March

March

மீண்டும் எகிறியது 50 கிலோ சீமெந்து மூட்டையின் விலை !

50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் விலையை 350 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் புதிய விலை 1,850 ரூபாயாக அதிகரித்துள்ளது.

சீமெந்து மூட்டையின் விலை தற்போது 1,500 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

“நாம் ரஷ்யாவுக்கு எதிராக களமிறங்கினால் மூன்றாம் உலகப்போர் நடக்கும்.” – ஜோ பைடன் எச்சரிக்கை !

உக்ரைன் போரில், ரஷ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் போரிடுமாயின், அது மூன்றாம் உலகப் போரைக் குறிக்கும் எனவும்  ஆகவே உக்ரைனில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் தமது நாடு நேரடியாக தலையிடாது என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

உக்ரைனில் அமெரிக்காவின் உயிரியல் ஆயுதங்கள் கையாளப்படுவதாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ரஷ்யா குற்றம் சாட்டிய நிலையில், ஜோ பைடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நேட்டோ பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஒன்றுபட்ட நேட்டோவின் முழு பலத்துடன் பாதுகாப்போம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆகவே உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்கு எதிராக போரிட மாட்டோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார். நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நேரடி மோதல், மூன்றாம் உலகப் போரைக் குறிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

அதானி குழுமத்தினரின் வசமானது மன்னார் மற்றும் பூநகரி !

இரு பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களுக்காக வடக்கில் மன்னார் மற்றும் பூநகரியை அரசாங்கம் இந்தியாவின் அதானி குழுமத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

சுமார் 500 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ள குறித்த இரு திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டதாக அறிய முடிகின்றது.

இந்தியாவின் தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்துடன் திருகோணமலை, சம்பூரில் சூரிய மின்சக்தி பூங்காவை அமைப்பதற்கான புரிந்துரணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை நிதி அமைச்சில் அதானியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மேலும் 500 மெகாவாட் மொத்த உற்பத்தி திறன் கொண்ட குறித்த இரு திட்டங்களையும் ஓராண்டுக்குள் முடிக்க அதானி குழுமம் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மூன்று முக்கிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திட்டங்கள் இப்போது இந்திய முதலீடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

13ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் வவுனியாவில் பேரணி !

13ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் இன்று வவுனியாவில்   பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பேரணியானது வவுனியா பண்டாரவன்னியன் சிலைக்கு முன்பாக மாவீரர் ஒருவரின் சகோதரன் ஈகைச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து பிற்பகல் 2. 30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.

ஏ9 வீதி வழியாக சென்று தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டு கழக மைதானத்தில் பேரணி நிறைவுற்றது. கிட்டு பூங்கா பிரகடனம் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் எஸ். தவபாலன் வாசிக்கப்பட்டதுடன் சிறப்புரைகள் இடம்பெற்றிருந்தது.

13ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடந்த தினங்களில் வவுனியாவில் வாகனப்பேரணியினையும் மக்கள் சந்திப்புக்களையும் முன்னெடுத்திருந்த நிலையிலேயே இன்று பேரணி இடம்பெற்றது.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அனைத்து தமிழ் மக்களும் பூரணமான ஆதரவை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தி வருகின்றது.

குறித்த பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் மற்றும் கட்சியினது சட்ட ஆலோசகர் காண்டீபன், ஊடக பேச்சாளர் சுகாஸ் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

முதல் காதல் தற்கொலையில்! எஞ்சிய வாழ்க்கை குற்ற உணர்வில்!! வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும்!!! – பாகம் 32

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 32 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 05 மார்ச் 2022). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 32:

தேசம்: வணக்கம். நீண்ட உரையாடலில் இன்னுமொரு படி வந்து நிற்கிறோம். எண்பதுகளில் உங்களுடைய அரசியல் பயணத்தை நீங்கள் ஆரம்பித்திருந்தீர்கள். அந்த அரசியல் பயணம் ஒரு நீண்ட பயணம். அதற்கு பிறகு நாங்கள் 91 ஆம் ஆண்டு வரை இலங்கை இந்தியாவில் உங்களுடைய அரசியல் பங்களிப்பை பற்றி நாங்கள் கதைத்திருந்தோம். அதற்கு பிறகு நீங்கள் 92ஆம் ஆண்டு பாரிசுக்கு இடம்பெயர்ந்து பாரிசில் நடந்த அரசியல் இலக்கிய சூழல் பற்றி கதைத்துக் கொண்டு இருக்கிறோம். அதற்கு முதல் உங்களுடைய உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியும் கதைத்திருந்தோம்.

நீண்ட பயணம். கடினமான பயணம். அதில் நீங்கள் இழந்தது, உங்களுடைய வலிகளைத் தொடர்ந்து நீங்கள் ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொண்டது வரைக்கும் கதைத்திருக்கிறோம். இதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. பலத்த வலிகளுக்கு மத்தியிலும் சில விஷயங்களை உங்களால் சொல்லக் கூடியதாக இருந்தது. சில விடயங்கள் சொல்வதற்கு கஷ்டமான விடயங்களும் நடந்திருக்கு. தனிப்பட்ட முறையில் அது உங்களுக்கு நிறைய பாதிப்புகளையும் கொடுத்திருக்கு. அந்த வகையில் நாங்கள் மீளவும் உங்களோட அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப காலத்துக்கு ஒருக்காப் போயிட்டு வரலாம் என்று யோசித்தேன். அதுல பல விடயங்களை நீங்கள் கதைத்திருந்தீர்கள்.

