11

11

புரட்சியாளரான சே குவேராவை துப்பாக்கி மூலம்  சுட்டுக் கொன்ற இராணுவவீரர் மரணம் !

மார்க்சிஸ்ட் புரட்சியாளரான சே குவேராவை துப்பாக்கி மூலம்  சுட்டுக் கொன்றவராக அறியப்படும் பொலிவியா இராணுவ வீரர் மரியோ டெரான் உயிரிழந்தார். அவருக்கு வயது 80. பொலிவியா காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக மறைந்திருந்த சே குவேரா பட்டினியாலும், ஆஸ்துமா நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இதனைப் பயன்படுத்தி கியூப – அமெரிக்க சிஐஏ அதிகாரிகள் உதவியுடன் பொலிவிய இராணுவத்தினர் அக்டோபர் 8 ஆம் திகதி 1967 ஆம் ஆண்டு சே குவேராவைப் பிடித்தனர். பின்னர் பொலிவிய இராணுவ வீரர்களால் சே குவேரா சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் சேகுவேராவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவராக அறியப்படும், பொலிய ராணுவ வீரர் மரியோ டெரான் தற்போது உடல் நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார். இந்தச் செய்தியை அவரது உறவினர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். அவரது மரணத்துக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

சே குவேராவை கொன்ற நிகழ்வை மரியோ டெரான் ஒரு முறை பகிர்ந்திருந்தார்.

அதில் அவர், ”சிறைப்பிடிக்கப்பட்ட சேகுவேரா, லா ஹிகுவேரா பகுதியில் பாழடைந்த பள்ளிக்கு அழைத்து வரப்பட்டார். அது என் வாழ்வின் மிக மோசமான தருணம். அந்த நேரத்தில் சே குவேரா பிரம்மாண்டமாக தோற்றமளித்தார். அவரது கண்கள் மிகவும் பிரகாசமாக இருந்தன.சேவின் பார்வை என் மீது விழும்போது எனக்கு மயக்கம் ஏற்பட்டது. ஒரே ஒரு விரைவான கண் அசைவால் சே குவேரா என்னை நிராயுதபாணியாக்க முடியும் என்பதை நான் அப்போது உணர்ந்தேன். சே என்னை நோக்கி அமைதியாக இருங்கள் என்று கூறினார், என்னை நன்றாகப் பாருங்கள். நீங்கள் ஒரு மனிதனைக் கொல்லப் போகிறீர்கள் என்றார். அதனைத் தொடர்ந்து நான் அந்த அறையின் வாசல் பக்கம் சென்றேன். கண்களை மூடிக் கொண்டு சே குவேராவை நோக்கி துப்பாக்கியால் சுட்டேன்” என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“நாம் பலமாகவே இருக்கிறோம்.” –  அமைச்சர் நாமல் ராஜபக்ச

எமது ஆட்சி பலமாகவே இருக்கின்றது. பொருளாதார ரீதியில்தான் நாம் சவால்களை எதிர்நோக்கியுள்ளோம். இந்நிலையில், ஆட்சி கவிழ ஒருபோதும் இடமளியோம். பொருளாதாரப் பிரச்சினைக்கு முடிவு காண்பதே எமது திட்டம்.” என  அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

தேசிய  அரசமைப்பது தொடர்பில் அரசு எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்றும், எதிரணி தரப்பில் இருந்தே இவ்வாறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் சர்வகட்சி மாநாடென்பது பொருத்தமான நடவடிக்கை. அதில் பங்கேற்று, கட்சி அரசியலுக்கு அப்பால், நாடு தொடர்பான யோசனைகளை கட்சிகள் முன்வைக்க வேண்டும்” – என்றார்.

“ஆட்சி மாற்றம் இடம்பெற்றதன் பின்னர் நிச்சயமாக தண்டனை வழங்குவோம்.” – நாடாளுமன்றில் சூடுபிடித்த விவாதம் !

நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தி அரசு வரலாற்றுத் தவறைச் செய்துவிட்டது. நாட்டில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றதன் பின்னர், இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையை நிச்சயமாக வழங்குவோம்.” என  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் எரிசக்திப் பிரச்சினை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினரால் கொண்டுவரப்பட்ட  சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான நேற்றைய விவாதத்தில், அக்கட்சியின் தலைமையகத்தில் மேற்கொள்ளப்பட்ட முட்டைத் தாக்குதல் தொடர்பிலும் பலர் உரையாற்றியிருந்தனர்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதியின் இல்லத்தின் முன்பாக ஹிருணிகா போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அவரது வீட்டுக்கு முன்பாக குண்டர்கள் சென்று சத்தமிட்டனர். இதன் பின்னர் குண்டர்களோடு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்துக்குச் சென்றிருந்த ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தலைமையிலான குழுவினர், கட்சியின் அலுவலகத்தின் மீது அழுகிய முட்டைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.

