28

28

இலங்கையில் திரிபோஷாவுக்கும் தட்டுப்பாடும் – கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா இல்லை என அறிவிப்பு !

கைக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் களஞ்சியசாலைகளில் தற்போது திரிபோஷா இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் சித்ரமாலி டி சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எனவே, கிளினிக்குகளுக்கு வரும் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்கப்படாது அவர் குறிப்பிட்டுள்ளார்.

திரிபோஷா உற்பத்திக்கான சோளத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினால் கைக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷாவினை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாள்தோறும் திரிபோஷா உற்பத்திக்கு சுமார் 70 மெட்ரிக் தொன் சோளம் தேவைப்படுகின்றது. தேவையான அளவு மக்காச்சோளத்தை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினால், சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்த போதிலும், அதுவும் முடங்கியுள்ளது.

மேலும், திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான பால் மாவைப் போதுமான அளவு பெற முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இல்மனைட் அகழ்விற்காக அரச அதிகாரிகளால் களவாடப்படும் தமிழர்களின் பூர்வீக வயல்நிலங்க – மீட்க உதவுமாறு கோரிக்கை !

முல்லைத்தீவு – கொக்கிளாயில், கம்பித்தறை மற்றும் வில்லுவெளி ஆகிய தமிழர்களின் பூர்வீக வயல்நிலங்களை இல்மனைட் அகழ்விற்காக கனிப்பொருள் மணல்கூட்டுத்தாபனத்தினர் அபகரித்துள்ளனர்.

இவ்வாறு அபகரிக்கப்பட்ட காணிகபாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனின் ஆலோசனைப்படி சட்டரீதியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

அதேவேளை தமிழர் தாயகப்பரப்பில் தற்போது அபகரிப்புச்செயற்பாடுகள் அதிகரித்துள்ளது எனச் சுட்டிக்காட்டிய ரவிகரன், அந்த அபகரிப்புச் செயற்பாடுகளைத் தடுக்க பன்னாடுகள் தலையீடுசெய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட கொக்கிளாய் தமிழ் மக்களிடம் வழக்குத் தொடர்வதற்கான ஆவணங்களை சேகரிக்கும் செயற்பாட்டின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருந்துத் தெரிவிக்கையில்,

கொக்கிளாய் பகுதியில் எவ்வித அறிவிப்புக்களுமின்றி தங்களுடைய காணிகளை அளவீடு செய்து, அபகரிக்கப்படுவதாக மக்கள் எம்மிடம் செய்த முறைப்பாட்டிற்கு அமைவாக நாம் இங்கு வருகைதந்துள்ளோம். ஏற்கனவே இல்மனைட் அகழ்விற்காக கொக்கிளாய் – கம்பித்தறை என்ற பகுதியில் 44ஏக்கருக்கும் மேற்பட்ட தமிழர்களின் பூர்வீக வயல் காணிகள் அபகரிகப்பட்டுள்ளன.

இந் நிலையில் தற்போது அதற்கு அருகிலுள்ள வில்லுவெளி என்னும் இடத்திலும், 60ஏக்கருக்கும் மேற்பட்ட தமிழர்களின் பூர்வீக வயல் காணிகள் அளவீடுசெய்யப்பட்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையிலே கடந்த 09.02.2022 அன்று இவ்வாறு அபகரிக்கப்படுகின்ற பகுதிகளைப் பார்வையிட்டோம். இறுதியாக இம்முறை எமது தமிழ் மக்களால் பெரும்போக நெற்பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடைசெய்யப்பட்ட காணிகள், எமது தமிழ் மக்களின் நிலக்கடலை பயிர்ச்செய்கை காணிகள், தென்னங்காணிகள், வில்லுக்குளம் என்று சொல்லப்படக்கூடிய குளம்என, இப்படியாக பரியளவு நிலப்பரப்பு அளவீடுசெய்யப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு, அபகரிப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந் நிலையிலே இந்த விடயத்தை சட்டரீயாக அணுகி, எமது தமிழ் மக்களின் இந்த பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற நோக்கில், பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனிடம் ஆலோசனைகளைப்பெற்று, முல்லைத்தீவுமாவட்ட சட்டத்தயணியான தனஞ்சயனை அழைத்துவந்து அபகரிப்பு நிலைமைகளை நேரடியாகக் காண்பித்துமிருந்தோம்.

