March

March

“தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதனை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும்.”- முன்னணியினர் இந்தியாவிடம் வேண்டுகோள் !

தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதனை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்திய வெளிவிவகாரச் செயலர் ஊடாக இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கும் கடிதம் கிட்டுப்பூங்கா பிரகடனமும் இணைத்து இந்திய வெளிவிவாகார அமைச்சருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் கடிதம் ஒன்று இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஊடாக அக்கடிதம் அனுப்பப்பட்டது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
28-03-2022
உயர்திரு.சுப்பிரமணியம் ஜெய்சங்கர்
கௌரவ வெளிவிவகார அமைச்சர்,
இந்தியா
ஊடாக,
கௌரவ துணைத்தூதுவர்,
இந்திய துணைத் தூதரகம்,
யாழ்ப்பாணம்.
அவர்களுக்கு,
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பாக
1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13 ஆம் திருத்தமானது, நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து அது தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்குத் தீர்வு அல்ல என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் ஆரம்பத்திலிருந்தே அதனை நிராகரித்து வந்துள்ளனர்.

சிறிலங்காவின் பாராளுமன்றத்தில் 13ஆம் திருத்தச் சட்ட வரைபு சமர்ப்க்கப்பட்டிருந்த பொழுது, தமிழர் அரசியல் அரங்கில் இயங்கிக் கொண்டிருந்த தரப்புக்கள், அந்த வரைபை சிறிலங்காவின் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்படுவதை இந்தியா தடுக்க வேண்டும் என்றுகோரி இந்திய பிரதமருக்கு எழுத்து மூலமாக தெரிவித்திருந்ததும் வரலாற்று நிகழ்வாகும்.
13ஆம் திருத்தமானது சட்ட மூலமாக நிறைவேற்றப்படுவதனை தடுத்து நிறுத்துமாறு கோரப்பட்டதனுடைய நோக்கமே, 13 ஆம் திருத்தமானது, தமிழ் மக்களின் தீர்வு என்னும் விடயத்தில் ஆரம்பப் புள்ளியாகக் கூட கருதப்பட முடியாது என்பதனாலேயாகும்.

எனினும் தமிழ்த் தரப்பின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், குறித்த 13ஆம் திருத்தச் சட்டமும் மாகாணசபைகள் சட்டமூலமும் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் வடக்கு கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்றபோது, தமிழர் அரசியல் அரங்கில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு அமைப்பு மட்டும் 1988ல் அந்தத் தேர்தலில் போட்டியிட்டு வடகிழக்கு மாகாண சபையிலிருந்த நிர்வாகத்தைக் கைப்பற்றியிருந்தது.
இருந்த போதிலும் இதனூடாக எதனையுமே சாதிக்க முடியாது என்ற உண்மையை அனுபவ ரீதியாக உணர்ந்த போது, மாகாண சபையை பொறுப்பேற்றிருந்த அந்தத் தரப்புக்கூட, தாம் வகித்துவந்த மாகாண சபை அங்கத்துவத்தினை இராஜினாமா செய்து 13 ஆம் திருத்தத்தினை முற்று முழுதாக நிராகரித்திருந்தனர்.

இந்த நடவடிக்கையானது, தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில், 13 ஐ முன்னிறுத்தி நகர முடியாது என்பதை நிரூபிப்பதாகவும், 13 ஆம் திருத்தமானது தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஆரம்பப்புள்ளியாக கூட கருதமுடியாது என்ற யாதார்த்தத்தை மீண்டும் நிலைநாட்டுவதாகவும் அமைந்துள்ளது.
34 வருடங்களுக்கு மேலாக இந்த 13ஆம் திருத்தமும் மகாகாண சபைகளும், இலங்கை அரசியலமைப்பில் இருந்தும் கூட, தமிழ் மக்கள் தொடர்ச்சியாக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் ஒற்றையாட்சியை முற்று முழுதாக நிராகரித்தே தமது ஏகோபித்த ஆணையை வழங்கிவருகின்றனர். தமிழ்த் தேசம் அங்ககீகரிக்கப்படுகின்ற – தமிழ்த் தேசம் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக் கூடிய – இணைந்த வடக்கு கிழக்கு தாயகம் பாதுகாக்கப்படுகின்ற சமஸ்டித் தீர்வையே கோரி வருகின்றார்கள்.

