21

21

“தமிழரின் பிரச்சினையை தீர்க்க ஞானசார தேரர் போன்ற துவேஷம் கொண்டவர்கள் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.” – அருட்தந்தை மா.சத்திவேல்

“தமிழர் தாயகத்தில் அக பிரச்சினையை தீர்க்க வெளி சக்திகள் அதுவும் ஞானசார தேரர் போன்ற சமய மற்றும் இன துவேஷம் கொண்டவர்கள் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.”  என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு செல்லும் வழியில் வைக்கப்பட்டுள்ள மாதா சொரூப விடயம் தொடர்பாக வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 

வட-கிழக்கில் குறிப்பாக மன்னார் பிரதேசத்தில் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்களுகுமிடையே சமய முறுகல் நீண்ட காலமாக தொடர்ந்து வரும் நிலையில் தற்போது திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு செல்லும் வழியில் வைக்கப்பட்டுள்ள மாதா சொரூப பிரச்சினை தொடர்பாக ஒரே நாடு ஒரே சட்ட செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தலையிடுவதை தவிர்க்க மன்னார் ஆயர் உட்பட கத்தோலிக்க சமயத் தலைவர்களும், இந்து மதத் தலைவர்களும் பேச்சுவார்த்தை ஈடுபட்டு சமய நல்லிணக்கத்தை உறுதி செய்தல் வேண்டும்.

 

இந்த நாட்டில் பௌத்த மற்றும் இந்து மக்களே பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். அரச சார்பற்ற அமைப்புக்கள் அறிக்கை தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர். இது திட்டமிட்ட அரசியல் செயல் என குற்றச் சாட்டை முன்வைப்பதன் மூலம் கிறிஸ்தவத்திற்கும் ஏனைய சமயங்களுக்கும் இடையில் முரண்பாட்டை வலியுறுத்துவதோடு திருக்கேதீச்சர சமயப் பிரச்சினையை தான் தீர்க்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே மடு தேவாலயம் காணிப்பிரச்சினை ஒன்றில் இந்து மக்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க முயற்சிப்பதையும் நாம் அறிவோம்.

 

பௌத்த துறவிகளையும், பௌத்தர்களையும் அதிகமாகக் கொண்ட தொல்பொருளியலாளர்கள் வடகிழக்கில் இந்துக்களின் பூர்வீக வழிபாட்டு தலங்களை ஆக்கிரமித்து சிங்கள பௌத்த மயமாக்குவதை எதிர்க்காதவர், வடகிழக்கில் யுத்தக் காலத்தில் சமயத் தளங்கள் மீது போடப்பட்ட குண்டுகளால் சேதமடைந்த வணக்க தலங்கள் தொடர்பிலும், அங்கு கொல்லப்பட்டவர்கள் விடயத்திலும் வருத்தம் தெரிவித்து நீதியை பெற்றுக்கொடுக்க முயற்சிக்காதவர் மன்னார் திருக்கேதீஸ்வர சுரூப விடயத்தில் இந்துக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க போகிறேன் என்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட கபட செயலாகும்.

 

அரசியல் ரீதியாக தமிழர்கள் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துகின்ற காலகட்டத்தில் தமிழர் தாயகத்தில் அக பிரச்சினையை தீர்க்க வெளி சக்திகள் அதுவும் ஞானசார தேரர் போன்ற சமய மற்றும் இன துவேஷம் கொண்டவர்கள் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்தோடு சமய பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக்கவும் இடமளிப்பது தமிழர்களின் எதிர்காலத்தை பாதிப்பதாகவும் அமைந்துவிடும்.

ஆதலால் தேசிய பிரச்சினைக்கு நீதியை தேடும் வடகிழக்கு ஆயர்கள் சமய உட்பூசல்களுக்கு இடமளிக்காது காலத்திற்கு காலம் தோன்றும் உள்ளக சமய பிரச்சனைகளை தீர்த்திட அடிமட்டத்திலும், மேல்மட்டத்திலும் கலந்துரையாடல்களை ஏற்படுத்த வேண்டும்.

அவ்வாறான சூழ்நிலை இன்மை காரணமாகவே வெளிச் சக்திகள் உள்நுளைய முயற்சிக்கின்றன. இதனை தவிர்க்கவும், சமய நல்லிணக்கத்தை உருவாக்கி தாயக அரசியல் மீட்புக்காக ஒன்றுபட்ட சக்தியாக செயல்படவும் வடகிழக்கு சமயத் தலைவர்களின் அவசர சந்திப்புக்களை மேற்கொண்டு சமய உறவையும் நல்லிணக்கத்தையும் உருவாக்கிட அவசரமாக செயல்படல் வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

“பிரபாகரன் ஒரு சிறந்த போர் வீரன். அதனால் அவர் மீது எனக்குத் தனிமரியாதை உண்டு.” – டக்ளஸ் தேவானந்தாவின் கருத்து தொடர்பில் பொன்சேகா !

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பின்னரே உயிரிழந்தார் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்து தொடர்பில் இறுதிப் போரில் இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த போது,

 

விடம் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,

“பிரபாகரனின் சாவை வைத்து அன்று தொடக்கம் இன்று வரை சிலர் அரசியல் செய்து வருகின்றனர். இராணுவத்தினருடனான நேரடி மோதலிலேயே பிரபாகரன் உயிரிழந்தார் என்பது உண்மை. அவரின் வெற்றுடலையே இராணுவத்தினர் மீட்டனர். பிரபாகரன் ஒரு பயங்கரவாதக் குழுவின் தலைவர். எனினும், அவர் சிறந்த போர் வீரன். அதனால் அவர் மீது எனக்குத் தனிமரியாதை உண்டு. பிரபாகரனை உயிருடன் பிடிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் விரும்பின.

அந்த நாடுகள் இலங்கை அரசுக்கு அன்று அழுத்தமும் கொடுத்திருந்தன. எனினும், பிரபாகரன் எந்தத் தரப்பிடமும் சிக்காமல் இறுதி வரைப் போராடியே சாவடைந்தார்” என்றார்.

தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி யாசகம் எடுக்க வைத்த யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி உரிமையாளர் !

சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி யாசகம் பெறுவதாக அண்மைய நாள்களில் பல்வேறு இடங்களில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் சாவகச்சேரி நகரில் யாசகம் பெற்றவர்கள் இன்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு யாசகம் பெறுபவர்களின் பணம் விடுதி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதும் யாசகத்தில் ஈடுப்பட்டோருக்கு தினக் கூலி வழங்கப்படுவதாக பல தரப்பினராலும் குற்றச்சாட்டப்பட்டது.

அதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கியநாடுகள்மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக இன்னுமொரு தீர்மானம் – இலங்கை எதிர்கொள்ள ஆபத்து !

ஐக்கியநாடுகள்மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக இன்னுமொரு தீர்மானத்தை நிறைவேற்றினால் இலங்கையின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்படக்கூடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையை பொறுத்தவரை இலங்கை ஏற்கனவே ஒரு மோசமான விக்கெட் என தெரிவித்துள்ள அவர் அடுத்தஅமர்வு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புதிய சூழ்நிலைகள் மற்றும் ஷானி அபயசேகர புதிதாக தாக்கல் செய்துள்ள மனு ஆகியவற்றின் பின்னணியிலேயே ஆரம்பமாகவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இலங்கையின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்படும் என தெரிவித்துள்ள எரான் விக்கிரமரட்ண மிக முக்கியமான விடயம் என்னவென்றால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வது குறித்து ஆராயும் போது சட்டத்தின் ஆட்சி உரிய முறையில் உள்ளதா என பார்ப்பார்கள்,என தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை சட்டத்தின் ஆட்சியை பேணதவறிவிட்டது என தெரிவிக்கப்பட்டால் எந்த முதலீட்டாளரும் இலங்கைக்கு வரமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.