உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள உக்கிரமான போர், சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு திடீர் திருப்பத்தை சந்தித்துள்ளது.
கீயுவ்வின் புறநகர் பகுதிகளில் ரஷ் ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி கட்டிடங்களை தரை மட்டமாக்கின. கடந்த மாதம் ரஷிய படைகளால் கைப்பற்றப்பட்ட செர்னோபில் அணுமின் நிலையம், சர்வதேச அணுசக்தி முகமைக்கு தரவுகள் அனுப்புவதை நிறுத்தி உள்ளது. இது ரஷிய துருப்புகளின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.
போரால் உக்ரைன் மட்டுமல்லாது ரஷ்யாவும் பெரும்பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், இரு தரப்பும் தங்கள் பிடிவாதங்களைக் கைவிட்டு இணக்கமான சூழலுக்கு வழிவகுத்து வருவது ஒரு திருப்பமாக பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து குண்டு மழை பொழிந்து, ஏவுகணைகளை வீசி, பீரங்கி தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா, கடந்த 2 நாட்களாக அமைதிகாக்கிறது. மேலும் பல நகரங்களில் போர் நிறுத்தம் அமுலிலுள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலன்ஸ்கி ஏ.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு அளித்த சிறப்பு பேட்டி, அவர் சமாதான கொடி நாட்டுவதற்கு தயாராகி விட்டார் என தெளிவுபடுத்துகிறது.
இந்த பேட்டியில் அவர் கூறிய முக்கிய தகவல்கள்:-
சர்ச்சைக்குரிய விஷயங்களுக்கும், ரஷ்யாவுடனான மோதலுக்கும் நேட்டோ அமைப்பு பயப்படுகிறது. உக்ரைனை ஏற்க நேட்டோ தயாராக இல்லை என்பதை புரிந்துகொண்டு இந்த விஷயத்தில் நான் அமைதியாகி விட்டேன். எதையும் காலில் விழுந்து பெறுகிற நாடாக உக்ரைன் இருக்கக்கூடாது. கிழக்கு உக்ரைனின் டான்பாஸ், லுகான்ஸ்க் ஆகிய 2 ரஷ்ய சார்பு பிரதேசங்களின் நிலை குறித்து சமரசம் செய்ய தயார். எனவும் கிரீமியாவை ரஷ்யாவின் அங்கம் என அங்கீகரிக்கும் விஷயத்தில் பேச்சுவார்த்தைக்கு தயார் எனவும் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஸெலன்ஸ்கி கூறி உள்ளார்.
இப்படி, ரஷ்யா எந்த நோக்கங்களுக்காக போர் தொடங்கியதோ, அவற்றில் எல்லாம் இப்போது உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஸெலன்ஸ்கி இறங்கி வந்திருப்பதால், போர் முடிவுக்கு வர வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
மேலும், உக்ரைன் மற்றும் ரஷ்ய வெளியுறவு மந்திரிகள் இன்று சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதில் துருக்கி அதிபர் எர்டோகன் மத்தியஸ்தராக இருப்பார் என தெரிய வந்துள்ளது.
இரு நாடுகள் இடையே சமரசம் ஏற்படுத்த இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் உதவிக்கரம் நீட்டுகிறார். அவர் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஸெலன்ஸ்கியுடன் நேற்று தொலைபேசியில் பேசினார். வரும் சனிக்கிழமை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நேரடியாக சந்தித்து பேச உள்ளார்.
எனவே ரஷியா, உக்ரைன் போர் அடுத்த சில நாட்களில் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.