11

11

“தமிழ் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட வேண்டி வரும்.” – எச்சரிக்கிறார் சிவாஜிலிங்கம் !

நிறைவேற்று அதிகார முறை ஒழிப்போ அவநம்பிக்கை பிரேரணையோ எதுவாக இருந்தாலும் தமிழ் தரப்புக்கள் நிபந்தனையின்றி ஆதரவளித்தால் பொதுமக்களை கொண்டு வீதிகளில் இறங்குவோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (11.04.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எம்.கே. சிவாஜிலிங்கம் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஐக்கிய மக்கள் சக்தி இறங்கியிருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணியும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் தமிழ் தேசிய பிரதான மூன்று அணிகள் நம்பிக்கையில்லாப் பிரேரனை ஆட்சிமுறையை ஒழிப்பது சம்பந்தமாக கூட்ட அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆட்சி மாற்றம் கொண்டு வந்து என்ன செய்யப் போகின்றோம். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. எதுவும் மாறப்போவதில்லை.

வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகத்தை உருவாக்க வேண்டும். சாதாரண பெரும்பான்மை மூலம் மாகாண சபை சட்டத்தின்படி அருகருகே இருக்கக்கூடிய இரண்டு மாகாணங்கள் இணைக்கப்பட முடியும் என்று கூறப்படுகின்றது. பாராளுமன்றில் சாதாரண பெரும்பான்மை மூலம் கூட இதனை நிறைவேற்ற முடியும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு இல்லாமல் எந்தவித பொருளாதாரத்திற்கும் தீர்வும் கிடையாது. அத்துடன் நிரந்தர சமாதானமும் நல்லிணக்கமோ கிடையாது என்பதை தெட்டத் தெளிவாக உணர வேண்டும். ஆறு கடக்கும் வரைதான் அண்ணன் தம்பி அதன் பின்னர் நீ யாரோ நான் யாரோ என்ற நிலை தான்.

நிறைவேற்று அதிகார முறை ஒழிப்போ அவநம்பிக்கை பிரேரணையோ எதுவாக இருந்தாலும் தமிழ் தரப்புக்கள் நிபந்தனையின்றி ஆதரவளித்தால் பொதுமக்களை கொண்டு வீதிகளில் இறங்குவோம் என்றார்.

“நீங்கள் எங்களுக்கு எதிராக போராடும் ஒவ்வொரு நிமிடமும் நாட்டிற்கான டொலர் வீணாகின்றது.” – மக்களுக்கான உரையில் மகிந்த ராஜபக்ச !

“நீங்கள் எங்களுக்கு எதிராக போராடும் ஒவ்வொரு நிமிடமும் நாட்டிற்கான டொலர் வீணாகின்றது.”  என நாட்டு மக்களுக்கான விசேட உரையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

எங்கள் நாடு மிகவும் இக்காட்டான சூழ்நிலையில் இருக்கும் இந்த தருணத்தில் உங்கள் மத்தியில் உரையாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 50 ஆண்டு காலத்துக்கும் மேலான எனது அரசியல் வாழக்கையில் மிகவும் தீர்மானம் மிக்க அரசியல் மைல்கற்களை கடந்து வந்துள்ளேன் என்பதை குறிப்பிட வேண்டும்.

கொரோனா தொற்றுநோய்க்கு பின்னர் நாம் எதிர்கொள்ள வேண்டி நேரிட்ட பொருளாதார பிரச்சினைகளை நம் நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் என நான் நம்புகிறேன். இத்தொற்றுநோய் தாக்கத்திலிருந்து நம் மக்களை எம்மால் பாதுகாக்க முடிந்தபோதும், தற்போது எங்கள் நாடு சவால்களுக்கு உட்பட்டு இருப்பதை எமக்கு உணர முடிகின்றது. நாடு முடக்கப்பட்டதோடு அந்நியச் செலாவணி வீழ்ச்சியடைந்ததுடன், வெளிநாட்டு கையிருப்பு சிதைவடைந்தது என்பதை நான் கூறி தெரியவேண்டியதில்லை. கடலில் எண்ணெய் கப்பல்கள் கண்களுக்கு எட்டும் தூரத்தில் இருந்தபோதும் அவற்றை பெற்றுக்கொள்வதற்கான டொலர் எம்மிடம் இல்லாதததால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவதற்கு நேரிட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகான முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் யாரும் முன்வரவில்லை.

எனவே, ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டு. தற்போதைய நெருக்கடியை தீர்க்க நாம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்.

மேலும், சேதனப் பசளை திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு இது உகந்த தருணம் அல்ல என சுட்டிக்காட்டிய பிரதமர் விவசாயிகளின் நலன் கருதி மீண்டும் உர மானியம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நாங்கள் மக்களை இந்த நிலைக்கு தள்ளுவதற்காக நாங்கள் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவரவில்லை-மக்களை நீண்டவரிசையில் வைத்திருப்பதற்காக நாங்கள் வீதிகளை அமைக்கவில்லை-பணம் கிடைக்கும்வரை எண்ணெய் கப்பல்கள் காத்திருப்பதற்காக நாங்கள் துறைமுகங்களை அமைக்கவில்லை இந்த நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம்.

நீங்கள் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும்ஒவ்வொரு செகண்டும் நாங்கள் நாட்டிற்காக டொலர்களை உழைக்கின்ற வாய்ப்பை தவறவிடுகின்றோம்.”  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, மக்களை பொறுமையாக இருக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“திருடர்களுடன் பாராளுமன்றத்தில் ஒன்றாக அமர மாட்டேன்.”- எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் இம்ரான்கான் ! 

