May

May

“இனி ஒருபோதும் இங்கு திரும்பி வரமாட்டேன்.”- அலி சப்ரி காட்டம் !

“ நாடாளுமன்றத்துக்கு இனி ஒருபோதும் இங்கு திரும்பி வரமாட்டேன்.” என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

நான் இந்த நாடாளுமன்றத்தை மீண்டும் பார்க்க மாட்டேன், எனக்கு இது தேவையில்லை. இவ்வாறான சூழலைக் காண நாங்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழையவில்லை. இனி ஒருபோதும் இங்கு திரும்பி வரமாட்டேன்.

நான் வாதம் செய்ய வரவில்லை. மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடவே வந்தேன். நாட்டில் நெருக்கடியை உருவாக்கி ஒருவரையொருவர் நோக்கி விரலை நீட்ட முயற்சித்தால் அந்த விரலை வெற்றி வரலாறு வரை நீட்ட வேண்டும்.

இந்த நேரத்தில் செய்ய வேண்டியது, ஒருவரையொருவர் விமர்சித்துக்கொள்வதை விடுத்து, நாட்டின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதே.

நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் முன்னர் 42 மில்லியன் ரூபாயை அரசாங்கத்திற்கு வருமான வரியாக செலுத்தியுள்ளேன். பொதுப் பணத்தை ஒருபோதும் அபகரிக்கவோ, திருடவோ இல்லை” என்றார்.

விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு – எலான் மஸ்க் மீது குற்றச்சாட்டு !

உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு அவர் தனி விமானத்தில் பறந்தபோது அங்கு இருந்த பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டார் என்று பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. இதையடுத்து அந்த தவறை மறைப்பதற்காக 2018-ஆம் ஆண்டு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் 1.93 கோடி ரூபாய் தொகையும் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த செய்தியை எலான் மஸ்க் மறுத்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது:-
நாம் கருத்து சுதந்திரம் பற்றி பேசி வருகிறேன். அதில் ஒருபகுதியாக பைடன் அரசாங்கத்தையும் விமர்சித்து வருகிறேன். இதனால் என்மீது அரசியல் ரீதியான தாகுதல்கள் தொடங்கப்பட்டுள்ளன.  ஆனால் இந்த அவதூறுகள் எல்லாம் என்னை சிறந்த எதிர்காலத்திற்காக போராடுவதில் இருந்தும், சுதந்திர பேச்சு உரிமை குறித்து பேசுவதில் இருந்தும் தடுக்க முடியாது.
எழுதி வைத்துகொள்ளுங்கள். என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மை இல்லை.
இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உதவுவதாக ஜி7 நாடுகள் அறிவிப்பு – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்பு !

கடன் நிவாரணத்தைப் பெறுவதற்கு இலங்கைக்கு உதவுவதாக ஜி7 நாடுகள் அறிவித்துள்ளதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றுள்ளார்.

இலங்கையுடன் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான ஈடுபாடு பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு முக்கியமானது என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கடன் நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக G7 நிதித் தலைவர்கள் நேற்று ஜேர்மனியில் நடைபெற்ற கூட்டத்தின் வரைவு அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது இனப்படுகொலை – வலி.மேற்கு பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றம் !

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என வலி.மேற்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பிரதேச சபையின் அமர்வு நேற்று (வெள்ளிக்கிழமை) தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றபோதே பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சபை அமர்வின்போது உறுப்பினர் திருமதி ச.சுபாஜினி மேற்படி பிரேரணையை முன்வைத்து உரையாற்றினார். வன்னியில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு தாமும் ஒரு சாட்சியாளர் என அவர் எடுத்துரைத்தார். அங்கு இடம்பெற்ற வேதனைகளையும் வலிகளையும் உணர்ந்தவர் என்ற அடிப்படையில் அது இனப்படுகொலையே என அவர் கூறினார்.

இதன்போது, உறுப்பினர்களான ந.பொன்ரசா, சி.இதயகுமாரன், ச.ஜெயந்தன், சி.குணசிறி ஆகியோரும் இறுதியில் தவிசாளரும் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக தமது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றினர்.

இறுதி யுத்தம் என்ற பெயரில் அரசாங்கம் திட்டமிட்ட இனப்படுகொலையை அரங்கேற்றியது என்பதற்கு பல சான்றாதாரங்கள் உள்ளன என உறுப்பினர் பொன்ராசா தெரிவித்தார்.

அங்கு மூன்று இலட்சம் மக்கள் மட்டுமே சிக்கியிருக்கின்றார்கள் என அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால், கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சிய ஐந்து இலட்சம் வரையான பொதுமக்கள் வவுனியா நலன்புரி நிலையங்களில் தஞ்சமடைந்தனர்.

