06

06

அனுரகுமார பயணித்த வாகனத்தில் தலைக்கவசத்துடன் ஏறியவர் யார்..? – நாடாளுமன்றில் சூடுபிடித்த விவாதம் !

நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தமது வாகனத்தில் பயணித்தபோது, தலைக்கவசம் அணிந்தவாறு அந்த வாகனத்தில் ஒருவர் ஏறியமை குறித்து அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இதன்போது கேள்வி எழுப்பினார்.

குறித்த  குற்றச்சாட்டு தொடர்பில் இன்று பாராளுமன்றில் இன்று பதிலளித்த ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார,

அந்த சந்தர்ப்பத்தில் எனது வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் மறித்தனர். கடந்த 10 , 15 வருடங்களுக்கு முன்னர் நான் கூறியதைதான் நீங்கள் இன்று கூறுகிறீர்கள் என நான் அவர்களிடம் கூறினேன். இந்த நாட்டில் பட்டப்பகலில் படுகொலைகள் நடந்தன. இன்று கொலைக்காரன் இல்லை. தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படவில்லை. இவையெல்லாம் நடக்கும் போது நாட்டின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ. இன்று இந்த நேரத்தில் ஜனாதிபதி. எனவே அவரைப் பற்றிய அனுபவம் நமக்கு உண்டு.

எனவே, நாங்கள் தனக்குத்தானே எங்களது பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். நாங்கள் சுதந்திரமாக பாதையில் செல்கிறோம் என்று நினைக்கிறீர்களா? ஒவ்வொரு முறை நான் வாகனத்தில் செல்லும் போதும் எங்கள் கட்சித் தோழர்கள் பலர் சுற்றி இருந்து பாதுகாப்பு வழங்குகிறார்கள்.

நாங்களும் பாதுகாப்புடன் நடந்து கொள்கிறோம். பாராளுமன்றத்தை விட்டு வெளியேறும் முன் நான் வெளியே வருவதாக சகோதரர்களிடம் தெரிவித்தேன். உங்களில் சிலர் நில்லுங்கள். அதன்படி இருந்தனர். நான் நாளையும் அப்படியே செய்வேன். எமது உயிரை வீணாக விட முடியாது. வாகனத்தில் செல்லும் போது விபத்தை ஏற்படுத்தி எமது உயிரை பறிக்க இவர்கள் நினைக்கக்கூடும்.

அதனால் ஒரு சில மோட்டார் சைக்கிள்கள் எனது பாதுகாப்பிற்கு இருந்தது. தலைகவசத்துடன் ஒருவர் வந்து காரில் ஏறினார். அவர் எனது பாதுகாவலர். மழை காரணமாக அவரை எனது காரில் ஏற்றினேன். என பதிலளித்தார்.

இராணுவ வீரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் – பொன்சேகா காட்டம் !

மோட்டார்சைக்கிளில் சென்ற இராணுவ வீரர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலை கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்திற்கு முன்பாக நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் முன்னெடுத்த இந்த செயற்பாடு அவமானகரமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் பேசிய அவர், சீருடை அணிந்திருக்கும் அதிகாரியை இப்படியா நடத்துவது என்றும் கேள்வியெழுப்பினார்.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றில் உறுப்பினர்களிடையே மோதல் – ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம் !

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபையின் நடுவில் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது சபாநாயகர் மீண்டும் சபையை மேலும் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்

“இலங்கையின் ஜனாதிபதியாக  ஆறு மாதங்களுக்கு கலாநிதி ஹர்ஷ டி சில்வா.” – முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரை !

இலங்கையின் ஜனாதிபதியாக  ஆறு மாதங்களுக்கு கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணாண்டோ பரிந்துரையொன்றை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஹரீன் பெர்ணாண்டோ, அடுத்த ஒராண்டிற்கு தாம் வேதனத்தை பெறாமல் பணியாற்றுவதாக கூறியுள்ளமை சமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

மக்கள்,  நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் ஒரே மாதிரியாகவே பார்க்கின்றனர். அனைவரும் திருடர்கள் என்றே அவர்கள் கருதுகின்றனர். எனினும் இரண்டு பக்கங்களிலும் நல்லவர்களும் இருக்கின்றார்கள். ஏன் எமக்கு தற்போது இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது. எம்மால் குழுவாக ஒன்றிணைய முடியாதுள்ளது. மக்கள் வீதிகளில் மரணிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகினால், என்ன செய்வது? யார் ஆட்சியை வழிநடத்துவது? அரசியலமைப்பில் அதற்கான ஏற்பாடுகள் உள்ளன.

இடைக்கால அரச தலைவரை நியமிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துவரும் நிலையில், தேர்தலை நடத்த முடியுமா? அனைவரும் ஒன்றிணைவது, முதலாவதாக நடைபெற வேண்டிய ஒன்று. அந்த ஒன்றிணைவு என்பது உளமார்ந்ததாக இருக்க வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து, ஆறு மாதங்களுக்கு ஹர்ஷ டி சில்வாவிடம் ஜனாதிபதி பதவியை கையளியுங்கள். எமது தலைவர் ஜனாதிபதி பதவியை கோரப் போவதில்லை. அதன்பின்னர் தேர்தலை பார்ப்போம்.

