29

29

யூரோவை நாணயமாக பயன்படுத்தும் நாடுகளில் கடுமையாக அதிகரிக்கும் பணவீக்கம் !

யூரோவை நாணயமாக பயன்படுத்தும் 19 நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷியா போர் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால் ஆண்டு பணவீக்கம் இந்த மாதம் 7.5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இதையடுத்து ஐரோப்பிய நாடுகளில் எரிசக்திகளின் விலை 38 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 34.3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பா பண வீக்கம் அமெரிக்க ஆண்டு பணவீக்கத்திலும் எதிரொலித்துள்ளது. 1981க்கு அமெரிக்காவின் பணவீக்கம் கடந்த மாதம் 8.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ரஷிய உகிரைன் போர், ரஷியாவிடம் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கு தடங்களாக உள்ளது. இதனால் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வரும் நாடுகளுக்கு ரஷியா உக்ரைன் போர் மீண்டும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பண வீக்கத்தால் மூலப்பொருட்கள் மற்றும் உதிரி பாகங்களில் விலை உயர்ந்துள்ளது.  ஜெர்மனி மின்சார ஆற்றலை பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவித்து வருகிறது. ஜெர்மனியின் ஐஜி மெட்டல் தொழிலாளர் சங்கம் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை 8.2 சதவீதம் உயர்த்துவதற்கு வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் எரிபொருள் இறக்குமதிக்கு ரஷியாவையே நம்பி இருக்கிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அதிகரிக்கும் வெப்பம், மின்சார பயன்பாடு மற்றும் ஆட்டோமொபைல் எரிபொருள் விலை உயர்வு ஆகியவை ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடம் வர்த்தகம் செய்வதை நிறுத்த முடியாமல் செய்கிறது.
இந்த பணவீக்கத்தின் காரணமாக ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கு ஆலோசனை செய்து வருகிறது.

காபூலில் உள்ள மசூதியில் குண்டு வெடிப்பபு – 10 பேர் பலி !

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் திகதி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், 15க்கு மேற்பட்டோர் பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“நாடு முழுதும் போராட்டம். ஆனாலும் வடக்கு – கிழக்கை மட்டுமே அடக்க முனைகிறது அரசாங்கம்.”- சுமந்திரன் குற்றச்சாட்டு !

நாடு முழுவதும் கிளந்தெழுந்திருக்கின்ற போதும் கூட எங்களது வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களிலே எந்தவித சத்தங்களும் கேட்கக் கூடாது என்ற வகையிலே அரசாங்கம் செயற்படுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள கடத்தப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபியில் தராகி சிவராம் அவர்களின் 17வது நினைவு நிகழ்வும், நீதி கோரிய போராட்டமும் இடம்பெற்றது.

இதன்போது அமரர் சிவராம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் சிவராம் அவர்கள் உட்பட படுகொலை செய்யப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதி வேண்டிய ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் அவர்களை நினைவு கூரும் முகமான நிகழ்வில் நாங்கள் நின்று கொண்டிருக்கின்றோம். இன்று வரைக்கும் இப்படுகொலை தொடர்பிலான நீதி கிடைக்கப்படவில்லை. கொழும்பிலே கடத்தப்பட்டு, உயர் பாதுகாப்பு வலயமான பாராளுமன்றத்திற்குப் பின்னால் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவ்வாறு யாரும் கேள்வி கேட்க முடியாத கொடூரமான நிகழ்வுகள் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நடந்திருக்கின்றது.

அதிலே அண்ணன் சிவராம் அவர்கள் மிகவும் முக்கியமானவர். தமிழ்த் தேசியம் பற்றி பலவிதமான கட்டுரைகள் ஆங்கில மொழியிலும் தொடர்ச்சியாக எழுதி எமது பிரச்சனையை உலகிற்கு அறிவித்ததில் அவர் மிக முக்கியமானவர். அவரை அரச அனுசரணையோடு கடத்திப் படுகொலை செய்திருந்தார்கள். இன்று வரைக்கும் அதற்குரிய ஒழுங்கான விசாரணையோ நீதியோ செய்யப்படவில்லை. அதற்குக் கண்டனம் தெரிவித்து இன்று இங்கே போராட்டம் நடைபெறுகின்றது.

