பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து மேலதிகமாக ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை கோரியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது அயல்நாட்டின் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள வேளையில் இந்த தகவலை இரண்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனவரி 2020 முதல் அந்நியசெலாவணி கையிருப்பு 70 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதால் நாணயபெறுமதியை இறக்கத்தை மேற்கொண்டுள்ள இலங்கை அத்தியாவசிய உணவுகள் மற்றும் எரிபொருளிற்கு தேவையான டொலரை பெற்றுக்கொள்வதில் பெரும்நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன் சர்வதேச நிதி வழங்குநர்களிடம் உதவிகளை கோருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
அரிசி கோதுமைமா தானியங்கள் சீனி மருந்துபோன்றவற்றை இறக்குமதி செய்வதற்கான புதிய கடனுக்கான வேண்டுகோளை பூர்த்திசெய்ய தயார் என இந்தியா தெரிவித்துள்ளது என இந்த விடயத்தை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை இந்தியாவிடமிருந்து மேலதிகமாக ஒரு பில்லியன் டொலரை கோரியுள்ளது என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே இந்தியா உறுதியளித்துள்ள ஒரு பில்லியன் டொலர் கடனுதவிக்கு மேலதிகமாக இந்த உதவி கோரப்பட்டுள்ளது என அவை தெரிவித்துள்ளன. பேச்சுவார்த்தைகள் இரகசியமாக இடம்பெறுவதால் தகவலை தெரிவித்தவர்கள் தங்களை அடையாளம் காட்டமுன்வரவில்லை. இலங்கையின் நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களும் இந்திய வெளிவிவகார அமைச்சும் இது குறித்த கேள்விகளிற்கு பதிலளிக்கவில்லை.
முக்கிய இறக்குமதிகளிற்கு செலுத்துவதற்காக இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் டொலரை பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் இந்த மாதம் புதுடில்லியில் கைச்சாத்திட்டார். ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையின் நிதியமைச்சரை திங்கள்கிழமை சந்தித்தார்.
பொருளாதார நிலைமைகுறித்தும் இந்தியாவின் ஆதரவும் குறித்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன் என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.