01

01

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 27 பேர் விரைவில் விடுதலை – அலி சப்ரி !

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 27 பேர் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் தமிழ் பத்திரிகைகளின் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் என்று சட்டத்தின் அடிப்படையில் எவரும் இல்லையெனவும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களே உள்ளதாகவும் நீதி அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை வழங்குவது மற்றும் விடுதலை செய்வது தொடர்பாக ஜனாதிபதிக்கு பரிந்துரை வழங்குவது குறித்து ஆலோசனைக் குழுவொன்றை முன்னாள் பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தலைமையில் அமைத்துள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் குறித்த குழுவிற்கு 44 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விண்ணப்பங்கள் ஆராயப்பட்டதன் பின்னர் 27 பேரை விடுவிப்பதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புலிகளுடனான போரை முடிக்க கள்ளச்சந்தை டொலரை பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்கள் கொள்வனவு – பஷில்ராஜபக்ஷவின் கருத்தால் பரபரப்பு !

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தீவிரமாக இடம்பெற்ற காலப்பகுதியில் கள்ளச்சந்தை மூலம் பெறப்பட்ட பணத்தை பயன்படுத்தி இலங்கை வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்தது என நிதியமைச்சர் பஷில்ராஜபக்ஷ தெரிவித்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சண்டே திவயினவிற்கு வழங்கிய பேட்டியில் நிதியமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

கள்ளச்சந்தையில் பெறப்பட்ட பணத்தை பயன்படுத்தி இலங்கை வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை பெற்றது. அக்காலப்பகுதியில் எரிபொருள் கொள்வனவிற்கு செலுத்துவதற்காக கள்ளச்சந்தையில் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் பெற்றது.

யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை எரிபொருள் கப்பல்களிற்கு செலுத்துவதற்கு இலங்கைக்கு டொலர் தேவைப்பட்டது.  அக்காலப்பகுதியில் நானும் அதிகாரிகளும் புறக்கோட்டைக்கு சென்று கள்ளச்சந்தையில் டொலரை பெறுவதற்காக அங்குள்ள வர்த்தகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

நாங்கள் புறக்கோட்டை வர்த்தகர்களை சந்திப்போம் அவ்வாறே நாங்கள் எரிபொருள்களிற்கு கட்டணத்தை செலுத்தினோம்.

இதே நேரம், வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களைபெற்றதை அரசாங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளமை இதுவே முதல்தடவை என சுட்டிக்காட்டியுள்ளஆங்கில செய்தி இணையத்தளமொன்று நிதியமைச்சர் அமெரிக்க அதிகாரிகளினால் விசாரணை செய்யப்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் வடகொரியா பொருளாதார தடைகளில் இருந்துதப்புவதற்காக கிரிப்டோ நாணய மூலம் உதவியதற்காக அமெரிக்க பிரஜையொருவர் விசாரணைகளை எதிர்கொண்டதை ஆங்கில இணையத்தளம்சுட்டிக்காட்டியுள்ளது. அவருக்கு இந்த மாதம்தண்டனை வழங்கப்படவுள்ளது அவருக்கு நீண்டகால சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பெரும் குற்றத்தின் சிறிய பகுதியேஅம்பலமாகியுள்ளது என புலம்பெயர் செயற்பாட்டாளர் ஜன் ஜனநாயகம் தெரிவித்துள்ளார்.  தடைகள் விதிக்கப்பட்ட வடகொரியா ஈரான் போன்ற நாடுகளிடமிருந்து பெறப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தியே தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலை இடம்பெற்றது என நாங்கள் நீண்டநாட்களாக கருதிவந்துள்ளோம் என டக் எனப்படும் இனப்படுகொலைக்கு எதிரான என அமைப்பின் ஜன் ஜனநாயகம்தெரிவித்துள்ளார்.

இ;வ்வாறு சட்டவிரோதமாக பெறப்பட்ட கொத்துக்குண்டுகள் இரசாயன ஆயுதங்கள் போன்றவை அவற்றின் இலக்காக இருந்த தமிழ்மக்களிற்கு எதிராக ஈவிரக்கமற்ற முறையில் பயன்பட்டன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

200 மில்லியன் ரூபா நிதியில் 5 மில்லியன் நாட்காட்டிகளை அச்சிட்ட வழக்கு – பஷிலுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு .?

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது 200 மில்லியன் ரூபா நிதியைச் செலவிட்டு 5 மில்லியன் நாட்காட்டிகளை அச்சிட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து அவர்கள் இருவரும் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்தவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

“ஜனாதிபதிக்கும் அவர் சார்ந்த கூட்டத்துக்கும் அறிவேயில்லை.” – இரா.சாணக்கியன்

“இன்று இந்த நாட்டிலே ஜனாதிபதிக்கும் அறிவில்லை, நிதியமைச்சருக்கும் அறிவில்லை, அவர்களின் பிரதிநிதிகளாக எமது மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு அறிவில்லை என்ற நிலைமையே இருக்கின்றது.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று இந்த நாட்டிலே ஜனாதிபதிக்கும் அறிவில்லை, நிதியமைச்சருக்கும் அறிவில்லை, அவர்களின் பிரதிநிதிகளாக எமது மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு அறிவில்லை என்ற நிலைமையே இருக்கின்றது இன்று மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் என்று சொல்லி ஒரு கூட்டம் இங்கு இடம்பெற்றது. மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் எதுவும் இக்கூட்டத்தில் ஆராயப்படவில்லை. அதற்குக் காரணமாக நிதி இல்லை என்று சொல்லப்படுகின்றது.

