March

March

“எம் மீதான நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். பொருளாதார சிக்கலுக்கு ரஷ்யாவே காரணம்.” – நிதி அமைச்சர் பஷில்

லங்கா IOC நிறுவனம் எரிபொருளுக்கான விலையை அதிகரித்ததை போன்று, ஏனைய நிறுவனங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

நாட்டிற்கு வெளியில் நடக்கும் விடயங்கள் காரணமாகவே இவ்வாறான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இடம்பெறும் சம்பவங்களுக்கு தம்மால் தலையீடு செய்ய முடியாது.

உள்நாட்டில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு எவ்வாறேனும் தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்படும். ஒரு பிரச்சினை முடியும் போது, மற்றுமொரு பிரச்சினை உருவாகின்றது. தற்போது யுக்ரேன் ரஷ்யா யுத்தம் ஆரம்பித்துள்ளது.

நிவாரணங்களை வழங்க முழுமையாக முயற்சித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் தங்கள் மீது கொண்ட நம்பிக்கையை அவ்வாறே வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எமது அமைச்சர்கள் அனைத்து விதமான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றனர் எனவும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டம் – ரிஷாத் பதியுதீன் கையெழுத்து !

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை  இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை)  பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

முஸ்லீம் இடதுசாரி முன்னணியின் ஏற்பாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன், முஜிபுர் ரகுமான் மனோ கணேசன் ஆகியோர் இதுதொடர்பான ஆவணத்தில் கைச்சாத்திட்டிருந்தனர்.

அத்துடன், அரசியல் செயற்பாட்டாளர் விக்ரமபாகு கருணாரத்ன உள்ளிட்ட சிவில் சமூக பிரதிநிதிகளும் பெருமளவிலான பொதுமக்களும் இதன்போது கையெழுத்திட்டிருந்தனர்.

பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ள பஷில் ராஜபக்ஷ – விமல்வீரவன்ச விசனம் !

பசில் ராஜபக்ச சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார் எனவும் இந்த நாட்டு மக்கள் ஓன்றுதிரண்டு அவரை நாட்டை விட்டு வெளியேற்றவேண்டும் எனவும் ஆளுந்தரப்பு  நாடாளுமன்ற உறுப்பினர்   விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை பசில் ராஜபக்ச தனது பாரம்பரியமாக மாற்றிவிட்டார். ஜனாதிபதியாலோ அல்லது பிரதமராலோ எதுவும் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவிற்கு தெரியாமலே இவை அனைத்தும் இடம்பெறுகின்றன என கருதலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் மேற்கத்திய நாடுகள் பிரச்னையை மேலும் தீவிரமாக்குகின்றன.” – ரஷ்யா குற்றச்சாட்டு !

துருக்கியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் வியாழக்கிழமை நடத்திய முதல்கட்டப் பேச்சுவாா்த்தை போா் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படாமலேயே நிறைவடைந்தது.

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவுக்கும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா் டிமித்ரோ குலேபாவுக்கும் இடையே துருக்கியின் துறைமுக நகரான ஆன்டால்யாவில் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

உக்ரைனில் போா் நடைபெற்று வரும் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பாதுகாப்பு வழித்தடங்கள் அமைப்பது, அங்கு போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வது தொடா்பாக விவாதிப்பதற்காக அந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

எனினும், முக்கிய விவகாரங்களில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால் எந்த ஒப்பந்தமும் பேச்சுவாா்த்தையில் மேற்கொள்ளப்படவில்லை என்று உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா் டிமித்ரோ குலேபா கூறினாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது : லாவ்ரோவுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ள அவா் தயாராக இல்லை. அவா் முன்வைக்கும் அம்சங்கள் அனைத்தும் போரில் உக்ரைன் சரணடைய வேண்டும் என்பதைப் போல் உள்ளது. ஆனால், ரஷ்யாவிடம் உக்ரைன் ஒருபோதும் சரணடையாது.

போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பாதுகாப்பு வழித்தடம் அமைப்பதற்கான நம்பிக்கையையும் சொ்கெய் லாவ்ரோவ் பொய்யாக்கிவிட்டாா். எனினும், போரால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்குத் தீா்வு காண்பதற்கான பேச்சுவாா்த்தையைத் தொடர வேண்டும் என்று இருவரும் ஒப்புக்கொண்டோம் என்றாா் குலேபா.

பேச்சுவாா்த்தைக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் கூறியதாவது :

உக்ரைன் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அந்த நாடு அனுப்பும் எந்த பிரதிநிதிகளுடனும் பேச்சுவாா்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருக்கிறது. எனினும், சண்டை நிறுத்தம் மற்றும் பாதுகாப்பு வழித்தடங்கள் குறித்த இருதரப்பு பேச்சுவாா்த்தைக்கு பெலாரஸில் தற்போது பல சுற்றுகளாக நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தைக்கு மாற்று ஏதும் இல்லை.

தற்போது உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சருடன் நடைபெற்றுள்ள பேச்சுவாா்த்தை அதனை நிரூபித்துள்ளது.

அந்தப் பேச்சுவாா்த்தையில், உக்ரைன் தனது மேற்கத்திய சாா்பு நிலையைக் கைவிட்டு நடுநிலை வகிக்க வேண்டும், ஆயுதங்களைக் கைவிடவேண்டும் என்ற ரஷ்யாவின் நிபந்தனைகளை முன்வைத்தேன். அதற்கான பதிலை உக்ரைன் அரசிடமிருந்து எதிா்பாா்த்துள்ளேன்.

அந்த நாட்டுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் மேற்கத்திய நாடுகள் பிரச்னையை மேலும் தீவிரமாக்குகின்றன.

இந்த விவகாரத்தில் எங்கள் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நாங்கள் சமாளிப்போம். பொருளாதார விவகாரத்தில் ரஷ்யா எப்போதுமே மேற்கத்திய நாடுகளை சாா்ந்து இயங்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள மறுக்கும் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ !

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் தருணத்தில் நிதியமைச்சர் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளாமலிருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் இன்றும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றைவெளியிடுவதற்காக நிதியமைச்சரை சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அழைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் மீண்டும் வேண்டுகோள் விடுத்தன.

நாங்கள் வெறுமனே நிதியமைச்சரை நாடாளுமன்றத்தில் பார்க்க விரும்பவில்லை பொருளாதார நெருக்கடி குறித்து அவர் நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவேண்டும் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும் அமைச்சரை நாடாளுமன்றத்திற்கு அழைப்பதற்கான அதிகாரம் தனக்கில்லை என சபாநாயகர் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்ட நீக்கம் தொடர்பில் சஜித் பிரேமதாஸவிடம் இருந்து பெறப்பட்டது எழுத்துமூல ஆவணம் !

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முற்று முழுதாக நீக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் தமது தமது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் எழுத்துமூல ஆவணத்தை எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடம் இன்று நேரில் கையளித்தார்.

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் நாம் கையெழுத்து வேட்டையை முன்னெடுத்து வருகின்றோம். இந்த நடவடிக்கைக்கு மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், கல்வியலாளர்கள், அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், மாணவர்கள் மற்றும் மூவின மக்கள் தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முற்று முழுதாக நீக்கப்பட்டு, சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடைய சட்டமொன்று அதனைப் பிரதியீடு செய்ய வேண்டுமென்ற தமது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் எழுத்துமூல ஆவணத்தை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, இன்று காலை என்னிடம் கையளித்தார்.

நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் வைத்து இந்த ஆவணத்தை அவர் என்னிடம் கையளித்தார்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன், வேலுசாமி இராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம், மயில்வாகனம் உதயகுமார் மற்றும் புத்திக பத்திரண ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்” – என்றார்.

“இந்த போர் உக்ரைனின் இறையான்மைக்கோ, அந்த நாட்டு மக்களுக்கோ எதிரானது அல்ல.” – ரஷ்யா அறிவிப்பு !

“உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தலைமையிலான அரசை கவிழ்ப்பது எங்கள் நோக்கமில்லை. இதற்காக அந்த நாட்டின் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.” என ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா ஸகாரோபோவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்வதற்கு பாதுகாப்பு வழித்தடம் அமைப்பது குறித்து உக்ரைன் பிரதிநிதிகளுடன் மேலும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும்.
உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தலைமையிலான அரசை கவிழ்ப்பது எங்கள் நோக்கமில்லை. இதற்காக அந்த நாட்டின் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இந்த போர் உக்ரைனின் இறையான்மைக்கோ, அந்த நாட்டு மக்களுக்கோ எதிரானது அல்ல என்பதை மீண்டும் தெளிவுப்படுத்த விரும்புகிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த மாதம் 24-ந் தேதி உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை அறிவித்தபோது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் இதே கருத்தை தெரிவித்து இருந்தார். உக்ரைனை நாஜிக்களின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அப்போது அவர் தெரிவித்தார்.
பின்னர் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் உக்ரைன் இராணுவத்தின் நாஜி ஆதரவு சக்திகளுக்கு எதிராகத்தான் ரஷ்யா தாக்குதல் நடத்துவதாகவும், சாதாரண உக்ரைன் வீரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் புடின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பினருடனான சந்திப்பு – மௌனம் களைத்தது ஜனாதிபதி செயலகம் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதியினை சந்திப்பதற்கான நேரத்தினை ஒதுக்கித்தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தது. எனினும் அதுகுறித்து ஜனாதிபதியோ அல்லது ஜனாதிபதி செயலகமோ தொடர்ச்சியாக மௌனமாகவே இருந்தது.

இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காணி அபகரிப்பு உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறும் அவர்கள் கோரிக்ககை விடுத்திருந்தனர். எனினும் ஜனாதிபதி அன்றைய தினம் செயலகத்தில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாடுநாடாக டொலருக்கு மன்றாடுகின்றார்.” – நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதங்கள் !

நாடு வங்குரோத்து நிலையில் உள்ளது என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

நாடு வங்குரோத்து நிலையில் உள்ளது. நிதியமைச்சர் நாடுநாடாக டொலருக்கு மன்றாடுகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

நாங்கள் இது குறித்து வெட்கப்படவேண்டும். நிதியமைச்சர் டொலர் தாருங்கள் என நாடு நாடாக சென்று இரந்து கேட்கின்றார். ரஸ்யாவிடமிருந்தும் அவர் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை கேட்டுள்ளார் என அவர் தெரிவித்தார்.

இதற்கு ஆட்சேபனைவெளியிட்ட அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித்பண்டார,  வங்குரோத்து நிலை என்பது தவறு அதனை விலக்கிக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இது தீயநோக்கம் கொண்ட அறிக்கை என அவர் தெரிவித்தார்.

 

 

 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் !

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் வங்கி கணக்கிலிருந்து முறையற்ற விதத்தில் பெற்றுக்கொண்ட பணத்தை, பகுதி பகுதியாக செலுத்துவதற்கு, பிரதமரின் முன்னாள் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான செயலாளராக கடமையாற்றிய உதித்த லொக்குபண்டார இணக்கம் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, அலரிமாளிகைக்கு அண்மையில் வருகைத் தந்த உதித்த லொக்குபண்டார, முதல்கட்டமாக 25 லட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமரின் வங்கி கணக்கிலிருந்து சுமார் 4 கோடி ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளமை, விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த பணத்தை பகுதி பகுதியாக செலுத்த உதித்த லொக்குபண்டார இணக்கம் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் வங்கி கணக்கிலிருந்து மாதாந்தம் 15 லட்சம் ரூபா விதம் உதித்த லொக்குபண்டார பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பெற்றுக்கொண்ட பணத்தை கொண்டு நண்பர்களுடன் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளுதல், சொகுசு வாகனங்களை வாடகைக்கு பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட மேலும் பல்வேறு விடயங்களை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.