கனடாவில் பழங்குடி மாணவர்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.
‘நான் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி இருக்கிறேன் என்பதை என் இதயத்தில் இருந்து உங்களுக்கு கூற விரும்புகிறேன்’ என அவர் கூறினார்.
மேலும், கனடா பேராயர்களுடன் இணைந்து தான் மன்னிப்பு கோருவதாகவும் விரைவில் கனடா செல்ல உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
கனடாவில் 19ஆம் நூற்றாண்டு தொடங்கி, 1970ஆம் ஆண்டுகள் வரை பூர்வகுடி குழந்தைகள் மற்ற சமூகத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு தேவாலயப் பாடசாலைகளில் கல்வி பயில கட்டாயப்படுத்தப்பட்டனர்.
பழங்குடியினரிடையே மதத்தையும், அந்தக் காலத்து அரசுகள் மிக உயர்வாகக் கருதிய தங்களது கலாசாரத்தையும் திணிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தேவாலயங்கள் நடத்திய பாடசாலைகளில் மாணவர்கள் பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அத்துடன், கனடாவில் தேவாலயங்கள் நடத்திய பாடசாலைகளின் அருகே நடத்தப்பட்ட ஆய்வுகளில் 1000 பழங்குடி குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இது உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தின.
இதற்கு, தற்பேதைய போப் ஆண்டவர் பிரான்சிஸ் மன்னிப்பு கோர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், வத்திகானில் நேற்று ஃ(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் கனடா பூர்வகுடியினரிடம் போப் பிரான்சிஸ் மன்னிப்பு கோரினார்.