19

19

இலங்கையில் பிரஜை ஒருவர் வாழ ஒரு மாதத்துக்கு 5000 போதுமாம் – வெளியாகியுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு !

மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் சமீபத்திய அதிகாரபூர்வ வறுமைக் கோடு பட்டியலை மாவட்ட வாரியாக வெளியிட்டுள்ளது.
2022 பெப்ரவரி மாதத்துக்காக வெளியிடப்பட்ட பட்டியலின் படி, இலங்கையில் உள்ள ஒருவர் அவரது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய 5,972 ரூபாய் போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை தற்போது வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தேசிய வறுமைக் கோடு பட்டியலின் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாறுபட்டுள்ளது. இந்த பட்டியலின் படி, நபர் ஒருவரின் அடிப்படை வாழ்க்கைச் செலவு அதிகமாக இருப்பது கொழும்பு மாவட்டத்திலாகும். அது 6,482 ரூபாவாகும்.
இந்த பட்டியலில் குறைந்த பெறுமதி பதுளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
அதன் பிரகாரம் பதுளை மாவட்டத்தில் உள்ள ஒருவருக்கு தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மாதம் ஒன்றுக்கு 5,623 ரூபாய் போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராமிய வீதி அபிவிருத்திகள் இராஜாங்க அமைச்சராக பிள்ளையான் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் மேலும் 3 இராஜாங்க அமைச்சர்கள்  நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சராக எஸ்.வியாழேந்திரனும், கிராமிய வீதி அபிவிருத்திகள் இராஜாங்க அமைச்சராக பிள்ளையான் மற்றும் நெசவு கைத்தொழில், உள்நாட்டு ஆடை உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோர் நியமினம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் புதிதாக 24 இராஜாங்க அமைச்சர்கள் அரச தலைவர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரம்புக்கனை சம்பவம் – ஐக்கிய நாடுகள் சபை கவலை !

ரம்புக்கனை சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் கவலை வெளியிட்டுள்ளார்அவர் தெரிவித்துள்ளதாவது,

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிற்கு பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது குறித்து ஆழ்ந்த கவலையடைந்திருக்கின்றேன்.

எந்த தரப்பினதும் வன்முறையும் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களின் உரிமைகளிற்கு இடையூறுவிளைவிக்கும்.பொதுமக்களையும் அவர்களிற்கு தங்கள் அடிப்படை சுதந்திரங்களை பயன்படுத்துவதற்கு உள்ள உரிமையையும் பாதுகாப்பதற்கு பலத்தை பயன்படுத்துவதை ஆகக்குறைந்தளவிற்கு தேவையானதாக மட்டுப்படுத்துவது அவசியம்.

ரம்புக்கனை வன்முறைகள் – அமெரிக்க தூதுவர் கவலை !

ரம்புக்கனை வன்முறைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான பொதுமக்களின் உரிமைகள் உறுதி செய்யப்படவேணடும் என தெரிவித்துள்ளார்

அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

ரம்புக்கனையிலிருந்து வரும் பயங்கரமான செய்தி குறித்து நான் ஆழந்த கவலையடைந்துள்ளேன்.

நான் எந்த வன்முறையையும் கண்டிக்கின்றேன் – அது ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரானதாகயிருந்தாலும் சரி பொலிஸாருக்கு எதிரானதாகயிருந்தாலும் சரி-அதனை நான் கண்டிக்கின்றேன் . நான் பொறுமையையும் அமைதியையும் கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

முழுமையான வெளிப்படையான விசாரணைகள் இடம்பெறவேண்டும், அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான பொதுமக்களின் உரிமைகள் உறுதிசெய்யப்படவேண்டும்

ரம்புக்கனையில் வன்முறைகள் – பொலிஸ் தரப்பு வெளியிட்ட அறிவிப்பு என்ன.?

றம்புக்கணை ஆர்ப்பாட்டத்தின் போது 30,000 லீற்றர் எரிபொருளைக் கொண்ட பௌசருக்கு ஒரு குழுவினர் தீ வைக்க முற்பட்டதைத் தடுக்கவும், அதனால் ஏற்படக்கூடிய பாரிய சேதங்களைத் தடுக்கவும் பொலிசார் குறைந்தபட்ச பலத்தை பிரயோகிக்க வேண்டியிருந்ததாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

றம்புக்கணையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் போது பொலிஸார் அதிக பலத்தை பிரயோகித்தனரா என்பது தொடர்பில் பொலிஸ் தலைமையக மட்ட விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

றம்புக்கணையில் இன்று இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“கொழும்பு போராட்டங்களுக்கு தமிழர்கள் திரளாக ஆதரவு தரவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு..”- சரவணபவன்

“தங்களின் மீட்பர்கள் என்று சிங்கள மக்கள் யாரை நம்பினார்களோ அவர்களை இன்று அடித்து துரத்துவதற்கு முயன்றுகொண்டிருக்கின்றார்கள்.”  என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியால் தென்னிலங்கையில் முளைத்துள்ள போராட்டங்கள் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்தப் போராட்டத்துக்கு இடையில் பேரம் பேசலுக்கான வாய்ப்புக்கள் ஏதாவது தமிழ் தரப்புக்கு கிடைக்குமாக இருந்தால் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஒட்டுமொத்த இலங்கையையும் ஆட்டம் காணச் செய்துள்ளது.

