23

23

யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவி தற்கொலை !

பல்கலைக்கழக மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் தங்கியிருந்த  பல்கலைக்கழக மாணவியே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தவறான முடிவெடுத்து அந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று தெரிய வருகின்றது.

உயிரிழந்தவர் பளையைச் சேர்ந்தவர் என்றும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவி எனவும் தெரியவந்துள்ளது. உயிரிழப்புக்கான காரணம் இது வரை தெரியவராத நிலையில் யாழ்ப்பாண காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு – அவசரமாக தேவைப்படும் 53 வீதமான மருந்துகள் !

யாழ்.போதானா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்டவைக்கு பெரும் தட்டுப்பாடுகள் நிலவுவதாக வைத்தியசாலை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாடளவிய ரீதியில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையிலும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன.

போதனா வைத்தியசாலையில் 73 அத்தியாவசிய மருந்துகள், சத்திர சிகிச்சைக்கு தேவையான 13 மருந்துகள், அவசரமாக தேவைப்படும் 53 வீதமான மருந்துகள் மற்றும் ஆய்வு கூடத்திற்கு தேவையான 6 மருந்துகள் என்பன இல்லாது உள்ளதாகவும், வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காலிமுகத்திடலில் தொடரும் போராட்டம் – நதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு !

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்காக உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்ற பொலிஸாரின் மனுவை கொழும்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்களிற்கு தலைமை தாங்கும் 16 பேரின் பெயர் விபரங்களை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் காலிமுகத்திடலில் கூடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களிற்கும் ஆர்ப்பாட்டங்களை எதிர்ப்பவர்களிற்கும இடையில் மோதல்கள் இடம்பெறலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக 16 தனிநபர்களிற்கு எதிராக உத்தரவினை பிறப்பிக்கவேண்டும் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்தனர். வன்முறைகள் இடம்பெறுவதற்கு முன்னர் அல்லது பொது குழப்பம் இடம்பெறுவதற்கு முன்னர் உத்தரவினை பிறப்பிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.

எனினும் வன்முறைகள் நிகழ்ந்தால் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என நீதிபதி தெரிவித்தார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப்பயிற்சியாளர் பொறுப்பு – நிராகரித்த மஹேல ஜெயவர்த்தன!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக தன்னை நியமிக்கும் யோசனையை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நிராகரித்துள்ளார்.

கிறிஸ் சில்வர்வுட் இதற்கு முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்டு வந்தார்.

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் படுதோல்வி அடைந்ததால் அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

தற்போது இலங்கை அணியின் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வுட் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அணிகளுக்கு இரண்டு புதிய பயிற்சியாளர்களை நியமிக்க இங்கிலாந்து கிரிக்கெட் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

அதன்படி, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட முன்வைக்கப்பட்ட யோசனையை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நிராகரித்துள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் நேற்று (22) செய்தி வெளியிட்டுள்ளன.

அவரைத் தவிர, அவுஸ்திரேலிய முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங்கும் குறித்த பதவியை ஏற்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து டெஸ்ட் பயிற்சியாளர் பதவிக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஓடிஸ் கிப்சன் பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இலங்கை – இந்தியா மின்பாதை அமைப்பு முயற்சி – சேதுக்கால்வாய் திட்டத்திற்கு மூடு விழா நடத்துவதற்கான தொடக்கம் என்கிறார் ராமதாஸ் !

இலங்கை -இந்தியா மின்பாதையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கு வசதியாக மதுரையிலிருந்து இலங்கையின் அனுராதபுரம் பகுதிக்கு கடல் வழியாக மின்பாதை அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக இரு நாடுகளின் பரிசீலனையில் இருந்து வருகிறது. 2000-ஆவது ஆண்டுகளின் பிற்பகுதியில் இத்திட்டத்தை செயல்படுத்த முயற்சிகள் நடந்த போது, அதற்கு தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அதனால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

