March

March

கிளிநொச்சி காட்டுப்பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் – சுற்றி வளைத்த பொலிஸார் !

பாரிய கசிப்பு உற்பத்தி பொலிசாரால் முற்றுகையிடப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை  பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

பாரிய கசிப்பு உற்பத்தி பொலிஸாரால் முற்றுகை! - மலையகம்.lk

தருமபுரம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, 15 பெரல் கோடா, 65 லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் விசாரணைகளின் பின்னர்  பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தருமபுரம்  பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி  D.M சதுரங்க தெரிவித்துள்ளார்.

உறவுகள் எங்கே எனக்கேட்ட காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு 100,000 ரூபாவை வழங்க அரசாங்கம் ஏற்பாடு !

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஒரு தடவை கொடுப்பனவாக 100,000 ரூபாவை வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இழப்பீட்டுக் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின்படி, பல்வேறு சூழ்நிலைகளில் குறைகளால் பாதிக்கப்பட்ட தனிநபர்களின் வாழ்க்கையை மறுவாழ்வளிக்க உதவுவதற்காக கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், 2016 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாடுகளின்படி, காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளின் பின்னர், பதிவாளர் நாயகம் மரணம் அல்லது காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழை வழங்குகிறார்.

இதன்படி, நீதியமைச்சர் 100,000, ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்பித்தார். பதிவாளர் நாயகத்தால் வழங்கப்பட்ட காணாமற்போன நபரின் சான்றிதழை வைத்திருக்கும் காணாமல் போன நபரின் குடும்பத்தின் நெருங்கிய உறவினருக்கு இத்தொகை வழங்கப்படவுள்ளது.

சீனாவில் ஒரே நாளில் ஐயாயிரம் பேருக்கு கொரோனா – மீண்டும் தொடங்கும் கொரோனா !

உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்டது சீனாவில்தான். அங்குள்ள வுகான் நகரில் உருவான இந்த வைரஸ் உலகெங்கும் பரவி, ஒவ்வொரு அலையாக உலக நாடுகளை கதிகலங்க வைத்து வருகிறது.
கொரோனாவின் முதல் அலையின்போதே நாடு தழுவிய முழு ஊரடங்கு, பயணக் கட்டுப்பாடு, அதிகளவு பரிசோதனை உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சீன அரசு நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தது.
இதற்கிடையே, புதிய வகை கொரோனாவான ஒமிக்ரோன் தாக்கத்தால் சீனாவில் கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் அதிகரித்து வந்தது. இதனால் சீனாவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 3,393 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், சீனாவில் நேற்று புதிதாக 5,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.
2 ஆண்டாக கொரோனா தாக்கம் இல்லாத நிலையில், கடந்த சில தினங்களாக நோய் பாதிப்பு அதிகரித்து வருவது அந்நாட்டினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

“பசில் ராஜபக்சவை விரட்டும் முயற்சியில் சில நேரம் நாம் கொலை செய்யப்படலாம்.” – உதய கம்மன்பில

பசில் ராஜபக்ச அமெரிக்காவிற்கு திரும்புவம் வரை போராட்டத்தை தொடரப் போவதாகவும், இது ஆரம்பம் மாத்திரமே, இதன் காரணமாக நான் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குகள் தொடரப்படலாம். சிறையில் அடைக்கப்படலாம், சில நேரம் கொலை செய்யப்படவும் கூடும். எம்மை கொலை செய்தாலும் எமது போராட்டத்தை அழிக்க இடமளிக்க மாட்டோம்.என்றும்  முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.

இலங்கையின் தற்போதை நெருக்கடி நிலைமை தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

“திட்டமிட்டு பொருளாதாரத்தை வீழ்ச்சியடை செய்யும் தந்திரம் காரணமாகவே தற்போது மக்கள் வரிசைகளில் நின்று கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இது ஏற்பட்ட நிலைமையல்ல. ஏற்படுத்தப்பட்ட நிலைமை.

