March

March

அமைச்சு பதவி பறிக்கப்பட்டமைக்கான காரணம் தொடர்பிலும் – பஷில் ராஜபக்ஷவின் ரகசிய திட்டங்கள் தொடர்பிலும் பகிரங்கப்படுத்தினார் விமல்வீரவங்ச !

“இனிமேல் எந்தக்காரணத்தை கொண்டும் அமைச்சுப்பதவியை ஏற்கப்போவதில்லை” என விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதிவியிலிருந்து நேற்று திடீரென நீக்கப்பட்டதையடுத்து, இன்று(வெள்ளிக்கிழமை) கொழும்பில் நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

 

“இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் முன்னர் இருந்தே எமது தரப்புக்குள் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. ஏனெனில் பசில் ராஜபக்ஷ இந்நாட்டின் ஜனாதிபதியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் கட்சியை தனது சொந்தக் கட்சியாக நினைத்து செயற்பட ஆரம்பித்தார்.

ஆனால், நாம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பின்னர் கோட்டாபய ராஜபக்ஷதான் ஜனாதிபதியாக தகுதியானவர் என கருதி, நாம் எமது செயற்பாடுகளை மேற்கொண்டோம்.

இது பசில் ராஜபக்ஷவின் கனவுக்கு தடையாக அமைந்தது. இறுதியில் அவரும் விருப்பப்படாமல் கோட்டாபய ராஜபக்ஷவுக்காக வேலை செய்தார்.

2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தோல்வியடைந்தபோது, அப்போதைய ஜனாதிபதியிடம் சென்று தனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தருமாறு பசில் ராஜபக்ஷ கோரினார்.இதனை மஹிந்த ராஜபக்ஷவும் ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் இறுதியில், யாருக்கும் சொல்லாமல் பசில் நாட்டை விட்டுச் சென்றார்.

அரசாங்கத்துக்குள் பிரச்சினைகள் தொடர்ச்சியாக இருந்தன. 20 ஆவது திருத்தச்சட்டத்திலிருந்து இது ஆரம்பமானது.

இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள ஒருவருக்கு அமைச்சர் அந்தஸ்த்து வழங்கியமை, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கியமை என அனைத்து விடத்திலும் நாம் எதிர்ப்பினை வெளியிட்டோம்.

 

இது கொள்கை ரீதியான முரண்பாடாகும். இதனால் தான் இன்று ஒட்டுமொத்த நாடும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தான் நாம் மக்களுக்கு எடுத்துக் காட்டினோம். நாடு பள்ளத்தில் விழுந்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க எம்மால் முடியாது.

இந்த நிலையில், நாம் அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்டுவிட்டோம் என என்னையும் உதயகம்மன்பிலவையும் அமைச்சர் பதவிகளிலிந்து நீக்கியுள்ளார்கள்.

எம்மை நீக்கியமையால் நாட்டுக்கு டொலர் கிடைத்துவிடுமா? அல்லது எரிப்பொருள் ஊற்றெடுக்குமா? மின்சாரப் பிரச்சினைகள் இல்லாது போகுமா? அல்லது பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா?அத்தோடு, பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றுக்கு கொண்டுவர நாம் என்றும் ஆதரவளிக்கவில்லை. இதற்கு ஆரம்பத்திலிருந்தே நாம் எதிர்ப்பினைத் தான் வெளியிட்டோம்.

பசில் ராஜபக்ஷவினால் தான் நாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் இந்த நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. அவர் அமெரிக்க பிரஜையாவார். அமெரிக்கா நினைத்தால் நிதித்தூய்மையாக்கலின் கீழ் அவரை எந்நேரத்திலும் கைது செய்ய முடியும். அதிலிருந்து தப்ப வேண்டுமெனில் அவர் அமெரிக்காவுக்காக இங்கு சேவையாற்ற வேண்டும்.இந்தோனேசியாவைப் போன்று இந்த நாட்டை மாற்ற வேண்டும் என்பதுதான் அவரின் திட்டமாகும். இதனை இலக்காகக் கொண்டுதான் அவர் செயற்பட்டு வருகிறார். நாட்டை கொள்ளையடிக்க மட்டும்தான் அவரால் முடியும். இதுதான் இன்றைய உண்மையான கதை.

