06

06

சிறுமிகளை நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு அச்சுறுத்திய இலங்கை இளைஞன் அவுஸ்ரேலியாவில் கைது !

அவுஸ்திரேலியாவில் பதின்ம வயதுக்குட்பட்ட சிறுமிகளை நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு அச்சுறுத்திய குற்றத்துக்காக 24 வயதான இலங்கையைச் சேர்ந்த இளைஞருக்கு விக்டோரியா நீதிமன்றம் 13 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இம் மாணவன் தனக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு பல சிறுமிகளை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புகைப்படங்களை தனக்கு அனுப்பி வைக்குமாறும் இல்லையெனில், பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்படுமெனவும் எச்சரித்துள்ளார்.

இவர் மீது சிறுவர் துஷ்பிரயோக வழக்குடன் சம்பந்தப்பட்ட 25 குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன

விசாரணையின் பின்னர் அவருக்கு 13 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக் காலம் முடிந்ததும் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவாரென அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இம்மாணவன் உயர் கல்வியை தொடர்வதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளியானது 15வது ஐபிஎல் கிரிகெட் தொடர் போட்டி அட்டவணை – மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் ! ( அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது )

15வது ஐபிஎல் கிரிகெட் தொடர் வரும் 26ம் திகதி தொடங்க உள்ள நிலையில் போட்டி அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
65 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள், 4 பிளே ஆப் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. கடைசி லீக் ஆட்டம் மே 22ம் தேதி வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
வான்கடே மைதானம் மற்றும் டி.ஒய்.பாட்டீல் ஆகிய மைதானங்களில் தலா 20 லீக் ஆட்டங்களும், மும்பை பிரபோன் மைதானம் மற்றும் புனே எம்சிஏ சர்வதேச ஸ்டேடியத்தில் தலா 15 போட்டிகளும் நடக்கின்றன. இரண்டு போட்டிகள் நடைபெறும் நாட்களில் முதல் போட்டி பிற்பகல் 3.30 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 7.30 மணிக்கும் தொடங்கும்.
லீக் ஆட்டங்களுக்கான அட்டவணை மட்டும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிளேஆப் போட்டிகள் மற்றும் மே 29ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும் அணிகள் மற்றும் மைதானங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
IPL 2022 Schedule
IPL 2022 Schedule
(அட்டவணையை காண இங்கே கிளிக் செய்யவும்)

“மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசின் செயற்பாடுகளில் ஐ.நா தலையிடுகிறது.” – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு !

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலெட்டின் அறிக்கையில் பாரதூரமான முரண்பாடுகளும், பலவீனங்களும் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

மூன்று தேர்தல்களில் தொடர்ந்தும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசின் செயற்பாடுகளில் தலையிடுவதைப் போன்று இந்த அறிக்கை அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய உறுப்பு நாடுகளைப் பொறுத்தமட்டில் இதேபோன்ற விசாரணை நடைமுறையில் பாகுபாட்டை காட்டுவது, ஐக்கிய நாடுகள் சபையின் அடித்தளத்தையே தாக்கும் செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இது நாடுகளின் இறையாண்மை, சமத்துவம் தொடர்பான கொள்கைகளை மீறுகிறது என்றும் பேரவை மீதான நம்பிக்கையை குறையாமல் தக்கவைத்துக் கொள்வது அவசியம். ஆகவே இலங்கையின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் மேலோட்டமான முடிவுகள், அறிக்கையில் இடம்பெற்றிருப்பது ஆழ்ந்த வருத்தததுக்குரியது என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

எனினும் இலங்கை அரசாங்கம், மீட்டெடுத்த பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும், சமமான முறையில் நிலையான முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கும் உறுதியாக தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

“ராஜபக்ஷக்கள் ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும்.”- ஹட்டனில் எம்.ஏ.சுமந்திரன் !

“மக்களை ஒடுக்குவதற்கு ஆட்சியாளர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவார்கள். அதனால்தான் இப்படியான பயங்கர சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்துகின்றோம்.” – என்று அறைகூவல் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, நீண்டநேர மின்வெட்டு, பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் ஹட்டனில் இன்று (06) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மேலும் கூறியவை வருமாறு,

“இந்த எதிர்ப்பு போராட்டத்திலும், பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக நடைபெறும் கையெழுத்து போராட்டத்திலும் பங்கேற்பதற்காகவே நாம் மலையகம் வந்துள்ளோம்.