குறிப்பாக கொக்கிளாய் பகுதியில் தமக்குச்சொந்தமான கூடுதல் காணிகள் அபகரிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கொக்கிளாய் மாத்திரமின்றி கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, நாயாறு, செம்மலைவரையில் கனியமணல் அகழ்விற்காக காணிகள் அபகரிக்கப்படப்போவதான தகவல்களும் வெளிவருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில் கொக்கிளாயிலிருந்து செம்மலைவரையிலே கடற்கரையாக 12கிலோமீற்றர் நீளமாகவும், கடற்கரையிலிருந்து உயரமாக 650மீற்றர் அகலமாகவும் காணிகள் அபகரிக்கப்படப்போவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். மாகாணசபை ஆட்சிக்காலம் இருந்த காலத்திலே, கம்பித்தறைப் பகுதியில் இப்படியான காணிகள் அபகரிக்கவோ, வேலிகள் அமைப்பதற்கோ, கனியமணல் அகழ்விற்கான வேறு எந்த நடவடிக்கைகளையும் அங்கு செய்வதற்கு நாங்கள் இடமளித்திருக்கவில்லை.

வடமாகாணசபை ஆட்சி இருந்தகாலத்தில்கூட இல்மனைட் அகழ்வுசெய்வதுதொடர்பிலே பேசப்பட்டது.

இந் நிலையில் இந்த இல்மனைட் அகழ்வுசெய்வதுதொடர்பிலே ஓர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவிலே நானும் இருந்தேன். அப்போது நாங்கள் கடுமையாக வாதாடி எமது தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதற்கு இடமளிக்கவில்லை.

ஆனால் மகாணசபை ஆட்சிக்காலம் முடிவுற்ற சூழலில், 2020ஆம் ஆண்டின் முற்பகுதியில் கம்பித்தறைப் பகுதியில் 44ஏக்கருக்கும் மேற்பட்ட எமது தமிழ் மக்களின் வயல் காணிகளை அபகரித்து வேலிகள் அமைத்ததுடன், அங்கு மணல் அகழ்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் ஒருபுறம் இடம்பெற்றுக்கொண்டிருக்க, மறுபுறம் மேலதிக காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றது.

இந்த அபகரிப்பு நிலைமைகளைக் கருத்தில்கொண்டு, இந்த தகவலை பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரனிடமும், சட்டத்தரணி தனஞ்சயனிடமும் தெரிவித்து, இவர்களது ஏற்பாட்டில் வழக்கு தொடர்வதற்காக, உரிய ஆவணங்களை மக்களிடமிருந்து பெற்றுக்கொண்டோம். அதற்கமைய நாம் விரைவில், அபகரிக்கப்பட்ட எமது மக்களின் காணிகளை விடுவித்துத்தருமாறு நீதிமன்றினை நாடுவதற்கு இருக்கின்றோம்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்திலே கரைதுறைப்பற்று பிரதேசத்தின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி போன்ற இந்தப் பகுதிகளிலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்குள்ளும் பல அரச திணைக்களங்களும், அரசோடு தொடர்புடையதுமான பிரிவினரும் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்துக்கொண்டிருக்கின்றார்கள். அந்தவகையில் வன இலாகா, வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, முப்படையினரும் எமது காணிகளை அபகரித்துள்ளனர், கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிங்களக்குடியேற்றம், தமிழர்களின் பூர்வீக மணலாற்றினை வெலிஓயாவாக மாற்றி அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சிங்களக்குடியேற்றங்கள், இந்தவரிசையில் தற்போது கனியமணல் கூட்டுத்தாபனமும் இணைந்துகொண்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகளை எமது தமிழ் மக்கள் முற்றுமுழுதாக எதிர்க்கின்றனர்.தமக்குத் தமது நிலம்தான்வேண்டும், எமது நிலம்தான் எமது பூர்வீக சொத்து எனக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். இந் நிலையில் எமது மக்களிடம் எவ்வித அனுமதிகளையும் பெறாமல், எமது மக்களின் விருப்புக்குமாறாக அவர்களின் பூர்வீக காணிகளை பறித்தெடுக்கும் நடவடிக்கைகள்தான் இங்கு இடம்பெற்றுவருகின்றன.

