19

19

வீட்டில் கஞ்சா வளர்த்த பெண் – சுற்றி வளைத்த பொலிஸ் !

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பால்சேனையில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா செடி வளர்த்து வந்த பெண் ஒருவரை நேற்று (18) மாலை கைது செய்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த வீட்டை சம்பவ தினமான நேற்று மாலை பொலிசார் முற்றுகையிட்டனர். இதன் போது வீட்டில் வளர்த்து வந்த 5 அடி உயரமன கஞ்சா செடியை மீட்டதுடன் பெண் ஒருவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஒரு கையால் இந்தியாவிடமிருந்து கடன் – மறு கையால் சீனாவிடம் கடன் கோரும் இலங்கை !

இந்தியாவிடமிருந்து நிதி உதவியை பெற்றுக்கொண்ட பின்னர் இலங்கை சீனாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.

கடன்களை செலுத்துவதை ஒத்திவைப்பது தொடர்பிலும்,அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் இறக்குமதிக்கான கடன் உதவி குறித்தும் இலங்கை சீனாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வருடம் சீன வங்கிககளிற்கு இலங்கை 100 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக செலுத்தவேண்டும்.

நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து மீளும் வரை இந்த கடன்களை செலுத்துவதை ஒத்திவைக்கவேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இலங்கையின் உள்ளுர் தொழில்துறை தொடர்ந்து இயங்குவதற்கு அவசியமான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அவசியமாக கடன் உதவியை சீனாவிடமிருந்து இலங்கை கோரியுள்ளது.

இலங்கை மேலதிக நிதிஉதவியை கோரியுள்ளது இரு தரப்பும் இது குறித்து ஆராய்கின்றன என்பதை உறுதி செய்ய முடியும் என சீன தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி – 600 ரூபாயினால் அதிகரிக்கும் பால்மா விலை !

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் பால்மா விலை 600 ரூபாவினால் அதிகரிக்கும் நிலையேற்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரிப்பு மற்றும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக பால் மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் பால் மாவின் விலையை 600 ரூபாவினாலும், 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலையை 260 ரூபாவினாலும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த விலைகள் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், விலை அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (19) பிற்பகல் வெளியிடப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, உள்நாட்டு கேள்விக்கு தேவையான பால் மாவை இறக்குமதி செய்ய முடியாத நிலை காணப்படுவதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடன் கடிதங்களை வௌியிடுவதில் உள்ள சிரமங்கள் காரணமாக தேவையான பால் மாவை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையில் அதிகரித்த பொருளாதார நெருக்கடி – கொழும்பு தெருக்களில் குவியும் யாசகர்கள் !

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் கடந்த இரண்டு மாதங்களில் கொழும்பு வீதிகளில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.யாசகர்களில் பலர் வெளிப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறிப்பாக குடும்பங்கள் யாசகம் பெறும் நிலை கொழும்பு மாநகரில் உள்ளது.
கொழும்பு நகரில் மாத்திரம் தற்போது சுமார் 300 யாசகர்கள் யாசகம் பெறுவதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை மேல் மாகாணத்தில் மட்டும் 671 யாசகர்கள் தற்போது யாசகம் பெற்று வருகின்றனர்.

ஒரு மாதத்தில் கொழும்பில் மாத்திரம் சுமார் 10 யாசகர்களின் மரணங்கள் பதிவாகியுள்ளதாக கொழும்பு மாநகர மேலதிக மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த இறப்புகளில் தொண்ணூற்றொன்பது சதவீதமானோருக்கு உறவினர்கள் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.