February

February

பல்கலைகழக மாணவர்களை தாக்கிய விவகாரத்தில் அரசியல்வாதியின் மகனுக்கு விளக்கமறியல் – பதவியை இராஜினாமா செய்தார் அமைச்சர் !

ராகமை மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் கைதான இராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோவின் மகன் உள்ளிட்ட 07 பேருக்கும் பெப்ரவரி 07ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் இன்றையதினம் (03) வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.
குறித்த சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோவின் மகனான, 23 வயதான அச்சிந்த ரன்தில ஜெஹான் பெனாண்டோ நேற்றிரவு பொலிஸில் சரணடைந்ததைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
அத்துடன் இத்தாக்குதல் சம்பவத்திற்காக பயன்படுத்திய BMW வகை கார் ஒன்றை களுபோவில பிரதேசத்தில் வைத்து ராகமை பொலிசார் மீட்டிருந்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகமை மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் வரை தமது பதவியை இராஜினாமா செய்வதாக, இராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

மீனவர்களின் போராட்டத்திற்கு தடை விதித்தது நீதிமன்றம் – அவசரமாக வரவழைக்கப்பட்ட விசேட அதிரடி படை !

பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கோரி கடந்த திங்கட்கிழமை முதல் சுப்பர் மடம் பகுதியில் மீனவர்கள் வீதியை மறித்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) பருத்தித்துறை பொலிஸார், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில், மீனவர்களின் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி விண்ணப்பம் செய்திருந்தனர்.

வீதியை மறித்து மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுப்பதனால் வீதி ஊடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், கொரோனா அபாயம் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தடை கோரி இருந்தனர்.

அதனை அடுத்து மீனவர்களின் போராட்டத்திற்கு நீதிமன்று தடை விதித்து கட்டளை பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற கட்டளையின் பிரகாரம், வீதி மறியலில் ஈடுபட்டுள்ள மீனவர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் பொலிஸ் விசேட அதிரடி படையினரும் போராட்ட இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மதுபோதையில் எனக்கூறிய அமைச்சர் டக்ளஸை சாடிய இரா.சாணக்கியன் !

யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களுக்கு நிரந்தரமான தீர்வு மற்றும் வடமராட்சி கிழக்கு கடலில் இடம்பெற்ற மீனவர்கள் உயிரிழப்புக்கு நீதி ஆகியவற்றை கோரி தொடங்கப்பட்ட போராட்டம் 4வது நாளாக இன்றும் முழு வீச்சுடன் இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில் இன்றைய தினம் பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மீனவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரனும், இரா.சாணக்கியனும் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதன்போது மீனவர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டிருந்தார்.

மீனவர்கள் மதுபோதையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்கள் மத்தியில் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்.

அத்துடன், மீனவர்களின் கோரிக்கையினை நிறைவேற்ற முடியாத அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக பதவி விலக வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள் – அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தாவுடன் வாக்குவாதம் !

யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம்(வியாழக்கிழமை) மீனவர்கள் முன்னெடுத்துவரும் போராட்ட களத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக சென்று மீனவர்களுடன் பேச்சுக்களை நடத்த முயற்சித்தபோது, மீனவர்கள் சமரசத்திற்கு சம்மதிக்காத நிலையில், அமைச்சர் திரும்பி சென்றுள்ளார்.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிவரும் இந்திய படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உத்தரவை எழுத்து மூலமாக தர வேண்டும் என மீனவர்களால் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எழுத்து மூலமான உத்தரவாதம் தர முடியாது எனவும், தான் வாய் மூலமாகவே உத்தரவாதத்தையே தர முடியும் என கூறியதை மீனவர்கள் ஏற்க மறுத்தனர்.

அதனால் போராட்ட களத்தில் இருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியேறிய நிலையிலும் மீனவர்கள் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

புலிகள் இயக்கத்தலைவரின்  புகைப்படத்தினை  பதிவிட்டு கைதானோருக்கு நீதிமன்றம் வழங்யுள்ள தீர்ப்பு !

மட்டக்ளப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நால்வர் இன்று ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபரின் ஆலோசனை தொடர்பான கடித்தின் படி குறித்த வழக்கிற்கான நகர்த்தல் மனு நீதி மன்றில் இன்று சமர்ப்பிக்கப்படடவேளை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி கருப்பையா ஜீவராணி அவர்களினால் பிணை வழங்கப்பட்டள்ளது.

