‘இனம், மதம் என்ற எவ்விதப் பேதங்களுமின்றி ஒவ்வொரு இலங்கைப் பிரஜைக்கும் இன்று நாட்டின் எப்பிரதேசத்திலும் சுதந்திரமாக, பாதுகாப்புடன் வாழும் உரிமையுண்டு. .” எனவும் நாட்டுக்கு சரியானதை செய்வதே தமது இலக்கே அன்றி, அனைவரையும் திருப்திப்படுத்துவது அல்லவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது சுதந்திர தின உரையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இனம், மதம் என்ற எவ்விதப் பேதங்களுமின்றி ஒவ்வொரு இலங்கைப் பிரஜைக்கும் இன்று நாட்டின் எப்பிரதேசத்திலும் சுதந்திரமாக, பாதுகாப்புடன் வாழும் உரிமையுண்டு. தாம் விரும்பும் மதத்தை வழிபடுவதற்கான சுதந்திரமும் உள்ளது. சுயாதீனமாக அபிப்பிராயங்களை கொள்வதற்கும், கருத்துக்களை வெளியிடுவதற்கும் சுதந்திரம் இருக்கின்றது. நாட்டினுள் முழுமையாக ஊடகச் சுதந்திரம் இருக்கின்றது.
சுதந்திரம் மிக்க சனநாயக ரீதியிலான நாடொன்றின் மக்கள் என்ற வகையில் நாம் எல்லோருக்கும் சிறப்புரிமைகள் இருப்பதுபோன்று பொறுப்புக்களும் இருக்கின்றன. எல்லோரும் நாட்டிற்காகத் தமது பொறுப்புக்களை நிறைவேற்றும்போதுதான் கிடைத்த சுதந்திரத்தின் உச்சக்கட்டப் பயன் கிடைக்கும். பொறுப்புக்களை மறந்துவிட்டு உரிமைகளைப் பற்றி மட்டும் பேசுவது பொருத்தமாக இருக்காது.
ஒரு நாட்டின் சுதந்திரமானது மிக அர்த்தமாக அமைவது, அந்த நாடானது சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய சகல அம்சங்களினாலும் வலுவடைந்தபோதே ஆகும். அதற்காக முனைப்பாகப் பங்களிக்கும் சந்தர்ப்பம் அரசைப் போன்று மக்களுக்கும் உள்ளது.
ஒரு நாட்டை உரிய திசையைநோக்கிக் கொண்டுசெல்லும்போது அதற்காக நாட்டின் அனைவரினதும் உதவியையும் எதிர்பார்க்க முடியாது என்பதை நாம் அறிவோம். மாற்றமடையாதவர்களைப் பார்த்திருந்து நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக நாம் திட்டமிட்டுள்ளவைகளைக் கைவிடுவதற்கு நாம் தயாரில்லை. எமது நோக்கமானது நாடு சார்பில் சரியானதைச் செய்வதே தவிர எல்லோரையும் திருப்திப்படுத்துவதல்ல.
எதிர்காலத்தை நற்சிந்தனையுடன் நோக்கும் ஆக்க முறையான சிந்தனையின்மூலம் மட்டும்தான் நாம் எமது வருங்காலப் பயணத்தில் வெற்றிபெற முடியும். வெற்றிகரமானதொரு பயணத்திற்கு வேண்டிய அர்ப்பணிப்புக்களைச் செய்தால் மட்டுமேதான் நாம் எதிர்கொள்கின்ற சவால்களை வெல்ல முடியும்.
எதிர்மறையான சிந்தனையுடையவர்கள் உலகை மாற்றிவிட மாட்டார்கள். அவர்களுக்கு அதற்கான ஆற்றலும் இல்லை. ஒரு பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைக்காமல் விமர்சனம் மட்டும் செய்யும் பழக்கமுள்ளவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நோக்கு இல்லை.
எமது நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளின்போது முதலீடுகள் முக்கிய காரணியொன்றாகும். முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு அரசு எப்பொழுதும் நடவடிக்கை எடுப்பதுடன், எமக்கு உள்நாட்டு முதலீடுகளைப்போல சர்வதேச முதலீடுகளும் அவசியமாகும். விசேடமாகப் பாரிய அளவிலான கருத்திட்டங்கள், நவீன தெழில்நுட்ப அறிவு தேவைப்படும் கைத்தொழில்கள், உலகச் சந்தைக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தும் புதிய வியாபரங்களுக்கு சர்வதேச முதலீடுகள் தேவைப்படுகின்றது.
அதற்காக அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிராகத் தவறான அபிப்பிராயங்களை மக்களிடம் கொண்டுசெல்லும் தரப்பினர்பற்றி மக்கள் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும்.
கலாசாரச் சுதந்திரம் ஒவ்வொரு இனத்திற்கும் முக்கியமானது. ஆயிரம் வருடகால வரலாற்றைக்கொண்ட பாரம்பரிய சம்பிரதாயங்கள், விழுமியங்கள் மற்றும் எமது பண்புகளைப் பாதுகாத்தல் என்பவற்றை எமது அடிப்படைப் பொறுப்பாகக் கருதுகின்றோம்.
கடந்தகாலத்தில் பல அச்சுறுத்தல்களுக்குள்ளாகி அழிந்துகொண்டிருந்த தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்களைப் பாதுகாத்து அவற்றை மேம்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். எமது நாடு சட்ட ஆதிக்கத்தைப் பாதுகாக்கும், சர்வதேச சமவாயங்களை மதிக்கும் நடொன்றாகும். குறுகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்குப் பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சார்த்துவதற்கு ஏதேனுமொரு தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டபோதும் எவ்விதத்திலுமான மனித உரிமை மீறல்களுக்கு அரசு உடந்தையாக இருக்கவில்லை என்பதுடன், எதிர்காலத்திலும் அத்தகைய நிகழ்வுகள் இடம்பெறுவதற்கும் இடமளிக்கப்படமாட்டாது என்றார்.