எனவேதான் நாங்கள் சட்டரிதீயாக இந்தவிடயத்தினைக் கையாண்டு, எமதுமக்களின் காணிகளை மீட்டுக்கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். மேலும் எமது பகுதிகளில் வயல்நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன, குளங்கள் அழிக்கப்பட்டு இராணுவக் கட்டமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன, ஆறுகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன, தென்னிலங்கை மற்றும் இந்தியமீனவர்கள் சட்டவிரோத தடைசெய்யப்பட்ட தொழில்களால் எமது கடற்பரப்பரப்பினை ஆக்கிரமிக்கின்றனர், எமது தமிழ் மக்களின் உப உணவுப் பயிர்ச்செய்கைக்காணிகளும் அபகரிக்கப்படுகின்றன, இதுதவிர பௌத்த மதம் எமது பகுதிகளில் திணிக்கப்படுகின்றது, பௌத்தமத ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு இடம்பெறும் இந்த கொடுமைஓளை நாம் யாரிடம் தெரிவிப்பது?

இங்கு இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது பன்னாடுகளுக்குத் தெரியாதா?

இதுவரையில் எம்மோடு கலந்துரையாடிய பன்னாட்டு குழுக்களிடமும், இங்கு இடம்பெறும் பிரச்சினைகள்தொடர்பில் கேட்டறியவந்த அனைத்து பன்னாடுகளைச் சேர்ந்த தரப்புக்களிடமும் நாம் இந்த தகவல்களைத் தெரிவித்திருக்கின்றோம். ஆனாலும் சிங்களத்தினுடைய ஆதிக்கமும், ஆக்கிரமிப்புச் செயற்பாடும் தொடர்கின்றது. இவற்றைத் தடுத்துநிறுத்தவேண்டும்.

எமது மக்களுக்குரிய காணிகள் எமதுமக்களுக்கே வழங்கப்படவேண்டும். இவ்வாறான ஆக்கிரமிப்புக்கள் வேண்டாம். எமது மக்களை வாழவிடுங்கள் என்றுதான் நாம் கேட்கின்றோம். எமது நிலங்கள் எமக்குவேண்டும், எமது கலாச்சாரங்கள் எமக்குவேண்டும், எமது மதங்கள் இங்கு பாதுகாக்கப்படவேண்டும் என்பதைத்தான் நாம் கேட்கின்றோம். நாம் ஓர் பூர்வீகக் குடிமக்கள் என்றவகையில் எமக்கு நியாயமான தீர்வுகிடைக்க, இந்தவிடயத்தில் பன்னாடுகள் தலையீடுசெய்வேண்டும்- என்றார்.

நில மீட்புக்காக புலம்பெயர் தேசங்களிலும் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக மாவை அறிவிப்பு !

அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தை வவுனியாவில் இன்று (28) திறந்து வைத்ததன் பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

பயங்கரவாத தடை சட்டத்தை எதிர்த்து நாங்கள் ஏற்கனவே குரல் எழுப்பியிருக்கின்றோம். அதற்கு எதிராக வாக்களித்து இருக்கின்றோம். அவ்வாறான சூழ்நிலைகள் இருந்தாலும் இப்பொழுது இயக்க ரீதியாக எதிர்ப்பை முன்னெடுத்திருக்கின்றோம். நாங்கள் இப்போது தீர்மானம் எடுத்திருப்பது எங்களுடைய நிலத்தை நாங்கள் ஆழ வேண்டுமாக இருந்தால் எங்கள் மண்ணிலே நில உரிமை அடிப்படையாக இருக்க வேண்டும்.

அது இருக்கிறதா? ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பல முனைகளில் மகாவலி, தொல்பொருளியல் அடிப்படையில் பௌத்த மயமாக்குவது, சிங்கள மயமாக்குவது, சிங்களவர்களை குடியேற்றுவது , அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர்களுடைய நிலங்கள் பறிக்கப்படுவதற்கு சமமாகவும், அதற்கு அப்பாலும் இராணுவங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை கைவசம் வைத்துள்ளது . இவற்றையெல்லாம் நாங்கள் மதிப்பீடு செய்யப்போகின்றோம்.