அதில் உங்களுடைய அரசியல் ஆரம்பத்துக்கு முதல், அரசியலில் நீங்கள் முழுமையாக ஈடுபடுவதற்கு முதல், உங்களுடைய இளமை பிராயத்தில் இடம்பெற்ற சம்பவங்களைப் பற்றி கதைத்தோம். அதில் உங்களுக்கு ஏற்பட்ட உறவு சம்பந்தமாகவும் கதைத்திருந்தோம். நான் குறிப்பாக கதைப்பது களுதாவளை கிராமத்தில் இளமைக்காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட ஒரு தோழியினுடைய உறவு பற்றி – லீலா என்பவருடைய உறவு பற்றி. உங்களுக்கு கதைப்பதற்கு சிலநேரம் கஷ்டமாக இருக்கலாம். அவருடைய முடிவு கஷ்டமாக இருக்கலாம். இருந்தாலும் நான் நினைக்கிறேன் இந்த இடத்தில் கதைத்துச் செல்வது நல்லம் என்று. அதைப் பற்றி உங்களுக்கு சொல்ல முடிந்தால் நல்லம்…

அசோக்: இந்த சம்பவத்தை எப்படி தொடங்குவது, கதைப்பது என்று எனக்கு தெரியல்ல. இந்த சம்பவம் நடந்து 40 வருடங்களாகி விட்டது.

80 ம் ஆண்டு நடந்தது… நாம் நினைப்பது, காலம் வலிகளையும் குற்ற உணர்வையும் போக்கி விடும் என்று. அப்படி நடக்கிறது இல்லை. அடிமனதில் படிஞ்சி போய் இருக்கும். நினைவுக்கு வரும் போதெல்லாம் அதன் வேதனை கடுமையானது. ஆனா மனம் விட்டு இப்படி உரையாடுவது குற்றஉணர்வை, வலியை குறைக்க உதவும் என நினைக்கிறன்.

அந்தக் காலகட்டம் எண்பதுகளில் தெரியும்தானே ஒரு இலக்கிய வட்டம் நண்பர்கள் உலகம். இளந்தளிர் வாசகர் வட்டத்தை உருவாக்கிக் செயற்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. எங்களுடைய முழுமையான ஈடுபாடு இலக்கிய வாசிப்பு தான். வாசிகசாலை, வாசிப்பு, படிப்பு. அரசியல் ஆரம்பம் அப்பதான். நாங்கள் இயக்கத்துக்கு போகவில்லை அப்போ. முழுக்க முழுக்க இலக்கிய உலகம் தான்.

அந்த நேரம் எனக்கு நல்ல சிநேகையாக, தோழியாக, என் அன்புக்குரியவங்களாக இருந்தவங்க லீலா. இளமையிருந்தே நாங்க பழக்கம். வாழ்க்கையின் முதல் காதல்.

தேசம்: உங்களுடைய கிராமத்தைச் சேர்ந்தவர் அவர் உங்களுடைய பேனா நண்பி அல்ல…

அசோக்: பேனா நண்பி இல்லை, ஒரே கிராமத்தைச் சேர்ந்தவங்க நாங்க. எங்களுடைய இளந்தளிர் வாசகர் வட்ட நண்பர்கள். எல்லாரும் ஒரே நண்பர்கள் நாங்கள். அதுல லீலாவும் ஒருவர். இந்த நண்பர்களும் தோழர்களும்தான் காலப் போக்கில் என்னோடு புளொட்டிக்கு வந்தவங்க. இது பற்றி முன்னமே கதைத்திருக்கிறன்.

லீலா மிக மென்மையானவர். என்னுடைய நண்பர்கள் எல்லோருக்கும் நெருக்கமாவங்க. ஒரே கிராமம் என்றால் தெரியுங்தானே, ஒவ்வொரு நாளும் சந்திப்பம். கதைப்பம். எங்கட காதல் எங்க நண்பர்கள் வட்டத்தில இயல்பான விசியம். லீலாவுக்கு அப்பா இல்லை. அம்மா வேறு திருமணம் செய்து இன்னொரு ஊரில இருந்தாங்க. லீலா அம்மம்மாவோட இருந்தாங்க. மாமா இரண்டு பேர், மாமி என மிக அன்பான குடும்பம். அருமையான ஆட்கள். எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. லீலாவை மிக அன்பாக பாத்தாங்க.

