03

03

“இராஜினாமா செய்தது தந்தை அல்ல – மகன்.” பதவி துறந்தார் நாமல்ராஜபக்ஷ

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதே வேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்யத் தயாராகவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட எமது செய்திப்பிரிவிடம் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தான் பிரதமராக பதவியேற்கவுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமைக்கு தேசிய இணக்கப்பாடு ஒன்றே தீர்வு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா மகளிர் அணி !

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அலீசா ஹீலி அதிரடி ஆட்டம் - இங்கிலாந்து வெற்றி பெற 357 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா || Tamil News ENGW needs 357 runs to win against Australia in CWC 2022
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடச் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை அலீசா ஹீலி சதமடித்து, 170 ஓட்டங்கள் குவித்தார். ஹெய்ன்ஸ் 68 ஓட்டங்களிலும், பெத் மூனி 62 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, 357 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நடாலி சீவர் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 121 பந்துகளில் ஒரு சிக்சர், 15 பவுண்டரி உள்பட 148 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், இங்கிலாந்து 43.4 ஓவரில் 285 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், உலக கோப்பையில் 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

“மக்களின் விரக்தி நிலையை பார்க்கும்போது இதயம் நொருங்குகின்றது.” – சங்ககார கவலை !

இலங்கைமக்கள் மிகவும் கடினமான காலத்தை எதிர்கொண்டுள்ளனர்.” என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

முகநூல் பதிவு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி,

நாளாந்த வாழ்க்கையை கொண்டு செல்வதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் விரக்தி நிலையை பார்க்கும்போது இதயம் நொருங்குகின்றது. ஒவ்வொரு நாளும் முந்தைய நாளை விட கடினமானதாக காணப்படுகின்றது. மக்கள் தங்கள் குரல்களை உயர்த்தி என்ன தேவையோ அதனை கேட்கின்றனர். ஒரு தீர்வுசிலர் தங்கள் குரல் வெளிப்படுவதற்காக மனக்கசப்பு மற்றும் சீற்றத்துடன் செயற்படும் அதேவேளை ஏனையவர்கள் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயல்கின்றனர்.

மக்களை செவிமடுப்பதும்,அழிவை ஏற்படுத்தும் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சிநிரல்களை ஒதுக்கிவைப்பதும்,நாட்டின் சிறந்த நலனை கருத்தில்கொண்டு செயற்படுவதுமே சரியான தீர்வாகும். மக்கள் எதிரிகள் இல்லை, இலங்கை என்பது அதன் மக்கள் நேரம் வேகமாக ஒடுகின்றது மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவேண்டும் வழங்கவேண்டும்.

“வெளிப்படையாக ஜனாதிபதி கொல்லப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.” – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைதியான போராட்டங்களுக்கு ஒருபோதும் பிரச்சினையை ஏற்படுத்தாத தலைவர் என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மிகவும் ஜனநாயகமான தலைவர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைதியான போராட்டங்களுக்கு ஒருபோதும் பிரச்சினையை ஏற்படுத்தாத தலைவர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை உள்ளது. இங்கு அமைதியான முறையில் போராட்டம் நடைபெறுவதாகத் தெரியவில்லை.

அமைச்சர் ஊடகங்களுக்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வன்முறை கலந்து இருந்ததாலே அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இந்த வன்முறையில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு அமைச்சரவை அமைச்சர்கள் என்ற வகையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம். நாங்கள் அமைதியான போராட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல.

ஆனால் வன்முறைகளை அனுமதிக்க முடியாது. நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும். மேலும், பொதுச் சொத்துக்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அது அரசின் கடமை. ஜனாதிபதியிடம் நாம் முன்வைத்த கோரிக்கை அது. அவர் எப்போதும் ஜனநாயகத்தைப் பற்றியே பேசினார். காலி முகத்திடலுக்கு அருகில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு தனது அலுவலகத்திற்கு செல்ல அவர் அனுமதித்தார்.

