March

March

“பியூஸ்லஸ் மரணம் தொடர்பான விசாரணை உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.” – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அவர கடிதம்!

தேசிய கால்பந்தாட்ட வீரர் யோகேந்திரன் டக்சன் பியூஸ்லஸ் மரணம் அதன் உண்மை தன்மை தொடர்பான விசாரணை உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

டக்சன் பியூஸ்லஸியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது''

இவ்விடயம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்களுக்கு இன்றைய தினம் புதன்கிழமை (2) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார் மாவட்டத்தின் பனங்கட்டு கொட்டு கிழக்கு கிராமத்தை தனது பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவர் தேசிய கால்பந்தாட்ட வீரர் யோகேந்திரன் டக்சன் பியூஸ்லஸ். இவர் 2018 முதல் இன்று வரை இலங்கையின் தேசிய கால்பந்து அணி வீரராக இருந்து வருகிறார்.

தனது விளையாட்டு திறமையால் பல சாதனைகளை படைத்த ஓர் சிறந்த வீரன். இந்த விளையாட்டு துறையில் தன்னை முற்றும் முழுவதுமாக ஈடுபடுத்தி தன்னை வளர்த்துக் கொண்டு தனது மாவட்டத்திற்கும், தாய் நாட்டிற்கு புகழை தேடித் தந்தவர். தன்னை முழுவதுமாக கால்பந்திற்காக அர்ப்பணித்த வீரன்.

அவருடைய விளையாட்டு திறமையின் நிமித்தம் மாலைதீவுக்கு வலன்சியா விளையாட்டு கழகத்தினரால் அழைக்கப்பட்டு அந்த கழகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி அங்கும் பல சாதனைகள் படைத்து பல வெற்றிக்கு வழி வகுத்தவர்.

இவ்வாறானதோர் சிறந்த விளையாட்டு வீரனின் (26.02.2022) அகால மரணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கையில் வங்கி அட்டைகளுக்கும் தட்டுப்பாடு – புதிய சேமிப்புக் கணக்குகளைத் திறக்க முடியாத சூழல் !

நாட்டிலுள்ள குறிப்பிட்ட சில அரச மற்றும் தனியார் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அந்தக் கணக்குகளிலிருந்து பரிவர்த்தனை செய்வதற்குத் தேவையான அட்டைகளை வழங்குவது பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

 

வங்கி அட்டை காலாவதியான பிறகு புதிய சேமிப்புக் கணக்குகளைத் திறக்க முடியாததாலும், புதிய அட்டையைக் கோர முடியாததாலும், அட்டைகளை இழந்தவர்கள் புதிய அட்டைகளைப் பெற முடியாததாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக, வாடிக்கையாளர்கள் முதலில் தங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டும். டொலர் தட்டுப்பாடு காரணமாக வங்கி அட்டைகளை இறக்குமதி செய்வதை வங்கிகள் நிறுத்தியுள்ளதால் அவ்வகை அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே இந்த நிலைக்குக் காரணம் என கூறப்படுகிறது.

“எங்களுடைய கூட்டாளி நாடுகள் நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் முழு படைபலத்துடன் பாதுகாப்போம்.” – நாடாளுமன்றில் ஜோபைடன் !

‘நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் முழு படைபலத்துடன், எங்களுடைய ஒன்று சேர்ந்த பலத்தால் பாதுகாப்போம்.” என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் கூறுகையில்
‘‘அமெரிக்கா மற்றும் எங்களுடைய கூட்டாளி நாடுகள் நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் முழு படைபலத்துடன், எங்களுடைய ஒன்று சேர்ந்த பலத்தால் பாதுகாப்போம். உக்ரைன் மக்கள் தைரியத்துடன் சண்டையிட்டு வருகிறார்கள். சண்டையில் புடின் ஆதாயம் அடையலாம். ஆனால், நீண்ட காலத்திற்கு அவர் அதற்கான அதிகப்படியான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். உக்ரைன் மக்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது.
முன்னதாக,  சர்வாதிகாரிகள் அவர்கள் செய்த ஆக்கிரமிப்பு செயலுக்கு விலை கொடுக்காதபோது அவர்கள் மேலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனர் என்பதை நமது வரலாற்றின் மூலம் நாம் அறிந்துள்ளோம். அவர்கள் தொடர்ந்து முன்னேறி கொண்டே சென்று அமெரிக்கா மற்றும் உலகிற்கு அதிக செலவு, அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடுகின்றனர். புடினின் போர் திட்டமிடப்பட்ட மற்றும் தூண்டப்படாதது. இராஜாங்க ரீதியிலான முயற்சிகளை புடின் நிராகரித்துவிட்டார்.  மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என புதின் நினைத்துவிட்டார். புதின் தவறாக நினைத்துவிட்டார்’’ எனத் தெரிவித்திருந்தார்.