திடீரென ஒருநாள் விவசாயத்திற்கு பயன்படுத்துற கிருமி நாசினியை லீலா குடிச்சிட்டாங்க. உடனேயே வீட்டிலிருந்து ஹாஸ்பிடலுக்கு கொண்டு போயிட்டாங்க. என்ட நண்பனும் அவரின்ற அம்மாவும்தான் தான் கொண்டு போனவங்க. என்ட நண்பன் என்றது லீலாவுக்கு சகோதர முறையானவர். யோகன் சீவரெத்தினம் என்றுசொல்லி. என்னோடு பிறகு இயக்கத்திக்கு வந்தவர். அவங்க கொண்டு போகும் போது சொல்லியிருக்கிறார் என்னை காப்பாத்துங்க, காப்பாத்துங்க என்று. பெரிசாக தாக்கம் கொடுக்கல்ல. பேசும் நிலையிலதான் இருந்திருக்காங்க. ஹாஸ்பிடல் கொண்டு போகும் வரைக்கும் அவர் பேசிக் கொண்டுதான் இருந்திருக்கிறார். அப்போ ஹாஸ்பிடல் போய் சிகிச்சை கொடுத்த பிறகு நோர்மலா இருந்திருக்காங்க. ஆபத்தைத் தாண்டிவிட்டார் என்று டாக்டர் சொல்லி இருக்கிறார். “நான் செத்து இருந்தா எப்படியெல்லாம் கதைச்சிருப்பாங்க” என்றெல்லாம் லீலா சொல்லி இருக்காங்க. அந்தளவிற்கு சுகமாக இருந்திருக்கிறார். அந்த மருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு தான் வேலை செய்யுமாம். அதற்குப்பிறகு தீடிரென மயக்கம் ஏற்பட்டு இறந்திட்டாங்க.

தேசம்: சிலவேளை அந்த நேரம் மருத்துவ வசதிகளும் அவ்வளவு வளர்ந்திருக்கவில்லை. இன்றைய சூழலில் என்றால் சிலவேளை காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

அசோக்: இதற்கு ஒரு வருஷத்துக்கு முதல் ஸ்லீப்பிங் டேப்லெட் சாப்பிட்டு பிரச்சனையாகி விட்டது. யாருக்கும் சொல்லவில்லை. நித்திரை மயக்கமாக வரும் போதுதான் சொல்லி இருக்கிறா. இப்படி நித்திரை குளிசை பாவித்தேன் என்று. பிறகு என்னுடைய நண்பர்கள் எல்லாம் சேர்ந்து முதல் உதவி செய்து காப்பாற்றீனாங்க. அதற்கும் காரணம் கேட்டும் அவங்க. சொல்லவில்லை. அவருக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருந்ததாக தெரியல்ல. அடுத்தது கதைத்தால்தானே தெரியவரும். குடும்பத்தால் எந்தவொரு நெருக்கடியும் இல்லை. அருமையான குடும்பம்.

தேசம்: ஏன் அந்த முடிவுக்கு அவா போறா…

அசோக்: நண்பர்கள் அபிப்பிராயம் என்ன என்றால் நான் ஒரு காரணமாக இருக்கலாம். முதலும் நித்திரை குளிசை போட்டதற்கான காரணம் சொல்லவில்லை. என்னைவிட என்னுடைய நண்பர்கள் மிக நெருக்கம் அவங்களிட்டையும் காரணம் சொல்ல வில்லை. நானும் நினைக்கிறன் நான் தான் காரணமாக இருக்கலாம் என்று. அவங்களின்ற வீட்டைப் பொறுத்தவரை அம்மம்மா, மாமி, மாமா ஆட்கள் மிக அன்பானவங்க. வீட்டில்பிரச்சனை இருக்க சந்தர்ப்பம் இல்லை.

தேசம்: 80 கால கட்டங்களில் பொதுவாக தற்கொலையின் உச்சியில் இருந்த நாடுகளில் இலங்கையும் ஒன்று. அதுலயும் குறிப்பாக விவசாயத்திற்கு பாவிக்கிற கிருமி நாசினியை குடித்துத்தான் நிறைய பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். அதற்கு பிறகு தான் நான் நினைக்கிறேன் உலகம் முழுதுமே சட்டமூலம் ஒன்று வந்தது கிருமிநாசினி யின் பாதுகாப்பு பற்றி. இதனைப் பாவிப்பதை, கட்டுப்படுத்த வேண்டுமென்ற விஷயங்களெல்லாம் அதற்குப்பிறகுதான் கூடுதலாக பேசப்பட்டு இன்று அது நிறைய குறைந்திருக்கின்றது. ஆனால் இன்றும் இலங்கையில் நிறைய தற்கொலைகள் இடம்பெறுகிறது.

தமிழர் மத்தியில் இந்த தற்கொலை வீதம் ஒப்பீட்டளவில் கூடுதலாக தான் இருக்குது. பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அது ஏன் அவர்கள் எடுத்த உடன்… சில ஆய்வுகள் தெரிவிக்கிறது தற்கொலை பரம்பரையலகுடன் சம்பந்தப்பட்டதாகவும் சொல்லப்படுது. தற்கொலைக்கான எண்ணம் வரும்போது தற்கொலைக்கான துணை காரணிகளும் சேர்ந்து கொள்ளுது. அதுல தான் இந்த அரலி விதை அரைக்கிறதோ அல்லது இதுகள் வந்து இலகுவாக கிடைக்கக்கூடியதாக இருக்குது. அது உடனே வர தூண்டுதல் தானே

லீலாவினுடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள் உங்களுடைய நண்பர்கள் என்று நினைக்கிறேன் அப்படியா…

அசோக்: சகோதரர்கள் எல்லோரும் நல்ல நண்பர்கள் எல்லாம் ஒரே ஊர் ஆக்கள் தானே. இன்றைக்கும் என் நண்பர்கள் அவர்கள்.