இந்த நிலைமை ஏற்பட காரணமாக இருந்த பசில் ராஜபக்ச என்ற அழகற்ற அமெரிக்கர் மீண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் வரை போராட்டத்தை நிறுத்த போவதில்லை. அவர் திரும்பிச் செல்லவில்லை என்றால் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு எதிராக உள்ளுக்குள் இருந்து நடத்திய போராட்டம் வெற்றி பெறவில்லை என்றாலும் எதிர்காலத்தில் இதற்கு எதிராக மக்களை அணித்திரட்டுவோம்.

 

டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நான் கூறியதன் காரணமாகவே டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் குற்றம் சுமத்துகின்றனர். எனது அறிவிப்பால், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது என்றால், மருந்து, சீமெந்து,இரும்பு, எரிவாயு, பால் மா, கோதுமை மா ஆகியவற்றுக்கு எப்படி தட்டுப்பாடு ஏற்பட்டது என நான் அந்த அமைச்சர்களிடம் கேள்வி எழுப்புகிறேன்.

எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட ஒரே காரணம் டொலர் பற்றாக்குறையே. கையிருப்பில் இருந்த குறைந்த தொகையான அந்நிய செலாவணியை உரிய முறையில் முகாமைத்துவம் செய்ய நிதியமைச்சர் தவறியதே டொலர் பற்றாக்குறைக்கு காரணமாக அமைந்தது. வேலை செய்ய தெரியாத பசிலின் இயலாமையை மறைக்க, எங்கள் மீது குற்றம் சுமத்த வேண்டும் என நாங்கள் அரசாங்கத்திற்கு கூறுகிறோம்” என்றார்.

“ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவோம்.” – ஜோ பைடன் அறிவிப்பால் பரபரப்பு !

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

ரஷ்யப் படைக்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவோம் என அவரது டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உக்ரைனிலிருந்து வெளியேறும் அகதிகள் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் உக்ரைனிலுள்ள மக்களுக்கு பணம், உணவு மற்றும் பிற மனிதாபிமான உதவிகளை அமெரிக்கா வழங்கும் எனவும் பைடன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான யுத்தம் 19 ஆவது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த யுத்தத்தை நிறுத்த வேண்டும் என பல நாடுகளும் வலியுறுத்தும் நிலையில்  இரு நாடுகளின் அதிபர்கள் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான முயற்சிகளை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.

மேலும் ரஷ்யா போர் தொடர்பில் குறிப்பிடுகின்ற போது  மேற்குலக நாடுகளே ஆயுதங்களை வழங்கி போரின் நிலையை இன்னமும் தீவிரமாக்குவதாக குற்றஞ்சாட்டியிருந்ததது.  அத்துடன் ரஷ்யாவிற்கு எதிராக போரிடுவதற்கு ஐரோப்பிய நட்பு நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

“உண்மையை தெரிவித்தால் ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொள்கிறார்கள்.”- அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க

உண்மையை தெரிவித்தமைக்காக தான் ஒழுக்காற்று விசாரணைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி கட்டுப்படுத்த முடியாததாக மாறியுள்ளது. அதனை ஏற்றுக்கொள்வதால் ஒழுக்காற்று விசாரணைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.

பொருளாதார நெருக்கடி கட்டுப்படுத்த முடியாததாக மாறியுள்ளது மக்கள் வீதிகளில் இறங்குவார்கள். இது நெருக்கடி நீடிக்கும் காலத்தை தீவிரப்படுத்தும். இதனை நாங்கள் தெரிவித்தால் எங்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

“பஷில் நீங்களே மிகப்பெரிய தீயசக்தி. தயவு செய்து விலகிவிடுங்கள்.” – முருத்தெட்டுவே ஆனந்த தேரர் சாடல் !

