என்ன இருக்கு…

அசோக்: அதுதான் வாரேன்.

எங்களிட்ட பொருளாதார ரீதியாக ஒன்றுமில்லை. ஏனென்றால் நாட்டிலிருந்து போன ஆட்கள் தானே. எங்களிட்ட பாதுகாப்புக்கான எதுவும் இல்லை. டேவிட் ஐயா, சரோஜினி, சண்முகலிங்கம், தங்கராஜா தோழர், ஜூலி, ஆட்களெல்லாம் ராஜனோடு உறவாக இருக்கிறார்கள். ராஜனோடு கதைக்கிறார்கள். இவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்லி. ராஜன் எங்களுக்கான பாதுகாப்பை வழங்க ஒத்துக் கொள்கிறார். அதற்கான முழு முயற்சியும் டேவிட் ஐயா, சண்முகலிங்கம், சரோஜினி ஆட்கள்தான் செய்தவர்கள்.

அப்போ ராஜனோடு கதைக்கிறோம், பின்தள மாநாடு நடத்துவது பற்றி. ராஜன் சொல்கிறார், நீங்கள் பின்தள மாநாடு நடத்துவதற்கான சகல பாதுகாப்பும் செய்து தரப்படும். நீங்கள் மாநாட்டில் சுயமாக முடிவு எடுத்தீர்கள் என்றால், அந்த அந்த முடிவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் உங்களோடு சேர்ந்து வேலை செய்யத் தயாராக இருக்கிறோம், யோசிப்போம் என்று. அப்போ நாங்கள் பின்தள மாநாட்டுக்கான எல்லா வேலைகளையும் செய்கிறோம்.

இது தஞ்சாவூர்ல ஒரு கல்யாண மண்டபத்தில் நான் நினைக்கிறேன் ஓகஸ்ட் கடைசி பகுதியில் மூன்று நாள் மாநாடு ஒன்றை நடத்துகிறோம். அந்த நேரம் கேம்பிலிருந்து நிறைய தோழர்கள் வெளியேறிவிட்டார்கள். எங்களோடும் கொஞ்சத் தோழர்கள் வந்துவிட்டார்கள். அவங்களையும் ஒரு இடத்தில நாங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். அதுக்கும் ராஜன் தான் பாதுகாப்பு தந்தது. அதுக்குப்பிறகு ராஜனோடு நிறைய தோழர்கள் வந்து சேர்ந்து விட்டார்கள். வெளியேறி வந்த தோழர்கள் மத்தியில் தெரிவு செய்யப்பட்டதோழர்களோடு இந்த பின்தள மாநாடு நடக்கிறது.

மூன்று நாட்கள் நடாத்தி உத்தியோகபூர்வமாக நாங்கள் தான் புளொட் என்று டிக்லேர் பண்ணுறோம். இந்த மாநாட்டில் 15 பேர் கொண்ட பின் தளக் கமிட்டி தெரிவு செய்யப்படுகிறது.

முகுந்தனோடு சம்பந்தப்பட்ட ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுல சில கொலைகள் வெளிப்படையாக கதைக்கப்பட்டது. கேம்பிலிருந்த தோழர்கள் தானே. அப்போ அவங்களுக்கு என்ன என்ன கொலைகள் நடந்தது என்று தெரியும். அந்தக் கொலைகள் தொடர்பாக காக்கா, சந்ததியார் … இது தொடர்பான நடவடிக்கைகள் எல்லாம் குறிப்பிட்டு முகுந்தன், சங்கிலி கந்தசாமி, மாணிக்கதாசன், வாசுதேவா, கண்ணன் இவ்வளவு பேரையும் புளொட்டில் இருந்து வெளியேற்றுகிறோம் என்றும், தளக்கமிட்டியும் பின் தளக்கமிட்டியும் புதிய மத்திய குழுவை தெரிவு செய்யும் என்றும், நாங்கள்தான் புளொட் என்று உரிமை கோரி ஒரு அறிக்கை விட்டு, இதுதொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பை சென்னையில நடத்துறோம்.

இந்த பத்திரிகை மாநாட்டில் கலந்து கொண்டது தீபநேசன், பிரசாத், கௌரிகாந்தன், ஈஸ்வரன், சண்முகலிங்கம், தங்க ராஜா, ஆதவன், ஜெயபாலன், துரைசிங்கம் , சத்தியன், கவாஸ்கர், எல்லாளன். அந்த பத்திரிகை மாநாட்டு அறிக்கை எல்லா பத்திரிகைகளிலும் வெளிவருகின்றது.

