April

April

உயிருக்கு அச்சுறுத்தல் – பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்த வியாழேந்திரன் !

கடந்த 25 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக பிள்ளையாரடி பிரதான வீதி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இராஜாங்க அமைச்சரின் பெயருக்கும், அவரது அமைச்சு பதவிக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் வார்த்தை பிரயோகங்களை உபயோகிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுமட்டுமல்லாமல் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக இன்று (29) திகதி மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் அமைச்சரை தொடர்பு படுத்தி உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறி, அமைச்சர் வகித்து வரும் அமைச்சு பதவி குறித்து பதாகைகள் மூலம் காட்சி படுத்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை மட்டுமல்லாது இராஜாங்க அமைச்சரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையினால் தனக்கு உள ரீதியான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும்.
அதுமட்டுமல்லாது நீதி மன்றத்தில் ஒரு வழக்கு இடம்பெறும்போது உண்மைக்குப் புறம்பான விடயங்களை இவர்கள் திரிவுபடுத்தி வெளியிட்டு வருவதனால் இவர்களுக்கு எதிரான சகல ஆதாரங்களையும் வழக்கு தொடர்வதற்காக எழுத்து மூல ஆவணங்களாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் சம்மந்தப்பட்ட ஒவ்வொருவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் இதன்போது தெரிவித்திருந்தார்.

கோட்டபாய ராஜபக்ச செய்த தவறை சுட்டிக்காட்டியுள்ள அலி சப்ரி !

நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதால், தற்போது நாட்டின் விற்பனை வரியை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என நிதியமைச்சர் அலி சப்ரி BBC க்கு கூறியுள்ளார்.

BBCக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், அலி சப்ரி, 2019 ஆம் ஆண்டில் மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) விகிதத்தை 8% ஆக பாதியாகக் குறைத்தபோது அரசாங்கம் தவறு செய்ததாக ஒப்புக்கொண்டார்.

தினசரி அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அடுத்த எட்டு மாதங்களில் தேசத்திற்கு $4bn (£3.2bn) தேவைப்படுகிறது. “வரிகளை அதிகரிக்க வேண்டும்.  எங்களிடம் உள்ள வருவாய் மற்றும் செலவின இடைவெளியைக் குறைக்க வழிவகை செய்ய வேண்டும்,” என்றார்.

அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியை நம்பியிருக்கும் இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு தற்போதைய VAT நிலை “நிச்சயமாக நிலையானது அல்ல” என்று கூறிய அவர், விகிதம் 13% அல்லது 14% ஆக உயர்த்தப்பட வேண்டும் என்றார்.

கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் 2019 இல் வரிகளை குறைக்கும் நடவடிக்கை தவறானது என்பதை ஒப்புக்கொண்ட அவர்,  சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட  அரசாங்கம் நீண்ட நாள் காத்திருந்துள்ளதாகவும் கூறினார்.

தென்பகுதியில் நடக்கும் சிங்கள மக்களின் போராட்டங்களில் ஏன் தமிழர்கள் பங்குபற்றவில்லை..?- சிறிதரன் விளக்கம் !

“நாங்கள் இந்த பொருளாதார தடைகள் ஆயிரம் ரூபாவுக்கு பெட்ரோல் மண்ணெண்ணெய் வாங்கி அதனை சிக்கனமாக வைத்து வாழ பழகி பக்குவப்பட்டவர்கள்.” என  பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரம் மேற்கு அ.த.க பாடசாலையின் மறைந்த முன்னாள் அதிபர் கனகராஜா மகேந்திரராஜா அவர்களது நினைவு நிகழ்வும் பொற்கால மலர் என்ற நூல் வெளியீட்டு விழாவும் இன்று (29) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

தென்பகுதியில் சிங்கள மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடுகிறார்கள். பச்சிளம் பாலகர்கள் கூட இறங்கிப் போராடுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் உங்களுடைய பங்கு என்ன என்று என்னிடம் ஒருவர் கேட்டிருந்தார்.

எங்கள் உறவுகள் தங்களுடைய கணவன்மாரை ஒப்படைத்த எங்களுடைய சகோதரிகள் தாய்மார்கள் தங்களுடைய தன்னுடைய கணவன் வருவான் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த சிங்கள சகோதர சகோதரிகளால் பதில் கூற முடியுமா என்று கேட்டிருந்தேன்.

ஆயிரமாயிரம் மனித உயிர்களை நாங்கள் இந்த மண்ணில் விதைத்திருக்கின்றோம்.