எம்மை பதவியிலிருந்து நீக்கியமைக்கு பிரதமர் உடன்படவில்லை என்றே தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஜனாதிபதியின் கீழ் இனி மேல் அமைச்சர் பதவியொன்றை பெற்றுக் கொள்ள நாம் எப்போதும் தயாரில்லை.

இந்த அரசாங்கத்தை பசில் ராஜபக்ஷதான் வழிநடத்துகிறார். ஜனாதிபதியால் நிதியமைச்சின் செயலாளருடன் கலந்துரையாட முடியாதுள்ளது. இதுதான் இன்றைய நிலைமை.

இவை தொடர்பாக நாம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் எதிர்ப்பினை வெளியிட்டோம். அதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் எம்மை நீக்கியுள்ளார்கள்.

அரசாங்கத்திலுள்ள நிறைய பேருக்கு இந்த நிலைமை புரிந்துள்ளது. அவர்களும் அதிருப்தியுடன் தான் இருக்கிறார்கள். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் எமது கருத்துக்கள் உள்வாங்கப்பட்டன. ஆனால், இன்று அந்த நிலைமை இல்லை.

எமக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எவ்விதப் பிரச்சினையும் கிடையாது. நாம் மக்களுக்காகவே அரசியலுக்கு வந்தோம். இதற்காக கதைத்தால் எமது பதவிகள் பறிபோகும் என்றால் நாம் கவலையடையப்போவதில்லை.“ எனத் தெரிவித்துள்ளார்.

 

 

“இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர் ஒருவர் நாடாளுமன்றுக்கு வந்தமையே எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம்.” – ஜனாதிபதி மீது கடும் அதிருப்தியில் வாசுதேவ !

“அமைச்சரவைக் கூட்டங்களுக்கு செல்லப்போவதில்லை எனவும் அமைச்சருக்கான சம்பளம் உள்ளிட்ட வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “விமல் வீரவன்ஸவையும் உதய கம்மன்பிலவையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கியமை தவறானது என்று இன்று ஒட்டுமொத்த நாடும் கூறிவருகிறது.

இது மக்கள் ஆணைக்கும் எதிரான செயற்பாடாகும். இந்த நிலையில், நானும் இனிமேல் அமைச்சு பணிகளில் ஈடுபடப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.

நான் இனிமேல் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு செல்ல மாட்டேன். எனக்கு இனிமேல் அமைச்சருக்கான எந்தவொரு வரப்பிரசாதங்களும் தேவையில்லை.

அமைச்சருக்கான சம்பளம் கூட எனக்குத் தேவையில்லை. அடுத்த 3 வருடங்களுக்கு நான் இவ்வாறுதான் செயற்படுவேன் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரம், நாம் எதிரணியில் இணையவும் மாட்டோம். எமக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு இணங்கவே நாம் செயற்படுகிறோம்.

இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக நாம் பல தடவைகள் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த முற்பட்டும், அந்த முயற்சிகள் கைக்கூடவில்லை.

ஜனாதிபதியும் எதுவும் செய்ய முடியாத நிலைமையிலேயே இன்று உள்ளார். நாட்டு மக்கள் இன்று அதிருப்தியில் உள்ளார்கள். இதனை சுட்டிக்காட்டியே நாம் கருத்துக்களை வெளியிடுகிறோம்.

ஆனால், எமது ஆலோசனைகளை கேட்காமல் தன்னிச்சையாக செயற்படுவதாலேயே இந்த விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளிக்கும்போதே நாம் ஜனாதிபதியுடன் ஒப்பந்தமொன்றை செய்துக் கொண்டிருந்தோம்.

இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர் ஒருவர் நாடாளுமன்றுக்கு வரக்கூடாது என்று வலியுறுத்தினோம். எனினும், எமது ஒப்பந்தம் மீறப்பட்டது.

இதுவும் இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது. அரசாங்கம் செய்தமை தவறு என்பதை அரசாங்கமே ஏற்றுக் கொண்டுள்ளது.“ எனத் தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் அச்சம் தரும் விதத்தில் வீழ்ச்சியடைகின்றது மனித உரிமை நிலவரம்.” – சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கவலை !