தேசம்: என்னத்துக்காக வெளியேறுகிறீர்கள் என்றும் குறிப்பிட்டு…

அசோக்: ஓம். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நிறைய கேள்விகளும் அதற்கான விளக்கங்களும் கொடுக்கப்படுகிறது. ஆங்கில, தமிழ் பத்திரிகைகளில் அந்த சந்திப்பு, அறிக்கை எல்லாம் வருகிறது. வந்து ஒரு வாரத்திற்குள் எங்கள் மீதான விசாரணையை ரோவும், கியூ பிரான்ஜூசும் தொடங்கிவிட்டது. கடும் நெருக்கடியை கொடுக்க தொடங்கிட்டாங்க. ஏன்னென்றால் முகுந்தன் சொல்லிட்டார் நாங்கள் இந்தியாவுக்கு எதிரான ஆட்கள் என்று சொல்லி. வங்கம் தந்த பாடம் நாங்கள்தான் வெளியிட்டோம் என்று சொல்லியும், நாங்கள் மாவோயிஸ்டுகள், சீனச்சார்பானவர்கள் என்று சொல்லியும் புளொட்டை திட்டமிட்டு உடைக்கிறோம் என்று சொல்லியும் இந்த உளவுத்துறைகளுக்கு போட்டுக் கொடுத்து விட்டார்கள். அப்போ கியூ பிரான்ஜூசும், ரோவும் எங்களை விசாரித்தது. அவங்க சொன்னவங்க நீங்கள் புளொட் என்று உரிமை கோர இயலாது. புளொட் என்டுறது முகுந்தன் தான். நாங்கள் உரிமை கோர முடியாது என்று சொல்லி விட்டார்கள்.

தேசம்: உளவுத்துறை வந்து பயப்பிடுத்துவது என்பது…

அசோக்: எங்களுக்கு என்ன செய்றது என்று தெரியல. ஸ்தம்பிதம் அடைந்து விட்டோம் . அதுக்குப் பிறகு தோழர்கள் உளவியல் ரீதியாக நிறைய பலவீனமடையத் தொடங்கி விட்டார்கள். நம்பிக்கைகளை இழக்கத் தொடங்கிட்டாங்க. அடுத்த கட்ட நகர்வை எப்படி தொடர்வது என்பது பற்றி நிறைய குழப்பங்கள்.

அடுத்தது ஒரு உறுதியற்ற தன்மை..

தேசம்: எதிர்பாக்கல நீங்கள்…

அசோக்: எதிர்பாக்கல. உறுதியற்ற தன்மை வந்தவுடன் என்ன செய்வதென்று தெரியல, ஸ்தம்பிதம் அடைந்திட்டம். அதுக்குப் பிறகு கொஞ்சநாள் பேசாம இருக்கிறோம்.

தேசம்: இந்த இடைப்பட்ட காலத்தில் ஜூனில் இருந்து ஜூலை வரைக்குமான இடைப்பட்ட காலத்தில் ஏதாவது உமாமகேஸ்வரன் தலைமையிலான அணியால் ஏதாவது…

அசோக்: ஓம் நிறைய பயமுறுத்தல்கள். வெளியில போக இயலாது. எனக்கெல்லாம் அனுபவம் இருக்கு. நானும் ஆதவன் தோழரும் வீடு பார்க்க வெளியில போகேக்க மாணிக்கதாசன் குரூப் ஆட்கள் வந்து நீங்கள் இங்கே வீடு பார்க்க இயலாது இது எங்க ஏரியா என்று சொன்னார்கள். எச்சரிக்கை செய்தாங்க. உண்மையில் நாங்க வீடுபார்த்த ஏரியாவுக்கும் அவங்களுக்கும் தொடர்பே இல்லை.

ஒரு தடவை சென்னையில் தியேட்டர் ஒன்றுக்கு நான் போயிட்டு இருக்கும்போது மாணிக்கதாசன் கண்டிட்டார். அது அவங்க ஆபீசுக்கு பக்கத்தில் தான் அந்த தியேட்டர். அப்போ மாணிக்கதாசன் என்னோட பிரச்சினைப்பட்டு கொண்டிருந்த அந்த நேரம் தற்செயலாக அது ஆபிஸ் தெரு என்றதால் யோதிஸ்வரன் கண்ணன் வந்தவர். மாணிக்கதாசன் என்னோடு முரண்பட்டுக் கொண்டிருப்பதை அவர் கண்டிட்டார். அதுல அவருக்கும் மாணிக்கதாசனுக்கும் பிரச்சனை. நீ தான் எல்லாத்துக்கும் பிரச்சனை; அவர்கள் வெளியேறினால் வெளியேறிப்போட்டு இருக்காங்க, ஏன் நீ அவங்களோட முரண்படுகிறாய் என்று. அப்படி எல்லாம் பிரச்சினை நடந்திருக்கு.