கடந்த2020 நவம்பர் 27,ம்,28,ம்,திகதிகளில்,  ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செங்கலடி சித்தாண்டி  ஏறாவூர் மற்றும் ஜயங்கேணி போன்ற பகுதிகளைச் சேர்ந்தபேர் க.சோபனன், யோ.யோகேஸ்வரன் , வ.விவேந்த், க.ஜெகநாதன் ஆகியவர்ளே இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் முகப் புத்தகத்தில் அரசினால் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவரின்  உருவம் அடங்கிய புகைப்படத்தினை  பதிவிட்டதன் பிரகாரம் இவர்கள் ஏறாவூர்  பொலிசாரினால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சுமார் 13 மாதம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த நால்வர் சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கினங்க இன்று அவர்களுக்கு தலா 02 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விடுவிக்கப்பட்டடிவர்கள் ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் ஏறாவூர் பொலிஸ் நிலைத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவர் !

இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவர் சுரங்க லக்மால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் இந்திய சுற்றுப்பயணத்தின் பின்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சுரங்க லக்மால் அறிவித்துள்ளார்.

எழுத்து மூலமாக தீர்வு கிடைக்கும் வரை தொழிலுக்கு செல்ல மாட்டோம். – யாழ். மீனவர்கள் தொடர் போராட்டத்தில் !

நாம் இனி அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கதைகளை நம்ப போவதில்லை. முடிவு கிடைக்கும் வரை நாம் தொழிலுக்கு செல்ல மாட்டோம். உரியவர்கள் தீர்வோடு இங்கு வர வேண்டும். எழுத்து மூலமாக தீர்வு பெற்று தர வேண்டும் என யாழ். மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் பருத்தித்துறை சுப்பர் மேடம் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடலில் இரண்டு உயிர்கள் பறிபோய்விட்டது.இனியும் நாம் பொறுத்திருக்க மாட்டோம். ஆகவே தான் பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில், மக்கள் போராட்டமாக இதை முன்னெடுத்துள்ளோம்.

தற்போது 13 மீனவ சங்கங்கள் இணைந்துள்ளன. தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பல வாக்குறுதிகளை எமக்கு தந்து ஏமாற்றியுள்ளனர். ஆகவே, நாம் இனி அவர்களின் கதைகளை நம்ப போவதில்லை. முதலில் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். முடிவு கிடைக்கும் வரை நாம் தொழிலுக்கு செல்ல மாட்டோம். உரியவர்கள் தீர்வோடு இங்கு வர வேண்டும். எழுத்து மூலமாக தீர்வு பெற்று தர வேண்டும்.

 

நாம் இனியாரையும் சென்று சந்திக்க மாட்டோம். கடற்படை தளபதியோ அல்லது, அமைச்சரோ இங்கு வந்து எழுத்து மூலமாக எமக்கு வாக்குறுதி தர வேண்டும். இனிமேலும் இந்திய இழுவை படகால் எமக்கு அநீதி இழைக்க கூடாது. இந்திய தமிழ் சொந்தங்களுடன் எமக்கு கோபம் இல்லை. முரண்பாடு இல்லை. எமது எல்லைக்குள் வந்து மீன் பிடித்து, எங்கள் கடல் வளங்களையும், எமது உடமைகளையும் அழிக்க வேண்டாம் என்று தான் நாம் கூறுகின்றோம்.

 

ஆகவே இந்திய ஊடகங்கள் செய்திகளை தெளிவாக உண்மையாக வழங்க வேண்டும். மீனவ சமுதாயம் இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும். ஆளுநர் கூட அதிகாரி ஒருவரை அனுப்பி வைத்திருந்தார். நாம் ஆளுநர் அலுவலகத்தில் சென்று அவரை சந்திக்க மாட்டோம். யார் என்றாலும் இங்கு வந்து தீர்வை எழுத்து மூலம் தரவேண்டும். – என்றனர்.

“நாம் ஆட்சியில் இருந்திருந்தால் கொரோனா உயிரிழப்பை தடுத்திருப்போம்.” – ஐக்கிய மக்கள் சக்தி

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் 15,000 பேருக்கு மேல் கொரோனா தொற்றினால் உயிரிழக்க இடமளித்திருக்காது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தம்மிக பாணி, சுதர்சன பாணி போன்றவற்றைக் காட்டி தடுப்பூசி போடுவதை தாமதப்படுத்திய அரசு, தடுப்பூசி போடப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததைக் கொண்டாடுவது வெட்கக்கேடானது என்றும் அவர் கூறினார்.

தடுப்பூசி போடப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் வைபவம் நடத்துவது உலகிலேயே இலங்கை மட்டும்தான் என்றும் அவர் கூறினார்.

இன்று கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருவதாகவும், சமூகத்தில் கண்டறியப்பட்டதை விட கண்டறியப்படாத நோய்த்தொற்றுகள் அதிகம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

திருகோணமலை சண்முக கல்லூரியில் மீண்டும் ஹபாயா ஆடைப்பிரச்சினை – அதிபரும் – ஆசிரியையும் வைத்தியசாலையில் அனுமதி !