இலங்கை குறித்த ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை இலங்கையில் மனித உரிமை நிலவரம் அச்சம் தரும் விதத்தில் வீழ்ச்சியடைகின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான பணிப்பாளர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளதாவது ,

பெப்ரவரி 25ம்திகதி வெளியான அறிக்கை இன மற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான பாரபட்சங்களையும் பாதுகாப்பு படையினர் சிவில் சமூகத்தை சேர்ந்தவர்களை இலக்குவைத்தல் மற்றும் கடந்தகால துஸ்பிரயோகங்களிற்கான பொறுப்புக்கூறல் முடக்கப்பட்டுள்ளது என்பதையும் பதிவு செய்கின்றது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்சலே பச்செலெட் முன்வைத்துள்ள-இலங்கையில் மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுபவர்களிற்கு எதிரான தடைகள்,இலங்கையில் இழைக்க்பபட்ட சர்வதேச குற்றங்களிற்காக சர்வதேச நீதியாணையின் கீழ் நீதியை வழங்குவதற்காக முயற்சித்தல், துன்புறுத்தலிற்கு உள்ளாக கூடிய இலங்கையர்களிற்கு புகலிடம் வழங்குதல்,2021ம் ஆண்டு ஐக்கியநாடுகள் மனிதஉரிமை பேரவை தீர்மானத்தின் மூலம் வழங்கப்பட்ட ஐக்கியநாடுகள் பொறுப்புக்கூறும் திட்டத்திற்கு ஆதரவளித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய பரிந்துரைகளை ஐக்கியநாடுகளின் உறுப்புநாடுகள் நிறைவேற்றவேண்டும்.

ஐ.நா இலங்கை பாதுகாப்பு படைகளுடனான தனது ஈடுபாட்டின் போது மனித உரிமைகளின் தராதரங்களை பேணவேண்டும்.

இலங்கை அரசாங்கம் அதன் மனித உரிமை செயற்பாடுகள் குறித்த சர்வதேசசமூகத்தின் ஆய்விற்கு தவறான பிழையாக வழிநடத்தும் பிரச்சார நடவடிக்கைகள் மூலம் பதிலளித்துள்ளது.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டவர்களை பாதுகாப்பதுடன் சட்டத்தின் ஆட்சியை மீறும் அதேவேளை இலங்கைஅரசாங்கம் சிறுபான்மையினத்தவர்களையும் சிவில் சமூகத்தினரையும் தீவிரமாக இலக்குவைக்கின்றது என மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

அழுத்தங்களை தொடர்ந்துபேணுவதற்காக மனித உரிமை துஸ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களும் பலவீனமான நிலையில் உள்ள குழுக்களும் ஐக்கியநாட்டினையும் இலங்கையின் சகாக்களையும் நம்பியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்கள் மிகத் தீவிரமாக ஒற்றை ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்.” – செல்வராசா கஜேந்திரன் கோரிக்கை ! 

” புதிய அரசியலமைப்பானது ஒற்றையாட்சி முறை ஒழிக்கப்பட்டு ஒரு சமஷ்டி அரசியலமைப்பாக, தமிழர்களுடைய வடகிழக்கு இணைந்த தாயகத்தை அங்கீகரிக்கின்ற, தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமை, தமிழ் தேசம் இறமையை அங்கீகரிக்கின்ற அடிப்படையிலான ஒரு சமஸ்டி அரசியல் அமைப்பாக, கொண்டுவரப்படுவதற்கான அழுத்தத்தை தமிழர்கள் தொடர்ச்சியாக வழங்க வேண்டும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தினால் ஏற்படவுள்ள பாதிப்பு மற்றும் ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பிலும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கயேந்திரன் தலைமையில் வவுனியாவில் இடம்பெற்றது.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை கொண்டுவருவது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தோம்.இத்தகைய நேரத்திலே தமிழ் மக்கள் ஒன்றிணைந்து புதிய அரசியலமைப்பானது ஒற்றையாட்சி முறை ஒழிக்கப்பட்டு ஒரு சமஷ்டி அரசியலமைப்பாக, தமிழர்களுடைய வடகிழக்கு இணைந்த தாயகத்தை அங்கீகரிக்கின்ற, தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமை, தமிழ் தேசம் இறமையை அங்கீகரிக்கின்ற அடிப்படையிலான ஒரு சமஸ்டி அரசியல் அமைப்பாக, கொண்டுவரப்படுவதற்கான அழுத்தத்தை தமிழர்கள் தொடர்ச்சியாக வழங்க வேண்டும்.