இந்த நெருக்கடியின் மூலவேர் தனித்து பொருளாதார பிரச்சினையன்று. இந்தத் தீவில் காலாதிகாலமாக, மகா வம்சப்புனைவுகளை நம்பி சிங்கள – பௌத்த மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயன்றமைக்கான விளைவுகளையே இப்போது சிங்கள மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள் .

அந்த மேலாதிக்க மனோநிலையில் தமிழர்களை வென்றுவிட்டதாக அவர்கள் குதூகலித்திருந்தாலும், உண்மையில் தோற்றுப்போனவர்கள் அவர்கள்தான் என்பதை காலம் எடுத்துரைத்திருக்கின்றது.

பொருளாதார நெருக்கடி இந்தத் தீவின் தமிழ்த் தேசத்தையும் பாதித்திருக்கின்றதுதான். அதை மறுக்க முடியாது. சிங்கள தேசத்து ஆட்சியாளர்களால் தமிழர் தேசம் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளுக்குள்ளும் வாழ்ந்து வந்தவர்கள் நாம். ஆனாலும் இப்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை சங்கீதக் கதிரை போன்று மாற்றுவதற்கு முயலும் தென்னிலங்கை முற்போக்கு சக்திகளின் பின்புலத்துடன் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை நாம் ஆதரிப்பது தீர்வாகாது.

நாம் எமது முன்னைய சுய பொருளாதாரத்துக்கு திரும்புவதே தற்போதைய நெருக்கடியிலிருந்து தமிழர் தேசம் மீள்வதற்கான வழி. அதை எம்மவர்கள் செய்து கொண்டும்தான் இருக்கின்றார்கள்.

தென்னிலங்கை போராட்டக்களம் தமிழர்களுக்கு தேவையற்றது. கொழும்பு மனோநிலை உடைய தமிழர்கள், தங்களது நித்திய வாழ்வாதாரத்துக்காக சிங்களவர்களுடன் போராட்டத்தில் இணைகின்றனர். ஆனால், தமிழர்கள் திரளாக ஆதரவு தரவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.

ஆட்சியாளர்களை மாற்றித் தீர்வைத் தேடுவதற்குப் பதிலாக அடிப்படைக் கட்டமைப்பை மாற்றக் கோருவதுடன், மகாவம்ச புனைவுகளிலிருந்து மீளத் தயாராகும்போதே தமிழர்கள் கை கொடுப்பது காலப் பொருத்தமாக இருக்கும். இல்லாவிடின் நல்லாட்சி காலத்தில் கறிவேப்பில்லையான கதையாகவே தமிழர்களின் நிலை அமையும், என்றும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டார் அமைச்சர் சுரேன் ராகவன் !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகிக்கும் அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த கடிதம் ஒன்றின் மூலம் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர சுரேன் ராகவனுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலின் பேரில், கட்சியின் பிரதிச் செயலாளர், வன்னி மாவட்ட உறுப்பினர் மற்றும் கட்சியின் சர்வதேச விவகார செயலாளர் பதவிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தயாசிறி ஜயசேகரவினால் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

புதிய அமைச்சர்களுக்கு 2 மில்லியன் டொலர்கள் – அம்பலப்படுத்தியது எதிர்க்கட்சி !

2 மில்லியன் டொலர்களை வழங்கியே புதிய இராஜாங்க அமைச்சர்களை அரசாங்கம் நியமித்துள்ளது என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

வீடுகளுக்கு சென்று நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைபேசும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக விமல் வீரவன்சவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையிலேயே தமக்கு குறித்த தகவல் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சபையில் தெரிவித்தார்.

“இலங்கை பொலிஸாரே நீங்கள் வெட்கப்படவேண்டும்.” – மஹேல ஜெயவர்த்தன காட்டம் !

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தினை கடுமையாக சாடியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்  மஹேல ஜெயவர்த்தன இதுதான் ஜனநாயகமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது,

மக்கள் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் சொத்துக்களை சேதப்படுத்தினால் அவர்களை கைது செய்யலாம்,ஆனால் அவர்களை சுடுவதற்கு எந்த காரணமும் இல்லை.

இது ஜனநாயகமா? இதுதான் நாட்டின் சட்டமா? இதற்கு காரணமானவர்கள் யார் என்றாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும். இலங்கை பொலிஸாரே நீங்கள் வெட்கப்படவேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்

ஆர்ப்பாட்டக்காரர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு ஒருவர் சாவு – இலங்கையில் தொடரும் பதற்றம்

ரம்புக்கனையில் ஆரப்பட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார் மேலும் 24 பேர் காயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக இன்று 19ஆம் திகதி காலை முதல் ரம்புக்கனை பகுதியில் ரயில் கடவையை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் மேலும் தீவிரமடைந்த நிலையில் பொலிஸார் கண்ணீர்ப்புகைப்பிரயோகத்தை இன்று மாலை மேற்கொண்டுள்ளனர்.

இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எண்ணெய் பௌசருக்கு தீவைக்க நெருக்கிய வேளை பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.