சிங்கக் கொடியின் கீழ் எங்களையும் ஏற்று அரவணைக்கும் எண்ணத்தை சிங்கள சகோதரர்கள் கொண்டுள்ளார்களா? அல்லது எங்களையும் இந்த நாட்டினுடைய பிரஜைகளாக சிங்கள மக்கள் ஏற்றுள்ளார்களா ? அதை கூட வெளிப்படையாகச் சொல்லுகின்ற ஆற்றல் ஒரு சிங்கள சகோதரர்களுக்கு அல்லது சகோதரிக்கு ஏன் இன்னும் வரவில்லை. தமிழர்களுடைய வரலாற்று தாயகம் வடக்கு கிழக்கு என்று சொல்வதற்கு ஏன் இன்னும் ஒரு சிங்களச் சகோதரர்களால் முடியவில்லை.

நாங்கள் இன்னும் சிங்கக்கொடிக்குள் அரவணைக்கப்படவில்லை. அதுவும் எங்களுடைய கொடியாக நாங்கள் ஏற்றுக் கொள்கின்ற பக்குவம் உங்களுக்கு இன்னமும் வரவில்லை. அதனால் தான் நாங்கள் இன்றும் அந்த போராட்டத்திற்கான எண்ணங்களை கொண்டிருக்கவில்லை. அமெரிக்க அரசு கூட ஆய்வு செய்கிறது. நான்கு நாட்களுக்கு மேலாக யாழ்ப்பாணத்திலிருந்து இதனை ஆய்வு செய்கிறார்கள். ஏன் தமிழர்கள் போராடவில்லை என்று பல நாடுகள் கேட்கின்றன.

நாங்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட போது யாரும் கேட்கவில்லை. இன்று ஒரு மனிதன் கொள்ளப்படுகின்ற போது உலகம் கேட்கின்ற போது ஒரு ஆயிரம் பேர் கொல்லப்பட்ட போதும் யாரும் பேசவில்லை. கிளிநொச்சியில் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலக அதிகாரிகளை எமது மக்கள் இந்த இடத்திலிருந்து செல்ல வேண்டாம் செல்ல வேண்டாம் என்று கேட்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் சென்றார்கள் நாங்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட, கொலை செய்யப்பட்ட இந்த வரலாறுகள் எங்கள் முன்னால் இருக்கின்றது.

இன்று போராட்டத்தில் ஈடுபடும் தென்பகுதி சிங்கள இளைஞர்கள் தமிழ் மக்களுக்கு எதை சொல்கின்றனர் போராட்டத்தில் ஈடுபடும் ஒரு பகுதியினர் சொல்லுகின்றார்கள் இது ஒரு சிங்கள பௌத்த நாடு என்று என்றும் அதனை நாங்கள் நிராகரிக்க மாட்டோம் என்றும் அதற்குள்ளிருந்து தான் நாங்கள் போராடுகின்றோம் என்று குறிப்பிடுகின்றார்கள்.

மகாவம்சத்தில் ஊறிப்போன நீங்கள் இந்த பௌத்த சிங்கள பேரினவாத கொள்கையோடு போராடினால் உங்களுடன் நாங்கள் சேர்ந்து போராட முடியுமா?

நாங்கள் எத்தனையோ ஆண்டுகள் இந்த மண்ணிலே நசுக்கப்பட்டவர்கள். மீண்டும் மீண்டும் சாம்பலிலே இருந்து எழும் ஒரு இனமாக எங்களிடம் இருந்த திறமைகளுடன் இந்த மண்ணில் காலூன்றி இருக்கின்றோம். நாங்கள் இந்த பொருளாதார தடைகள் ஆயிரம் ரூபாவுக்கு பெட்ரோல் மண்ணெண்ணெய் வாங்கி அதனை சிக்கனமாக வைத்து வாழ பழகி பக்குவப்பட்டவர்கள்.

எங்களுடைய மொழி ரீதியாக கலாச்சார ரீதியாக பண்பாட்டு ரீதியாக தோன்றி வளர்ந்தவர்கள் . விஜயனின் வருகைக்கு முன்னரே நாங்கள் வாழ்ந்த இனம். ஆகவே நாங்கள் இந்த மன்னனுடைய பூர்வீகக் குடிகள். இன்று நாங்கள் எங்கள் இறைமையை இழந்து சுதந்திரத்தை இழந்து நாங்கள் இப்போதும் அடிமைகளாக எங்களைச் சுற்றி ஒரு ராணுவ வேலிக்குள் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

நாங்கள் நாங்களாக இந்த மண்ணிலேயே வாழுகின்ற உரிமையும், நீங்கள் நீங்களாக வாழுகின்ற உரிமையும் இருக்கின்றது. என்பதை நீங்கள் எப்போது வெளிப்படையாக பேச ஆரம்பிக்கும் போதோ அல்லது அதை ஏற்றுக்கொள்ள துணிகின்றீர்களோ அப்போதுதான் இந்த நாட்டினுடைய பொருளாதாரம் அரசியல் முன்னேற்றம் என்பது சாதாரணமானதாக மாறும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

யூரோவை நாணயமாக பயன்படுத்தும் நாடுகளில் கடுமையாக அதிகரிக்கும் பணவீக்கம் !