இம்முறை மனித உரிமைகள் பேரவையினுடைய ஆணையாளருடைய அறிக்கையில் கூட புதிய அரசியலமைப்பு தயாரிப்பது தொடர்பாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதனை பார்க்கின்ற போது அரசாங்கம் புதிய ஒற்றையாட்சி அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான முனைப்பில் இருப்பதனை தெளிவாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. ஆகவே மக்கள் கவனயீனமாக இருக்கக் கூடாது.

தற்போது கோட்டாபய அரசாங்கம் வந்த பின்னர் புதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்காக ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டு அந்த நிபுணர் குழு தங்களுடைய தயாரிப்புகளை நிறைவு செய்திருக்கின்ற ஒரு இடத்திலே அது விரைவிலே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு நாடாளுமன்றத்திலே விவாதத்துக்காக சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது.

இத்தகைய சூழலிலே தமிழ் மக்கள் மிகத் தீவிரமாக ஒற்றை ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். அவ்வாறு செய்ய வேண்டிய நேரத்திலே துரதிஷ்டவசமாக தமிழ் தலைவர்கள் என்று சொல்லுகின்றவர்கள் தமிழ் தேசிய வாதத்தை போர்வையாக போர்த்தி கொண்டிருக்கின்ற தலைவர்கள் இந்தியாவினுடைய பிராந்திய நலன்களை கருத்தில் கொண்டு இந்தியாவினுடைய தேவைக்காக தமிழ் மக்களுடைய நலன்களை ஒற்றை ஆட்சிக்குள் பலியிட்டு பதிமூன்றாம் திருத்த சட்டத்தை ஏற்று கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்கின்ற ஒரு கடிதம் ஒன்றை மோடிக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

 

அதாவது பதிமூன்றாம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும், என்று கோருகின்ற கடிதம். பதிமூன்றாம் திருத்த சட்டத்தை ஏற்று கொண்டு அவர்கள் வழங்கிய ஒரு கடிதமாகத்தான் அந்த கடிதம் அமைந்திருக்கின்றது.

நாங்கள் கடந்த தை மாதம் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலே ஒரு மாபெரும் பேரணி ஒன்றை நடாத்தியிருக்கின்றோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு பதிமூன்றாம் திருத்த சட்டம் மாகாணசபை தீர்வு காண தொடக்க புள்ளியும் அல்ல. தீர்வும் அல்ல என்பதனையும் புதிய அரசியலமைப்பானது ஒரு அரசியல் அமைப்பாக வருகிற போது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்த்தே வாக்களிக்க வேண்டும் என்பதனையும் மாறாக புதிய அரசியல் அமைப்பானது தமிழ் தேசம்இ இறைமை, உரிமையை, அங்கீகரிக்கின்ற ஒரு சமஷ்டி அடிப்படையிலான ஒரு அரசியல் அமைப்பாக கொண்டு வரப்பட வேண்டும். அதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதையும் இந்தியாவும் ஏனைய சர்வதேச நாடுகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதனையும் நாங்கள் கடந்த பேரணியிலே வலியுறுத்தி இருக்கின்றோம்.

அதே போன்றதொரு பேரணியை நாங்கள் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றோம். அந்த வகையிலே வவுனியா மாவட்டத்திலே பரப்புரைகளை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம். மக்கள் மட்டத்திலே பதின்மூன்றாவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஆறு கட்சிகளினுடைய தலைவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற குழு தலைவருமாக ஏழு பேர் கையொப்பமிட்டு இந்திய பிரதமருக்கு இந்த பதின்மூன்றாம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியதனுடைய அந்த சதி அதனுடைய உள்நோக்கங்களை நாங்கள் தெளிவுபடுத்துகின்ற வேலை திட்டங்களை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்.