தேசம்: அந்தக் கட்டத்தில் யோகீஸ்வரன் உமாமகேஸ்வரனோடு தான் இருக்கிறார்?

அசோக்: உமாமகேஸ்வரனோடுயிருக்கிறார். அவர் கொஞ்சம் நியாயம் கொண்டவர். நாங்க வெளியேறிய பின் பல தடவை அவரை சந்தித்து கதைத்திருக்கிறன். இது பற்றி சென்ற உரையாடல்களில் கதைத்திருக்கிறன்.

தேசம்: நீங்கள் பெரும்பாலும் இதில் ஓரளவு முற்போக்கான ஆட்கள் அல்லது அரசியல் மாறுபட்ட சிந்தனை உடைய ஆட்கள் முழுமையாக வெளியேறிட்டீர்கள். அதுக்கு பிறகு புளொட்டில் இருக்கிறதெல்லாம் யார் இருந்தது உமாமகேஸ்வரனோடு?

அசோக்: புளொட்டில் இருந்த தோழர்களை நாங்கள் குறை சொல்ல முடியாது. பயத்தில்தான் இருந்தவர்கள் அவர்கள். வெளியேற முடியாது. அடுத்தது பல்வேறு நெருக்கடி, தோழர்கள் பாவங்கள்.

தேசம்: நான் குறிப்பாக கேட்பது முக்கியமான ஆட்கள்.

அசோக்: முக்கியமான ஆட்கள் அந்த ஐந்து பேரும் தான். முகுந்தன், சங்கிலி, மாணிக்கதாசன், வாசுதேவா அடுத்தது படைத்துறைச் செயலாளர் கண்ணன். வாசுதேவாவும் கண்ணன் மாதிரி அதிருப்தியோடுதான் இருந்தவர்.

தேசம்: அப்போ அதுக்குள்ளே இருந்த குறிப்பாக முகுந்தன்…

அசோக்: சங்கிலி கந்தசாமி, முகுந்தன், மாணிக்கதாசன் 3 பேரும்தான் பிரச்சனைக்குரிய ஆட்கள்.

தேசம்: சரியான துரதிருஷ்டம் என்னவென்றால் இவ்வளவு பேர் எதிர்த்தும் அதை செய்ய முடியாமல் போனது. அது உண்மையிலேயே முற்போக்குப் பாத்திரம் வகித்தவர்களுடைய ஒரு தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும்.

அசோக்: நான் புளொட் தோழர்களே எல்லாம் காணும்போது யோசிப்பேன். நாங்க எல்லாம் நிறைய ஃபைட் பண்ணி இருக்கலாம். புளொட்டின் அனைத்து தவறுகளுக்கும் மற்றவர்களை குற்றஞ்சாட்டி போட்டு போக இயலாது. நாங்கள் ஒவ்வொரு ஆளும் பொறுப்பு கூறவேண்டிய அவசியம் இருக்கு. அதனால்தான் நான் இதைப்பற்றி கதைக்காமல் இருந்தேன். என் தொடர்பாக எனக்கே விமர்சனங்கள் இருந்தன.

தேசம்: முன்னணி தோழர்களுக்கு ஒரு முற்போக்குப் பாத்திரம் எடுக்க வேண்டிய தேவை இருக்குதானே. அவர்கள்தானே தலைமையை கொடுத்திருக்க வேண்டும்.

அசோக்: கட்டாயம்.

தேசம்: அப்போ நீங்கள் உமாமகேஸ்வரன் தலைமையிலான அந்த ஐந்து பேரையும் வெளியேற்றிய பிறகு நீங்கள் தான் புளொட் என்று அறிவித்த பிறகு உளவுத்துறை பயமுறுத்தலை விட்டவுடன் எல்லாம் ஈடாடிப்போச்சு.