அண்மையில் கௌரவ நீதியமைச்சர் வடக்கிற்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தார். இதில் காணாமல் போனவர்களின் விடயம் தொடர்பில் ஆராய்ந்துள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. உண்மையில் இந்த உறவுகள் காணாமல் போனவர்கள் அல்ல அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது. காணாமல் போனவர்களுக்கு ஒரு லட்சம் ரூபா வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். இந்த ஒரு லட்சம் ரூபாய்க்காக தாய்மார் இன்று வரை வீதியில் போராடவில்லை என்பதையும் அவர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அத்துடன் நேற்றைய செய்தியில் பார்த்திருந்தேன் கௌரவ நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் தாங்கள் வடகொறியாவில் இருந்து கறுப்பு டொலர்களைப் பயன்படுத்தி யுத்தத்திற்கு ஆயுதங்கள் பெற்றுள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஒரு நாட்டின் நிதி அமைச்சர் அவர்கள் எவ்வாறு இவ்வாறானதொரு கருத்தைச் சொல்ல முடியும்.

பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ஒருநாட்டில் கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி ஆயுதம் வாங்கி இந்த யுத்தத்தை நடாத்தியதாகச் சொல்லுகின்றார்கள். இனிவரும் காலங்களில் இன்னும் இன்னும் எத்தனை உண்மைகளை நாங்கள் அறியக் கூடியதாக இருக்குமோ தெரியவில்லை.

நீதி அமைச்சர் சொல்லுகின்றார் காணாமல் போனாருக்கு நட்டஈடு கொடுப்பதாக, அதே நேரத்தில் நிதி அமைச்சர் வடகொறியாவில் இருந்து கறுப்பு டொலர் மூலம் ஆயுதம் வாங்கியதாகச் சொல்லுகின்றார். இந்த கருத்தைக் கொண்டு கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தியமை தொடர்பில் அவரை முதலில் விசாரணை செய்ய வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகள் இதனைக் கவனிக்க வேண்டும்.

தொடர்ந்தும் இந்த அரசாங்கம் இவ்வாறு ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற விடயங்களை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். எமது மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சொன்னார் பொங்கலுக்குப் பிறகு எமது மாவட்டத்தில் பல மில்லியனர்கள் உருவாகுவார்கள் என்று. ஆனால் இன்று மாவட்டத்தில் உருவான ஒரு மில்லினர் கூட இல்லை. இன்று மாவட்ட விவசாயிகள் எல்லாம் மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இன்று இந்தக் கூட்டத்தில் கூட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதைக் கூட நாங்களே முன்வைக்க வேண்டி இருக்கின்றது.

அதே நேரத்தில் இன்று ஒமிக்கறோன் மட்டக்களப்பில் அதிகமாக இருக்கும் என்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அப்படியான ஒரு நேரத்தில் அவசரமாக இந்தக் கூட்டம் எதற்காக? இன்று முக்கியமானவர்கள் பலரை இந்தக் கூட்டத்திற்கு அழைக்கவும் இல்லை.

வழமையாகப் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் நடைபெற்று அதில் தீர்மானிக்கும் விடயங்களை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கொண்டு வருவதுதான் வழமை. ஆனால் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று நடந்திருக்கின்றது. பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் நாளையும் இனிவரும் காலங்களிலும் நடக்க இருக்கின்றன. இவ்வாறானதொரு குழப்ப நிலை இந்த மாவட்டத்தில் இருக்கின்றது.

கூட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் கதைக்க வேண்டும் என்றால் கையை உயர்த்திக் கதைக்க வேண்டுமாம். இது சந்திரகாந்தன் அவர்களின் பிறந்தநாள் விழா அல்ல நாங்கள் கையை உயர்த்திவிட்டுக் கதைப்பதற்கு.

இன்று இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பல விடயங்களுக்குத் தீர்வுகளைத் தருவதாகச் சொல்லியிருந்தார். விசேடமாக ஐ புரொஜக்ட் நிதியினை வைத்திருக்கும் நபரிடமிருந்து அந்த நிதியை மீள எடுத்து அந்தத் திட்டத்திற்கு வழங்குவதற்கான அனுமதியை அவர் வழங்கியிருந்தார். அதேவேளை கெவிலியாமடுவில் இடம்பெறும் சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுப்பது தொடர்பில் ஆராய்வதற்கு நாங்கள் விலியுறுத்தயிருந்தோம். அம்பிட்டிய சுமணரத்தின தேரர் எமது பண்ணையாளர்களின் மாடுகளை வலுக்கட்டாயமாகப் பறித்தமை தொடர்பிலும் நாங்கள் தெரியப்படுத்தியிருந்தோம். ” எனத்தெரிவித்தார்.

மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இந்த முறை கடுமையானதாக இருக்குமாம் – கஜேந்திரகுமார் கருத்து !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இந்த முறை கடுமையானதாக இருக்கும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருடனான நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய கட்சிகளின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பிலும் அவருக்கு விளக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அதிக வருமானம் ஈட்டுவோருக்கு மேலதிக வரி – அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை !

2000 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு மேலதிக வரி விதிக்கும் சட்டமூலம் ஒன்றினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க அனுமதி கோரி நிதி அமைச்சரினால் அமைச்சரவை பாத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் இன்று (01) காலை வழங்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் இன்று தெரிவித்தார்.

சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.