நாட்டில் ஒருவரும் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. எந்த பொருளை வாங்கச்சென்றாலும் ´இல்லை´ என்ற பதிலே வழங்கப்படுகின்றது. அப்படியே பொருட்கள் இருந்தாலும் அவற்றின் விலை அதிகம். அத்தியாவசியப் பொருட்களின் விலைகள்கூட எகிறியுள்ளன. நாட்டிலே பிரயாணம் செய்ய முடியவில்லை. வீட்டிலே சமைக்க முடியவில்லை.

நாட்டை வளப்படுத்துவோம், பாதுகாப்போம் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இரு வருடங்களுக்குள்ளேயே நாட்டை அதாள பாதாளத்துக்குள் தள்ளிவிட்டனர். நாட்டு மக்களும் விழுந்துள்ளனர். இப்படியான ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் இருக்கக்கூடாது. மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். மக்களை ஒடுக்குவதற்கு ஆட்சியாளர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவார்கள். அதனால்தான் இப்படியான பயங்கர சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்துகின்றோம்.” – என்றார் சுமந்திரன்.

tiktok செய்த முஸ்லீம் இளைஞர் கைது !

திருக்கோவில் பிரதேசத்தில் கோவில் , தேவலாயங்களை வீடியோ பதிவு செய்த இளைஞரை திருக்கோவில் பொலிஸார்  சந்தேகத்தின் பெயரில் நேற்று  கைது செய்துள்ளனர்.

டிக் டாக் வீடியோசெய்த முஸ்லிம் இளைஞர் கைது – Kalaikathir News Paper From  Jaffna : காலைக்கதிர் -நாளிதழ் – காலை மாலை பதிப்புகள்

 

திருகோணமலையை பாலையூற்று பகுதியை  சேர்ந்த 29 வயதுடைய மொகம்மட் அஸாரூதின்  என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் .

சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இன்றைய  தினம் அக்கரைப்பற்று  நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

“ இலங்கையில் தொடரும் சித்திரவதைகளிற்கு இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவே காரணம்.” – பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சர்மா

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க் குற்றவாளிகளை தடை செய்வதற்கு பிரித்தானிய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் விரேந்திர சர்மா வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மற்றும் தற்போது இலங்கையில் தொடரும் சித்திரவதைகளிற்கும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவே காரணம் என்றும் அவர் கூறினார்.

சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடந்த வருடம் அமெரிக்கா பயணத்தடை விதித்தது போன்று பிரித்தானியாவும் தங்கள் மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகார சபையின் கீழ் தடை செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

மேலும் இந்த நடவடிக்கை பொறுப்புக்கூறல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கையாகவும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் கடப்பாட்டினை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

சவேந்திர சில்வா தொடர்பான யுத்தகுற்ற ஆதாரங்கள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தடை விதிப்பது குறித்து பிரித்தானியா தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் தந்தை மகன் பலி – பேரூந்தின் கண்ணாடிகளை உடைத்த மக்கள் !

வவுனியா பூவரசங்குளம் குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று காலை 9.00 மணியளவில் பேரூந்து – மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்

வவுனியா – மன்னார் வீதி குருக்கள்புதுக்குளம் பகுதியில் உள்ளூர் வீதியிலிருந்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கில் ஏற முற்பட்டுள்ளது இதன் போது மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலில் பேரூந்தின் கீழ்ப்பகுதியில் சிக்குண்டு மோட்டார் சைக்கிலில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் வழியில் உயிழந்துள்ளார்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் இணைந்து பேரூந்தின் மீது தாக்குதல் மேற்கொண்டு பேரூந்தின் கண்ணாடிகளை சேதப்படுத்தியுள்ளனர்.

இதனால் அப்பகுதில் பதட்ட நிலமை நிலவியதுடன் பூவரசங்குளம் பொலிஸார் நிலமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்

இவ் விபத்தில் 35 வயதுடைய தந்தை மற்றும் 17 வயதுடைய மகன் ஆகியோரே உயிரிழந்தவர்களவார்.

“ஐ.நா அறிக்கை  காலத்திற்கு காலம் வரும் அறிக்கையே.” – அமைச்சர் டக்ளஸ்

ஐ.நா ஆணையாளரின் அறிக்கை  காலத்திற்கு காலம் வரும் அறிக்கையே.  இங்கு எவ்வாறான நடவடிக்கைகள் உள்ளது என்பதிலேயே கூடுதல் கவனம் வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவிக்கையில்

” நீண்ட கால இழுபறிக்கு மத்தியில் இலங்கையில் இருந்து 50 பேரும் இந்தியாவில் இருந்து 50 பேரும் கச்சதீவுக்கு போகலாம் என தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது . அதன் பின்னர் ஜனாதிபதியுடன் நான் கலந்துரையாடி இரு பக்கத்தில் இருந்தும் நூறு நூறு பேராக கச்சதீவு அந்தோனியார் திருவிழாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கின்றேன் .