அசோக்: அந்த நேரத்தில் மௌன நிலை தான், பேசாம இருந்த காலகட்டம். பிறகு தோழர் டக்லஸ் ஆட்கள் அந்த நேரம் ஈபிஆர்எல்எஃப் இலிருந்து உடைந்து அவங்க தனியாக போய் இருக்கிறார்கள். அவங்களோடு பல்வேறு முற்போக்கான சக்திகள் எல்லாரும் இருக்கிறார்கள். ஈரோஸ் இருந்து பிரிந்த சில தோழர்களும் இருக்கிறார்கள். பார்த்திபன் இதயச்சந்திரன் இருக்கிறார். என் எல் எப் ரீயில் இருந்து பிரிந்த தோழர் ஒருவரும் அவங்களோடு இருந்தாங்க.

தேசம்: இதயச்சந்திரன் லண்டனில் இருக்கிறார்…

அசோக்: ஓம். அப்போ நாங்கள் யோசித்தோம் என்ன என்று கேட்டால் எல்லா சக்திகளும் ஒரு ஜனநாயக உட்கட்சிப் போராட்டத்தை நடத்தி ஒதுங்கி இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் இணைத்து நாங்கள் ஏன் ஜனநாயக பூர்வமான ஒரு அமைப்பை உருவாக்க முடியாது என்று. முதன்முதல் டக்லஸ் தோழருடன் போய்க் கதைக்கிறோம். அப்படி எல்லாருடனும் நாங்க கதைக்கிறோம். எல்லாரும் அப்படி ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான சாத்தியத்தை எங்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள்.

தேசம்: ரோ உங்களுக்கு ஒரு மிரட்டல் விடுத்த பிறகுதான் நீங்கள் இப்படியொரு முடிவுக்கு வாரீர்கள்.

அசோக்: ஓம். பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒருமைப்பாட்டுக்கு வாறம். ராஜனோடையும் கதைக்கிறம். ராஜனும் சம்மதிக்கிறார். அப்ப நாங்கள் அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு கமிட்டியை போஃம் பண்ணி நாங்களும், தோழர் டக்ளஸின் பக்கத்தில் குறிப்பாக அற்புதன், அசோக் சந்திரகுமார், பிரேமானந்தா, இப்ராகிம் என்று சொல்லி பத்து பதினைந்து தோழர்கள் ஒரு கமிட்டி போஃம் பண்ணி ஒரு புதிய அமைப்புக்கான யாப்பை உருவாக்குவதற்கு கூடிக் கதைக்கிறோம். அந்தக் கமிட்டியில் ராஜனோ, டக்ளஸோ இல்லை. நாங்கள் கதைத்ததன் பிற்பாடு அவங்களோடயும் கதைக்கிறம் இதுதான் முடிவு. இதற்கு நீங்கள் கட்டுப்படுகிறீர்களா என்று. ராஜனும், டக்ளஸும் ஓகே பண்ணுறாங்க.

அதற்குப் பிறகு மிலிட்டரிகொமிசார், பொலிட்டிக்கல் கொமிசார் என்று ஒரு இடதுசாரி மக்கள் அமைப்புக்கான… இவ்வளவு கால எங்களுடைய தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளல் என்ற படிப்பினையில் 7-8 நாள் இருந்து யாப்பு மற்றும் அமைப்பு வடிவத்தை உருவாக்கின்றோம். அமைப்பு வடிவத்திற்கு பெயர் ஒன்றை வைக்க விரும்புகின்றோம். அதுல டக்ளஸ் தோழர் ஆட்கள் சொல்லிட்டாங்க நாங்க தமிழீழம் என்ற வார்த்தை வருவதை விரும்பவில்லை என்று. அப்போ நாங்கள் சொன்னம் நீங்களே ஒரு பெயரை தேர்வு செய்யிங்கள் என்று.

தேசம்: டக்ளஸ் தோழர் அப்பவே அதை சொல்லிட்டார்.

அசோக்: ஈழம் என்று சொல்லித்தான் வரவேண்டும் தமிழீழம் என்ற வார்த்தை வருவதை விரும்பவில்லை என்று. நாங்கள் அதை ஒத்துக் கொண்டோம். அற்புதன் ஈஎன்டிஎல்எப் ENDLF என்ற பெயரை உருவாக்குறார். அப்போ ஈழ தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் நாங்கள் ஒன்றாக இணைவது என்று முடிவெடுத்து வேலை செய்கிறோம்.

தேசம்: அற்புதன் தான் தினமுரசு பத்திரிகையின் ஆசிரியராக அதுல ஒரு தொடரையும் எழுதினார். பின்னாட்களில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

நீதிமன்ற தடையுத்தரவையடுத்தும் தொடரும் மீனவர் போராட்டம் – குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் !

நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் பருத்தித்துறை – பொன்னாலை வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்ட போதும் மீனவர்களின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பருத்தித்துறை –  சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் குறித்த தடை உத்தரவு கட்டளை பருத்தித்துறை பொலிஸாரினால் போராட்டம் இடம்பெறும் இடத்தில் வாசிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளித்து வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மீனவர்களால் அகற்றப்பட்டுள்ள போதும் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

போராட்டம் இடம்பெறும் இடத்தில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் கலக தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொல்லப்பட்டார் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் – உத்தியோகபூர்வமாக அறிவித்தது அமெரிக்கா !

சிரியாவில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக அமெரிக்க இராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு சிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலின்போது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாசிமி அல்-குரேஷி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
Abu Ibrahim al-Hashemi al-Quraishi named IS leader | MEO
“நேற்றிரவு எனது உத்தரவின் பேரில், அமெரிக்க மக்களையும், நமது கூட்டாளிகளையும் பாதுகாக்கவும், உலகை பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கும், வடமேற்கு சிரியாவில் அமெரிக்க இராணுவப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டன.
நமது படைகளின் திறமை மற்றும் துணிச்சலுக்கு நன்றி. நாம் போர்க்களத்தில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாசிமி அல்-குரேஷியை  அகற்றி உள்ளோம். இந்த நடவடிக்கையின்போது அமெரிக்க படை வீரர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பத்திரமாக திரும்பியுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.
இரவு நேரத்தில் விமான தாக்குதல் நடத்தப்பட்டபோது, குரேஷி வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து இறந்துபோனதாகவும், இதில் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிய வழக்கு – நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு என்ன..?

2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி சிவில் செயற்பாட்டாளரான நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

மனுவில் கோரப்பட்டுள்ள நிவாரணத்தை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என நீதிபதி சோபித ராஜகருணா தெரிவித்து, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையை 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நிலவும் கொவிட்-19 நிலைமையால் உயர்தர மாணவர்களால் கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்ய முடியவில்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார் .

இந்த விடயத்தை கல்வி நிபுணர்களும் சுட்டிக்காட்டியுள்ளதாக மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 197 கைதிகளுக்கு விடுதலை !

நாளை (04) கொண்டாடப்படும் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகள் குழுவொன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பைப் பெறவுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மஹர சிறைச்சாலையில் 20 கைதிகளும், கேகாலை சிறைச்சாலையில் 18 கைதிகளும், வெலிக்கடை சிறைச்சாலையில் 17 கைதிகளும், களுத்துறை சிறைச்சாலையில் 13 கைதிகளும், போகம்பரை சிறைச்சாலையில் 11 கைதிகளும், மட்டக்களப்பு சிறைச்சாலை யில் 11 கைதிகளும், வாரியப்பொல சிறைச்சாலையில் 10 கைதிகளும் இதில் உள்ளடங்கு கின்றனர்.

“ஐ.நா தொடர்ந்தும் தமிழர்களுக்கு தவறு இழைக்கிறது.” – தீர்வுக்கு உதவுங்கள் என ஐ.நா பிரதிநிதியிடம் மணிவண்ணன் வலியுறுத்தல் !

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள ஐநாவுக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருக்கும் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கும் இடையில் கலந்துரையாடல் நேற்று  யாழ். கச்சேரி சிறுவர் பூங்காவில் நடைபெற்றது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்துங்கள்" - GTN

இக்கலந்துரையாடலில் ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மற்றும் உயர் அதிகாரிகளுடன் மாநகர முதல்வர் பி. மணிவண்ணன் மற்றும் மாநகர ஆணையாளர் ஜெயசீலன் ஆகியோர் பங்குபற்றினர்.

இக்கலந்துரையாடலில் ஐநாவுக்கான வதிவிடப் பிரதிநிதியிடம் கலந்துரையாடிய மாநகரமுதல்வர்,

கொடிய யுத்தம் நடைபெற்ற காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை போரை நிறுத்தும் எமது மக்களை காப்பாற்றும் என்று நாம் பெரும் நம்பிகை கொண்டிருந்தோம். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. 150,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர். இந் நிலையில் போருக்கும் பிற்பாடும் ஐ.நா தொடர்ந்தும் தவறு இழைத்து வருகின்றது.

யுத்ததத்தில் போர்குற்றம் புரிந்ததாகக் கூறப்படுகின்ற படை அதிகாரிகள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் தமிழ் இனத்தின் மீது மேற்கொண்டதாக கூறப்படும் படுகொலைகள் தொடர்பில் நீதி விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை.

