April

April

இலங்கைக்கு உடனடியாக 10 மில்லியன் அமெரிக்க டொலர்கiள வழங்கும் உலக வங்கி !

அவசரகால மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

உலக வங்கி அதிகாரிகளுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து அதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவசரகால மருந்துகள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இரண்டு வாரங்களுக்குள் உலக வங்கி மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாகவும் அமைச்சர் கூறியள்ளார்.

விடுதலைப்புலிகள் மீளுருவாக்க முயற்சி – முடக்கப்பட்டது நான்கு இந்தியர்களின் சொத்துக்கள் !

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி கடந்த ஆண்டு மார்ச் 18ம் தேதி இலங்கை மீன் பிடி படகு ஒன்று வந்தது. அப்போது ரோந்து பணியில் இருந்து இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் இலங்கை மீன் பிடி படகை வழிமறித்து சோதனை செய்தனர். அதில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட 300 கிலோ ஹெராயின், 9 எம்எம் துப்பாக்கி வகையை சேர்ந்த 1000 தோட்டாக்கள், 5 ரைபிள் துப்பாக்கிகள் இருந்தன. அதைதொடர்ந்து 6 பேரை கைது செய்து கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அப்போது, அவர்கிளிடம் நடத்திய விசாரணையில் விடுதலைப்புலிகள் புலனாய்வு துறையில் முக்கிய பதவியில் இருந்த சபேசன் (எ) சத்குணம், ரமேஷ், சவுந்தர்ராஜன் ஆகியோர் பின்னணியில் இருந்தது தெரியவந்தது.

பிறகு என்ஐஏ அதிகாரிகள் கைது செய்யப்பட்டவர்களின் மீது வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு சொந்தமான சென்னை மற்றும் திருவள்ளூர் மற்றும் கேரளாவில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியது. குறிப்பாக விடுதலைப்புலி இயக்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக ஹெராயின் போதை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. என்ஐஏ வழக்கு பதிவை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். அதில் வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக முதலீடு செய்ததும் தெரியவந்தது.

அதைதொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கு இந்தியாவில் இருந்து நிதி திரட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பியதும் உறுதியானது. பிறகு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் புலனாய்வுத்துறையில் முக்கிய பதவியில் இருந்த சபேசன் (எ) சத்குணம், சுரேஷ்ராஜ், சவுந்தர்ராஜன் ஆகியோருக்கு சொந்தமான தமிழகம் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள 6 ஆசையா சொத்துகள், 12 வாகனங்கள், பல்வேறு வங்கியில் வைப்பு நிதியாக உள்ள பணம் உட்பட ரூ.3.59 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முடக்கினர். மேலும், இதுதொடர்பாக தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நான்கு மாத காலத்துக்குள் 465.89 பில்லியன் ரூபாய் பணம் அச்சிட்டுள்ள இலங்கை மத்திய வங்கி !

இலங்கை மத்திய வங்கி நேற்று திங்கட்கிழமை 33.31 பில்லியன் ரூபாய் பணத்தை அச்சிட்டுள்ளது.

இம்மாதத்தில் மட்டும் மொத்தம் 152.21 பில்லியன் ரூபாய் பணத்தை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது.

இதேவேளை இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 465.89 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு எதிராக நாளாவது நாளாகவும் தொடரும் போராட்டம் – ஒருவர் மரணம் !

ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக பதவி விலகுமாறு கோரி கோட்டை ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

நேற்று (11) இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவும் குறித்த நபர் அந்த இடத்தில் பாடிக்கொண்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் நான்காவது நாளாகவும் இன்று தொடர்கின்றது.

அமைச்சுப்பதவியை ஏற்ற சாந்த பண்டாரவை கட்சியிலிருந்து நீக்கியது மைத்திரி தரப்பு !

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார நேற்றைய தினம் சேதனப் பசளை உற்பத்தி, மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்தல், நெல் மற்றும் தானியங்கள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழிநுட்பம், கமத்தொழில் இராஜாங்க அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிகார குறைப்புக்கே ஆதரவு – நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவில்லை என்கிறார் வாசுதேவ !