தேசம்: எல்லோரும் ஏதோ ஒரு வகையில் உறவுக்காரர் உங்களுக்கு…

அசோக்: ஓம். சின்னம்மா, பெரியம்மா பிள்ளைகள். எல்லாம் என்னுடைய தோழர்கள். இயக்கத்துக்கு என்னுடன் வந்தவர்கள். ஹாஸ்பிடலுக்கு கொண்டு போனது யோகன் தான். யோகன் என்றால் சீவரத்தினம் என்று சொல்லி உங்களுக்கு தெரியும்.

தேசம்: அவருடைய பெயர் தான் உங்களுக்கு வைத்திருக்கிறீர்களா – புனைப்பெயராக?

அசோக்: இல்லை இல்லை என்னுடைய பெயரும் யோகன், அவருடைய பெயரும் யோகன். என்னைவிட வயது குறைவு அவர்.

தேசம்: அவரோட இப்பவும் உங்களுக்கு நல்ல உறவு இருக்குதா…

அசோக்: ஓம் என்னுடைய பிரண்ட் நல்ல தோழர். பிறகு இயக்கத்துக்கு எங்களோடு வந்த தோழர். மச்சான் முறையானவர். சொந்தங்கள் தானே.

தேசம்: அவருடைய இந்த மரணத்துக்கு இந்த நிலைப்பாட்டுக்கு என்ன காரணம்? நீங்கள் வேறு ஒரு உறவுக்குள்ள போயிட்டீங்க என்று நினைக்கிறாவா? அல்லது …

அசோக்: அந்த நேரம் நிறைய பென் பிரண்ட்ஸ் இருந்தது தானே. அந்தக் காலம் பேனா நட்பு உலகம் தானே. 80 ஏப்ரல் தான் இந்த மரணம் நடக்குது. நண்பர்களுடைய அபிப்ராயம் என்ன என்று கேட்டால் என் பேனா நட்புக்கள் தொடர்பான சந்தேகம் இருக்கலாம் என்று. ஏனென்றால் வேற நெருக்கடி அவங்களுக்கு இல்லை. தற்கொலை செய்வதற்கான புறச்சூழல் அவங்களுக்கு வேறு இல்லை. பேசியிருந்தால் இருந்தால் சந்தேகத்தை போக்கி செய்து இருக்கலாம். என்னோட பேசாவிட்டாலும் பரவாயில்லை, நண்பர்களோடு பேசி இருக்கலாம். செய்யவில்லை. அவரோடு மிக நெருக்கமான நண்பர்கள் இருக்கிறார்கள். கடைசியில அவங்களோடயும் கதைக்கவில்லை.

தேசம்: இன்றைக்கும் பார்த்தீர்களென்றால் குடும்பங்களில் நடக்கின்ற நிறைய பிரச்சனைகளுக்கு தற்கொலைகளுக்கு அதீத அன்பு என்று சொல்வதா அல்லது பொசசிவ்னஸ் அது அவர்களை ஏதோ ஒருவகையில் ஒரு பாதுகாப்பு இன்மை நிலவுவதாக ஒரு எண்ணத்தை கொடுக்கும். அது கன பேரை இப்படியான சம்பவங்களுக்கு தூண்டி இருக்கு. அது பல்வேறு காரணங்களும் இருக்கு. சிலபேருக்கு இயல்பாகவே தற்கொலைக்கான காரணிகள் அவர்களுடைய பரம்பரை அலகில் இருக்கும். இவ்வாறு தற்கொலைக்கான காரணங்கள் பல. அதுல எது இந்த முடிவுக்கு இட்டுச் செல்கிறது…

அசோக்: என் மேல சந்தேகம் வந்திருக்கலாம். பேனா நட்புகள் அது இதுவென்று. மனதுக்குள்ளே அதைப் பற்றிய சந்தேகங்கள் இருந்திருக்கலாம். உண்மையிலேயே எனக்கு வேதனையான வலியான விசியம் என்னவென்றால் பிரச்சனையை என்னிடம் கதைத்திருக்கலாம். அல்லது என் நண்பர்களிடம் கதைச்சிருக்கலாம். நினைக்கும்போதெல்லாம் பெரிய வலியாக இருக்கும். பெரியகுற்ற உணர்வாக இருக்கும்.

தேசம்: உண்மையிலேயே கன விடயங்களில் இந்த விடை தெரியாத கேள்விகள் என்று பட்டியலுக்குள் தான் இது எல்லாத்தையும் நாங்கள் போட வேண்டும். ஏனென்றால் உள்ளுணர்வு ரீதியாக என்னத்தை அவர் யோசித்தார் என்று எங்களுக்கும் தெரியாது.