13ஆம் திருத்தமும் மகாகாண சபைகளும் கடந்த 34 வருடங்களாக நடைமுறையில் இருக்கக் கூடியதாகவே, தமிழ் மக்களின் ஆணைகளைப் பெற்றவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் 13 ஆம் திருத்தம் ஒரு பேச்சுப் பொருளாகக் கூட பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. அந்தவகையில், கணக்கிலெடுக்கப்படாத – நிராகரிக்கப்பட்ட ஒரு விடயமாகவே தமிழ்த் தேசிய அரங்கில் 13ஆம் திருத்தம் இருந்து வந்துள்ளது. தொடர்ந்தும் அவ்வாறே இருக்கிறது.
ஈழத் தமிழ்த் தேச மக்களின் நிலைப்பாட்டிலே, 13ஆம் திருத்தமும் மாகாண சபைகளும், தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்குரிய தீர்வு அல்ல என்பதுடன், அது தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகக் கூட அமையாது என்ற உண்மையை தொடர்ந்தும் நிரூபிக்கின்ற வகையிலேயே, கடந்த 2022 ஜனவரி 30ம் திகதி யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவிலும், 2022 மார்ச் மாதம் 13ஆம் திகதி வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டு திடலிலும், மக்கள் எழுச்சிப் பேரணிகள் நடைபெற்றிருந்தன.

அதில், தமிழ் மக்கள் பல்லாயிரக் கணக்கில் அணிதிரண்டு, 13ஆம் திருத்தம் தீர்வுக்கான தொடக்கப்புள்ளியுமல்ல, இறுதித் தீர்வுமல்ல என்பதனை ஆணித்தரமாக வெளிப்படுத்தியும், ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் வேலைத் திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், அதேவேளை – தமிழ்த் தேசம் அங்ககீகரிக்கப்படுகின்ற – இணைந்த வடக்கு கிழக்கு தாயகத்தில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்ற சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியுள்ளதுடன், அத்தகைய தீர்வை அடைந்துகொள்ள இந்திய அரசும் எனைய நட்பு நாடுகளும் இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமெனவும் மேற்படி பேரணிகள் ஊடாக வலியுறுத்தியுள்ளார்கள். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனம் ஒன்றை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் மக்களது உரிமைக்காக போராடி வந்த காலப்பகுதியில், அவர்கள் நாட்டைப்பிரிக்காத, ஓர் சமஸ்டித் தீர்வுக்குத் தயாராக இருக்கவில்லை என்றும், தனிநாட்டிற்காக மட்டுமே பிடிவாதமாக செயற்படுகின்றார்கள் என்றும் அப்பட்டமான பொய்யைக் கூறியே, ஓர் இனவழிப்புப் போருக்கு இலங்கை அரசு சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்று இனவழிப்பின் மூலமாக உரிமைப் போராட்டத்தை மௌனிக்கச் செய்திருந்தார்கள். போர் முடிந்த பின்னர், ஒற்றையாட்சியை நிராகரித்து, சிறீலங்காவின் சட்டத்தின் பிரகாரம் நாட்டைப்பிரிக்காமல் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட ஓர் சமஸ்டித்தீர்வையே வலியுறுத்தி, தமிழ்மக்கள் அனைத்துத் தேர்தல்களிலும் தமது ஆணையை வழங்கி வந்துள்ளார்கள். இலங்கைக்கு நான்காவது புதிய அரசியல் யாப்பு ஒன்றினை கொண்டுவருவதற்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள, சிறீலங்கா அரசு, அந்த மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து புதிய அரசியல் அமைப்பை சமஸ்டி அரசியல் யாப்பாக கொண்டுவராமல்;, மாறாக ஒற்றையாட்சியாக கொண்டு வருவதற்கே நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. இந்நிலையில் இந்தியாவின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு ஈழதமிழ்த் தேசம் உறுதியாக செயற்பட்டு வரும் நிலையில், ஈழத் தமிழ்த் தேசமக்களின் நலன்களை பேணும் வகையில், இலங்கை அரசு மீது அழுத்தங்களை பிரயோகித்து, ஒற்றையாட்சி அரசியல் யாப்பை கொண்டுவருதனை தடுத்து, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதனை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும்.