பதிமூன்றாவது திருத்த சட்டம் இருப்பதைத்தான் நடைமுறைப்படுத்த சொல்லி கேட்டிருக்கிறோம் என்ற ஏமாற்று வார்த்தைகளை மக்கள் நம்பி அமைதியாக இருந்துவிட வேண்டாம். என்பதனையும் பதின்மூன்றை நிராகரிக்க வேண்டும் ஒற்றையாட்சியை நிராகரிக்க வேண்டும் தமிழ் தேச இறைமை அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும் என்பதற்காக மக்கள் தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தி கேட்டு கொள்வதோடு அந்த பயணத்திலே மக்கள் எங்களோடு கரம் கோர்த்து கொள்ள வேண்டும் என்பதையும் மக்களிடம் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன் என மேலும் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்டுள்ள உக்ரைன் வீரர்கள் தொடர்பில் முதன்முதலில் தகவல் வெளியிட்டுள்ள ரஷ்யா !

உக்ரைன்-ரஷ்யா இடையேயான இராணுவ தாக்குதலில் இதுவரை, உக்ரைனில் 498 ரஷ்யப் படை வீரர்கள் உயிரிழந்ததாகவும் மேலும், 1,597 பேர் காயமடைந்ததாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்ய செய்தி சேவைகளின்படி, 2,870 க்கும் மேற்பட்ட  உக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதுடன், சுமார் 3,700 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழன் அன்று உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து தனக்கு ஏற்பட்ட சேதம் குறித்த தகவலை ரஷ்யா  வெளியிடுவது இதுவே முதல் தடவையாகும். இருப்பினும், இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் யுக்ரைனில் இருந்து இது குறித்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 6 நாட்களில் 6,000 ரஷ்ய துருப்பினர் கொல்லப்பட்டதாக யுக்ரைன் ஜனாதிபதி  வொளோடிமிர் செலன்ஸ்கி நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தினமும் 16 மணிநேர மின்வெட்டு – வெளியாகியுள்ள புதிய  தகவல் !

பருவ மழை பெய்யாதுவிடின் ஏப்ரல் மாதத்தில் தினமும் சுமார் 16 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியிலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

 

தேவையற்ற மின் விளக்குகளை அணைத்து விட்டு மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்து வதே தற்போதைய மின் நெருக்கடிக்கு ஒரே தீர்வு என்றும் கூறுகின்றனர்.

அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் வாங்குவது பெரும் சிக்கலாக இருக்கும் இந்த நேரத்தில், தடையில்லா மின்சாரம் வழங்க எந்த வழியில் சென்றாலும் செலவு ஏற்படும் என பொறியியலாளர்கள் கூறுகின்றனர்.

எனவே, அலுவலகங்களில் உள்ள குளிரூட்டிகள், தெரு விளக்குகளை அணைத்தால் மட்டுமே மின்வெட்டை மிகக் குறுகிய நேரத்துக்கு கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர்.

ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு – பறிக்கப்பட்டது ஆளுந்தரப்பின் முக்கியமான உறுப்பினர்களின் அமைச்சுப் பதவிகள் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், தற்போதுள்ள அமைச்சரவை அமைச்சுப் பதவிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அமைச்சர் காமினி லொக்குகே இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

அதற்கமைய, கீழ்வரும் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எரிசக்தி அமைச்சராக காமினி லொக்குகே பொறுப்பேற்றுள்ளதுடன், மின்சக்தி அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி பொறுப்பேற்றுள்ளார்.

நேற்று :- பிள்ளைக்கு உணவு கொடுக்க முடியாத வறுமையால் தந்தை தற்கொலை. இன்று :- இங்கு சாப்பிட வழியில்லாதவர்கள் யாரும் இல்லை என கூறி பெருமைப்பட்டுள்ள அமைச்சர் !

நேற்றையதினம் வெலிபென்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொருளாதார பாதிப்பால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் பலரிடையேயும் பல விதமான வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த சாவுக்கு அரசே காரணம் என கண்டித்திருனர்.

நேற்று :- பிள்ளைக்கு உணவு கொடுக்க முடியாத வறுமையால் தந்தை தற்கொலை. இன்று :- இங்க சாப்பிட வழியில்லாதவர்கள் யாரும் இல்லை என கூறி பெருமைப்பட்டுள்ள அமைச்சர் !