நிலத்தினுடைய விடுதலைக்காக விடிவிற்காக அதனை நாங்கள் உறுதிப்படுத்துவதற்காக எங்களுடைய சுதந்திரத்தை நிலை நாட்டுவதற்கு எங்கள் மண்ணை நாங்கள் ஆளுவதற்கு நிலம் எங்களுக்கு இருக்க வேண்டும். மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். இன்று அரசினாலும் , இராணுவத்தினாலும் தொடர்ந்தும் பல காரணங்களை கூறி கைப்பற்றப்படுகின்ற நிலங்களில் சிங்களவர்களை குடியேற்றி எங்களை சிறுபான்மையானவர்களாக , சுயநல உரிமைக்கு தகுதியற்றவர்களாக நாங்கள் அரசியல் உரித்தை கோருவதற்கு எங்களை தகுதியற்றவர்களாக ஆக்குகின்ற மிக கொடிய போராட்டத்திலே மிக பெரிய திட்டத்தோடு இன்றைய அரசாங்கம் ஒவ்வொரு ஈடுபட்டு வருவதுகின்றது அதற்கு நாங்கள் முகம்கொடுத்து பலவிதமான நெருக்கடிகளை சந்திப்பதோடு. ஜனநாயக ரீதியில் நிலத்தை பாதுகாக்க போராட வேண்டி இருக்கின்றோம்.

எமது மக்களை பாதுகாக்கலாம் என்பதற்காக சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கின்ற இலங்கை, சர்வதேச சூழ்நிலையில் நிலம் ரீதியாக முழுமையான விபரங்களையும் , வரைபடங்களையும் மக்கள் இழந்திருக்கிறார்கள் , மக்கள் தங்களுடைய நிலத்தை எவ்வளவு இழந்திருக்கிறார்கள் அந்த நிலங்களை பாதுகாக்கவும், பறிக்கப்பட்ட , அபகரிக்கப்பட்ட , இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீட்டெடுப்பதற்காகவும் விரைவில் தமிழரசுக்கட்சியின் மாநாடு நடத்தப்பட இருக்கின்றது.

அடுத்த வாரத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் கூகுள் மெப் அடிப்படையில் எவ்வளவு நில வரைபடங்களை கொண்டுள்ளது.

அதற்கு பின்னர் எவ்வளவு நிலங்களை நாங்கள் இழந்திருக்கின்றோம். இராணுவம் எவ்வளவு நிலங்களை கைப்பற்றியிருக்கின்றது, அவ் நிலங்களில் தாங்கள் குடியுரிமை கொண்டுள்ளவர்களாக , உரித்துடையவர்களாக , அங்கே பண்ணைகளை வைத்திருப்பதும், விவசாயத்தை செய்வதும் , தொழில்பேட்டைகளை அமைப்பதும் இவ்வாறு வடக்கு கிழக்கு முழுவதும் சிங்களவர்களை குடியேற்றுவது மட்டுமல்ல இராணுவமே குடியேற்றப்பட்டவர்களாக எங்களுடைய நிலங்களை கைப்பற்றி பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தங்களுடைய கையிலே வைத்திருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் சர்வதேசத்திற்கு முன்னால் முன்வைப்பது மட்டுமல்ல ஜனநாயக ரீதியாக இந்த நாட்டுக்குள்ளும், வெளியிலும் புலம்பெயர்ந்தவர்களும் நிலத்தை மீட்பதற்காக போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மாநாட்டிலே உரிய தீர்மானத்தை எடுக்க இருக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் 04 நாட்களாக குறைக்கப்படுகிறதா வார வேலை நாட்களின் எண்ணிக்கை.?

நாட்டில் டொலர் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினால் பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுப்பதை தவிர்க்க அரசாங்கத்திடம் இலங்கை மத்திய வங்கி சில யோசனைகளை முன்வைத்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால் இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இரண்டு அரச வங்கிகளுக்கும் செலுத்தவேண்டிய சுமார் 560 பில்லியன் ரூபாவை (280 மில்லியன் ரூபா) நிலுவையில் வைத்துள்ளது.