இந்தப் போராட்டம் நடைபெறுகின்ற அதேவேளை இலங்கை பூராகவும் பாரிய போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நேற்றைய தினம் கடையடைப்பு, தொழிற்சங்கங்கள் எல்லாம் வீதியில் இறங்கிப் போராடினார்கள். தற்போது மக்கள் திரண்டு திரண்டு அரசாங்கத்திற்கு எதிராக ஜனாதிபதியும், பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் என போர்க்கொடியை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் தென்பகுதியிலே நிகழ்கின்ற போது வடக்கிலேயும் கிழக்கிலேயும் தான் இவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகள் பலவத்தமாக மேற்கொள்ளப்படுகின்றன. நேற்றைய தினம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களுக்கு அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது, வீதிகளை முடக்கக் கூடாது என்று களுவாஞ்சிக்குடி பொலிசாரினால் நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பொலிசாரினால் நீதிமன்ற உத்தரவு கையளிக்கப்பட்ட அதேவேளை நாடு முழுவதும் முடக்கப்பட்டிருந்தது. பிரதான எதிர்க்கட்சி கண்டியில் இருந்து பாரிய ஆர்ப்;பாட்டத்தினை முழு வீதியையும் மறித்தே செய்கின்றார்கள். அங்கே ஒரு சட்டம் இங்கே வேறு சட்டங்கள்.

நாடு முழுவதும் கிளந்தெழுந்திருக்கின்ற போதும் கூட எங்களது வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களிலே எந்தவித சத்தங்களும் கேட்கக் கூடாது என்ற வகையிலே அரசாங்கம் செயற்படுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த அரசாங்கம் பதவி விலக வேண்டும். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை பதவி விலக வேண்டும். நாட்டை இப்படியாக மிக மோசமான நிலைக்குள் தள்ளியிருப்பவர்கள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருக்கத் தகுதியற்றவர்கள் என்பதில் நாங்களும் உறுதியாக இருக்கின்றோம். பாராளுமன்றத்திலும், வெளியிலும் இதற்கான எமது போராட்மும் தொடரும் என்று தெரிவித்தார்.

அமைகிறது இடைக்கால சர்வகட்சி அரசாங்கம் – வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு !

அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கத்தின் புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையின் நியமனம் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய தேசிய சபையிடம் ஒப்படைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் நடைப்பெற்றிருந்தது.

பொருட்களின் அதிகரிக்கும் விலையேற்றம் – திருட்டில் ஈடுபட்ட தம்பதியினர் கைது !

ஹொரணை பிரதேசத்தில் பெண்ணிடம் தங்க நகையை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, தங்க நகையை அடகு வைத்த சந்தேக நபரின் மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹொரணை ஸ்ரீபாலி பல்கலைக்கழக வீதியில் பெண்ணொருவரின் தங்க நகையை சந்தேகநபர் பறித்துள்ளார்.

பின்னர், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஹொரண பொலிஸார், கொள்ளைச் சம்பவம் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகி இருந்ததை கண்டுபிடித்தனர்.

அதன்படிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் 24 மணித்தியாலங்களில் தங்க நகையுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் விசாரணையின் போது, ​​தான் மேசன்வேலையில் ஈடுபட்டு வருவதாக சந்தேக நபர் தெரிவித்திருந்தார். சீமெந்து மற்றும் ஏனைய கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக வருமானம் குறைந்துள்ளதால் தங்க நகையை கொள்ளையிட தீர்மானித்ததாக சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

ஊடகவியலாளர் வேடத்தில் வந்த பொலிஸ் அதிகாரி – பேசி விரட்டிய இரா.சாணக்கியன் – வீடியோ இணைப்பு !

மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்களையும் கொலை செய்யவா முயற்சிக்கின்றீர்கள் என சிவில் உடையில் ஊடகவியலாளர்களை காணொளி எடுத்த பொலிஸாரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மிகவும் காட்டமான முறையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவு தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு. ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றது.

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டியும் நாட்டில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையினை கண்டித்தும் தமிழ் மக்களின் உரிமையினை அங்கிகரிக்ககோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை சிவில் உடையில் வருகை தந்திருந்த பொலிஸார் கெமராக்களின் உதவியுடன் காணொளியாக பதிவு செய்திருந்தனர்.

இந்தநிலையில் இதன்போது கோபமடைந்த இரா.சாணக்கியன் மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்களையும் கொலை செய்யவா முயற்சிக்கின்றீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்.

றம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு !

அண்மையில் றம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று பொலிஸ் அதிகாரிகள் எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (29) தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

றம்புக்கனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மற்றும் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சகல பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் கடந்த 27ஆம் திகதி உத்தரவிட்டது.

இது தொடர்பான உத்தரவு நேற்று (28) பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்றதுடன், பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருக்கு சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்யுமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதற்கமைய சந்தேகநபர்கள் நால்வரும் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான சமிந்த லக்ஷன் கடந்த 19ஆம் திகதி றம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மிகுந்த நெருக்கடியான நேரத்தில் இலங்கை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது தமிழக அரசு !