இனப்படுகொலை என்பது சர்வதேச குற்றம். அதை யாரும் ஒரு நாட்டின் உள்ளக ரீதியான பிரச்சனை என்று கைவிட்டு விடமுடியாது. யுத்தம் முடிவடைந்த பின்னரும் எங்களுடைய பொருளாதார வளம், கல்வி பண்பாடுகள் கலாச்சாரம் போன்ற எங்களுடைய அடிப்படைகள் அழிக்கப்படுகின்றன.

2 ஆம் உலக யுத்தத்திற்கு பின்னர் ஐக்கிய நாடுகள் சபை ஏன் உருவாக்கப்பட்டததெனில் நாடுகளைப் பாதுகாப்தற்கு அல்ல அந்த நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக. அந்த நியாயப்பாட்டை அதன் முக்கியத்துவத்தை ஐ.நா முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இறுதியுத்தம் தொடர்பான மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மட்டுமல்ல கடந்த காலங்களில் எமக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து குற்றங்கள் தொடர்பிலும் கரிசனை செலுத்துவதோடு அதற்கான தீர்வையும் எமக்கு பெற்றுத் தரவேண்டும்.

தற்போதும் எங்களுடைய காணிகள் அபகரிக்கப்படுகின்றன. வலி வடக்கு பகுதியில் பல நூற்றுக்காணக்கான ஏக்கர் தனியார் காணிகள் இராணுவம் கடற்படை விமானப்படை என தங்களுடைய படைத் தேவைகளுக்காக அபரிக்கப்படுகின்றன. அந்த காணி உரிமையளார்கள் இடைத்தங்கல் முகாங்களில் அகதி வாழ்க்கை வாழ்கின்றனா். எமது பொருளாதரம் என்பது இரண்டு விடயங்களில் தங்கியுள்ளன. ஒன்று விவசாயம் மற்றது மீன்படி. இன்று எமது விவசாய காணிகள் பலவற்றை இராணுவம் தமது தேவைகளுக்காக பயன்படுத்துகின்றது. இதனால் எமது பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. மீன்பிடி என்பது அரச இயந்திரத்தையும் தாண்டி தற்போது இந்திய மீனவர்களின் அத்து மீறலால் எங்களுடைய மீனவர்கள் பெரும் துன்பம் அடைகின்றார்கள். அவர்களது வலைகள் அறுக்கப்படுகின்றன படகுகள் அழிக்கப்படுகின்றன. இவ்வாறு பல விடயங்களில் திட்டமிட்டு எமது பொருளாதாரம் அழிக்கப்படுகின்றது என்றார்.

இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் கலாச்சார மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ் மண்டபம் அமைப்பதற்கு முன்னர் இலங்கை அரசாங்கமும் இந்தியா அரசாங்மும் கலாச்சார மண்டபத்தினை அமைத்து அதனை யாழ். மாநகர சபையிடம் கையளிப்பது என்று ஒப்பந்தம் செய்தது. ஆனால் இக் கட்டிடம் அமைக்கப்பட்ட பின்னர் தற்போது இது யாழ். மாநகர சபைக்குத் தரமுடியாது மத்திய அரசாங்கத்திடம் தரவேண்டும் என்று அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. இதன் காரணமாக கட்டி முடிக்கப்பட்டு ஒன்றரை வருடத்திற்கு மேல் அது திறக்கப்படாமல் உள்ளது என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரே நாடு ஒரே சட்டம் என்று கூறப்படுகின்றது. எப்படி அது சாத்தியம் இங்கு தமிழர்கள் சிங்களவர் முஸ்லிம் மலையகத் தமிழர் என்று பல இன மக்கள் வாழ்கின்றார்கள். அவர்களுக்கு என்று ஒரு வரலாறுப் பண்பாட்டு பாரம்பரியங்கள் உள்ளன. அவர்களின் வரலாற்றில் இருந்து தான் சட்டங்கள் இயற்ப்பட வேண்டுமே ஒழிய பெரும்பான்மை இனத்தின் வரலாற்றைக் கொண்டு சட்டங்களை இயற்றிக் கொண்டு அதனை ஏனைய இனங்கள் மீது திணிக்கின்ற நிலைமை இங்கு காணப்படுகின்றது.