நாட்டிற்கு ஏதாவது செய்யும் ஒருவர் வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் நன்மதிப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் செய்ய வேண்டிய ஒன்று உள்ளது. எனக்கு ஒரு வருடத்திற்கு சம்பளம் வேண்டாம். நான் யோசனை ஒன்றை முன்வைக்கின்றேன். சிற்றுண்டிச் சாலையில் நான் உணவருந்த மாட்டேன். நாம் மாற்றமொன்றை கொண்டுவர வேண்டும். மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்காமல் இருப்பதற்கு செய்ய வேண்டிய விடயங்கள் உள்ளன.

மக்கள் துன்பத்தில் இருக்கும் போது இவ்வாறு இரண்டரை இலட்சம் சலுகையை பெறுவதில் எந்தவொரு பயனும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் போராட்டம் நடந்த இடத்தில் இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிள்களில் ஆயுதம் தாங்கி வந்த படையினர்  யார் ? – சூழ்ச்சி செய்கிறதா அரசு..? 

பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றவேளை மோட்டார் சைக்கிளில் வந்த படையினருக்கும் அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல்நிலை குறித்து பொலிஸ்மா அதிபர் உடனடி விசாரணைகளிற்கு உத்தரவிட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த படையினரை தடுத்து நிறுத்திய இரண்டுபொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒழுக்கவிதிமுறைகளிற்கு மாறானதவறான நடவடிக்கைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு இராணுவ தளபகி பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேபோன்று பாதுகாப்பு அமைச்சரின் செயலாளரும் இந்த சம்பவம் குறித்து பொலிஸ்மா அதிபருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும் அறிவித்துள்ளதுடன் பொலிஸ் அதிகாரிகளின் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதே நேரம் இது தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற அமைதியான போராட்டத்தில் இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிள்களில் ஆயுதம் தாங்கிய படையினர் வந்து சென்றிருந்தனர். யார் அவர்கள்? எதற்காக இப்படி வந்தார்கள்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

நாட்டில் ஒரு சர்வாதிகாரத்தை கொண்டுவருவதற்கான ஒரு கொடூரமான முயற்சி இது என்றும் நீங்கள் தன்னிச்சையாக நடந்து கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

“நாட்டை மீட்டெடுக்க ஒன்றிணையுங்கள். என் கனவு யாழ் பயணம் தொடரும்.” – அங்கஜன் இராமநாதன் 

எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாண மாவட்ட மக்களின் பிரதிநிதியாக எனது மக்களின் குரலாக நான் எப்போதும் செயற்படுவேன் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில்,

கடந்த  நாடாளுமன்ற தேர்தலில் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை ஆணையாக வழங்கிய என் மாவட்ட உறவுகளும், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரங்களில் மக்களை நேரில் சந்தித்து அவர்களது நிலைப்பாடுகளை நேரில் கேட்டறிந்து கொண்டேன்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையில், மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை நான் மதிக்கின்றேன். எங்கள் உறவுகள் இன்று பசியோடு இருக்கிறார்கள், நீண்ட வரிசையில் நின்று பொறுமையிழந்து இன்று வீதிகளில் போராட ஆரம்பித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டை முற்றாக முடக்கிய கொரோனா பாதிப்பின் உடனடி எதிர்வினைகளை இப்போதைய பொருளாதார நெருக்கடி நிலையினூடாக நாம் எதிர்கொண்டுள்ளோம்.

 

நாட்டில் ‘இல்லை’ என்கிற வார்த்தைகளே இப்போது எங்கும் கேட்கிறது. இது இந்த தேசத்துக்கு மிகவும் சவாலான காலப்பகுதியாகும். இதிலிருந்து நாம் மீண்டேயாக வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானது அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியாக பொறுப்புணர்வுடன் செயற்பட்டு வந்தது. அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்குரிய அழுத்தங்களை நாட்டின் சிரேஷ்ட கட்சியாக நாம் பிரயோகித்தே வந்தோம். நாட்டின் எதிர்கட்சி செயல்திறனற்று இருந்த நிலையில் அரசாங்கத்தை வழிப்படுத்த கட்சியாக நாம் பாடுபட்டோம். ஆனால் இப்போது அனைத்தும் எல்லைமீறி விட்டது.

நாட்டின் நிகழ்கால பிரச்சனைக்குரிய தீர்வை மக்கள் கோரி நிற்கிறார்கள். அதனூடாக தமது எதிர்காலத்தை வளர்த்தெடுக்க அவர்கள் விரும்புகிறார்கள். தங்கள் குழந்தைகளோடு போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் நோக்கம் அதுவாகவே உள்ளது.