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் அரசு மீது அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பு மூலம் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து அந்நாட்டின் புதிய பிரதமர் போட்டியில் பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதருமான  ஷபாஸ் ஷெரீப் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
அவருக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்திருந்த நிலையில் ஷபாஸ் ஷெரீப் பிரதமராக தெரிவாகியுள்ளார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான் கான், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
16 ஆயிரம் கோடி ஊழல் வழக்குகள் உள்ள ஒருவரை ( ஷபாஸ் ஷெரீப்) பிரதமராக தேர்வு செய்திருப்பதை விட நாட்டிற்குப் பெரிய அவமானம் வேறு எதுவும் இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.
நாங்கள்(பிடிஐ கட்சி எம்.பி.க்கள்) பாராளுமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். திருடர்களுடன் பாராளுமன்றத்தில் ஒன்றாக அமர மாட்டேன் என்றும் இம்ரான் கான் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எம்.பி.பதவியை ராஜினாமா செய்யும் இம்ரான்கானின் முடிவை அவரது கட்சியை சேர்ந்த முன்னாள் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் உறுதி செய்துள்ளார்.
மேலும் புதன்கிழமை பெஷாவரில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் இம்ரான் கான் பாகிஸ்தான் ஆட்சி மாற்றத்தில் தொடர்புடைய வெளிநாட்டு சதிக்கு எதிராக போராட வருமாறு மக்களுக்கு அழைப்பு விடுப்பார் என தெரிவித்தார்.

எரிபொருளுக்காக ஒரு மணிநேர காத்திருப்பு – குடும்பஸ்தர் பலி – கதறி அழுத மனைவி ! 

காலியில் உள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று அதிகாலை எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் டீசல் பெறுவதற்காக காலி, தவலம, ஹினிதும பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்றிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தனது பாரவூர்திக்கு டீசல் கொள்வனவு செய்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்று சுமார் ஒரு மணிநேரம் வரிசையில் நின்றுள்ளார்.

அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

உயிரிழந்தவர் காலி, ஹபரகட பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதே நேரம் குறித்த இடத்தில் அவருடைய மனைவி கதறி அழுத சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

வார இறுதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்று உயிரிழந்தவர்களில் இது ஆறாவது மரணமாகப் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க ஆளுந்தரப்பு – எதிர்த்தரப்பு சம்மதம் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதாக நாடாளுமன்ற சுயாதீன அணி குறிப்பிட்டுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தையில், அடிப்படை சேவைகளை, ஸ்திரப்படுத்தி இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்காகவும், நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கும் இணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம், மக்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை தெரிவு செய்ய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜபக்ஷக்களுக்கு எதிராக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் போராட்டத்தில்..!

சிலாபத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இரு குழுக்களிடையே மோதல் – குவிக்கப்பட்ட பொலிஸார் !

சிலாபத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவான மற்றும் அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி ஒரு தரப்பினரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக மற்றுமொரு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த இரு போராட்டமும் அரசியல் போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது

“21 மில்லியன் மக்கள் வாழும் நாட்டை வெறும் 226 பேர் சேர்ந்து அழித்துவிட்டனர்.” – குமார் சங்கக்காரா சாடல்!


சமூக வலைதள நேர்காணலில் பேசிய போதே சங்கக்கார இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும் பேசிய அவர்,

நாம் அனைவரும் தேர்ந்தெடுத்த தலைவர்கள் மோசமான கொள்கைகளை வைத்துள்ளனர்.  மோசமான நிதி நிர்வாகத்தை மேற்கொண்டுள்ளனர்.

அதைவிட மோசமாக அவர்கள் தங்கள் சொந்த மக்களை இந்த உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைக்கு கொண்டு வந்ததற்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.

தேசிய அல்லது காபந்து அரசாங்கம் பற்றிய பேச்சுக்கள் இருக்கும் நிலையில் நெருக்கடிக்கு மக்களுக்கு உடனடி குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகள் அவசியம்.

இன்னல்களை எதிர்கொண்டுள்ள நேரத்தில் மட்டும் ஒண்றிணையாத இலங்கையை தான் தனிப்பட்ட முறையில் நம்ப விரும்புவதாகவும் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இதுவே இனவாதம் மற்றும் மதவாதம் சமூகத்திலோ அல்லது அரசியலிலோ எந்தப் பங்கையும் வகிக்காத ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊழலுக்கும், உறவினர்களுக்கு பதவிகளை வழங்குவது மற்றும் குடும்ப ஆட்சியை கொண்டு செல்வதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

‘GoHomeGotta’ – மூன்றாம் நாளாகவும் தொடரும் இளைஞர்கள் போராட்டம் – நிறுத்தப்பட்டது இணையவசதி !

காலி முகத்திடல் – ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நேற்றுமுன் தினம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று(11) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டக் காரர்கள் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போதும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பெருந்திரளானவர்கள் திரண்டு அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அங்கிருக்கும் போராட்டக்காரர்கள் ‘கோட்டா கோ ஹோம்’‘GoHomeGotta’ எனக் கோஷங்களை எழுப்பிவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்றைய தினத்தைப் போலவே இன்றும் இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

அரசிலிருந்து விலகியவர்களை இணைக்கும் தீவிர முயற்சியில் ராஜபக்ஷக்கள் !

கடந்த வாரம் அரசாங்கத்தில் இருந்து விலகிய பங்காளி கட்சிகள் மற்றும் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 41 நாடாளுமன்ற உறுப்பினர்களை நேற்று இரவு கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்துள்ளார்.

எனினும் இந்த சந்திப்பில்“முக்கியமான எதுவும் பேசப்படவில்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார சந்திப்பின் பின்னர் தெரிவித்தார்.

புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு அரச தலைவர் ராஜபக்ஷவை நிர்ப்பந்திப்பதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும் என முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்று முன்னதாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.