எனவே, மேலும் கடன் வழங்கினால் வங்கிகள் நட்டமடையக்கூடும்.எனவே, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தொடர்ந்தும் கடனை வழங்கினால் அரசின் இரண்டு வங்கிகளும் வீழ்ச்சியடைவதை தடுப்பது கடினமாகும். எனவே, அதற்கான கடனை உடனடியாக நிறுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

எரிபொருள் விற்பனையால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்கும் வகையில் எரிபொருள் விலையை கணிசமான அளவு அதிகரிக்கவும் மத்திய வங்கி பரிந்துரைத்துள்ளது.

அத்துடன், வாரத்தில் வேலை நாட்களின் எண்ணிக்கையை 4 ஆக குறைத்து, வேலை நேரத்தை அதிகரிக்கவும் மத்திய வங்கி முன்மொழிந்துள்ளது.

இதற்கமைய, நிறுவனங்களின் செயற்பாடுகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5.30 வரை தொடர வேண்டும் என மத்திய வங்கி பரிந்துரைத்துள்ளது.

அதேபோல், நிறுவனங்களுக்குள் சேவையாற்றும் ஊழியர்களை காலை 9 மணி முதல் 3 மணி வரை பணிபுரிய அனுமதிக்க வேண்டும் எனவும், அவர்களை முன்னதாக வீட்டிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவராத்திரிக்கு பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி – வெளியாகியுள்ள அறிவிப்பு !

சிவராத்திரியை பொறுத்தமட்டிலும் மததலைவர்கள் ஆலய நிர்வாகிகள் போன்றோர் தார்மீக பொறுப்புடன் இந் நடைமுறைகளை விளங்கி கொண்டு சிவராத்திரி தினத்தில் செயற்பட வேண்டும். அனைவரும் சகல விதமான சுகாதார நடைமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.” என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணண் தெரிவித்தார்.

முக்கியமாக தடுப்பூசி பெற்றவர்களையே அனுமதிப்பது சிறந்தது. பூஸ்டர் தடுப்பூசி வரை பெற்றவர்கள் இந் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் எந்தவித பிரச்சினையும் இல்லை மற்றும் சிவராத்திரி மட்டுமல்லாமல் பிறந்தநாள் நிகழ்வு மத நிகழ்வுகள் போன்ற மக்கள் ஒன்று கூடும் இடங்களில் கூட்டங்கள் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் அல்லது ஒழுங்கு சீர் செய்யப்படல் வேண்டும்.

இதன் அடிப்படையிலேயே நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கமைய ஒரு திறந்த வெளியில் 150 பேர் மட்டுமே ஒன்றுகூடலாம் முககவசம் அணிதல் தகுந்த சமூக இடைவெளிகளை பேணல் கை சுகாதாரம் பேணல் போன்றவற்றை கடைபிடித்தல் அவசியமாகும் என இந்து மக்களினால் நாளை அனுட்டி க்கப்படவுள்ள சிவராத்திரி தினத்தில் சகல இந்து ஆலயங்களிலும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகளை சம்மந்தமாக மததலைவர்கள் ஆலய நிர்வாகிகள் போன்றோர் தார்மீக பொறுப்புடன் இந் நடைமுறைகளை விளங்கி கொண்டு சிவராத்திரி தினத்தில் செயற்பட வேண்டும்.

கூகுள் மேப் உதவியுடன் உக்ரைனை தாக்கும் ரஷ்ய படைகள் – கூகுள் எடுத்த அதிரடி முடிவு !

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து  5-வது நாளாக போர் தொடுத்து வருகிறது.  ஏராளமான இராணுவ தளங்கள் மற்றும் போர் தளவாடங்களை அழித்துள்ள ரஷிய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.
இந்நிலையில் ரஷ்ய படைகள் கூகுள் மேப் உதவியுடன் வழிதடங்கள் மற்றும் போக்குவரத்து குறித்து அறிந்துகொள்வதை தடுப்பதற்காக கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப் சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
உக்ரைன் அரசிடம் பேசி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்ய தாக்குதல்களை தடுப்பதற்கு இது ஓரளவு உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.