யூரோவை நாணயமாக பயன்படுத்தும் 19 நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷியா போர் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால் ஆண்டு பணவீக்கம் இந்த மாதம் 7.5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இதையடுத்து ஐரோப்பிய நாடுகளில் எரிசக்திகளின் விலை 38 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 34.3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பா பண வீக்கம் அமெரிக்க ஆண்டு பணவீக்கத்திலும் எதிரொலித்துள்ளது. 1981க்கு அமெரிக்காவின் பணவீக்கம் கடந்த மாதம் 8.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ரஷிய உகிரைன் போர், ரஷியாவிடம் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கு தடங்களாக உள்ளது. இதனால் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வரும் நாடுகளுக்கு ரஷியா உக்ரைன் போர் மீண்டும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பண வீக்கத்தால் மூலப்பொருட்கள் மற்றும் உதிரி பாகங்களில் விலை உயர்ந்துள்ளது.  ஜெர்மனி மின்சார ஆற்றலை பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவித்து வருகிறது. ஜெர்மனியின் ஐஜி மெட்டல் தொழிலாளர் சங்கம் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை 8.2 சதவீதம் உயர்த்துவதற்கு வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் எரிபொருள் இறக்குமதிக்கு ரஷியாவையே நம்பி இருக்கிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அதிகரிக்கும் வெப்பம், மின்சார பயன்பாடு மற்றும் ஆட்டோமொபைல் எரிபொருள் விலை உயர்வு ஆகியவை ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடம் வர்த்தகம் செய்வதை நிறுத்த முடியாமல் செய்கிறது.
இந்த பணவீக்கத்தின் காரணமாக ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கு ஆலோசனை செய்து வருகிறது.

காபூலில் உள்ள மசூதியில் குண்டு வெடிப்பபு – 10 பேர் பலி !

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் திகதி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், 15க்கு மேற்பட்டோர் பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“நாடு முழுதும் போராட்டம். ஆனாலும் வடக்கு – கிழக்கை மட்டுமே அடக்க முனைகிறது அரசாங்கம்.”- சுமந்திரன் குற்றச்சாட்டு !

நாடு முழுவதும் கிளந்தெழுந்திருக்கின்ற போதும் கூட எங்களது வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களிலே எந்தவித சத்தங்களும் கேட்கக் கூடாது என்ற வகையிலே அரசாங்கம் செயற்படுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள கடத்தப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபியில் தராகி சிவராம் அவர்களின் 17வது நினைவு நிகழ்வும், நீதி கோரிய போராட்டமும் இடம்பெற்றது.

இதன்போது அமரர் சிவராம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் சிவராம் அவர்கள் உட்பட படுகொலை செய்யப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதி வேண்டிய ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் அவர்களை நினைவு கூரும் முகமான நிகழ்வில் நாங்கள் நின்று கொண்டிருக்கின்றோம். இன்று வரைக்கும் இப்படுகொலை தொடர்பிலான நீதி கிடைக்கப்படவில்லை. கொழும்பிலே கடத்தப்பட்டு, உயர் பாதுகாப்பு வலயமான பாராளுமன்றத்திற்குப் பின்னால் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவ்வாறு யாரும் கேள்வி கேட்க முடியாத கொடூரமான நிகழ்வுகள் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நடந்திருக்கின்றது.

அதிலே அண்ணன் சிவராம் அவர்கள் மிகவும் முக்கியமானவர். தமிழ்த் தேசியம் பற்றி பலவிதமான கட்டுரைகள் ஆங்கில மொழியிலும் தொடர்ச்சியாக எழுதி எமது பிரச்சனையை உலகிற்கு அறிவித்ததில் அவர் மிக முக்கியமானவர். அவரை அரச அனுசரணையோடு கடத்திப் படுகொலை செய்திருந்தார்கள். இன்று வரைக்கும் அதற்குரிய ஒழுங்கான விசாரணையோ நீதியோ செய்யப்படவில்லை. அதற்குக் கண்டனம் தெரிவித்து இன்று இங்கே போராட்டம் நடைபெறுகின்றது.