2017ல் ஹபாயா அணிந்து கற்பிக்கச் சென்ற ஆசிரியைகளை ஹபாயா அணிந்து வந்ததன் காரணமாக பாடசாலையை விட்டு திருகோணமலை சண்முக கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியதும் குறிப்பிடத்தக்கது.

மனித உரிமை ஆணைக்குழுவில் ஆசிரியைகள் செய்த முறைப்பாட்டை விசாரித்த ஆணைக்குழு ஆசிரியைகளின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக முடிவு செய்ததோடு ஆசிரியைகளை மீள சண்முக இந்து கல்லூரிக்கு  உடனடியாக அனுமதிக்குமாறு பிரேரித்தது.

மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரை வெளியாகி வருடங்களாகியும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் அதனை நடைமுறைப்படுத்தக் கோரி பாதிக்கப்பட்ட ஆசிரியைகளில் ஒருவரான ஆசிரியை பஹ்மிதா ரமீஸ்  மேல் முறையீட்டு நீதி மன்றத்தில் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.

சென்ற மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரச தரப்பு இணக்கப்பாட்டிற்கு வருவதாகக் கூறியதைத் தொடர்ந்து அதனை ஏற்றுக் கொண்ட மனுதாரரான ஆசிரியை பஹ்மிதா தான் மீண்டும் சண்முகவிற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்று கேட்டிருந்தார்.

அதனை ஏற்றுக் கொண்ட அரச தரப்பு இன்று (02.02.2022) ஆசிரியை பஹ்மிதாவை மீண்டும் சண்முக இந்து கல்லூரிக்கு கடமையை ஏற்குமாறு அனுமதித்தது. அதற்கான கடிதத்தினை கல்வி அமைச்சு அனுப்பியிருந்தது.

இந்நிலையில் குறித்த பாடசாலை அதிபர் காரியாலயத்தில் கடமையை பொறுப்பேற்க சென்ற நிலையில் பாடசாலை சமூகத்திற்கும் குறித்த பெண் ஆசிரியருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பாடசாலையின் அதிபரை ஹபாயா அணிந்து வந்த ஆசிரியை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஹபாயா அணிந்து வந்தமையால் கோபம் கொண்ட அதிபர் தன்னை தாக்கியதாகவும் கூறி இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக திருகோணமலை சண்முக இந்து மகளிர் கல்லூரியில் இருந்து ஹபாயா அணிந்து சென்றதன் காரணமாக வெளியேற்றப்பட்ட ஆசிரியை பாத்திமா பஹ்மிதா நீதிமன்றத்தில் இருதரப்பிற்குமிடையில் ஏற்பட்ட புரிந்துணர்வின் காரணமாக இன்று மீண்டும் பாடசாலைக்கு கடமை ஏற்க சென்ற போது பாடசாலைக்குள் கூடியிருந்த வெளியாட்கள் சிலரால் மிரட்டப்பட்டது மாத்திரமல்லாமல் கூட்டத்தில் இருந்த ஒருவரால் ஆசிரியர் மீது தாக்குதல் முயற்சிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஊரடங்கில் பிறந்தநாள் கொண்டாட்டம் – நாடாளுமன்றில் வைத்து மன்னிப்பு கேட்டார் பிரதமர் போரிஸ் ஜோன்சன் !

இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது விதிமுறைகளை மீறி பிரதமர் இல்லத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றாக குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக 2020-ம் ஆண்டு ஜூன் 19-ந்திகதி பிரதமர் போரிஸ் ஜோன்சனின் பிறந்தநாளையொட்டி பிரதமர் அலுவலகத்தில் அதிக அளவில் அரசு ஊழியர்கள் திரண்டு விருந்து நிகழ்ச்சி நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடா்பாக லண்டன் போலீசார் அண்மையில் விசாரணையை தொடங்கினர். அதுதொடா்பான அறிக்கை முழுமையாக வெளியிடப்படாதபோதிலும், முக்கிய தகவல்கள் அடங்கிய 12 பக்க அறிக்கை நேற்று முன்தினம் வெளியானது.

அதில் ஊரடங்கு அமலில் இருந்தபோது பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது பிரதமர் போரிஸ் ஜோன்சனின் பதவிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அவரது சொந்த கட்சியினரே அவரை பதவியில் இருந்து விலக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஊரடங்கின்போது விதிமுறையை மீறி பிரதமர் இல்லத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சிகளுக்காக போரிஸ் ஜோன்சான் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “மன்னிக்கவும். மக்களின் கோபம் எனக்குப் புரிகிறது. நாம் கண்ணாடியில் நம்மை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். தவறுக்கு வருந்துகிறேன். அதே சமயம் இதை சரிசெய்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.