எமது அரசியில் அபிலாசைகளை நாம் பெற்றுக் கொள்வது தொடர்பில் நீங்கள் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்ளுகின்றேன். ஆனால் நீங்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் போதாது. அரசியல் கைதிகள் சிறைகளில் பல்லாண்டு காலமாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள். காணாமல் போன உறவுகள் நீதி வேண்டி போராடுகின்றார்கள். அவ்வாறு இருக்கையில் நீங்கள் விடுகின்ற வெறும் அறிக்கைகள் அல்லது தீர்மானங்கள் எங்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கான தீர்வுகளைத் தராது. அறிக்கைகள் ஆறுதல் அளிக்காது. கூடிய விரைவில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது விசேட குற்றவியல் நீதிமன்றத்தின் மூலமாகவே எமக்கான பிரச்சனைகளுக்கான நிரந்த தீர்வுகள் எட்டப்படும் என்பதில் எமது தமிழ் அரசியல் தலைவர்களும் மக்களும் விரும்புகின்றார்கள்.

நான் உங்களிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கின்றேன். ஒன்று எமது இனத்தின் மீது காலாகாலம் மேற்கொள்ளபட்ட இனவழிப்புகளுக்கு சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் நியாயம் கிடைக்கப்பெற வேண்டும். சுயநிர்ணய உரிமை அங்கீகிக்கப்பட்ட எமக்கான அரசியல் தீர்வை பெற ஐ.நா உதவ வேண்டும். இரண்டாவது திட்டமிட்டு அழிக்கப்படுகின்ற பொருளாதார கட்டமைப்புக்களை மேம்படுத்துவதற்கு எமது மக்களுக்கான வாழ்வியலை மேம்படுத்தவும் உதவ வேண்டும் என்றார்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்க கோரி பொதுமக்கள் கையெழுத்து போராட்டத்தை ஆரம்பித்த தமிழ்தேசிய கூட்டமைப்பு !

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்றாக நீக்க கோரி பொதுமக்கள் கையெழுத்து போராட்டம் ஒன்றினை முல்லைத்தீவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று (03) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் தொடக்கி வைத்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தினார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி தலைவர் கி.சேயோன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டு கையெழுத்து போராட்டத்தினை தொடக்கி வைத்துள்ளார்கள்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்க கோரிய கையெழுத்து போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்.,

இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டம் மிக மோசமான சட்டமாக இருக்கின்றது. 6 மாத காலத்திற்கு தற்காலிக சட்டமாக கொண்டுவரப்பட்டது 42 ஆண்டுகளாக இருக்கின்றது. விசேடமாக தமிழ் இளைஞர்களை நசுக்குகின்ற ஒடுக்கி ஆழ்கின்ற சட்டமாக சர்வதேச விழுமியங்கள் எல்லாவற்றையும் புறந்தள்ளி செயற்படும் சட்டமாக இருக்கின்றது.

அது நீக்கப்படும் என்று இலங்கை அரசு தெளிவாக சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதி கொடுத்துள்ளது. அவ்வாறு நீக்குவதற்கான முயற்சியும் சென்ற அரசாங்க காலத்தில் இடம்பெற்றுள்ளது. அது முழுமை பெறவில்லை. ஆனால் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தினை சீர்த்திருத்துகின்றோம் என்று சொல்லி எந்த வித உப்புச்சப்பில்லாத ஒரு சீர்த்திருத்தமாக அறிவிக்கப்படுகின்ற ஒரு வர்த்தமானி பிரசுரம் வந்துள்ளது.

அது நடைமுறையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் அமுலில் எந்த மாற்றத்தினையும் செய்யப் போவதில்லை. ஆகவே சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு விசேடமாக ஜரோப்பிய ஒன்றியத்தினை ஏமாற்றுவதற்கும் எதிர்வரும் 28 ஆம் திகதி ஜக்கியநாடுகள் மனிதஉரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாக இருக்கின்றது அவர்களையும் ஏமாற்றலாம் என்ற எண்ணத்தில் இது செய்யப்படுகின்றது அவர்கள் எல்லாருக்கும் விளக்கமாக விடையங்களை அறிவித்துள்ளோம்.

இந்த தருணத்தில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்குவோம் என்று அரசாங்கம் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் அந்த பயங்கரவாத தடுப்பு சட்டம் முற்று முழுதாக நீக்கப்படவேண்டும் என்று எங்கள் மக்கள் நேரடியாகவே கையெழுத்திட்டு கோருகின்ற ஆவணத்தினை கையெழுத்து இட்டு ஆரம்பித்து வைக்கின்றோம்.