இந்தப் போராட்டம் நடைபெறுகின்ற அதேவேளை இலங்கை பூராகவும் பாரிய போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நேற்றைய தினம் கடையடைப்பு, தொழிற்சங்கங்கள் எல்லாம் வீதியில் இறங்கிப் போராடினார்கள். தற்போது மக்கள் திரண்டு திரண்டு அரசாங்கத்திற்கு எதிராக ஜனாதிபதியும், பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் என போர்க்கொடியை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் தென்பகுதியிலே நிகழ்கின்ற போது வடக்கிலேயும் கிழக்கிலேயும் தான் இவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகள் பலவத்தமாக மேற்கொள்ளப்படுகின்றன. நேற்றைய தினம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களுக்கு அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது, வீதிகளை முடக்கக் கூடாது என்று களுவாஞ்சிக்குடி பொலிசாரினால் நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பொலிசாரினால் நீதிமன்ற உத்தரவு கையளிக்கப்பட்ட அதேவேளை நாடு முழுவதும் முடக்கப்பட்டிருந்தது. பிரதான எதிர்க்கட்சி கண்டியில் இருந்து பாரிய ஆர்ப்;பாட்டத்தினை முழு வீதியையும் மறித்தே செய்கின்றார்கள். அங்கே ஒரு சட்டம் இங்கே வேறு சட்டங்கள்.

நாடு முழுவதும் கிளந்தெழுந்திருக்கின்ற போதும் கூட எங்களது வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களிலே எந்தவித சத்தங்களும் கேட்கக் கூடாது என்ற வகையிலே அரசாங்கம் செயற்படுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த அரசாங்கம் பதவி விலக வேண்டும். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை பதவி விலக வேண்டும். நாட்டை இப்படியாக மிக மோசமான நிலைக்குள் தள்ளியிருப்பவர்கள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருக்கத் தகுதியற்றவர்கள் என்பதில் நாங்களும் உறுதியாக இருக்கின்றோம். பாராளுமன்றத்திலும், வெளியிலும் இதற்கான எமது போராட்மும் தொடரும் என்று தெரிவித்தார்.

அமைகிறது இடைக்கால சர்வகட்சி அரசாங்கம் – வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு !

அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கத்தின் புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையின் நியமனம் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய தேசிய சபையிடம் ஒப்படைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் நடைப்பெற்றிருந்தது.

பொருட்களின் அதிகரிக்கும் விலையேற்றம் – திருட்டில் ஈடுபட்ட தம்பதியினர் கைது !

ஹொரணை பிரதேசத்தில் பெண்ணிடம் தங்க நகையை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, தங்க நகையை அடகு வைத்த சந்தேக நபரின் மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹொரணை ஸ்ரீபாலி பல்கலைக்கழக வீதியில் பெண்ணொருவரின் தங்க நகையை சந்தேகநபர் பறித்துள்ளார்.

பின்னர், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஹொரண பொலிஸார், கொள்ளைச் சம்பவம் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகி இருந்ததை கண்டுபிடித்தனர்.

அதன்படிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் 24 மணித்தியாலங்களில் தங்க நகையுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் விசாரணையின் போது, ​​தான் மேசன்வேலையில் ஈடுபட்டு வருவதாக சந்தேக நபர் தெரிவித்திருந்தார். சீமெந்து மற்றும் ஏனைய கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக வருமானம் குறைந்துள்ளதால் தங்க நகையை கொள்ளையிட தீர்மானித்ததாக சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

ஊடகவியலாளர் வேடத்தில் வந்த பொலிஸ் அதிகாரி – பேசி விரட்டிய இரா.சாணக்கியன் – வீடியோ இணைப்பு !

மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்களையும் கொலை செய்யவா முயற்சிக்கின்றீர்கள் என சிவில் உடையில் ஊடகவியலாளர்களை காணொளி எடுத்த பொலிஸாரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மிகவும் காட்டமான முறையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவு தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு. ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றது.

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டியும் நாட்டில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையினை கண்டித்தும் தமிழ் மக்களின் உரிமையினை அங்கிகரிக்ககோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை சிவில் உடையில் வருகை தந்திருந்த பொலிஸார் கெமராக்களின் உதவியுடன் காணொளியாக பதிவு செய்திருந்தனர்.

இந்தநிலையில் இதன்போது கோபமடைந்த இரா.சாணக்கியன் மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்களையும் கொலை செய்யவா முயற்சிக்கின்றீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்.

றம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு !

அண்மையில் றம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று பொலிஸ் அதிகாரிகள் எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (29) தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

றம்புக்கனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மற்றும் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சகல பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் கடந்த 27ஆம் திகதி உத்தரவிட்டது.

இது தொடர்பான உத்தரவு நேற்று (28) பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்றதுடன், பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருக்கு சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்யுமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதற்கமைய சந்தேகநபர்கள் நால்வரும் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான சமிந்த லக்ஷன் கடந்த 19ஆம் திகதி றம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.