எனவே, பிரதான எதிர்க்கட்சி செயற்படுவதுபோன்று நாட்டை மீட்டெடுப்பதற்கான தீர்வுகளின்றி, வெறுமனே எதிர்ப்பரசியலை மாத்திரம் மேற்கொள்வதை நாம் விரும்பவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவே நாம் விரும்புகிறோம். அதன்படி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்கள் நாடாளுமன்ற சுயாதீனமாக செயற்படுவதாக தீர்மானித்தோம். கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அவர்கள் இந்த அறிவிப்பை நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

எனது யாழ் மாவட்ட உறவுகள், யுத்தத்துக்கு பின்னதான அபிவிருத்திகளையும், வாழ்வாதார மேம்பாட்டையும் எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்த பொருளாதார நெருக்கடி நிலை அவர்களை மேலும் பாதித்துள்ளது.

கடந்த 20 மாதங்களாக மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவராக செயற்பட்டு எம்மக்களுக்கான அபிவிருத்திகளையும், வாழ்வாதார மேம்பாடுகளையும், அரசாங்கத்தின் திட்டங்களை அதிகப்படியாக எமது மண்ணிற்கு பெற்றுக்கொடுத்துள்ளேன். தேசிய பாடசாலைகள், சமுர்த்தி சௌபாக்கியா உற்பத்தி கிராமங்கள், இளைஞர் மேம்பாட்டு திட்டங்கள், வாழ்வாதார திட்டங்கள், குடிநீர் வசதிகள், விவசாயத்திட்டங்கள் என பல்வேறு பணிகளை மக்களின் ஆதரவோடு நாம் முன்னெடுத்துள்ளோம்.

எங்கள் மக்களுக்கென்று தனியாக கனவுகள் உண்டு. நாட்டின் ஏனைய மாவட்டங்களை விட எம் மக்களின் தேவைகள் தனியானவை. யுத்தத்தால் இழந்தவற்றை மீட்கும் இலக்கோடு அவர்கள் பயணிக்கிறார்கள். கல்வி, தொழில், வர்த்தகம், விளையாட்டு, பிராந்திய தன்னிறைவு பொருளாதாரம் என அவர்களுக்கான தனித்துவமாக கனவுகள் உள்ளன. அந்த மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதை “என் கனவு யாழ்” எனக்கொண்டு மக்கள்பணி ஆற்றுவதற்கான ஆணையை மக்கள் எனக்கு வழங்கியிருந்தனர்.

அதனை நிறைவேற்றும் பணியில் நேர்மையோடு நாம் செயற்பட்டோம். தொடர்ந்தும் செயற்படுவோம். “என் கனவு யாழ்” ஒரு நீண்ட பயணம். மக்களின் தேவைகள் ஒவ்வொன்றும் இதற்குள் அடங்கும். அவற்றை நிறைவேற்றுவதே மக்கள்பிரதிநிதியான எனது பொறுப்பு. அந்த பொறுப்புக்கூறலின் அடிப்படையிலும், மனச்சாட்சிக்கு நேர்மையாகவும் என் மாவட்ட உறவுகளோடு எப்போதும் நிற்பேன், அவர்களின் குரலாக செயற்படுவேன் என உறுதிமொழிகிறேன்.

இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து மீண்டுவருவதற்கான திட்டங்களையும் முன்மொழிவுகளையும், ஆதரவுகளையும் கல்வியாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், தொழில்வல்லுநர்கள், புலம்பெயர் சமூகம் என அனைத்து தரப்பினரும் முன்வைத்து நாட்டை மீண்டெடுக்க ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றுள்ளது.

“ஜனாதிபதி பதவி விலக மாட்டார்.” – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உறுதி !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எந்த சந்தர்ப்பத்திலும் பதவி விலக மாட்டார் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (06.04.2021) பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதிக்கு 69 இலட்சம் பேர் வாக்களித்துள்ளனர் என்பதை லக்ஷ்மன் கிரியெல்ல எமது அமைப்பாளருக்கு நினைவுபடுத்துகிறேன். ஜனாதிபதி ஒரு போதும் பதவி விலக மாட்டார் என்பதை அரசாங்கம் என்ற விதத்தில் நாங்கள் தெளிவாகக் கூறுகின்றோம். இதற்கு நாங்கள் முகம் கொடுப்போம். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களில் மூன்றாவது நிதியமைச்சர் – பதவியேற்கிறார் பந்துல ..? 

அலி சப்ரியின் வெற்றிடத்துக்கு புதிய நிதியமைச்சராக பந்துல குணவர்தன சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.

நிதியமைச்சர் பதவியில் இருந்து அலி சப்ரி இராஜினாமா செய்தமையை அடுத்து, குறித்த வெற்றிடத்திற்கு பந்துல குணவர்தன நியமிக்கப்படுவாரென தெரிவிக்கப்படுகிறது.

அலி சப்ரிக்கு முன்னர் பசில் ராஜபக்ச நிதியமைச்சராக இருந்ததோடு, அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி விலகியதை அடுத்து புதிய நிதியமைச்சராக அலி சப்ரி பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் வெற்றிடத்தில் உள்ள நிதி அமைச்சு பதவிக்கு பந்துல குணவர்தன நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.