April

April

தொடர்ந்தும் அதிகரிக்கும் மருந்துகளின் விலைகள் – 40% ஆல் அதிகரிப்பு !

60 வகையான மருந்துகளின் விலைகளை மீண்டும் திருத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த மருந்துகளின் விலைகள் 40% ஆல் அதிகரிக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமணவின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 375 மில்லி கிராம் அமோக்ஸிசிலின் கிளாவ்லினிக் அமில மாத்திரையின் விலை 59.79 ரூபாவிலிருந்து 83.71 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 250 மில்லி கிராம் குளோரித்ரோமைசின் மாத்திரையின் விலையும் ரூ.86.31 ஆக உயர்ந்துள்ளது.
100 மில்லிகிராம் டொக்சிசைக்ளின் மாத்திரையின் விலை 17.07 ரூபாவாக இருந்ததுடன், புதிய விலை 23.90 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 75 மில்லி கிராம் எஸ்பிரின் மாத்திரையின் விலை ரூ.5.06ல் இருந்து ரூ.7.08 ஆக அதிகரித்துள்ளது.
மெட்ஃபோர்மின் 500 மில்லிகிராம் மாத்திரையின் விலை 6.64 ரூபாவாக இருந்ததுடன், புதிய விலை 9.34 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 10.29 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிராம் தைரொக்ஸின் மைக்ரோகிராம் மாத்திரையின் விலையும் 14.41 ரூபாவாக உயர்ந்துள்ளதாக உரிய வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மருந்துகளின் விலைகள் முன்னதாக மார்ச் 15 ஆம் திகதி 2241/43 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரோகித் சர்மா மனதளவில் உடைந்துபோயுள்ளார் – இயன் பிஷப் 

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோகித் சர்மா மனதளவில் உடைந்துபோயுள்ளார் என்பதை அவருடன் பேசியதன் மூலம் தன்னால் புரிந்துகொள்ள முடிந்ததாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் இயன் பிஷப்  தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. விளையாடிய எட்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. அணியின் பிரதான வீரர்கள் சோபிக்க தவறியதே மும்பையின் இந்த மோசமான நிலைக்கு காரணமாக உள்ளது.  இந்நிலையில், அதுகுறித்து பேசியுள்ளார் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் இயன் பிஷப்.

“மும்பை அணி கடைசியாக விளையாடிய போட்டி முடிந்த பிறகு அந்த அணியின் கேப்டன் ரோகித் உடன் நான் பேசியிருந்தேன். அவர் உடைந்து போயுள்ளார் என்பதை என்னால் அப்போது புரிந்து கொள்ள முடிந்தது. சிறந்த வீரர்கள் கொண்ட ஒரு அணியை கட்டமைத்துள்ளனர் அதன் உரிமையாளர்கள். அதனால் அவர்கள் வெற்றிப் பாதைக்கு திரும்ப சிறு மாற்றங்கள் மட்டும் போதும் என நான் நினைக்கிறேன்.

அவர்களுக்கு ஸ்பெஷலிஸ்ட் வீரர் ஒருவர் தேவைப்படுகிறார். குறிப்பாக அவர்களது பேட்டிங் லைன் அப்பில் இந்த மாற்றம் தேவை. அதன் மூலம் அவர்களது அணி வலு பெறும். என்னை பொறுத்தவரையில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக தான் விளையாடி வருகிறார். அது தவிர நடப்பு சீசனில் ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் அவர்களது பவுலர்கள் அதிக ரன்களை லீக் செய்து விடுகின்றனர். அதனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான். இதிலிருந்து மீண்டு அவர்கள் எப்படி முன்னோக்கி நகர்கிறார்கள் என்பதை பார்க்கலாம்” என அவர் தெரிவித்துள்ளார் .

எதிர்வரும் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க அரசாங்கம் பேச்சுவார்த்தை !

எதிர்வரும் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது எனவும் இது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வரும் நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை மேலும் நடைமுறைப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேசிய வருமானம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அதனை அதிகரிப்பதற்கு குறைக்கப்பட்ட வரிகளை மீண்டும் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“தற்போதைய தேவை அரசியலமைப்பு மாற்றமல்ல. பொருளாதார முன்னேற்றம்.”- ஐக்கிய தேசியக் கட்சி

இத்தருணத்தில் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை பொதுமக்கள் எதிர்பார்க்கவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கம் தீர்வு காணும் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியின் போது அரசியலமைப்பின் 19, 20 அல்லது 21வது திருத்தத்தை மக்கள் விரும்பவில்லை என பாராளுமன்ற உறுப்பினரான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர்,

மாறாக, மக்கள் வாழ்வதற்கான உரிமையை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். ஒரு பொதுவான போராட்டத்தின் போது சில அரசியல் கட்சிகள் தங்கள் தனிப்பட்ட நலன்களை மேம்படுத்த முயற்சிக்கின்றனர்.