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு இந்திய மத்திய அரசிடம் அனுமதி கோரும் தனித் தீர்மானம் தமிழக சட்டப் பேரவையில் இன்று வெள்ளிக்கிழமை (29) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில், இலங்கையில் நிலவும் நெருக்கடி விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்தீர்மானத்தை கொண்டு வந்தார்.

நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சிரமங்கள் குறித்து பேரவையில் விளக்கமளித்த ஸ்டாலின், அத்தியாவசிய மருந்துகள், எரிபொருள் மற்றும் உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தார்.

முதலில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவிகள் செய்வதாக அறிவித்திருந்தேன். பல தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒரு சமூகத்திற்கு மாத்திரமன்றி அனைத்து இலங்கை மக்களுக்கும் உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடியின் காரணமாக அனைத்து மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் என அவர்கள் என்னிடம் தெரிவித்தனர், என்றார்.

இதற்கமைய, 80 கோடி ரூபாய் பெறுமதியான 40,000 மெட்ரிக் டன் அரிசி, 137 மருந்து பொருட்கள் (28 கோடி ரூபா) மற்றும் குழந்தைகளுக்காக 500 டன் பால்மா (15 கோடி ரூபா) என்பவற்றை வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

இவற்றை தமிழக மாநில அரசினால் நேரடியாக வழங்க முடியாது என்பதால், இலங்கையில் உள்ள இந்தியா தூதரகம் ஊடாக வழங்கிவைக்க மத்திய அரச அனுமதி வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு தனியாக இந்த உதவிகளை வழங்க முடியாது. மத்திய அரசிடம் அனுமதி பெற்று இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மட்டுமே இவற்றை விநியோகிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக பிரதமர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இருந்தும் அவர்களிடமிருந்து பதில் வரவில்லை. எனக் கூறியுள்ளார்.

தொடரும் பொருளாதார நெருக்கடி – இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி !

ஏப்ரல் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும் போது கணிசமாகக் குறைந்துள்ளது, இது சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைக்கு அதிக சவால்கள் உள்ளன என்பதைக் குறிக்கிறது.

ஏப்ரல் 01-26 காலப்பகுதியில் மொத்தம் 55,590 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். மார்ச் மாத சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ஒப்பிடும் போது, ​​மாதத்திற்கான வருகை கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைவு.

மார்ச் மாதத்தில் மொத்தம் 106,500 சர்வதேச பார்வையாளர்கள் நாட்டிற்குள் வருகைத் தந்துள்ளனர். இது இவ்வாண்டுக்கான மிக அதிக தொகையாகும்.

சுற்றுலா அமைச்சின் ஏப்ரல் மாதத்திற்கான புள்ளிவிவரங்களுக்கு அமைய நாளாந்த வருகை விகிதம் 2,138 ஆகக் குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. முன்னைய மாதங்களில் நாளாந்தம் 3,500 முதல் 4,000 பேர் வரை நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.

ஜனவரி 01 முதல் ஏப்ரல் 26 வரையிலான காலகட்டத்தில் மொத்த வருகை 340,924 ஆக இருந்தது.

10,327 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன், ஐக்கிய இராச்சியம் சுற்றுலாவுக்கான மிகப்பெரிய ஆதார சந்தையாக உருவெடுத்துள்ளது. இந்தியா 7,900 வருகையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளதுடன்,. ஜேர்மனி 5,756 சுற்றுலாப் பயணிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஏனைய குறிப்பிடத்தக்க சந்தைகளில் பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் ரஷ்யா ஆகியவை உள்ளன.

21 ஆவது நாளாகவும் போராட்டம் – கண்டு கொள்ளாத ராஜபக்ஷக்கள் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலிலும், அலரி மாளிகை வளாகத்திலும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் இன்றைய தினமும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, காலி முகத்திடலில் இன்று(வெள்ளிக்கிழமை) 21 ஆவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு அப்பால் இந்த போராட்டத்தில் மேலும் பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய கடந்த காலங்களில் காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, அவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாதைகளும் இந்தப் போராட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

கோட்டா கோ கம எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் தொடர்ச்சியாக கலந்து கொண்டு இரவு – பகலாக அரசாங்கத்திற்கு எதிராக கோஷமெழுப்பி வருகின்றனர்.

தேசியக் கொடிகளை ஏந்தியும், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிராக பதாதைகளை ஏந்தியும் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்தப் போராட்டத்தின் காரணமாக, ஜனாதிபதி செயலக வளாகம் மற்றும் அதனை அண்டியப் பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.