காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் ஒருநாள் போராடுமாறு சிங்கள இளைஞர்களுடன் இணைந்து போராட செல்லும் தமிழ் இளைஞர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
தர்மபுரம் பகுதியில் கண்டாவளை பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
“ சிங்கள இளைஞர்களுடன் போராட்டத்திற்கு செல்ல தயாராகும் இளைஞர்களிடம் நான் பகிரங்கமாக கேட்கிறேன். இத்தனை நாட்களாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெருக்களில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்காக ஒரு நாள் ஆயிரம் இளைஞர்கள் கிளிநொச்சியில் திரளுங்கள். அதற்கு எங்கள் இளைஞர்கள் தயாரில்லை.
கைகளால் ஒப்படைக்கப்பட்ட கணவன்மார், கைகளால் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள், கைகளால் ஒப்படைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள், மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் யாருமே இல்லை. எங்கு என்றும் தெரியாது. இவர்களை தேடியவாறு இருக்கும் தாய்மார்களுடன் ஆயிரம் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து போராடுங்கள் என உங்களைப் பகிரங்கமாக கேட்கிறேன்.
சிங்கள இளைஞர்களின் போராட்டத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் என்று தயாராகிக்கொண்டிருக்கும் ஜனநாயகத்தின் இளைஞர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் பற்றி பேசினால் அந்த இளைஞர்களின் பாதங்களுக்கு பூப்போட்டு வணங்கவும் தயாராக இருக்கிறோம். நாங்கள் போராடியது எங்களுடைய உரிமைகளுக்காக, இழந்துபோன இறைமைகளை மீட்டெடுப்பதற்காக, எங்களுடைய மண்ணில் சுயாட்சி முறையிலான உரிமையை வென்றெடுக்க நாங்கள் போராடுகிறோம். இது முற்றுமுழுதான உரிமைக்கான போராட்டம். உயிர் வாழ்தலுக்கான போராட்டம். அடுத்த பரம்பரைக்கான நிம்மதிக்கான போராட்டம்தான் நாம் இந்த மண்ணில் நடாத்துகிறோம்.
நாங்கள் எரிபொருளுக்காக போராடவில்லை. எரிவாயுவிற்காக போராடவில்லை. நாங்கள் மின்சாரத்திற்காக போராடவில்லை. உணவிற்காக நாங்கள் போராடவில்லை. இவை இல்லாமால் நாங்கள் வாழ்ந்தவர்கள். நாங்கள் யாருடைய போராட்டத்தையும் கொச்சைப்படுத்தவில்லை. நீங்கள் போராடுவது ஒரு கொடுங்கோலனுக்கு எதிராக, இனப்படுகொலையாளிக்கு எதிராக, மஹிந்த ராஜபக்ஷ, கோட்டபாய ராஜபக்ஷ என்ற இருவரும் இந்த மண்ணில் தமிழ்த் தேசிய இனத்தை படுகொலை செய்தவர்கள். அவர்களுக்கெதிராக போராடுகிறீர்கள்.
நாம் உங்களுக்கு முதலே இவர்களுக்கு எதிராக 2019ஆம் ஆண்டிலேயே போராடியிருக்கிறோம்.
கடந்த காலங்களில் சிங்கள மக்கள் போராடியபோது தமிழர்கள் ஆதரவு நல்கியிருக்கிறார்கள். அவர்கள் தங்களின் பிரச்சினை தீர்ந்ததும் தமிழர்களுக்கு எதிராக மாறியிருக்கிற பல சம்பவங்கள் வரலாறுகளில் நடைபெற்றிருக்கிறது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்