அந்த வகையில், ‘கிட்டுப்பூங்கா’ பிரகடனமானது தமிழ் மக்களின் அசைக்க முடியாத அரசியல் வேணவாவை மீண்டும் வெளிப்படுத்தும் ஆவணம் என்னும் வகையிலும், இந்த விடயங்களை இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்த சமயத்திலே, நாம் அவரை நேரில் சந்தித்து வெளிப்படுத்த காத்திருந்த நிலையில் எமக்கு அத்தகைய சந்தர்ப்பம் கிடைத்திருக்காத நிலையில், தமிழ் மக்களின் உண்மையான அரசியல் அபிலாசைகளை இக்டிகதம் ஊடாக கௌரவ வெளிவிவகார அமைச்சர் ஊடாக இந்திய அரசின் மேலான கவனத்திற்குக் கொண்டுவரவிரும்புகின்றோம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினர்

தலைவர்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

செல்வராசா கஜேந்திரன்

பாராளுமன்ற உறுப்பினர்

பொதுச் செயலாளர்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

சர்வதேச பேட்மிண்டன் போட்டி – பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தல் !

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், தாய்லாந்தைச் சேர்ந்த பூசனனுடன் பலப்பரீட்சை நடத்திய சிந்து, 49 நிமிடங்களில் 21-16, 21-8 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார்.
ஐதராபாத்தைச் சேர்ந்த பி.வி.சிந்து, இதுவரை பூசனனுடன் 17 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். அதில் 16 முறை சிந்து வெற்றி பெற்றிருக்கிறார். 2019ல் ஹாங்காங் ஓபனில் மட்டும் தோல்வி அடைந்துள்ளார்.
இந்த சீசனில் இரண்டாவது சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார் சிந்து. முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் லக்னோவில் நடந்த சையது மோடி சர்வதேச போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.

மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோகித்சர்மாவுக்கு அபராதம் !

டெல்லி கேப்பிட்டல்சுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன் தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் மும்பை அணி குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்கவில்லை. அதிக நேரம் எடுத்துக் கொண்டது.
மெதுவாக பந்து வீசியதற்காக தலைவர் என்ற முறையில் ரோகித்சர்மா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு இந்திய மதிப்பில்  ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

94வது ஒஸ்கார் விருது விழா – அறிவிப்பாளரின் முகத்தில் பளாரென அறைந்த நடிகர் வில் ஸ்மித் – காரணம் என்ன..?

ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித் நிகழ்ச்சி தொகுப்பாளரின் கிறிஸ் ரோக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹொவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் நடைபெறும் ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவானது, இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெறுகிறது.

ஒஸ்கார் விருது விழா கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக இந்த ஆண்டு ஒஸ்கார் விருதுக்கு வந்திருந்தார். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் நகைச்சுவையாக பேசி கொண்டிருந்தார்.

அவர் நடிகர் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் பற்றி நகைச்சுவையாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நடிகையின் கணவரும் ஹொலிவுட் நடிகருமான வில் ஸ்மித், மேடையை நெருங்கி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

பின்னர் அவர் தனது இருக்கைக்குத் திரும்பி, “என் மனைவியின் பெயரை உன் வாயிலிருந்து விலக்கிவிடு” கூச்சலிட்டார். நடிகர் வில் ஸ்மித், கிறிஸ் ராக்கை தனது மனைவியை கேலி செய்ததற்காக மேடையில் அறைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சிறந்த நடிகருக்கான ஒஸ்கர் விருதை ஹொலிவுட் நடிகர் “வில் ஸ்மித்” தட்டி சென்றுள்ளார். “கிங் ரிச்சர்ட்“ திரைப்படத்திற்காக வில் ஸ்மித்துக்கு ஒஸ்கார் விருது வழங்கப்பட்டது. ஒஸ்கர் விருது கிடைத்ததும் அப்படி நடந்து கொண்டதற்கு மன்னிப்பையும் கேட்டுக்கொண்டார் ஸ்மித்.