இந்த நிலையில், சாப்பிட இல்லாத மக்கள் என யாரும் இந்த நாட்டில் இல்லை என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பு – ஹொரண வீதியின் 120 இலக்க பேருந்து மார்க்கத்தை விரிவுபடுத்தும் போது வீடுகளை இழந்தவர்களுக்கு, புதிய வீடுகளுக்கான திறப்புகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

 

“ஒன்றரை வருடம் வீடுகளில் அடைப்பட்டிருந்ததை மக்கள் அறிவார்கள். அந்தக் காலத்தில் செய்ய முடியாது போனதை தற்போது செய்ய முயற்சிக்கிறார்கள்.

நாட்டின் பொருளாதாரத்தையும் தமது பொருளாதாரத்தையும் மக்களின் முழு சக்தியையும் செலுத்தி மக்கள் பெரும் அர்ப்பணிப்பைச் செய்கிறார்கள்.

நாட்டில் சீமெந்து பிரச்சினை இருப்பதை ஏற்க வேண்டும். ஆனால், மகிந்த யுகத்தின் பின்னர் அதிக அபிவிருத்தி நடைபெறுவது இந்த யுகத்தில் தான்.

மகிந்த ராஜபக்ச ஆட்சியின் பின்னர் அதிகமான வீதிகள் கோட்டாபய ஆட்சியிலேயே நிர்மாணிக்கப்படுகிறது.

தனியார் துறையினர் அதிக கட்டுமானத்தை முன்னெடுத்தது மகிந்த ஆட்சியில் தான். அதைவிட அதிகமாக தற்போது கோட்டாபய ஆட்சியில் நடக்கிறது.

வீதிகளை மேம்படுத்தும் போது அவர்களின் காலத்தில் செய்ய முடியாமல் போனதையிட்டு அவர்களுக்கு கவலை ஏற்படுகிறது. இதுதான் உண்மை நிலை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“மூளையில்லாத பஷில் ராஜபக்ஷ நிதியமைச்சராகவுள்ளார்.” எதிர்க்கட்சி தாக்கு !

“மூளையில்லாதவர் நிதி அமைச்சராகியுள்ளார்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கூறினார்.
நாட்டின் பொருளாதார சரிவு பற்றி பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் இது தொடர்பான பேசிய அவர்,
இன்று அரசாங்கத்தால் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியவில்லை.
இன்று 60 இலட்சம் மட்டுமல்ல 225 இலட்சம் பேர் தண்டிக்கப்படுகின்றனர்.  எனவே இந்த அரசாங்கம் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.
மேலும், இந்த அரசாங்கத்தை உடனடியாக மாற்றாவிட்டால் நாடு எஞ்சியிருக்காது. நாட்டை ஆளக்கூடிய எவருக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இந்த அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது.” – சிறிதரன் 

“எரிபொருள் தட்டுப்பாடு என்பது ஜனாதிபதியின் தோற்றுப்போன மனநிலையை உலகிற்கு காட்டி நிற்கின்றது.” என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்த போது,

இந்த அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது. நாட்டில் காணப்படும் எரிபொருள் தட்டுப்பாடு என்பது ஜனாதிபதியின் தோற்றுப்போன மனநிலையை உலகிற்கு காட்டி நிற்கின்றது.

 

விவசாயத்தை தமது ஜீவனோபாயமாக கொண்டு வாழ்ந்துவரும் மக்கள், இயற்கை விவசாயம் என்ற அரசாங்கத்தின் கொள்கையால் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

இருப்பினும் விவசாயத்திற்கு உரத்தை இறக்குமதி செய்வதாக அரசாங்கம் கூறினாலும் தமிழ் மக்கள் அதனை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர்.

மேலும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் உதவியை நாடப்போவதில்லை என கூறியவர்கள் இப்போது அவர்களிடம் செல்ல முடிவெடுத்திருப்பது அவர்களது இயலாமையை வெளிகொண்டு வந்துள்ளது.

 

பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை நாடும் மக்களும் சந்தித்திருக்கின்ற இந்த நேரத்தில், உரிய நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் வழியமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.