இரண்டாவது முறையாக அவரின் வீட்டுக்கு சென்று தாங்கள் அமைதியை விரும்பவில்லை, வன்முறையை விரும்புகிறோம் என்ற செய்தியை தெரிவித்திருக்கிறார்கள். இந்த போராட்டம் சில சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

வெளிப்படையாக ஜனாதிபதி கொல்லப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. சேனல்களில் வரும் காட்சிகளைப் பார்த்தால் ஜனாதிபதியே கொல்லுங்கள் என்று கூக்குரலிடுவதைக் காணலாம். வழக்கம் போல் அவர்களை வட்டமிட்டு காட்டுமாறு ஊடகங்களிடம் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் ஒரு போதும் வன்முறைக்கு அடிபணிய மாட்டோம். அதுதான் யதார்த்தம். ஆனால் நாங்களும் மக்களை அமைதியான போராட்டத்திற்கு கொண்டு வந்துள்ளோம். நாங்களும் காலிமுகத்திடலுக்கு வந்தோம். அரசை கண்டித்தும் போராட்டம் நடத்தினோம். ஒரு கல்லையாவது அடித்தோமா? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது இப்போது தெளிவாகிவிட்டது.

இலங்கையிலிருந்து வெளியேறும் ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் !

அமைச்சர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச மற்றும் அவரது பெற்றோர்கள் இன்று காலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

நாட்டைவிட்டு வெளியேறிய நாமலின் மனைவி மற்றும் குடும்பத்தினர்! கொழும்பு ஊடகம்  தகவல் - ஐபிசி தமிழ்

அரசாங்கம் மற்றும் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக மக்கள் இடையில் பாரிய எதிர்ப்புக்கள் எழுந்துள்ள நிலையில் இவர்கள் இவ்வாறு வெளியேறியுள்ளதாக ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால் மக்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இரண்டு தினங்களிற்கு முன்னர் அரச தலைவரின் இல்லத்திற்கு முன்பாகவும் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்

கலைக்கப்பட்டது பாகிஸ்தான் பாராளுமன்றம் !

பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதார நெருக்கடி எழுந்துள்ள நிலையில், பிரதமர் இம்ரான் கானை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே, பாகிஸ்தான் பாராளுமன்றம் இன்று காலை கூடியபோது இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்மானம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனக்கூறி தீர்மானத்தை நிராகரித்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறியதாவது:

துணை சபாநாயகரின் முடிவை ஒவ்வொரு பாகிஸ்தானும் வரவேற்றுள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானம் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான வெளிநாட்டு சதியாகும். நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிக்கும் முடிவு சரியானதே.

பாகிஸ்தான் பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும். பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும். பாகிஸ்தான் மக்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும். பாகிஸ்தானை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், இம்ரான்கானின் பரிந்துரையை ஏற்று பாராளுமன்றத்தை கலைத்து பாகிஸ்தான் அதிபர் அறிவித்துள்ளார்.

“எம்மவர்களின் சிலர் அரசாங்கத்தின் கைக்கூலிகளாக உள்ளமையாலேயே தமிழர்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.”- இரா.சாணக்கியன்

“அரசுடன் இருந்தவர்களே பதவிகளை தூக்கி எறிகின்ற நிலையில் தமிழர்கள் ஒருசிலர் மட்டும் அரசை ஆதரிப்பது வேதனைக்குரியது.”என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இந்த நாட்டில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும்போது வேதனையான விடயமாகயிருக்கின்றது. நாடுமுழுவதும் வெடித்துள்ள போராட்டம் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற அமர்வு ஆரம்பித்த கடந்த ஒன்றரை வருடங்களாக நாங்கள் இதனை தெரிவித்துவருகின்றோம். காயம் ஒன்று இருக்கும்போது அந்த காயத்திற்கு மருந்திட்டு அதனை குணப்படுத்தாமல் அதனை மூடிமூடி வைத்து இன்று அந்த காயம் காரணமாக காலை வெட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையிலேயே இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று எரிமலையினை சூழ பஞ்சுகள் இருப்பதுபோன்றே மக்கள் உள்ளனர். இன்று எவர் போராட்டத்திற்கு அழைத்தாலும் தயார் நிலையிலேயே மக்கள் உள்ளனர். மக்கள் எதிர்நோக்கும் கஸ்டம் காரணமாகவே இந்த நிலையேற்பட்டுள்ளது. இந்த நாட்டின் நிலைமை மிக மோசமாக சென்றுகொண்டிருக்கின்றது.