அசோக்: நிறைய பேனா நண்பர்கள் இருந்தபடியால் அந்த சந்தேகங்கள் வந்து இருக்கலாம். என் நண்பர்கள் அபிப்பிராயம். செல்வியின் நட்பு காரணமாக இருக்கலாம் என்று. ஆனா அந்த நேரத்தில செல்வி எனக்கு பென் பிரண்ட்தான். லீலா இறந்ததற்கு பின்னர்தான் 83ல்தான் செல்வியோடு எனக்கு உறவு வருகிறது. அவங்க என்னுடன், என்ட நண்பர்களுடன் பிரச்சனையை கதைத்திருக்கலாம்.

பெரிய மன வருத்தம் என்ன என்று கேட்டால் மிக நெருக்கமான நண்பர்களிடம் கூட இதைப்பற்றி கதைக்கவில்லை. என்னுடன் இப்பவும் கதைப்பார்கள் நண்பர்கள். மிக நெருக்கமான நண்பர்கள் அவர்கள். என்னை விட மிக நெருக்கமாக லீலாவோடு இருந்த நண்பர்கள் அவங்க. அவங்க தற்கொலை பண்ணிக் கொள்வதற்கு முதல் நாள் நானும் ரவியும் சந்திக்கிறோம் லைப்ரரியில் அவங்களை.

தேசம்: அதுல நீங்கள் ஒரு மாற்றத்தையும் கவனிக்கல…

அசோக்: இல்லை இல்லை. வழமைபோலத்தான் இருந்தாங்க.

தேசம்: அதற்குப் பிறகு அவருடைய இறுதி நிகழ்வுகள் சம்பந்தமாக எப்படி அது உங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது…

அசோக்: அரசரெத்தினம் என்று சொல்லி. நாங்க அரசன் என்கிறது. யோகன் சீவரெத்தினத்தின் அண்ணா. எனக்கு மச்சான் முறையானவர். என்னோடு மிக அன்பானவர். என் கிராமத்தைப் பற்றி சொல்லும் போது இவரைப்பற்றி சொல்லி இருக்கிறன். TULF க்கு எங்க ஊரில் முக்கியமான ஆளாக இருந்தவர். தமிழ் இளைஞர் பேரவையிலும் இருந்தவர். 82இல் சிறைக்கு போயிட்டு வரும்போது கடுமையான பொலீஸ் நெருக்கடியில் கூட என்னை தோளில் வைத்துக்கொண்டு எங்கட கிராமத்தின் வீதியெல்லாம் ஊர்வலமாக கொண்டு சென்றவர். லீலாவின் அண்ணா முறையானவர். இறுதி நிகழ்வுக்கு வரும்படி கூப்பிட்டார். நண்பர்களும் கூப்பிட்டாங்க. அப்ப எனக்கு எல்லாமே இருண்டு போய் இருந்தது. எதையும் யோசிக்க முடியல்ல. கடும் வேதனையாக இருந்தது. போக விரும்பல்ல.

பிறகு கொஞ்ச காலத்துக்குப் பிறகு லீலாவின் மூத்த மாமா கேட்டாங்க. இளைய மாமாவுக்கு என் மீது கோபம் இருந்தது. அவர் என்னோடு கதைப்பதை விட்டு விட்டார். இப்ப யோசிக்கும்போது நான் போய் இருக்க வேண்டும். அந்த குற்ற உணர்வு இருக்கிறது.

அன்றைய நண்பர்கள் பலர் நாங்க இன்றைக்கும் நண்பர்களாக தோழர்களாக இருக்கிறம். பழைய நினைவுகளை கதைக்கும்போதெல்லாம் லீலாவின் நினைவுகளும் வரும். அப்ப கடும் வேதனையாக வலியாக இருக்கும். உறவுகளுக்கும், நேசிப்புக்களுக்கும் நேர்மை அவசியம். அதில் நான் தவறிழைத்துவிட்டன் என்றுதான் நினைக்கிறன்.

தேசம்: எண்பது காலகட்டங்களில் அது முக்கியமானது. விவசாய கிருமி நாசினிகளை குடிக்கிறது. அரளி விதை சாப்பிடுவது சாதாரண நிகழ்வாக தான் இருந்தது. இப்ப அந்த வகையில் ஏற்படும் மரணங்கள் குறைக்கப்பட்டு இருக்கு. ஆனாலும் தற்கொலை என்பது தமிழ்ச் சூழலில் முக்கியமான ஒரு பிரச்சனையாக தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். புலம்பெயர் சூழலில் எல்லாம் நிறைய தற்கொலை நடந்தது. அது சில சமயங்களில் தமிழர்கள் மத்தியில் இந்த பரம்பரையியல் தாக்கம் நிறைய இருக்குதா என்றும் நாங்கள் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். உளவியல் சார்ந்த விழிப்புணர்வும் எங்கட சமூகத்தில் இல்லைதானே. அதுகள் சார்ந்தும் நாங்கள் கூட கவனம் எடுக்க வேண்டும். மிகக் கஷ்டமான ஒரு விடயத்தை எங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

இப்ப உங்களிடம் நான் நினைக்கிறேன் ஒரு குற்ற உணர்வு இருக்கிறது என்று.

அசோக்: அது நீண்ட காலமாக இருக்கிறது. அதனால் தான் பேர்சனல் வாழ்க்கையை கதைக்கும் போது இதையெல்லாம் கதைக்க வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு ஒரு ஃப்ரீ வேண்டும். நான் ஆரம்பத்திலேயே களுதாவளை பற்றி கதைக்கும் போது இதை கதைக்கவில்லை. ஏனென்றால் பர்சனல் வாழ்க்கை வரும்போது இதைப்பற்றி கதைக்கலாம் என்று இருந்தேன். ஏனென்றால் ஒரு அரசியல் சமூக வாழ்க்கையில் ஈடுபடும் எனக்கு ஒரு ஒளிவுமறைவு இருக்கக் கூடாது.

தேசம்: இந்தக் கடந்த கால வாழ்க்கை சம்பவங்கள் பற்றி ஜெயந்தி எப்படி உணர்ந்துகொண்டா? அவ அப்படி உங்களுக்கு ஆறுதலாகவும் துணையாகவும் இருந்தார் என்பதை சொன்னீர்கள் என்றால் இதை பார்க்கிறவர்களுக்கும் சிலவேளை உதவியாக இருக்கும்.

அசோக்: கடந்த கால வாழ்க்கை தொடர்பாக நான் ஜெயந்தியிடம் மாத்திரம் அல்ல, செல்வியோடையும் நிறைய கதைத்திருக்கிறேன். ஏனென்றால் குடும்ப வாழ்க்கைக்கு முக்கியமான அடிப்படை மனம் திறந்த உரையாடல். அது எங்களில் குற்றம் இருந்தாலும் அதை ஒத்துக்கொள்ள வேண்டும். நியாயப்படுத்தல் செய்ய இயலாது நாங்கள். லீலாவின் மரணம் தொடர்பாக நான் நியாயப்படுத்த இயலாது. எனக்கு அதில் எந்த விதமான காரணமும் இல்லையென்று. நாங்கள் இன்னுமொரு பக்கத்தில் போய் குற்றத்தை போடக்கூடாது. அந்த இறப்புக்கு காரணம் வெளிப்படையாக தெரியாவிட்டாலும் நான் யோசிக்கிறன் நான்தான் காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று. நான் என் பேனா நட்புக்கள பற்றி லீலா கேட்காவிட்டாலும் நான் அந்த உறவுகள் பற்றி அவங்களோடு கதைத்திருக்க வேண்டும்.

ஜெயந்தியிடம் என் கடந்த கால வாழ்க்கைப் பயணம் பற்றி வெளிப்படையாக மனம் விட்டு கதைத்திருகிறன். குடும்ப வாழ்க்கைக்கும் சுய விமர்சனம் அவசியம். அப்பதான் எங்கட தவறுகளை திருத்திக் கொள்ளமுடியும். பரஸ்பரம் நம்பிக்கைகளை ஏற்படுத்திக்கொள்ளமுடியும்.

தேசம்: ஒன்று அதை நீங்கள் வெளிப்படையாக சொல்லியும் இருக்கிறீர்கள். அதே நேரம் அவர்களும் அதை உணர்ந்து கொண்டு ஒரு சுமுகமான உறவை வாழ்க்கைப் பயணத்தை நீங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள். அந்த வகையில் மிகவும் மகிழ்ச்சி. அதே சமயத்தில் நீங்கள் எந்த குற்ற உணர்வில் வாழ வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. அவங்களுடைய எண்ணம் துரதிஷ்டவசமாக அப்படி அமைந்துவிட்டது. அதற்காக நீங்கள் குற்றவாளியாகவோ அல்லது குற்ற உணர்வுடனோ வாழ வேண்டிய அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன். இவ்வளவு விடயத்தையும் மனம் திறந்த கதைத்ததற்கு உங்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்த பாகத்தில் புலம்பெயர் சூழலில் இருந்த அரசியல் இலக்கிய சூழல் அதுக்கு ஊடாக உங்கள் பயணத்தை பற்றி பார்ப்போம்.

லிற்றில் நூலகத் திறப்பும் நூலகர்களுக்கான பாராட்டும்!!!

யாழ் பொதுசனநூலகத்தின் ஓய்வு பெற்ற பிரதம நூலகர் ச தனபாலசிங்கம் அவர்களினதும் சுன்னாகம் பொதுநூலகப் பிரதம நூலகர் ஜெயலட்சுமி சுதர்சன் அவர்களினதும் நூலக சேவையை கௌரவிக்கும் நிகழ்வு லிற்றில் நூலகத் திறப்பு நிகழ்வு இற்று சிறப்பாக இடம்பெற்றது. இன்று மார்ச் 13ம் திகதி கிளிநொச்சி திருநகரில் உள்ள லிற்றில் எய்ட் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், சிந்தனையாளர்கள் என 200 வரையானவர்கள் கலந்துகொண்டனர்.

லிற்றில் நூலகம் திருநகரைச் சுற்றியுள்ள பத்துவரையான கிராம மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை தூண்டும் நோக்கோடு ஆரம்பிக்கப்படுவதாக லிற்றில் எய்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் த ஜெயபாலன் தெரிவிக்கின்றார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களோடு பொதுநூலகமாக ஆரம்பிக்கப்படுகின்ற இந்நூலகம் காலக் கிராமத்தில் வர்த்தகம், கணணி மற்றும் தையல் கலைக்கான நூலகமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நீண்டகாலத் திட்டம் எனவும் த ஜெயபாலன் தெரிவித்தார்.

தமிழ் பிரதேசங்களின் கல்வி வீழ்ச்சிக்கு பிரதான காரணங்களில் ஒன்றாக இருப்பது வாசிப்பை எம்மவர்கள் கைவிட்டது எனத் தெரிவித்த லிற்றில் எய்ட் இன் இயக்குநர் – இணைப்பாளர் ஹம்சகௌரி சிவஜோதி வாசிப்பு பழக்கத்தை தூண்டுவதன் மூலம் மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலைத் தூண்ட முடியும் என்றும் அதனால் சிறார்களின் வாசிப்புப் பழக்கத்தில் தாங்கள் கூடுதல் கவனம் எடுக்க உள்ளதாகவும் அதற்காகா மாதாந்த வாசிப்பு வட்டம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். லிற்றில் நூலகத்திற்கான பயிற்சி நூலகராக கே இவாஞ்சலி பொறுப்பேற்றுள்ளார்.

லிற்றில் நூலகத்திற்கான திட்டம் நீண்டகாலமாக இருந்த போதும் அதற்கு செயல்வடிவம் கொடுத்தது அமரர் இராசமணி பாக்கியநாதனின் பிள்ளைகளே. உலகின் வெவ்வேறு பாகங்களில் அவர்கள் வாழ்ந்த போதும் தாயக மக்களின் எதிர்கால வாழ்வில் அக்கறைகொண்டு இந்நூலகத் திட்டத்திற்காக எட்டு இலட்சம் ரூபாய்கள் வரை வழங்கி உள்ளனர். நூலக அறையை வடிவமைப்பதுஇ அதற்கான தளபாடங்களை பெற்றுக்கொள்வதுஇ நூல்களைப் பெற்றுக்கொள்வது என்பனவற்றோடு பத்திரிகை வாசிப்புக்கான குடில் ஒன்றும் உருவாக்கப்பட்டு உள்ளது. பத்திரிகை வாசிக்க வருபவர்கள் நூலகத்திச் செயற்பாடுகளை பாதிக்காமல் இருப்பதற்காகவும் இடவசதிக்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லிற்றில் நூலகத்தை அமரர் இராசமணி பாக்கியநாதனின் முத்த புதல்வர் ஸ்ரீகுமார் பாக்கியநாதன் திறந்து வைத்தார். தற்போது மலேசியாவில் வாழ்கின்ற தொழிலதிபரான இவரோடு இவரது சகோதர சகோதரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொள்கின்றனர். லண்டனில் இருந்து லிற்றில் எய்ட் இன் தலைவர் கதிரமலை நந்தகுமார் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தனராகக் கலந்துகொண்டார். லிற்றில் எய்ட் தலைவர் க நந்தகுமார் லிற்றில் எய்ட் இன் செயற்திட்டங்களை பார்வையிடுவதுடன் லிற்றில் எய்ட்இன் மேற்பார்வையில் இயங்கும் முல்லைத்தீவில் உள்ள கற்சிலைமடுவின் குழந்தைகள் அமைப்பின் செயற்திட்டங்களையும் பார்வையிடுவார்.

இந்நூலகத் திறப்பு விழா நிகழ்வு ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் சி இதயராசா தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் அ கேதீஸ்வரன் கலந்துகொண்டார். எழுத்தாளர் கருணாகரன் “ஏன் புத்தகங்கள்? எதற்காக வாசிப்பு?” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். இந்நிகழ்வில் லிற்றில் எய்ட் மாணவர்களின் தயாரிப்பில் ஒரு குறும் நாடகமும் அரங்கேற்றப்பட்டது.
2009 மார்ச் 19இல் லண்டனில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட லிற்றில் எய்ட் அமைப்பு அதற்கு முன்பிருந்தே தனது உதவிப் பணிகளை கடந்த 13 ஆண்டுகளுக்கு மோலாக மேற்கொண்டு வருகின்றது.

லிற்றில் எய்ட் இன் இந்த லிற்றில் நூலகத் திட்டத்தை மிகவும் வரவேற்ற நூலகவியலாளர் என் செல்வராஜா இந்நூலகம் கிளிநொச்சி – வன்னி மண்ணின் ஒரு சிறப்பு நூலகமாக வளரவேண்டும் என்று வாழ்த்தினார். அவர் வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல் நூலகப் பயிற்சிகளையும் ஆலோசணைகளையும் தொடர்ச்சியாக வழங்கிவருவதோடு நூல்களைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளுக்கும் உதவி வருகின்றார்.

ஸ்கொட்லாதில் உள்ள ‘புக் அப்ரோட்’ அமைப்போடு இணைந்து பல லட்ச்சக்கணக்கான குறிப்பாக சிறார்களுக்கான ஆங்கில நூல்களை குறிப்பாக தமிழ் பிரதேசங்களுக்கு கொண்டுவர முயற்சி எடுத்தவர் நூலகவியலாளர் என் செல்வராஜா. அப்பணியில் அவரோடு லிற்றில் எய்ட் இணைந்து பயணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது சுகவீனமாக உள்ள அவர் பூரண சுகமடைந்து தனது நூலக சேவையைத் தொடர இயற்கை அன்னையை வேண்டுகின்றோம் என லிற்றில் எய்ட் சார்பில் அதன் இணைப்பாளர் ஹம்சகௌரி சிவஜோதி தெரிவித்தார்.

“ஐ.நா மனித உரிமை பேரவையின் விசாரணைகளை ஒத்தி வைப்பதற்கு சுமந்திரனே காரணம்.” – தமிழகத்தில் போராட்டம் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை – தி.நகர் – தாமோதரன் தெருவிலுள்ள இந்து மக்கள் கட்சி காரியாலயத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு போராட்டம் இன்று மதியம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ராஜபக்ச குடும்பத்தோடு இணைந்து, ஈழ மக்களுக்கு எதிராக சுமந்திரன் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தியே இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஈழத்துக்காக தமிழகத்தில் 18 பேர் தமது உயிர்களை தியாகம் செய்துள்ளதாக கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அவ்வாறான தேசத்திற்கு சுமந்திரன் போன்றவர்கள் வருகைதர அனுமதிக்கக்கூடாது என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

சென்னைக்கு சென்றிருந்த சுமந்திரனை, உடனடியாக திருப்பி அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை பேரவையின் விசாரணைகளை ஒத்தி வைப்பதற்கு சுமந்திரனே காரணம் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எம்.ஏ..சுமந்திரனை, தமிழகத்திலிருந்து விரட்டியடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை – முஸ்லீம்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான தகவல் !

பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

எதிர்வரும் மாதம் முஸ்லிம்களின் ரமழான் நோன்பு ஆரம்பிக்கப்படுவதால் பேரீச்சம்பழம் மீதான இறக்குமதி தடையால் அவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்பு குறித்து முஸ்லிம் எம்.பிக்கள் நேற்றையதினம் பிரதமர் மகிந்தவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பேரீச்சம்பழம் மீதான தடையை நீக்குமாறு உடனடியாக பணிப்புரை வழங்கியுள்ளார். இதன்படி விரைவில் புதிய வர்த்தமானி வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவலை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.

பேரீச்சம்பழம் உட்பட 367 பொருட்களை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதோடு இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

மனைவியுடன் சண்டை – பிள்ளைகளை கொலை செய்ய முயற்சி செய்த முன்னாள் இராணுவ வீரர் தற்கொலை !

தூங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளின் தலையில் தந்தை ஒருவர் கட்டையால் அடித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (12) காலை கலேவெல மகுலுகஸ்வெவ 7ஆம் தூண் பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான பிள்ளைகள் இறந்திருக்கலாம் என நினைத்து தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர் 36 வயதான மிஹிர நுவான் சாமிகர என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிள்ளைகளின் தாய் தனது கணவருடன் சண்டையிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வீட்டை விட்டு வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மிஹிர நேற்று இரவு பாடல் ஒன்றை பாடி தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளார். பின்னர் அவர் தனது முகநூல் கணக்கில் வெள்ளைக் கொடியின் புகைப்படத்தை வெளியிட்டு இந்த குற்றத்தை செய்துள்ளார்.

இன்று காலை கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த 13, 8 மற்றும் 5 வயதுடைய இரு மகன்கள் மற்றும் மகளின் தலையில் குறித்த நபர் இவ்வாறு தடியால் கொடூரமான முறையில் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் மிஹிர வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் இராணுவத்தில் இருந்து விலகி கூலி தொழிலில் ஈடுபட்டிருந்ததாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் உயிரிழந்தவர் தனது மனைவி வீட்டில் இல்லாத நிலையில் தனது பிள்ளைகள் மற்றும் தாயாருடன் வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

வீட்டின் வெளியே உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்த மிஹிரவின் தாய், பிள்ளைகளின் சத்தம் கேட்டு கதவைத் திறந்து பார்த்தபோது இரத்த வெள்ளத்தில் பிள்ளைகள் இருந்துள்ளனர். பின்னர் அவர் பிள்ளைகளை அயலவர்களுடன் துணையுடன் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட மிஹிர நேற்று மாலை இந்த சம்பவத்தை திட்டமிட்டுள்ளதாக அவரது முகநூல் கணக்கு மூலம் தெரியவந்துள்ளது.
சுமார் 3 அடி தடி ஒன்று தயார் செய்து வீட்டின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, இரண்டு சிறுவர்களும் சிறுமியும் தற்போது கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மின்சார வேலியில் சிக்குண்டு இரு சிறுவர்கள் மரணம் !

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள நெய்னாகாடு கிராமத்தில் பட்டம்பிட்டிய எனும் இடத்திலுள்ள தென்னத்தோப்பில் பொருத்தப்பட்டிருந்த யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு பதின்மூன்று வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (12) மதியம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தென்னத்தோப்பிற்கு வழமை போன்று விறகு சேகரிக்க சென்ற போது றியாஸ் முஹம்மட் ஆசீக், முஹம்மட் இப்றாஹிம் என்ற இரண்டு சிறுவர்களே மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர். சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.