ஹிருணிகா முட்டை வேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்கவில்லை. நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வையே ஹிருணிகா கோரியிருந்தார். ஜனாதிபதியின் இல்லத்துக்கு முன்பாக சத்தம் போட்டதாலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்துக்கு முன்பாக சென்று சத்தமிட்டதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார். இதுதான் தற்போதைய அரசு” – என்றார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆளுங்கட்சி எம்.பி. மதுர விதானகே,

“ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்துக்கு முன்பாக இடம்பெற்ற சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். பல கேள்விகளை உள்ளடக்கிய ஆவணம் ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தியினரிடம் வழங்குவதற்காகவே அங்கு சென்றிருந்தேன். எவ்வாறாயினும் அங்கிருந்த மக்கள் சிலரே அழுகிய முட்டைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியிருக்கக்கூடும்

இந்தத் தாக்குதலுக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. மேற்படி தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பொலிஸாருக்கு நான் ஆலோசனை வழங்கியுள்ளேன்” – என்றார்.

இதேவேளை, இதன்போது குறுக்கீடு செய்து உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க,

“மதுர விதானகே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்துக்குச் சென்றதை நாம் பார்த்தோம். எங்களுக்கு உள்ள பிரச்சினை என்னவென்றால், தாக்குதல் நடத்தச் சென்றவரே காவற்துறையினர் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கியதாகக் கூறுவதுதான்” – என்றார்.

இலங்கையிலிருந்து ஓட்டம் பிடிக்கும் சுற்றுலாப்பயணிகள் !

மின்சார நெருக்கடி மற்றும் டீசல் தட்டுப்பாடு காரணமாக நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமது பயணங்களை நிறுத்தியுள்ள தாக சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹோட்டல் உரிமையாளர்கள் கூறுகையில், ‘ஹோட்டல்களில் மின்வெட்டு ஏற்பட்டால் டீசலில் இயங்கும் ஜெனரேட்டர்கள் மூலமே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் பயணங்களுக்கு எரிபொருளை வழங்க முடியாமல் யால மற்றும் ஏனைய பூங்காக்களும் வேகம் குறைந்துள்ளன.

மேலும், ஹோட்டல்களில் உணவு தயாரித்தலுக்கும் கேஸ் தட்டுப்பாடு காரணமாக நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்தக் காரணங்களால் சுற்றுலாப் பயணிகள் விரக்தியுடன் இலங்கையை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாகவும், இது சுற்றுலாத் துறைக்கு பலத்த அடியாகும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்

இலங்கை ரூபாவின் பெறுமதி குறைப்பு எதற்காக..? – மத்திய வங்கியின் ஆளுநர் விளக்கம் !

இலங்கை ரூபாவின் பெறுமதியைக் குறைப்பதற்கான நடவடிக்கையானது, நாடு கடந்த வருடங்களில் மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று தெரிவித்தார்.

 

கப்ரால் பேஸ்புக்கில் பதிவேற்றிய ஒரு குறுகிய காணொளியில் இதனை அவர் கூறியுள்ளார்.

வாரத்தின் தொடக்கத்தில் மத்திய வங்கி ஒரு நெகிழ்வான மாற்று விகித கட்டமைப்பை அறிமுகப்படுத்தியது. இது வியாழனன்று டொலருக்கு எதிராக ரூபாவின் மதிப்பு சுமார் 30% குறைந்து 260 ரூபாவாக இருந்தது.

“ஒரு நெகிழ்வான மாற்று விகிதத்தை விதிப்பதற்கான முடிவு சவால்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இவற்றை நிர்வகிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அசுர வேகத்தில் எகிறும் உணவுப்பொருட்களின் விலை!

நாட்டில் உணவுப் பொதியொன்றின் விலையும் உயர்வடைவதாக அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாகவும் அச்சங்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய விலையின் அடிப்படையில், உணவுப் பொதியொன்று 20 முதல் 30 ரூபாய் வரையில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொத்து ரொட்டியின் விலையை 10 முதல் 15 ரூபாவினால் அதிகரிப்பதற்கும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை பாண் உட்பட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளையும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன அறிவித்துள்ளார்.

மேலும் பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான மூலப்பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதால் ஆயிரக்கணக்கான சிறிய பேக்கரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய பேக்கரிகளின் உரிமையாளர்கள் கடும் சவாலுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 450g பாண் ஒன்றின் விலை 20 தொடக்கம் 30 ரூபா வரையில் அதிகரிக்கப்படுவதுடன், பணிஸ் ஒன்றின் விலையானது பத்து ரூபாவல் அதிகரிக்கப்படுகிறது.

“எம் மீதான நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். பொருளாதார சிக்கலுக்கு ரஷ்யாவே காரணம்.” – நிதி அமைச்சர் பஷில்

லங்கா IOC நிறுவனம் எரிபொருளுக்கான விலையை அதிகரித்ததை போன்று, ஏனைய நிறுவனங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

நாட்டிற்கு வெளியில் நடக்கும் விடயங்கள் காரணமாகவே இவ்வாறான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இடம்பெறும் சம்பவங்களுக்கு தம்மால் தலையீடு செய்ய முடியாது.

உள்நாட்டில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு எவ்வாறேனும் தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்படும். ஒரு பிரச்சினை முடியும் போது, மற்றுமொரு பிரச்சினை உருவாகின்றது. தற்போது யுக்ரேன் ரஷ்யா யுத்தம் ஆரம்பித்துள்ளது.