94 வது ஆஸ்கர் விருது விபரங்கள் – சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர்  வில் ஸ்மித்திற்கு !

நடப்பாண்டிற்கான 94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர்  வில் ஸ்மித்திற்கு முதன்முறையாக கிடைத்துள்ளது. ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றுள்ளார்.
அமெரிக்க திரைப்படம் "டியூன்"  6 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது
சிறந்த நடிகைக்கான விருது ஜெசிகா சாஸ்டைனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
The Eyes of Tammy Faye திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்துள்ளது.
‘தி பவர் ஆஃப் தி டாக்’ திரைப்படத்தை இயக்கியதற்காக ஜேன் கேம்பியன் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதை வென்றார். கோடா சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றுள்ளது.
சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை ஜென்னி பீவன் வென்றுள்ளார்.
இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ் , ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் விழாவை தொகுத்து வழங்கினர். ஆஸ்கர் விருது விழாவை மூன்று பெண்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறை.
டெனிஸ் வில்லெனு இயக்கிய அமெரிக்க திரைப்படமான “டியூன்”  திரைப்படம், சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது என்கான்டோ திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.
ஜப்பானிய திரைப்படமான “டிரைவ் மை கார்” சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது.
சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை ‘தி குயின் ஆப் பேஸ்கட்பால்’ திரைப்படம் வென்றது.
கோடா திரைப்படத்தில் நடித்த  ட்ராய் கோட்சூர் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார்.
வெஸ்ட் சைடு ஸ்டோரி திரைப்படத்தில் நடித்த அரியானா டிபோஸ் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது வென்றுள்ளார்.

மீண்டும் முடங்கும் சீனா !

சீனாவில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து உள்ளது. தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க சினாவில் மீண்டும் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதிக்கத்தொடங்கி உள்ளது. ஏற்கனவே பல இடங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஷாங்காய் உள்பட பல நகரங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதையொட்டி கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அங்குள்ள கேளிக்கை விடுதிகள் மூடப்பட்டு உள்ளன.

ஏற்கனவே அங்குள்ள டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா மூடப்பட்டு உள்ளது குறிபிடத்தக்கது. பொது போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

“ரணிலை பிரதமராக்க நாங்கள் பைத்தியம் இல்லை.”- ஆளுந்தரப்பு அறிவிப்பு !

ரணில்விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கும் நோக்கம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவினை சேர்ந்த  அமைச்சர் ரோகித அபயகுணரட்ண தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நபர் ஒருவரை பிரதமராக நியமிக்கும் அளவிற்கு பொதுஜனபெரமுனவில் எவரும் பைத்தியக்காரர்கள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பழைய அரசியல் கட்சியை சேர்ந்தவர் அந்த கட்சி நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை கூட கைப்பற்றமுடியாத கட்சி என பெயர்வாங்கியுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மிகவும் பொருத்தமான ஒருவர் பிரதமர் பதவியில் உள்ள நிலையில் புதிய பிரதமரை நியமிக்கவேண்டிய அவசியம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அவசர உணவு உதவியாக 2,000 தொன் அரிசியை வழங்கும் சீன அரசாங்கம் !

2022 ஆம் ஆண்டு சீனா-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65 வது ஆண்டு நிறைவையும், இரப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் 70 வது ஆண்டு நிறைவையும் குறிக்கிறது.

இரு நாடுகளும் பரஸ்பரம் உதவி செய்யும் பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்கின்றன. அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கைக்கு அவசர உணவு உதவியாக 2,000 தொன் அரிசியை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் மொத்த மதிப்பு சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலராகும்.

தொடரும் கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் வியத்தகு முறையில் மாறிவரும் சர்வதேச சூழ்நிலை ஆகியவை உலகளாவிய உணவுப் பற்றாக்குறை மற்றும் கப்பல் திறனை மேலும் மோசமாக்கியுள்ளன. இந்தப் பின்னணியில், இரு நாடுகளின் தொழில்நுட்பக் குழுக்களும் இணைந்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஏற்பாடுகளை இறுதி செய்வதற்கும், உதவிகளை இலங்கைக்கு விரைவில் வழங்குவதற்கும் நெருக்கமாகச் செயற்படும்.

இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா எப்போதும் ஆதரவளிக்கும் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிடமிருந்து மேலுமொரு பெரிய தொகையை கடனாக கோரியுள்ள இலங்கை !

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து மேலதிகமாக ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை கோரியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது அயல்நாட்டின் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள வேளையில் இந்த தகவலை இரண்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனவரி 2020 முதல் அந்நியசெலாவணி கையிருப்பு 70 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதால் நாணயபெறுமதியை இறக்கத்தை மேற்கொண்டுள்ள இலங்கை அத்தியாவசிய உணவுகள் மற்றும் எரிபொருளிற்கு தேவையான டொலரை பெற்றுக்கொள்வதில் பெரும்நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன் சர்வதேச நிதி வழங்குநர்களிடம் உதவிகளை கோருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

அரிசி கோதுமைமா தானியங்கள் சீனி மருந்துபோன்றவற்றை இறக்குமதி செய்வதற்கான புதிய கடனுக்கான வேண்டுகோளை பூர்த்திசெய்ய தயார் என இந்தியா தெரிவித்துள்ளது என இந்த விடயத்தை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை இந்தியாவிடமிருந்து மேலதிகமாக ஒரு பில்லியன் டொலரை கோரியுள்ளது என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே இந்தியா உறுதியளித்துள்ள ஒரு பில்லியன் டொலர் கடனுதவிக்கு மேலதிகமாக இந்த உதவி கோரப்பட்டுள்ளது என அவை தெரிவித்துள்ளன. பேச்சுவார்த்தைகள் இரகசியமாக இடம்பெறுவதால் தகவலை தெரிவித்தவர்கள் தங்களை அடையாளம் காட்டமுன்வரவில்லை. இலங்கையின் நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களும் இந்திய வெளிவிவகார அமைச்சும் இது குறித்த கேள்விகளிற்கு பதிலளிக்கவில்லை.

முக்கிய இறக்குமதிகளிற்கு செலுத்துவதற்காக இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் டொலரை பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் இந்த மாதம் புதுடில்லியில் கைச்சாத்திட்டார். ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையின் நிதியமைச்சரை திங்கள்கிழமை சந்தித்தார்.
பொருளாதார நிலைமைகுறித்தும் இந்தியாவின் ஆதரவும் குறித்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன் என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவினாலேயே இலங்கையை மீட்டெடுக்க முடியும் – ஐக்கிய தேசிய கட்சி !

முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க விரைவில் முக்கிய பங்களிப்பொன்றை வழங்கவுள்ளார் என ஐக்கியதேசிய கட்சியின் வஜிர அபயவர்த்தன செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

மேலும்,

விரைவில் தேசிய கருத்தொருமைப்பாடு ஏற்படும் இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றுபடும் இதில் ரணில்விக்கிரமசிங்க முக்கிய பங்களிப்பை வழங்குவார். கட்சி அரசியலை மறந்துவிட்டு தேசிய கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்துவதே தற்போதைய தேவை.

நாட்டை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீட்கக்கூடிய திறமையான நபரிடம் நாட்டை கையளிக்கவேண்டும்.
பொருளாதாரத்தை கையாள்வதற்கு மிகவும் பொருத்தமான நபர் ரணில்விக்கிரமசிங்கவே.

முன்னாள் பிரதமரே தேசத்தின் பாதுகாவலனாக வருவார் என கருதுகின்றேன் என தெரிவித்துள்ள அவர் இலங்கைக்கு 1999இல் ரஸ்யா மேற்கொண்டஅரசியல் சீர்திருத்தம் போன்றதொன்றே அவசியம் என குறிப்பிட்டுள்ளார். அவ்வேளை ரஸ்யாவில் ஜனாதிபதி பொறிஸ்யெல்ட்சின் பிரதமராக விளாடிமிர் புட்டினை நியமித்தார்,புட்டின் பின்னர் வெற்றிகரமாக நாட்டின் தலைவரானார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில அரசியல் தலைவர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள் தங்களிடம் ஆட்சியை ஒப்படைக்கவேண்டும் நாங்கள் செய்துகாட்டுவோம் என்கின்றனர் ஆனால் முதலில் அவர்கள் தங்களை நிரூபிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.