மக்களுக்கு எரிவாயு, எரிபொருள், உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் இன்னும் சீராக வழங்கப்படவில்லை. ஒரு சிலிண்டரின் விலை 2,650 ரூபாவாக இருந்த போதிலும், முன்னாள் பிரதமரான ரணில் விக்கிரமசிங்க நான்கு வருடங்களுக்கு 1,650 ரூபாவிற்கு எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் தனது பதவிக்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கான நிலையான விலையை உறுதி செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சென்னை அணி தலைவர் பதவியில் இருந்து ஜடேஜா விலகல் – அடுத்த தலைவர் தொடர்பில் வெளியான அறிவிப்பு !

ஐபிஎல் 15-வது சீசனின் மீதமுள்ள போட்டிகளுக்கு சென்னை சுப்பற்ற கிங்ஸ் அணியின் தலைவராக எம்எஸ் டோனி மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.

ஐபிஎல் 2022 சீசனின் மீதமுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் தலைவராக எம்எஸ் தோனி ரவீந்திர ஜடேஜாவிடமிருந்து பொறுப்பேற்கிறார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான அணியின் மோதலுக்கு ஒரு நாள் முன்னதாக சிஎஸ்கே அணி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் சிஎஸ்கே மற்றும்  தோனி ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

ரவீந்திர ஜடேஜா தனது ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்த தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார், மேலும் சென்னை அணியை வழிநடத்த MS தோனியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இன்று மீண்டும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்றுள்ளார் தோனி. சீசனுக்கு முன்பு வேலையை விட்டு விலகியிருந்த தோனி, சீசனில் மீதமுள்ள ஆறு போட்டிகளுக்கு சிஎஸ்கேயை வழிநடத்துவார். சிஎஸ்கே தற்போது ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 8 ஆட்டங்களில் இரண்டு வெற்றிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் – வழக்கு விசாரணை ஒத்திவைப்பு !

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் அடங்கிய கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட சார்பாக ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

எனவே, வழக்கை வேறு திகதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாற அரச தரப்பு சட்டத்தரணி கோரிய நிலையில், வழக்கை செப்டம்பர் 6ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுப்பதாக கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

குறித்த வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவைத் தவிர குற்றம் சாட்டப்பட்ட 13 பேர் மீது, குற்றவியல் சட்டத்தின் கீழ் 667 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திற்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட திருகோணமலைவாசிகள் கைது !

தமிழகத்திற்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட திருகோணமலைவாசிகள் 13பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பின் ஊடாக நேற்றைய தினம் இரவு இந்தியா நோக்கி படகொன்றில் பயணித்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 13 பேரையும் கடற்படை முகாமில் தடுத்து வைத்து விசாரணை முன்னெடுத்து வரும் கடற்படையினர் அவர்களை பொலிஸாரிடம் கையளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் !

குளியாப்பிட்டிய, பரிகொட பிரதேசத்தில் உள்ள மக்கள் மற்றும் பிக்குகள் அரசாங்கத்திற்கு எதிராக நேற்று (29) பிற்பகல் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குளியாப்பிட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர்கள் குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஒருவரின் கால் உடைந்துள்ளதுடன் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியதாவது, “நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் தாக்குவதற்காக மோட்டார் சைக்கிள்கள் சிலர் வருவதாக கூறினார்.. நாங்கள் குறுக்கு வீதியில் நுழைய முற்பட்ட போது எனது முதுகுப்பகுதிக்கு பொல்லால் ஒருவர் தாக்கினார்., பின்னர் நான் பைக்கில் இருந்து விழுந்தேன். அதுவரைதான் எனக்கு நினைவிருக்கிறது. .” என்று குறிப்பிட்டார்.

இலங்கையில் கொவிட் மரணங்கள் எவையும் இல்லை – அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் !

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் மரணங்கள் எவையும் பதிவாகவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,504 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக குடியகல்வோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு !

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக குடியகல்வோரின் எண்ணிக்கை 30 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பாதுகாப்புப் பிரிவுகளின் பிரதானிகள் தெரிவிக்கின்றனர்.

 

கடல் மார்க்கமாக வெளியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இலங்கைக் கடற்பரப்பில் ரோந்து பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கை விமானப் படையும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக குறிப்பாக வடக்கில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சட்டவிரோதமாக இடம்பெயர்வோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும்  பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் வடக்கில் இருந்து சுமார் 200 பேர் இவ்வாறு இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர் என்றும் தப்பிச் செல்ல முயன்ற பலர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டிலிருந்து தப்பிச் செல்லவதற்கு நீண்ட நாள் மீன்பிடி படகுகளை சிலர் பயன்படுத்தியுள்ளதாகவும் இதன் காரணமாக குறித்த படகுகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் விசேட தேடுதல்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.