நிவாரணங்களை வழங்க முழுமையாக முயற்சித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் தங்கள் மீது கொண்ட நம்பிக்கையை அவ்வாறே வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எமது அமைச்சர்கள் அனைத்து விதமான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றனர் எனவும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டம் – ரிஷாத் பதியுதீன் கையெழுத்து !

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை  இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை)  பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

முஸ்லீம் இடதுசாரி முன்னணியின் ஏற்பாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன், முஜிபுர் ரகுமான் மனோ கணேசன் ஆகியோர் இதுதொடர்பான ஆவணத்தில் கைச்சாத்திட்டிருந்தனர்.

அத்துடன், அரசியல் செயற்பாட்டாளர் விக்ரமபாகு கருணாரத்ன உள்ளிட்ட சிவில் சமூக பிரதிநிதிகளும் பெருமளவிலான பொதுமக்களும் இதன்போது கையெழுத்திட்டிருந்தனர்.

பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ள பஷில் ராஜபக்ஷ – விமல்வீரவன்ச விசனம் !

பசில் ராஜபக்ச சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார் எனவும் இந்த நாட்டு மக்கள் ஓன்றுதிரண்டு அவரை நாட்டை விட்டு வெளியேற்றவேண்டும் எனவும் ஆளுந்தரப்பு  நாடாளுமன்ற உறுப்பினர்   விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை பசில் ராஜபக்ச தனது பாரம்பரியமாக மாற்றிவிட்டார். ஜனாதிபதியாலோ அல்லது பிரதமராலோ எதுவும் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவிற்கு தெரியாமலே இவை அனைத்தும் இடம்பெறுகின்றன என கருதலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் மேற்கத்திய நாடுகள் பிரச்னையை மேலும் தீவிரமாக்குகின்றன.” – ரஷ்யா குற்றச்சாட்டு !

துருக்கியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் வியாழக்கிழமை நடத்திய முதல்கட்டப் பேச்சுவாா்த்தை போா் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படாமலேயே நிறைவடைந்தது.

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவுக்கும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா் டிமித்ரோ குலேபாவுக்கும் இடையே துருக்கியின் துறைமுக நகரான ஆன்டால்யாவில் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

உக்ரைனில் போா் நடைபெற்று வரும் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பாதுகாப்பு வழித்தடங்கள் அமைப்பது, அங்கு போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வது தொடா்பாக விவாதிப்பதற்காக அந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

எனினும், முக்கிய விவகாரங்களில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால் எந்த ஒப்பந்தமும் பேச்சுவாா்த்தையில் மேற்கொள்ளப்படவில்லை என்று உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா் டிமித்ரோ குலேபா கூறினாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது : லாவ்ரோவுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ள அவா் தயாராக இல்லை. அவா் முன்வைக்கும் அம்சங்கள் அனைத்தும் போரில் உக்ரைன் சரணடைய வேண்டும் என்பதைப் போல் உள்ளது. ஆனால், ரஷ்யாவிடம் உக்ரைன் ஒருபோதும் சரணடையாது.

போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பாதுகாப்பு வழித்தடம் அமைப்பதற்கான நம்பிக்கையையும் சொ்கெய் லாவ்ரோவ் பொய்யாக்கிவிட்டாா். எனினும், போரால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்குத் தீா்வு காண்பதற்கான பேச்சுவாா்த்தையைத் தொடர வேண்டும் என்று இருவரும் ஒப்புக்கொண்டோம் என்றாா் குலேபா.

பேச்சுவாா்த்தைக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் கூறியதாவது :

உக்ரைன் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அந்த நாடு அனுப்பும் எந்த பிரதிநிதிகளுடனும் பேச்சுவாா்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருக்கிறது. எனினும், சண்டை நிறுத்தம் மற்றும் பாதுகாப்பு வழித்தடங்கள் குறித்த இருதரப்பு பேச்சுவாா்த்தைக்கு பெலாரஸில் தற்போது பல சுற்றுகளாக நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தைக்கு மாற்று ஏதும் இல்லை.

தற்போது உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சருடன் நடைபெற்றுள்ள பேச்சுவாா்த்தை அதனை நிரூபித்துள்ளது.

அந்தப் பேச்சுவாா்த்தையில், உக்ரைன் தனது மேற்கத்திய சாா்பு நிலையைக் கைவிட்டு நடுநிலை வகிக்க வேண்டும், ஆயுதங்களைக் கைவிடவேண்டும் என்ற ரஷ்யாவின் நிபந்தனைகளை முன்வைத்தேன். அதற்கான பதிலை உக்ரைன் அரசிடமிருந்து எதிா்பாா்த்துள்ளேன்.

அந்த நாட்டுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் மேற்கத்திய நாடுகள் பிரச்னையை மேலும் தீவிரமாக்குகின்றன.

இந்த விவகாரத்தில் எங்கள் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நாங்கள் சமாளிப்போம். பொருளாதார விவகாரத்தில் ரஷ்யா எப்போதுமே மேற்கத்திய நாடுகளை சாா்ந்து இயங்கவில்லை என அவர் கூறியுள்ளார்.