அதன்பின் 2010-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்தியா -இலங்கை இடையே மின்சார கோபுரங்களை அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்வதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், அத்திட்டமும் தமிழ்நாட்டின் ஆதரவு இல்லாததால் கிடப்பில் போடப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளில் இரு முறை கைவிடப்பட்ட இந்தியா – இலங்கை மின்பாதை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பேச்சுகள் தொடங்கியிருப்பதாகவும், அவை தொடக்க நிலையில் இருப்பதாகவும் இலங்கை அரசின் மின்துறை செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார். இந்த முயற்சி பொதுவாக இந்திய நலனுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பாதகமாக அமையும் என்பதே உண்மை.
இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரப் பாதை அமைக்கும் திட்டம் குறித்து இதற்கு முன் பேசப்பட்ட போதெல்லாம் அதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அதற்கான முக்கியக் காரணம், கடந்த காலங்களில் இத்திட்டம் குறித்த பேச்சுகள் தொடங்கப்பட்ட போது தமிழ்நாடு கடுமையான மின்வெட்டை எதிர்கொண்டு வந்தது. இப்போது தமிழகத்தின் மின்வெட்டு கட்டுப்படுத்தப்பட்டு விட்ட போதிலும் கூட, இலங்கைக்கு மின்பாதை அமைப்பதை எதிர்க்க இன்னும் பல காரணங்கள் உள்ளன.
சேது சமுத்திரம் திட்டம் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கான கனவுத் திட்டம் ஆகும். பல்லாண்டு கால போராட்டத்திற்குப் பிறகு தான் அத்திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுத்து தொடங்கப்பட்டது. ஆனால், அத்திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக சேது சமுத்திர திட்டப் பணிகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் சேதுக்கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்; இலங்கையை சுற்றிச் செல்லும் பன்னாட்டு சரக்குக் கப்பல்கள் தூத்துக்குடி, இராமேஸ்வரம், வேதாரண்யம், காரைக்கால் வழியாக செல்ல வேண்டும்; அதன் காரணமாக அப்பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் தமிழகத்தின் எதிர்பார்ப்பு ஆகும். அது நிறைவேறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஆனால், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடலுக்கு அடியிலோ, மின் கோபுரங்கள் அமைத்து கடலுக்கு மேலாகவோ மின் பாதை அமைக்கப்பட்டால், அத்துடன் சேதுக்கால்வாய் திட்டத்திற்கு மூடு விழா நடத்தப்பட்டு விடும். இது இந்தியாவுக்கு பாதகமாகவும், இலங்கைக்கு சாதகமாகவும் அமையும். இலங்கைக்கு மட்டுமே பயனளிக்கக்கூடிய மின்பாதை திட்டத்திற்காக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் பங்களிக்கக்கூடிய சேதுக்கால்வாய் திட்டத்தை எதற்காக இழக்க வேண்டும்?
சேதுக்கால்வாய் திட்டம் கைவிடப்படுவதும் இலங்கை அரசுக்குத் தான் லாபமாக அமையும்.

இவை அனைத்தையும் கடந்து இலங்கை போர்க்குற்றங்களை நிகழ்த்திய நாடு, தமிழர்களை இனப் படுகொலை செய்த நாடு, இத்தகைய குற்றங்களுக்காக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணையை எதிர்கொண்டு வரும் நாடு என்பதை மத்திய, மாநில அரசுகள் மறந்து விடக் கூடாது.

இலங்கை கடுமையான அரசியல், பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் சூழலில், அந்நாட்டுக்கு கருணை அடிப்படையில் உதவிகளை செய்வது வேறு; அந்நாட்டின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவுவது வேறு என்பதில் இந்தியா தெளிவாக இருக்க வேண்டும். அதேபோல், சீனாவின் ஆதிக்கத்தைத் தடுப்பதாகக் கூறிக் கொண்டு, கண்களை மூடிக் கொண்டு இலங்கைக்கு உதவுவதும் தவறு ஆகும்.இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிராக அமைந்து விடக் கூடாது. பாகிஸ்தானின் பக்கம் இலங்கை சாய்ந்து விடக் கூடாது என்பதற்காக கச்சத்தீவை தாரை வார்த்ததன் விளைவை இப்போது வரை தமிழகம் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

அதேபோல், சேதுக்கால்வாய் திட்டத்தை தாரை வார்த்து இலங்கைக்கு மின்பாதை அமைப்பதன் பாதிப்பையும் தமிழகம் தான் அனுபவிக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு இலங்கை & இந்தியா மின்பாதையை மத்திய அரசு கைவிட வேண்டும்” என்று குறித்த அறிக்கையில்  கேட்டுக்கொண்டுள்ளார்.

 

“ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம்.” – பொலிஸ் மா அதிபர் உறுதி !

எதிர்காலத்தில் ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம் என பொலிஸ்மா அதிபர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம்  தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனை சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நேற்று ஆணைக்குழுவில் முன்னிலையாகினர்.

எதிர்காலத்தில் ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம் என பொலிஸார் உறுதியளித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பொலிஸ்மா அதிபர் நேற்றையதினம் ஆணைக்குழுவிடம் உறுதியளித்துள்ளார்.

மேலும் சம்பவம் குறித்து கிடைக்கப்பெற்ற அனைத்து தகவல்களையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிஸார் கையளித்துள்ளதாக ஆணையாளர் நாயகம் நிமல் கருணாசிறி தெரிவித்தார்.