கடற்படை தளத்திற்காக அரசு காணி சுவீகரிப்பு முயற்சி – 23 காணி உரிமையாளர்கள் காணியினை வழங்க விருப்பம் !

முல்லைத்தீவு – வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிலர் காணிகளை அரசிற்கு வழங்குவதற்கு முன்வந்துள்ள நிலையிலும் பலர் காணிகளை வழங்க விரும்பமின்மையினையும் எதிர்ப்பினையும் வெளிப்படுத்தியுள்ளார்கள். வட்டுவாகல் கடற்படைத்தளத்திற்காக 671 ஏக்கர் காணி கையகப்படுத்தக் கோரப்பட்டுள்ளது. இதில் 292 ஏக்கர் அரச காணிகளாகக் காணப்பட்டுள்ள போதும் ஏனைய 379 ஏக்கர் தனியார் நிலமாக காணப்படுகின்றது.

இவ்வாறு 35 பேருக்குச் சொந்தமான 379 ஏக்கர் காணியில் சிலர் காணி சுவீகரிப்பிற்கு மாற்றுக்காணி அல்லது இழப்பீட்டினை பெற்றுக்கொள்ள முன்வந்துள்ளார்கள், பலர் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள். 2014 ஆம் ஆண்டு வட்டுவாகல் கடற்படை தளத்தின் காணி சுவீகரிப்பு வர்த்தமானி அறிவித்தலின் படி தொடங்கப்பட்ட சுவீகரிப்பு நடவடிக்கை பிரிவு 5 சட்டத்தின் கீழ் நில அளவீடு முன்னெடுக்கப்பட்ட போதும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

காணி உரிமையாளர்கள் 23 பேர் இவ்வாறு காணியினை வழங்க விருப்பம் இல்லாத நிலையில் கடந்த காலங்களில் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள். இருந்தும் காணியினை சுவீகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“தமிழர்களுக்கு இலங்கைக்குள் அரசியல் தீர்வு ஒருபோதும் கிடையாது. ” – எம்.கே.சிவாஜிலிங்கம்

தமிழ் மக்களது முழுமையான நிலைப்பாட்டை கட்சிகள் வெளிப்படுத்தாத காரணத்தால் நாங்கள் ஜெனீவாவுக்கு தனியாக கடிதம் எழுதவேண்டிய தேவை ஏற்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

கட்சிகள் ஒவ்வொன்றும் தனியாக ஜெனிவாவிற்கு கடிதம் எழுதியமை தொடர்பாக வல்வெட்டித்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை ஜெனிவாவிற்கு தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய 5 கட்சிகள் கூட்டாக தமிழர் பிரச்சினையை தீர்க்க வடக்கு கிழக்கில் பொதுஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தி கடிதத்தை எழுதியுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி இலங்கை தமிழரசுக் கட்சி போன்றவை இதுவரை சர்வதேச சமூகத்திடம் பொதுசன வாக்கெடுப்பு தேவை என்ற விடயத்தை வலியுறுத்தவில்லை. இந்நிலையில் தமிழ் மக்களது முழுமையான நிலைப்பாட்டை கட்சிகள் வெளிப்படுத்தாத காரணத்தால் நாங்கள் தனியாக ஜெனிவாவுக்கு கடிதத்தினை அனுப்பியுள்ளோம். ஒரே நிலைப்பாட்டில் கட்சிகள் இருக்குமானால் ஜெனீவாவுக்கு பல்வேறு கடிதங்கள் போக வேண்டிய தேவையிருக்காது.