இது எட்டு மாவட்டங்களிலும் மக்களிடத்தில் வீடு வீடாக சென்று வீதி வீதியாக சென்று மக்களின் கையெழுத்து வாங்கி இன்று ஆரம்பித்து வைக்கின்றோம். தமிழரசு கட்சியின் இளைஞர் அணி கையெழுத்து போராட்டத்தினை மக்களிடத்தில் முன்கொண்டு செல்லவுள்ளது.

யாழில் நடைபெறுகின்ற மீனவர்களின் போராட்டத்தினை கருத்தில் கொண்டு அந்த போராட்டத்திற்கு ஒரு முடிவு வந்த பின்னர் கையெழுத்து போராட்டத்தினை முழு வீச்சாக செயற்படுத்துவோம் என்றும் பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

மக்களிடத்தில் கையெழுத்து சேகரித்து அனுப்பவுள்ள கடிதத்தில் 1979 ஆம் ஆணடின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு சட்டமே (தற்காலிகமாக) எமது சட்டப்புத்தகங்களில் காணப்படும் மிகக்கொடூரமான சட்டமாக தற்போதும் சட்டப்புத்தகங்களில் காணப்படுகின்றது.

1979 ஆம் ஆண்டு தற்காலிக சட்டமாக நிறைவேற்றப்பட்ட இச்சட்டம் அதன் தலைப்பில் தெரிவிப்பது போல தற்காலிகமாக 6 மாத காலத்திற்கு மட்டும் செல்லுபடியாக வேண்டியது 42 ஆண்டு காலங்கள் நீடித்து அநீதியை விளைவித்தும் அநேகருக்கு துன்பத்தினையும் கஸ்டத்தினையுமே வழங்கியுள்ளது.

இந்த சட்டத்தின் விதிகள் நமது குற்றவியல் சட்டத்தின் அடிப்படை மூலாதாரங்களுக்கு எதிரான திசையில் இயங்குகின்றன. உண்மையில் விசாரணை நிலுவையில் உள்ள குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் குற்றமற்றவர் என்ற அனுமானமும் கூட எமது சட்டம் காவல் துறையினரிடம் வழங்கப்படும் எந்த வாக்கு மூலத்தையும் கண்டு கொள்வதில்லை. இது நீதி மன்றத்தினால் சாட்சியாக ஏற்றுக்கொள்ளப்படாது.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் மாத்திரமே விதிவிலக்காக ஒரு உதவிக் காவல் அத்தியட்சகர் பதவிக்கு குறையாத ஒரு காவல்துறை அதிகாரியிடம் வழங்கப்படும் வாக்கு மூலம் குற்ற ஒப்புதலாக ஏற்றுக்கொள்ளப்படும். இருந்த போதிலும் அது ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும் இந்த விதி மட்டுமே பல தவறான தீர்ப்புக்களுக்கு வழிவகுத்தது மட்டுமல்லாது காவல்துறையின் விசாரணை திறமை மழுங்கடித்தது என்பதனை சொல்ல தேவையில்லை.

உண்மையான குற்றவாளி இன்னும் சுதந்திரமாக இருக்கும் அதேவேளையில் ஒரு குறிப்பிட்ட குற்றம் தீர்க்கப்பட்டு விட்டதாக கூறுவதற்கு ஒரு தீர்ப்பினை வலுவாக்க ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கப்படுவதே போதுமானது என்பதாலும் இது எதிர் விளைவாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒப்புதல் வாக்கு மூலங்கள் தடுப்பு காவல் மற்றும் பிணை இல்லாமல் காவலில் வைப்பதற்கான விதிகள் ஆகியவை காவல்துறை சித்திரவதை நிகழ்வுகளை அதிகரிக்க செய்துள்ளது. இக் காலகட்டத்தில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள் தொர்பான பிரசுரிக்கப்பட்ட தீர்ப்புக்களை அவதானித்தால் இதனை கண்டு கொள்ளமுடியும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக சர்வதேச மனித உரிமைகள் தர நிலைகளுக்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வருவதற்கு இலங்கை உறுதியளித்திருந்தது.

2018 இல் ஒரு சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்ட போது அது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இருப்பினும் பயங்கரவாத தடைச்சட்டத்ததை சீர்திருத்தம் செய்வதற்காக 2022 ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி அதன் திருத்திற்கான சட்ட மூலத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முன்மொழியப்பட்ட திருத்தம் நடைமுறையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் அமுலாக்கங்களிலும் அதைத் தொடர்ந்து வரும் கடுமையான விளைவுகளிலும் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

இந்த பின்னணியில் நாம் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதற்காக தாம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வலியுறுத்தி சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.