பசில் ராஜபக்ச அரசாங்கத்திலிருந்து ஆறு மாதங்கள் விலகியிருக்கவேண்டும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பசில் ராஜபக்ச நிதியமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் இருந்த விடயங்கள் கூட தற்போது இல்லாமல் போயுள்ளன என மக்கள் தெரிவிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவியவர்களை மக்கள் சபிக்கும் நிலையில் மக்கள் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பசில் நீங்கள் தயவு செய்து ஆறு மாதங்கள் அரசாங்கத்திலிருந்து விலகியிருங்கள்- நீங்களே மிகப்பெரிய தீயசக்தி என மக்கள் தெரிவிக்கின்றனர்

5 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலிக்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவு !

இந்திய வீரர் விராட் கோலி இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் 23 ஓட்டங்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 2-வது இன்னிங்சிலும் விராட் கோலி (13 ஓட்டங்கள், 16 பந்து) அதே போன்று எல்.பி.டபிள்யூ., முறையில் விக்கெட்டை தாரை வார்த்தார்.
குறைந்த ஓட்டங்களில்  வீழ்ந்ததால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சராசரி 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று 50 ஓட்டங்களுக்கு கீழ் சென்றது. இதுவரை 101 டெஸ்டில் ஆடியுள்ள கோலி 27 சதம் உள்பட 8,043 ஓட்டங்கள் (சராசரி ஓட்டம் 49.95 ) எடுத்துள்ளார். ஒருவேளை இந்த இன்னிங்சில் அவர் 20 ஓட்டங்களுக்கு மேல் எடுத்திருந்தால் 50 ஓட்டங்கள் சராசரியை தக்க வைத்திருப்பார்.
மேலும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் கண்டு 28 மாதங்கள் உருண்டோடி விட்டது. இந்த நிலையில் அவர் மீதான விமர்சனங்களும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.

“ரஷ்ய – உக்ரைன் போர் – 43 குழந்தைகள் உள்ளடங்கலாக 596 பொதுமக்கள் பலி.” – ஐ.நா கவலை !

உக்ரைன் – ரஷ்யா இடையிலான 4ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ள நிலையில், இதுவரை 43 குழந்தைகள் உட்பட 596 உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிட வேண்டும் என்று ஐ.நா. சபை, உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண பல நாடுகளும் வலியுறுத்தி வருகிறது. அதையடுத்து உக்ரைன் – ரஷ்யா இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டின் எல்லை நகரமான கோமலில் கடந்த மாதம் 28ம் திகதி நடைபெற்றது.

சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற அந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில், எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து 2 முறை பேச்சுவார்த்தையும் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வமான முடிவுகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், உக்ரைன் – ரஷ்யா இடையேயான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை இன்று காணொலி மூலமாக நடைபெறுகிறது. உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 18வது நாளாக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், இன்றைய பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதற்கிடையே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 596 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். குறைந்தது 1,067 பேர் காயமடைந்துள்ளனர். அதில், 43 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 57 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது.

டெல்டா, ஒமிக்ரோன் கலவையாக உருவெடுத்துள்ள புதிய கொரோனா திரிபு !

“டெல்டக்ரோன்” என்ற புதிய கொரோனா திரிபு உருவாகியிருப்பதை உலக சுகாதார அமைப்பு உறுதிசெய்துள்ளது.

அது டெல்டா, ஒமிக்ரோன் வைரஸ் திரிபு வகைகளின் கலவையாக உருவெடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் வகை குறித்த ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் மரியா வான் கெர்கோவ் இதனை உறுதிசெய்தார்.

அந்த வகை திரிபினால் பாதிக்கப்பட்டவர்கள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், வைரஸ் வகை குறித்து கவலைப்படுவதா என்பதை இப்போது உறுதி செய்யமுடியாது என்று அமைப்பு கூறியது. தற்போது சில பாதிப்புகள் பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

அதனுடன் தொடர்புடைய சுமார் 30 சம்பவங்களை அடையாளம் கண்டுள்ளதாக பிரிட்டன் சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம் கூறியது.