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்சவும் வாசுதேவ நாணயக்காரவும் தீர்மானித்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்னெடுக்கவேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்திக்கு தெரிவித்துள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் இந்த தருணத்தில் பொருத்தமற்றது என கருதுவதாக தெரிவித்துள்ள அவர் மாறாக ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கான 21வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஜனாதிபதியுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு சில யோசனைகளை முன்வைத்துள்ளோம்,தேசிய நிறைவேற்று பேரவையை உருவாக்குதல்,கடன்களை செலுத்துவதை பிற்போடுவதற்கான வேண்டுகோளை விடுத்தல்,சம்பளம் எதுவும் பெறாத அமைச்சரவையை நியமித்தல், 21 வது திருதத்தினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தல் ஆகிய யோசனைகளை முன்வைத்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் இந்த யோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள் இந்த யோசனைகள் நிறைவேற்றப்பட்டால் தங்கள் ஆர்ப்பாட்டங்களை கைவிடுவார்கள் என கருதுவதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
21வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்பட்டால் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பார்களா..? என்ற கேள்விக்கு எங்களிற்கு எந்த தனிநபர் குறித்தும் பிரச்சினையில்லை அமைப்பு முறை குறித்தே கரிசனை என அவர் தெரிவித்துள்ளார்.

உத்தேச தேசிய நிறைவேற்று பேரவையினால் நியமிக்கப்படவுள்ள அரசாங்கத்திற்கு வழிவிடுவதற்காக பிரதமரும் பதவி விலகவேண்டும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

“கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றப் பிரேரணை – தனித்து முடிவெடுக்க நேரிடும்.” – சித்தார்த்தன் எச்சரிக்கை !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக கொண்டுவரப்பட உள்ள குற்றப் பிரேரணை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்மைப்பாக கலந்துரையாடி ஒரு முடிவு எக்க முடியாவிடில் தனித்து முடிவெடுக்க நேரிடும் என புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் தெரிவித்தார்.

 கட்சியின் மத்திய குழு கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களாக முடிவு எடுக்கும்போது அது பலமாக இருக்கும். எந்தவிதமான பிரேரணை கொண்டு வந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மூன்று கட்சிகளும் கலந்துரையாடி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் மூன்று கட்சியும் இணைந்து தீர்மானம் எடுக்க முடியாவிட்டால் நாங்கள் தனியாக தீர்மானிக்க முடியும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இலங்கை மக்களை மிகப் பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி பாதித்திருக்கின்றது. ஆகவே, பொருளாதார பின்னடைவு நிச்சயமாக நீண்ட காலமாக இருந்து வந்த ஒன்று. இந்த நாட்டிலே யுத்தத்திற்காக செலவழிக்கப்பட்ட பெருந்தொகையான பணங்கள் அதற்காக பட்ட கடன்கள் அதனால் ஏற்பட்ட அழிவுகள் எல்லாம் சேர்த்தே பொருளாதார பின்னடைவுக்கு ஆரம்பிக்க காரணமாக உள்ளது.
போராட்டத்துக்கு ஜனாதிபதி சரியான பதில் ஒன்றை வழங்க வேண்டும். ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று கூறியே மக்கள் போராடுகிறார்கள். அதனை ஜனாதிபதி செய்ய மாட்டார் என்றே நான் நினைக்கின்றேன். பொருளாதாரத்தை முன்னேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இடைக்கால அரசில் ராஜபக்சக்கள் யாருக்கும் இடம் இல்லை – ஜனாதிபதி கோத்தாபாய எடுத்த அதிரடி முடிவு !

ராஜபக்ச குடும்பத்தவர்களை உள்ளடக்காத இடைக்கால அரசாங்கத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் சிரேஸ்ட துணைத்தலைவர் ரோகன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் முட்டுக்கட்டை நிலைக்கு தீர்வை காண்பதற்காக முன்னர் அரசாங்கத்தில் அங்கம் வகித்த 11 கட்சிகளும் சுhயதீன நாடாளுமன்ற குழுவினரும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி குறிப்பிட்ட காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனையை பிரதானமாக முன்வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இடைக்கால அரசாங்கத்தில் ராஜபக்ச குடும்பத்தினர் எவரும் இடம்பெறக்கூடாது என்ற யோசனையையும் முன்வைத்தாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை கண்டபின்னர் ஜனநாயக தேர்தல்குறித்து யோசனையையும் முன்வைத்தோம்,எனினும் ஜனாதிபதி இதனை நிராகரித்துள்ளார் இது நாட்டில் நிச்சயமற்ற நிலையை மேலும் ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார் என ரோகன லக்ஸ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட வேண்டி வரும்.” – எச்சரிக்கிறார் சிவாஜிலிங்கம் !

நிறைவேற்று அதிகார முறை ஒழிப்போ அவநம்பிக்கை பிரேரணையோ எதுவாக இருந்தாலும் தமிழ் தரப்புக்கள் நிபந்தனையின்றி ஆதரவளித்தால் பொதுமக்களை கொண்டு வீதிகளில் இறங்குவோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (11.04.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எம்.கே. சிவாஜிலிங்கம் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஐக்கிய மக்கள் சக்தி இறங்கியிருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணியும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் தமிழ் தேசிய பிரதான மூன்று அணிகள் நம்பிக்கையில்லாப் பிரேரனை ஆட்சிமுறையை ஒழிப்பது சம்பந்தமாக கூட்ட அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆட்சி மாற்றம் கொண்டு வந்து என்ன செய்யப் போகின்றோம். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. எதுவும் மாறப்போவதில்லை.

வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகத்தை உருவாக்க வேண்டும். சாதாரண பெரும்பான்மை மூலம் மாகாண சபை சட்டத்தின்படி அருகருகே இருக்கக்கூடிய இரண்டு மாகாணங்கள் இணைக்கப்பட முடியும் என்று கூறப்படுகின்றது. பாராளுமன்றில் சாதாரண பெரும்பான்மை மூலம் கூட இதனை நிறைவேற்ற முடியும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு இல்லாமல் எந்தவித பொருளாதாரத்திற்கும் தீர்வும் கிடையாது. அத்துடன் நிரந்தர சமாதானமும் நல்லிணக்கமோ கிடையாது என்பதை தெட்டத் தெளிவாக உணர வேண்டும். ஆறு கடக்கும் வரைதான் அண்ணன் தம்பி அதன் பின்னர் நீ யாரோ நான் யாரோ என்ற நிலை தான்.

நிறைவேற்று அதிகார முறை ஒழிப்போ அவநம்பிக்கை பிரேரணையோ எதுவாக இருந்தாலும் தமிழ் தரப்புக்கள் நிபந்தனையின்றி ஆதரவளித்தால் பொதுமக்களை கொண்டு வீதிகளில் இறங்குவோம் என்றார்.

“நீங்கள் எங்களுக்கு எதிராக போராடும் ஒவ்வொரு நிமிடமும் நாட்டிற்கான டொலர் வீணாகின்றது.” – மக்களுக்கான உரையில் மகிந்த ராஜபக்ச !

“நீங்கள் எங்களுக்கு எதிராக போராடும் ஒவ்வொரு நிமிடமும் நாட்டிற்கான டொலர் வீணாகின்றது.”  என நாட்டு மக்களுக்கான விசேட உரையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

எங்கள் நாடு மிகவும் இக்காட்டான சூழ்நிலையில் இருக்கும் இந்த தருணத்தில் உங்கள் மத்தியில் உரையாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 50 ஆண்டு காலத்துக்கும் மேலான எனது அரசியல் வாழக்கையில் மிகவும் தீர்மானம் மிக்க அரசியல் மைல்கற்களை கடந்து வந்துள்ளேன் என்பதை குறிப்பிட வேண்டும்.

கொரோனா தொற்றுநோய்க்கு பின்னர் நாம் எதிர்கொள்ள வேண்டி நேரிட்ட பொருளாதார பிரச்சினைகளை நம் நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் என நான் நம்புகிறேன். இத்தொற்றுநோய் தாக்கத்திலிருந்து நம் மக்களை எம்மால் பாதுகாக்க முடிந்தபோதும், தற்போது எங்கள் நாடு சவால்களுக்கு உட்பட்டு இருப்பதை எமக்கு உணர முடிகின்றது. நாடு முடக்கப்பட்டதோடு அந்நியச் செலாவணி வீழ்ச்சியடைந்ததுடன், வெளிநாட்டு கையிருப்பு சிதைவடைந்தது என்பதை நான் கூறி தெரியவேண்டியதில்லை. கடலில் எண்ணெய் கப்பல்கள் கண்களுக்கு எட்டும் தூரத்தில் இருந்தபோதும் அவற்றை பெற்றுக்கொள்வதற்கான டொலர் எம்மிடம் இல்லாதததால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவதற்கு நேரிட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகான முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் யாரும் முன்வரவில்லை.

எனவே, ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டு. தற்போதைய நெருக்கடியை தீர்க்க நாம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்.

மேலும், சேதனப் பசளை திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு இது உகந்த தருணம் அல்ல என சுட்டிக்காட்டிய பிரதமர் விவசாயிகளின் நலன் கருதி மீண்டும் உர மானியம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நாங்கள் மக்களை இந்த நிலைக்கு தள்ளுவதற்காக நாங்கள் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவரவில்லை-மக்களை நீண்டவரிசையில் வைத்திருப்பதற்காக நாங்கள் வீதிகளை அமைக்கவில்லை-பணம் கிடைக்கும்வரை எண்ணெய் கப்பல்கள் காத்திருப்பதற்காக நாங்கள் துறைமுகங்களை அமைக்கவில்லை இந்த நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம்.

நீங்கள் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும்ஒவ்வொரு செகண்டும் நாங்கள் நாட்டிற்காக டொலர்களை உழைக்கின்ற வாய்ப்பை தவறவிடுகின்றோம்.”  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, மக்களை பொறுமையாக இருக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.