08

08

பணம் கொடுத்த பெண்ணை கொன்று புதைத்த கணவன், மனைவி – யாழில் கொடூரம் !

யாழில் பெண்ணொருவர் படுகொலை செய்து புதைக்கப்பட்டுள்ளார் எனும் சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் , பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் பணம் கொடுக்கலில் ஈடுபட்டு வருபவர் எனவும், குடும்பம் ஒன்றுக்கு கொடுத்த 3 இலட்ச ரூபாய் பணத்தை வாங்க சென்ற போதே காணாமல் போயிருந்தார் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அதன் அடிப்படையில், மணியந்தோட்டம் பகுதியில் குறித்த பெண்ணிடம் பணம் வாங்கிய குடும்பத்தினரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி இருந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில், பணம் வாங்கிய குடும்பத்தினர் அப்பெண்ணை கொலை செய்து அவர்களது வீட்டுக்கு பின்னால் புதைத்துள்ளதாகவும், அவரது மோட்டார் சைக்கிளையும் புதைத்துள்ளனர் எனும் சந்தேகத்தில் குறித்த பகுதியில் அகழ்வு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றில் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை, குறித்த வீட்டில் வசித்து வந்த கணவன், மனைவி மற்றும் அவர்களுக்கு உதவிய குற்றத்தில் ஒருவருமாக மூவரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வைத்தியசாலைகளிலும் மின்வெட்டு – மெழுகுவர்த்தி ஏற்றி நோயாளர்களுக்கு சிகிச்சை !

மின்வெட்டு காரணமாக மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலையின் செயற்பாடுகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

வைத்தியசாலையில் இரண்டு ஜெனரேட்டர்கள் இருந்த போதிலும் அதில் ஒன்று பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

எனினும், டீசல் இல்லாததால் மற்ற ஜெனரேட்டரையும் இயக்க முடியாத நிலை காணப்படுகிறது. மெழுகுவர்த்தி ஏற்றி நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலை பொலன்னறுவை மாவட்டத்தின் இரண்டாவது முக்கியமான வைத்தியசாலையாகும்.

“நான் பதவி விலகப்போவதில்லை.”- ஜனாதிபதி கோட்டாபய உறுதி!

“கோட்டா வீட்டுக்குப் போ’ என்ற கோஷத்துடன் எனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் அரசியலே உண்டு” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் நாடெங்கும் வலுப்பெற்றுள்ளன. இந்நிலையில், போராட்டங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அரச தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், எனக்கு எதிராக உள்நாட்டு, வெளிநாட்டுச் சக்திகளால் களமிறக்கப்பட்ட சஜித் பிரேமதாஸ மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரைத் தோற்கடித்து 69 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் ஆணையுடன் நான் ஆட்சிப்பீடம் ஏறினேன்.

தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் எனது ஜனாதிபதி பதவிக்குரிய காலம் வரை நான் பதவியில் தொடர்ந்து நீடிப்பேன். நாடாளுமன்றத்திலும் எனக்கு எதிராக மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பிரேரணை கொண்டுவருவதற்குரிய பலம் எதிர்க்கட்சிகளிடம் இல்லை.

அன்று எனக்கு எதிராகக் களமிறக்கப்பட்ட இருவரும் (சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க) இன்று எனக்கு எதிரான போராட்டங்களை நடத்துகின்றனர். அவர்களின் கட்சிகளின் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களுமே எனக்கு எதிராக வீதிகளில் பொங்குகின்றனர்.

‘கோட்டா வீட்டுக்குப் போ’ என்ற கோஷத்துடன் எனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் அரசியலே உண்டு என்பதை நாடாளுமன்றத்தில் இந்த வாரம் எதிரணியினர் நடத்திய போராட்டங்களும் பகிரங்கப்படுத்தியுள்ளன. எனவே, நாட்டில் எனக்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் உண்மையில் மக்கள் போராட்டங்கள் அல்ல” – என்றார்.

“மக்களின் கோவம் நியாயமானது.”- மன்னிப்பு கோருகிறார் ஒருநாள் நிதியமைச்சர் !

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்காக மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இன்று (07) பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

வீட்டில் மின்சாரம், எரிவாயு, எரிபொருள் இல்லாதபோது, ​​​​மக்கள் அந்த அழுத்தத்தை வௌிப்படுத்துவது நியாயமானது என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டிற்கு அரசியலமைப்பே ஒரே தீர்வு என கடந்த காலங்களில் கூறியவர்கள் அரசியலமைப்பிற்கு புறம்பாக தீர்வுகளை காண முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யா நீக்கம் !

உக்ரைன் மீதான படையெடுப்பின் அட்டூழியங்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, ஐநா மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யாவை ஐநா பொதுச் சபை இடைநீக்கம் செய்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரானது தொடர்ந்து 43வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் துறைமுக நகரான மரியுபோலில் ரஷிய படைகள் ஊடுருவலுக்கு பிறகு 5 ஆயிரம் உக்ரைனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நகர மேயர் வாடிம் பாய்சென்கோ தெரிவித்துள்ளார்.

ரஷியா மீது கடுமையான புதிய பொருளாதார தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் தயராகியுள்ளன. ஐ.நா.வில் இருந்து ரஷியாவை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று ஜி 7 நாடுகள் வலியுறுத்தி இருந்தன.

உக்ரைனில் ரஷியாவால் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் போர் குற்றங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புடினின் இரண்டு மகள்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் ரஷிய வங்கிகள் மீதான தடைகளை கடுமையாக்கியுள்ளது. ரஷியாவின் ஸ்பெர் வங்கி, ஆல்பா வங்கி ஆகியவை அமெரிக்க நிதி அமைப்பை தொடர்புகொள்ள முடியாது. இந்த வங்கிகளை அமெரிக்கர்களும் பயன்படுத்த இயலாது என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷியாவை வெளியேற்ற வாக்கெடுப்பு நடத்துவதற்கான அவசரகால சிறப்பு கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான உக்ரைன் பிரதிநிதி, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷிய கூட்டமைப்பின் உறுப்பினர் உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்பது ஒரு வாய்ப்பல்ல. அது ஒரு கடமை என கூறியுள்ளார்.

ஐ.நா. பொது சபையில் ரஷியா சார்பிலான பிரதிநிதி பேசும்போது, இந்த வரைவு தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், நடைமுறையில் இருக்கும் மனித உரிமைகளுக்கான கட்டமைப்பை அழிக்கும் மேற்கத்திய நாடுகள் மற்றும் அவர்களுடைய கூட்டணி நாடுகளின் முயற்சிக்கு எதிராக வாக்களிக்கவும், உண்மையில் உங்களுடைய முடிவை பரிசீலனை செய்யவும், அவையில் கூடியுள்ள அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம் என கூறியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷிய கூட்டமைப்பை வெளியேற்றுவதற்கான வரைவு தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இருந்து இந்தியா உள்ளிட்ட 57 நாடுகள் விலகி இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நாடுகளில் தீர்மானத்திற்கு ஆதரவாக 93 நாடுகளும், எதிராக 24 நாடுகளும் வாக்கு பதிவு செய்துள்ளன.