இலங்கைக்குள் அரசியல் தீர்வு ஒருபோதும் கிடையாது. ஒற்றையாட்சியை விட்டு ஒரு அங்குலமும் அரசாங்கம் வழங்காது. அரசியல் தீர்வு வழங்கப்படும் ஆனால் கூட ஒற்றையாட்சியை மலினப்படுத்துவதாக அந்த தீர்வு இருக்காது.

சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச சமூகம் இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒரு பொதுசன வாக்கெடுப்பை நடத்த வேண்டும். அதுவே அரசியல் தீர்வுக்கான வழி என்பதை நாங்கள் இறுக்கமாக வலியுறுத்தி இருக்கின்றோம் என்றார்.

“அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத் திருத்தத்தை உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நீக்க வேண்டும்.” – மாவை சேனாதிராஜா

“அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்ட திருத்தத்தை உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நீக்க வேண்டும்.” என கோருகின்றோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக நீண்ட காலமாக போராட்டங்கள் இடம்பெற்று வந்திருக்கின்றன. பல ஆயிரக்கணக்கானவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். 400 இற்கு மேற்பட்டவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இன்னும் சிறைகளில் இருப்பதாக தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி தேசிய அடித்தளத்தில் இருந்து வேலை செய்கின்ற ஏனைய கட்சிகள், தொண்டர்கள், முன்னாள் ஜனாதிபதி, மதத்தலைவர்கள் என பலர் பல மாவட்டங்களில் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என குரல் கொடுத்து அதற்கு எதிரான கடிதத்திலும் கையொப்பமிட்டுள்ளார்கள். அதற்கான வேலைகள் எமது கட்சியினர், கட்சியின் வாலிபர் முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை தங்களுடைய பௌத்த சிங்கள ஆட்சி ஒன்றை உருவாக்குவதற்கு பயன்படுத்துவார்கள்.  இந்த அரசாங்கத்தின் ஜனநாயக விரோத, இனப்பிரச்சனை தீர்க்கப்படாத விடயங்களுக்கு எதிராக நாங்கள குரல் கொடுகின்ற போது பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி இந்த போராட்டங்களை ஜனநாயக விரோத அடைப்படையில் அடக்கி ஒடுக்க அரசாங்கம் தயாராக இருக்கிறது.

பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற எமது போராட்டம் மார்ச் மாதம் முழுமையாக நடைபெறும். தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒண்றிணைந்து இந்த சட்டத்தை நீக்க வலியுறுத்துகிறார்கள். இதனை அரசாங்கம் புரிந்து கொண்டு பயங்கரவாத தடைச்சட்டத் திருத்தத்தை உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நீக்க வேண்டும் என கோருகின்றோம் எனத் தெரிவித்தார்.

உக்ரைன் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள பெரிய வெற்றி – ஐரோப்பிய பாராளுமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பு !

27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் முயற்சிகளில் உக்ரைன் ஈடுபட்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்நாடு மீது போர் தொடுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய கோரிக்கை! - உக்ரைன் ஜனாதிபதி கையெழுத்து (Photo) - தமிழ்வின்
இதையடுத்து உக்ரைன் விடுத்த கோரிக்கையை அடுத்து ஐரோப்பியயூனியன்  நாடுகள் ஆயுதங்கள் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில்,  ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான விண்ணப்பத்தில் திங்கள் கிழமையன்று உக்ரைன் ஜனாதிபதி ஷெலன்ஸ்சி கையெழுத்திட்டார். தொடர்ந்து  ஐரோப்பிய பாராளுமன்றத்தில் காணொலி மூலம் அவர் பேசியதாவது:
உக்ரைன் மக்கள் வலிமையானவர்கள். நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். நீங்கள் எங்களோடு இருப்பதை நிரூபியுங்கள். எங்களை போக விட மாட்டீர்கள் என்பதை நிரூபியுங்கள். நீங்கள் உண்மையிலேயே ஐரோப்பியர்கள் என்பதை நிரூபியுங்கள். அப்போதுதான் மரணத்தை வாழ்க்கை வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.
அவரது உரை முடிந்தவுடன் அங்கிருந்த உறுப்பினர்கள் கைதட்டி பலத்த கரகோஷம் எழுப்பினர். இதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக உக்ரைனின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஐரோப்பிய பாராளுமன்றம் அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் பீரங்கி வாகனத்தை டிராக்டரில் கட்டி இழுத்து திருடிச்செல்லும் உக்ரைன் விவசாயி – வைரல் வீடியோ இணைப்பு !

உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் கடந்த 6 நாட்களாக போர்தொடுத்து வருகிறது. உக்ரைனை கைப்பற்றும் முயற்சிகளில் ரஷ்யா ஈடுபட்டு உள்ளது. இதற்கு உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

உக்ரைன் நகருக்குள் உள்ள ரஷ்ய இராணுவத்தினர் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் உக்ரைனை சேர்ந்த விவசாயி ஒருவர் கியுவ் எல்லை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவின் பீரங்கி வாகனத்தை தனது டிராக்டரில் கட்டி இணைத்து இழுத்து திருடி சென்றார்.

இந்த வீடியோவை இங்கிலாந்தின் பிளைமவுத் நாடாளுமன்ற எம்.பி. ஜானி மெர்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில் விவசாயி ஒருவர் தனது டிராக்டரில் பீரங்கியை கட்டி இழுத்து செல்ல அதன் பின்னால் இராணுவ வீரர் ஒருவர் ஓடும் காட்சி இடம் பெற்று உள்ளது. இந்த வீடியோவை வெளியிட்டு ஜானி மெர்சர் கூறுகையில், “இந்த வீடியோவின் மூலம் ரஷ்யா சிறந்த நிபுணத்துவம் பெற்ற நாடு இல்லை என்பது தெரிகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு சிறப்பாக நடப்பதாக தெரியவில்லை. உக்ரைன் நாட்டு டிராக்டர், ரஷ்யாவின் பீரங்கி வாகனத்தை திருடி உள்ளது” என்றார்.

இந்த வீடியோ இணைய தளத்தில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை இதுவரை 46 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்து உள்ளனர்.

இந்த வீடியோவை ஆஸ்திரியாவுக்கான உக்ரைன் நாட்டு தூதர் அலெக்சாண்டர் ஷெர்பாவும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார். அவர் கூறுகையில், “உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் மிகவும் பலசாலிகள்” என்றார்.

“இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் செயற்பாடுகளில் பின்னடைவு.” – ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் ஊடகப்பேச்சாளர்

பொறுப்புக்கூறலை உறுதிசெய்வது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் செயற்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் ஊடகப்பேச்சாளர் ரவினா ஷம்தாசனி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை குறித்து வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே ஊடகப்பேச்சாளர் ரவினா ஷம்தாசனி இதனை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பெண்களால் பிரதிநிதித்துவப்படுத்தும் காணாமல்போனோரின் குடும்பங்கள் முகங்கொடுத்திருக்கும் பாதுகாப்பற்ற நிலை குறித்து தாம் அறிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இராணுவமயமாக்கல், இன-மதரீதியான தேசியவாதம், சிறுபான்மையினர் மத்தியில் அதிகரித்துள்ள பதற்றம் உள்ளிட்டவற்றையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேலோங்கியிருக்கும் சிவில் சமூக அமைப்புக்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மீதான பாதுகாப்புத்தரப்பினரின் தொடர் கண்காணிப்பு மற்றும் மீறல்கள் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களில் 80 பேருக்கும் மேற்பட்டோர் கடந்த வருடம் ஜுன் மாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டமையை வரவேற்றுள்ள அவர், அதன் பிரயோகத்தை இடைநிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பிற்போடப்பட்டது ஐ.நாவில் இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பான விவாதம் !

இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பான ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீதான விவாதம் மூன்றாம் திகதி இடம்பெறவிருந்த நிலையில் பிற்போடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையினால் உருவாக்கியுள்ள நிலைமை குறித்து மனித உரிமை பேரவை அவசரமாக விவாதிக்க வேண்டிய நிலை காணப்படுவதாலேயே இலங்கை குறித்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் இராணுவநடவடிக்கை தொடர்பான விசேட விவாதம் மூன்றாம் திகதி இடம்பெறும். இதுதொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக மனித உரிமை பேரவையின் 47 உறுப்புநாடுகளில் 29நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன