22

22

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் கொள்கை ரீதியான சந்திப்புக்கு பைடன் இணக்கம் !

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் கொள்கை ரீதியான சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இணக்கம் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோனின் ஏற்பாட்டில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

பேச்சுவார்த்தை எப்போது இடம்பெறும் போன்ற விபரங்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

ரஷ்யா விரைவில் உக்ரைன் மீது படையெடுக்கவிருப்பதாக அமெரிக்கா உறுதியாக நம்புகிறது. இந்த நிலைமையை தவிர்ப்பதற்கான நடவடிக்கையின் ஒரு கட்டமாக இந்த பேச்சுவார்த்தை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் ரஷ்யா உக்ரைன் மீதான படையெடுப்புத் திட்டத்தை கைவிட்டால் மாத்திரமே அமெரிக்க ஜனாதிபதி இந்த பேச்சுவார்த்தைக்கு வருவார் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

எவ்வாறாயினும், உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணம் இல்லை என்று ரஷ்யா தொடர்ந்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“அரசியல்வாதிகளைப் பற்றி வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் முறை ஒழிக்கப்பட வேண்டும்.” – அமைச்சர் டலஸ் அழகப்பெரும

நாட்டின் கல்வி முறை வீழ்ச்சியடைய இடமளிக்கக்கூடாது என அமைச்சரான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கம்புருபிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொருளாதார வீழ்ச்சியை மீண்டும் வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்டாலும் கல்வித்துறை வீழ்ச்சியடைந்தால் நாடு பாரிய நெருக்கடிக்கு உள்ளாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

படித்த, அரசியல்வாதிகளைப் பின்பற்றி வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் முறை நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அரசியல்வாதிகளை நாடி தகுதியுள்ளவர்கள் வேலை தேடும் கலாசாரம் வேறு எந்த நாட்டிலும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன், கனடா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள குழந்தைகள் இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அத்தகைய நாடுகளில் தகுதியுடையவர்கள் நல்ல ஊதியம் பெறும் வேலைகளைப் பெறுவதற்கான அமைப்புகள் நடைமுறையில் இருப்பதால், அவர்கள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்வதில்லை. எனவே நாட்டின் கல்வித் துறை வீழ்ச்சியடைவதை குடிமக்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பண்பு தெரியாத வகையில் விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் வசைபாடுகிறார்.” – எம்.கே. சிவாஜிலிங்கம் காட்டம் !

“டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியான ஈ.பி.டி.பி பற்றி பொது மக்களுக்கு நன்றாகத் தெரியும். எவ்வளவு படுகொலைகள் அட்டூழியங்கள் புரிந்தார் என்பது தெரியும்.” என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்புத் தொடர்பில் அரசாங்கமும் அரசாங்கத்தில் உள்ளவர்களும் மாறுபட்ட கருத்துக்களையே கூறிவருகின்றார்கள். இதன்மூலம் போர்க்குற்றம் நடந்தது என்பதை அவர் ஏற்றுக்கொள்கின்றார்கள். இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பண்பு தெரியாத வகையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி வசைபாடியுள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியான ஈ.பி.டி.பி பற்றி பொது மக்களுக்கு நன்றாகத் தெரியும். எவ்வளவு படுகொலைகள் அட்டூழியங்கள் புரிந்தார் என்பது தெரியும். 2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரசாரத்திற்காக ஊர்காவற்றுறை சென்றபோது ஈ.பி.டி.பி குண்டர்களினால் சுட்டும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூவருக்கு இரட்டை மரண தண்டனை தீர்ப்பு நீதி மன்றத்தினால் வழங்கப்பட்டது.

பிரபாகரன் உயிருடன் சரணடைந்தார் என்று டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார். இது முதல் தடவை அல்ல. அப்படி என்றால் சரணடைந்தவர்களை நீங்கள் படுகொலை செய்தீர்களா என்பதற்கு பதில் கூறவேண்டும். இறுதியுத்தத்தின் போது பிரபாகரனின் படம் என காண்பிக்கப்பட்ட படத்தில் நெற்றியில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் இருந்தமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

பிரபாகரன் சரணடைந்திருந்தால் விசாரணை செய்திருப்பீர்கள் இலங்கை பூராகவும் பவனியாக கொண்டு சென்றிருப்பீர்கள். ஆனால் தற்போது குறித்த விடயங்கள் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணாகவே கூறிவருகின்றீர்கள். சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டார் என்பது உங்கள் கருத்து அவ்வாறு என்றால் இந்தப் போர்க்குற்றத்திற்கு யார் பொறுப்பு? இதற்கு யார் பதில் கூறுவது? அன்று இராணுவத் தளபதியாக இருந்த சரத்பென்சேகா, பிரபாகரன் ஒரு வீரன் கடைசி வரை போராடியே மறைந்தார் என்பதை கூறுகின்றார்.

படைத்தளபதியின் கீழ் இருந்த ஓய்வுநிலை ஜெனரல் கமால் குணரட்ண என்பவர் கழுத்தில் இருந்த இலக்கம் ஒன்று என்ற இலக்கத்தகட்டையும் பிஸ்ரலையும் கைப்பற்றினோம் எனக் கூறியுள்ளார். அவ்வாறு என்றால் பிஸ்ரலுடனா அவர் சரணடைந்தார். சரணடைவது என்றால் ஆயுதங்கள் இல்லாமல் தான் சரணடைவது. அவருடைய உடலை நாங்கள் புதைத்துவிட்டோமென ஒரு சிலர் கூறினார்கள். எங்கு புதைத்தோம், யார் புதைத்தது என்பது கூறப்படவில்லை. இன்னுமொரு பகுதியினர் எரித்துவிட்டு சாம்பலை கரைத்துவிட்டோம் எறிந்துவிட்டோம் என்றார்கள். ஒரு போர் வீரனது உடலுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பது மரபு.

பிரபாகரனது இறப்புத் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களையே அரசாங்கங்கள் கூறிவருகின்றது. பிரபாகரனின் உடலை அடையாளம் காண்பதற்காக கருணாவையும் தயா மாஸ்ரரையும் கூட்டிச் சென்றீர்கள். ஒருவர் கொல்லப்பட்டால் குறித்தநபர் இந்தியாவாலும் தேடப்படுகின்றார் என்றால் ஏன் அவரின் மரண விசாரணை நடைபெறவில்லை.

உலங்கு வானூர்தி மூலம் கருணாவை கூட்டிச் செல்ல முடியும் என்றால் ஏன் சட்ட வைத்திய அதிகாரியை கூட்டிச்சென்று மரண சான்றிதழை வழங்கவில்லை. இந்தியாவிற்கு ஒரு நீதிமன்ற சான்றிதழை வழங்கியுள்ளீர்கள் இதனைவிட ஏன் டி.என்.ஏ. பரிசோதனை செய்யவில்லை. அன்றைய காலத்தில் பிரபாகரனின் தாயும் தந்தையாரும் பனாகொட இராணுவ முகாமில் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

பிரபாகரன் எனக் காண்பிக்கப்பட்ட உடலை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒன்றில் அவர் தன்னைத்தானே மாய்த்திருக்கவேண்டும் அல்லது அவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பதை வரலாறு கூறும். அதனை விடுத்து சரணடைந்தார் சடலத்தை எடுத்தோம் புதைத்தோம் என்று கூறுவதில் அர்த்தம் இல்லை. பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் எதற்காக பிரபாகரனின் தாயாரிடன் பிரபாகரன் எங்கு இருக்கின்றார் என விசாரணை செய்தீர்கள் என்பதற்கான பதிலையும் கூறவேண்டும். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கும் தாயார் இதனைக் கூறியுள்ளார்.

பிரபாகரனின் இறப்புத் தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துக்களானது பித்தலாட்டங்களும் பொய் பிரட்டுக்களுமே இருப்பதாகவே நாங்கள் உணருகின்றோம் என்றார்.

யாழிலிருந்து முல்லைத்தீவுக்கு வன்முறையில் ஈடுபட சென்ற பெண் உள்ளிட்ட 13 பேர் கைது !

யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவுக்கு வன்முறையில் ஈடுபட சென்ற பெண் உள்ளிட்ட 13 பேர் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் மினிவான் ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி கீரிமலை பகுதியை சேர்ந்த பெண் உள்ளிட்ட 13 பேர் முல்லைத்தீவு அளம்பில் பகுதிக்கு சென்று வன்முறையில் ஈடுபட்டள்ளனர். குறித்த கும்பலின் தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வாகனம் ஒன்றினில் வந்த கும்பல் தமது பகுதியில் தாக்குதலை மேற்கொண்டு 5 பேரை படுகாயங்களுக்கு உட்படுத்தி விட்டு தப்பி செல்வதனை அறிந்த ஊரவர்கள் வானை துரத்தி சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர்.

வாகனத்தில் பெண் உள்ளிட்ட 13 பேர் இருந்த நிலையில் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசாரிடம் வாகனத்துடன் அதில் இருந்த 13 பேரையும் ஊரவர்கள் ஒப்படைத்துள்ளனர்.

தனிப்பட்ட பகை காரணமாகவே யாழில் இருந்து வாகனத்தில் முல்லைத்தீவு சென்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவருந்துள்ளது.