இன்று நடைபெறும்போராட்டங்கள் அரசியல் கட்சிகள் இணைந்து முன்னெடுக்கும் போராட்டம் அல்ல. மக்களாகவே முன்வந்து முன்னெடுக்கும்போராட்டம். இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக மக்கள் படும் கஸ்டங்கள் இன்று நெருப்பு மலையாக காணப்படுகின்றது. இதன் காரணமாக இந்த போராட்டங்களை அரசாங்கத்தினால் கட்டப்படுத்தமுடியாத நிலை வரும்.

நாங்கள் பொறுப்புள்ள அரசியல் கட்சியாக இந்த பிரச்சினையை இந்த நாட்டில் எவ்வாறு தீர்க்கமுடியும் என்றே பார்க்கவேண்டும். ஜனாதிபதிக்கு இன்று இரண்டு வருடங்களுக்கு மேலாகவும் நாடாளுமன்றத்திற்கு மூன்று வருடங்களுக்கு மேலாகவும் காலப்பகுதியுள்ள நிலையில் இந்த நிலைமை இவ்வாறு நீடிக்குமானால் மக்கள் வன்முறைகள் ஊடாக தமது கோவத்தினை வெளிப்படுத்தமுனையும்போது அதனை அடக்க அரசாங்கம் இராணுவத்தினதை பாவிக்கும் நிலையும் உருவாகலாம்.

இராணுவத்தின் குடும்பமும் இந்த நாட்டில் உள்ளது. அவர்களின் குடும்பத்திலும் இவ்வாறான பிரச்சினைகள் இருக்கும். இன்று அரசாங்கத்தின் மீது உள்ள அதிர்ப்தியைக்கொண்டு ஒரு சிலர் குழங்களை ஏற்படுத்தமுனைகின்றனர். கலவரத்தின்போது பாதுகாப்பு பிரிவினர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பஸ் எரிக்கப்படுகின்றது. திகனையில் கடந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட இனக்கலவரத்தின் பின்னணியில் செயற்பட்டவர் போராட்டத்திற்கான அழைப்பினை விடுத்துள்ளார். இவற்றினை பார்க்கும்போது சந்தேகத்துடனேயே பார்க்கவேண்டிய நிலையுள்ளது.

தற்போதுள்ள பிரச்சினைகள் மக்களுக்கும் தெரியும் அரசியல்வாதிகளுக்கும் தெரியும். ஆனால் அரசாங்கத்திற்குத்தான் தெரியாத நிலையுள்ளது. அரசாங்கத்திற்கு மட்டும்தான் மக்கள் படும்கஸ்டம் தெரியாமல் உள்ளது. ஜனாதிபதி நாட்டின் உண்மை நிலையினை மக்களுக்கு எடுத்துச்சொல்லி இதற்கு மாற்றுவழியாக அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்து ஒரு இணக்கப்பாட்டை எட்டுவதன் மூலமே நாட்டில் உள்ள பிரச்சினையை தீர்க்கமுடியும். விரைவில் ஒரு தேர்தல் நடாத்தக்கூடிய சூழ்நிலையில்லாத காரணத்தினால் இந்த நிலைமையினை தொடர இடமளிக்ககூடாது.

இன்றைய நாட்டில் சூழ்நிலையினால் 30வருடகால யுத்ததினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இதனாலும் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் இன்றும் வடகிழக்கில் உள்ள மக்கள் அடக்குமுறைகளுக்குள்ளாக்கப்படுகின்றனர். வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தின்போது பொலிஸ் அதிகாரியொருவர் தாய் ஒருவர் மீது நடாத்திய தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அதற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு எனது ஆதரவு என்றும் இருக்கும். போராட்டம் ஒத்திவைக்கப்பட்டாலும் அந்த போராட்டம் நடைபெறும்போது நாங்கள் ஆதரவு வழங்குவோம். நாங்கள் ஜனாதிபதியை சந்தித்தவேளையில் போது கூட இந்த வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் பிரச்சினை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தினோம். வடகிழக்கில் பொருளாதார பிரச்சினைகளையும் தாண்டி பல்வேறுபட்ட பிரச்சினைகள் உள்ளது.

நான் வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து நான் தெரிவித்த கருத்தினை கிழக்கு மாகாண ஆளுனர் பொய்யென்று கூறியுள்ளார். ஆனால் அதனை நான் ஆதாரபூர்வமாக நிரூபிக்க தயாராகயிருக்கின்றேன். பொருளாதார ரீதியாகவும் இனரீதியாகவும் அடக்குமுறைகள் தமிழ் மக்கள் எதிர்கொண்டுவருகின்றனர். இன்று எம்மவர்களின் சிலர் அரசாங்கத்தின் கைக்கூலிகளாக உள்ளதே இதற்கு காரணமாகும்.

இந்த நாட்டில் உள்ள தாய்மார் எதிர்கொள்ளும் பிரச்சினைக்காக ஹிருணிக்கா பிரேமச்சந்திரன் அவர்கள் முன்னெடுத்த போராட்டத்தினை வரவேற்கின்றேன். அந்த போராட்ட நேரத்தில் அரசாங்கத்தின் கைக்கூலியொருவர் அந்த போராட்டத்தினை குழப்புவதற்கு முயற்சிகளை முன்னெடுத்திருந்தார்.

இன்று அரசாங்கத்துடன் இருக்கும் இராஜாங்க அமைச்சர்கள்,இந்த அரசாங்கம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கும்மோசமான செயற்பாடுகளைக்கண்டு தமது பதவிகளை தூக்கியெறிந்துவிட்டு வெளியேறிவிட்டனர். ஆனால் தமிழர்கள் ஒருசிலர் மட்டும் அபிவிருத்திக்குழு தலைவர் பதவி, இராஜாங்க அமைச்சர் பதவியை வைத்துக்கொண்டு தங்களது சுயநலத்துக்காக அரசாங்கத்தினை ஆதரிக்கின்றது வேதனைக்குரிய விடயமாகும்.

மக்களுக்காக அரசியலுக்குவந்த நீங்கள் ஆளும்கட்சிக்காக அரசியலுக்குவந்தவர்களாக இருக்ககூடாது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தின் பதவிகளை பிடித்துக்கொண்டுள்ளவர்களை மக்கள் எதிர்காலத்தில் இனங்கண்டு தெற்கில் எவ்வாறு அரசியல்வாதிகள் துரத்தியடிக்கப்படுகின்றார்களோ அவ்வாறு இங்கும் அவர்கள் வரும்போது துரத்தியடிக்கவேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசியலில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் – பிரதமர் பதவியிலிருந்து விலகும் மகிந்த..? – அமைகிறது இடைக்கால அரசு !

பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச அடுத்த சில மணிநேரங்களில் பதவிவிலகக்கூடும்   என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியும் பிரதமரும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையிலேயே பிரதமர் பதவி விலகவுள்ளார்.

பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச அடுத்த சில மணிநேரங்களில் பதவி விலகுவார் எனதகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியும் பிரதமரும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையிலேயே பிரதமர் பதவி விலகவுள்ளார்.

11 கட்சிகளின் சந்திப்பை தொடர்ந்து அந்த கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் ஸ்திரதன்மையை உறுதி செய்வதற்காக புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளனர்.

இதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கு மகிந்த ராஜபக்ச இணங்கியுள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமராக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தினேஸ் குணவர்த்தன பிரதமராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பசில் ராஜபக்சவிற்கு பதில்; புதிய நிதியமைச்சராக ஹர்சா டி சில்வா நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதே நேரம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளியான செய்தியினை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. அவர் தனது பதவியினை இதுவரை இராஜினாமா செய்யவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கையும் மீறி பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் – மாணவர்கள் மீது  கண்ணீர் புகைதாக்குதல்!

பேராதனை பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

மாணவர்கள் கண்டிக்கு பேரணியாக செல்ல முற்பட்ட வேளையில் பொலிஸாரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கண்ணீர்ப்புகைத் தாக்குதலைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் கலைந்து சென்றதுடன், சம்பவ இடத்தில் பொலிஸார் தொடர்ந்தும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தடையில்லா மின்சாரத்தை வழங்குங்கள் – ஜனாதிபதி வீட்டிற்கு முன்பு ஒருவர் தற்கொலை !

மிரிஹானவிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் சற்று முன்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்வெட்டை உடனடியாக நிறுத்தக் கோரி, குறித்த நபர் மின்மாற்றியில் ஏறியதாகவும் பின்னர் கீழே விழுந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.