மேலும் கச்சதீவுக்கு நானும் செல்வதாக உள்ளேன். ஏனெனில் இருதரப்பு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வையும் நட்புறவையும் ஏற்படுத்துவற்காக நானும் செல்வதாக உள்ளேன் .

இந்திய இழுவை மடி படகுகளால் பாதிக்கப்பட்ட மக்களினுடைய போராட்டங்களின் ஊடாக இலங்கை அரசாங்கம் எல்லைமீறி வந்து மீன்பிடியில் ஈடுபடுபவர்களை தடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு வருபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளின் ஊடாக அந்த தொழிலாளர்களை விடுவிப்பது என்றும் மறுபுறத்தில் படகுகளை அரசு உடமையாக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பதாகவும் முடிவெடுத்து அது நடைமுறைக்கு வந்துள்ளது

இதேவேளை ஐ.நா ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த போது இது காலத்திற்கு காலம் வரும் அறிக்கையே . ஆனால் இங்கு எவ்வாறான நடவடிக்கைகள் உள்ளது என்பதில்தான் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் ” எனவும் அவர் தெரிவித்தார்.

“தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட வேண்டிய காலம் வந்துள்ளது.” – இரா. சாணக்கியன்

“தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட வேண்டிய காலம் வந்துள்ளது.” என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நுவரெலியா நகரில் இன்று (06) கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறிய போது,

எமது விடுதலைப்போராட்டத்துக்கு மலையக மக்களும் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். இதனால் பயங்கரவாத தடைச்சட்டத்தால் அவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, தமது அரசியல் எதிராளிகளை ஒடுக்குவதற்காகவே இச்சட்டத்தை ஆளுந்தரப்பு பயன்படுத்திவருகின்றது. இதனால்தான் அனைத்து இன மக்களையும் இந்த பயணத்தில் இணைத்துள்ளோம்.

அதேவேளை, மலையக மக்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்கப்படும் என அரசு கூறியது. ஆனால் அது உரிய வகையில் நடக்கவில்லை. அதற்கு எதிராக மக்கள் போராடினால், அவர்களுக்கு எதிராகவும் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படலாம். கைது செய்யப்படலாம்.

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மலையக மக்களே திகழ்கின்றனர். அந்திய செலாவணியை பெற்றுக்கொடுக்கின்றனர். எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு அமைச்சு பதவி கிடைத்துள்ளது. வாழ்த்து தெரிவித்து பதாதை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கைத்தொழில் அமைச்சரான அவர், மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட வேண்டிய காலம் வந்துள்ளது. அந்தவகையில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக தற்போது ஓரணியில் திரண்டுள்ளோம். மக்களும் ஒன்றுபட்டுள்ளனர். எனவே, சிறந்த எதிர்காலத்துக்கான ஆரம்பப்புள்ளியாகக்கூட இது அமையலாம். எனவும் அவர் தெரிவித்தார்.

9வது முறையாகவும் ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ள வடகொரியா !

உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரியா புதிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இதனை தென் கொரிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தென்கொரியா அரசு தரப்பில், “ வடகொரியா சனிக்கிழமை கடலுக்கு அடியில் ஏவுகணை சோதனை நடத்தியது. தலைநகரிலிருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில் இந்த சோதனையை வடகொரியா நடத்தி இருக்கிறது. எதற்காக இந்த சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது என்பது பற்றிய விவரம் இதுவரை தெரியவில்லை ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வானில் இருக்கும்போதே இலக்குகளை தேர்ந்தெடுத்து அழிக்கும் வகையிலான டேக்டிகள் கைடட் ( tactical guided) என்ற ஏவுகணையை வடகொரியா ஜனவரி மாதம் பரிசோதித்தது.

2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வடகொரியா இதுவரை 9 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கொரோனா காரணமாக மோசமான நிலையை அடைந்துள்ள பொருளாதாரத்தைக் கவனிக்காமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேம்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகிறது என்று ஐ.நா. கடந்த ஆண்டு கண்டித்திருந்தது. இந்த நிலையில், வடகொரியா இந்தச் சோதனையை நடத்தியுள்ளது.

தனது பாதுகாப்புக்காக இராணுவ பலத்தை அதிகரிக்கவே இந்த ஏவுகணை சோதனைகளை செய்வதாக வடகொரியா தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இதனை ஐ. நா. சபை நிராகரிதிருந்தததும் குறிப்பிடத்தக்கது.