இலங்கையில் தொடரும் மருந்து தட்டுப்பாடு – உதவிக்கரம் நீட்டும் ஆசிய அபிவிருத்தி வங்கி !

இந்நாட்டுக்கு தற்போது தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக நிதியுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது.

அதன்படி, 21.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மிக நெருக்கடியான பொருளாதார சூழலில் இலங்கையின் கடன் தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பு !

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு உதவும் வகையில், அந்த நாடு கடனாகப் பெற்ற 40 கோடி டொலா் (ரூ.3,000 கோடி) தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசத்தை இந்தியா நீட்டித்துள்ளது.

இதுகுறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கைக்கு பல்வேறு வழிகளில் இந்தியா உதவி செய்வது தொடா்கிறது. இலங்கை அரசுக்கு அந்த நாட்டு மத்திய வங்கி மூலமாக இந்திய ரிசா்வ் வங்கி 40 கோடி டொலா் கடனுதவி அளித்துள்ளது. அந்தக் கடன் தொகையை கரன்சி பரிமாற்ற முறையில் இலங்கை அரசு திருப்பிச் செலுத்துவதற்கு அளிக்கப்பட்டிருந்த அவகாசம் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிந்துவிட்டது. இந்நிலையில், இலங்கை அரசு கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசத்தை இந்திய ரிசா்வ் வங்கி நீட்டித்துள்ளது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியாவுக்கு கடன் தவணையைத் திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு கடந்த 12 ஆம் திகதி அறிவித்தது. IMF மூலமாக நிதியுதவி கிடைக்கும் வரை கடன் தவணை நிறுத்தி வைப்புத் தொடரும் என்றும் இலங்கை அரசு கூறியது.

இந்த அறிவிப்பு வெளியான பிறகு, சா்வதேச அளவில் கடன் தவணையைத் திருப்பிச் செலுத்த இந்தியா அவகாசம் அளித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இலங்கை மத்திய வங்கியுடன் ‘சாா்க்’ கரன்சி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இந்திய ரிசா்வ் வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய ரிசா்வ் வங்கியிடம் அதிகபட்சமாக 40 கோடி டொலா் தொகையை, டொலா் அல்லது யூரோ அல்லது ரூபாய் மதிப்பில் பல தவணைகளில் இலங்கை மத்திய வங்கி கடனாகப் பெற முடியும்.

இதுதவிர, இந்தியாவிடம் இருந்து அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக இலங்கை அரசு 100 கோடி டொலா் (ரூ.7,460 கோடி) கடன் பெற்றுள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் வாங்குவதற்காக 50 கோடி டாலா் ரூ.3,700 கோடி இலங்கை கடன் பெற்றுள்ளது.

பொலிஸ் நிலையத்தில் வைத்து பிளேட்டினால் தனது கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞன் – யாழ் பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு !

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவர் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியை சேர்ந்த இளைஞனே கழுத்தில் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனுக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்துள்ளது.

பிடியாணை உத்தரவை நிறைவேற்றும் முகமாக யாழ்ப்பாண பொலிஸாரினால் இளைஞன் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த இளைஞன் தனது உடமையில் இருந்த பிளேட்டினை எடுத்து, தனது கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளார் என கூறி பொலிஸாரினால் யாழ். போதனா வைத்தியசாலையில் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் – ஐவர் பிணையில் விடுதலை ! 

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 60 பேரில் 5 பேர் இன்று (22) பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் ஏனையவர்களை தொடர்ந்து மே 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் உத்தரவிட்டார்.

கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் காத்தான்குடியை சேர்ந்தவர்கள் மற்றும் சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், உட்பட 69 பேரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிசார் 4 வெவ்வேறு இலக்கம் கொண்ட வழக்குகளை தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதில் சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், ஆகியோரது வழக்குகள் நீதவான் நீதிமன்றில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதுடன் 5 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதையடுத்து ஏனைய 60 பேரும் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுதாரபுரம், கேகாலை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது பலத்த பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்ட 9 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இதில் 5 பேரை தலா ஒருவருக்கு 50 இலச்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையிலும், மாதாந்தம் 2 ஆம் மற்றும் 3 ஆம் கிழமைகளில் உள்ள ஞாயிற்றுக்கிழமையில் பிற்பகல் 4 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொழுத்து இடுமாறு உத்தரவிட்டு பிணையில் விடுவித்தார்.

இதேவேளை ஏனைய 55 பேரையும் தொடர்ந்து மே மாதம் 4 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி மூலம் நீதவான் உத்தரவிட்டார்.