ஆனால், ஆறு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அங்கு வசிக்கின்றனர் என புள்ளிவிபரங்கள் தெரிவித்திருந்தன. பல இலட்சம் பேரை திட்டமிட்டுக் கொன்றுவிக்கும் நோக்கத்துடனேயே அரசு யுத்தத்தை நடத்தியது என அவர் எடுத்துரைத்தார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஒரு இனப்படுகொலையாளி எனவும் நவாலி சென்.பீற்றர் தேவாலயம், செம்மணிப் படுகொலை உள்ளிட்ட பல படுகொலைகள் அவரது காலத்திலேயே இடம்பெற்றவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று, கொல்லப்பட்ட உறவுகளுக்காக தீபமேற்றி அஞ்சலி செலுத்திய சந்திரிகா அப்படத்தை தமது முகப்புத்தகத்தில் தரவேற்றி முப்பது வருட காலம் இடம்பெற்றது இனப்படுகொலை என பதிவிட்டிருக்கிறார் எனவும் கூறினார்.

உலகில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள், போன்ற இரசாயன ஆயுதங்களை தமிழ் மக்கள் மீது வீசி கொடூரமாக அவர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என உறுப்பினர் ஜெயந்தன் தெரிவித்தார்.

தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை கனேடிய நாடாளுமன்றமே ஏற்று தீர்மானம் நிறைவேற்றியதை சுட்டிக்காட்டிய அவர், சர்வதேசம் இன்று தமிழர் பக்கம் தமது பார்வையைத் திருப்பியிருக்கின்றது எனவும் கூறினார்.

வன்னியில் அப்பாவி மக்கள் திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என உறுப்பினர் இதயகுமாரன் தமது உரையில் தெரிவித்தார். உணவைக்கூட அனுப்ப மறுத்து அரசாங்கம் தமிழ் மக்களை படுகொலை செய்தது என்பதை அவர் எடுத்துரைத்தார்.

இதேவேளை, தாமும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற அடிப்படையில் யுத்தத்தின் கொடூரங்களை எடுத்துரைத்தார் உறுப்பினர் குணசிறி.

கடந்த காலங்களில் தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வருடம் தடையின்றி நடைபெற்றதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இறுதியில், தவிசாளர் தமது உரையில், வன்னியில் எமது மக்கள் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டனர். இதை ஆவணப்படுத்தவேண்டிய, இதற்கு நீதி கோரவேண்டிய வரலாற்றுக் கடமை எமக்கு உண்டு.

உலகமே பார்த்துக்கொண்டிருக்க எமது மக்கள் திட்டமிட்டு இன அழிப்பு செய்யப்பட்டார்கள். நாகரிகம் உள்ள மனித இனம் செய்யாத செயலை இலங்கை அரச படைகள் அரங்கேற்றியிருக்கின்றது.

இங்கு இடம்பெற்றது இனப்படுகொலையே என்ற தீர்மானத்தை நாம் இன்று இந்த உயரிய சபையில் நிறைவேற்றுகின்றோம். ஏனைய சபைகளும் இத்தீர்மானத்தை நிறைவேற்றி, இந்த நூற்றாண்டில் இலங்கை அரச படைகள் நடத்திய அநாகரிகத்தை ஆவணப்படுத்தவேண்டும். – என்றார்.

இதேவேளை, இத்தீர்மானத்தை முன்வைத்து சபை உறுப்பினர்கள் உரையாற்றிக்கொண்டிருந்தபோது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறிச் சென்றிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. வெட்கப்படுகிறேன் என்கிறார் ரணில் !

விவசாயத்திற்கு தேவைாயான உரம் இல்லாமையினால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் உணவு நெருக்கடியை இலங்கை சந்திக்க நேரிடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்கை நியூஸு செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையினால் கடனை திருப்பி செலுத்த முடியாததை முன்னிட்டு வெட்கப்படுவதாக பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அதேபோல் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னைய நிர்வாகமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

தனிமையில் வாழ்ந்து வந்த 3 பிள்ளைகளின் தந்தை தற்கொலை – முல்லைதீவில் சம்பவம் !

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குற்பட்ட பாண்டியன்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதே இடத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஐயாத்துரை துரைரட்ணசிங்கம் (65) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் நீண்ட காலமாக தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நட்டாங்கண்டல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துக்கோரல கொலை சம்பவம் – பிரதான சந்தேகநபர் கைது !

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

29 வயதுடைய பேருந்து ஓட்டுனர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வன்முறைகளை தூண்டிய குற்றச்சாட்டில் பெண் ஊடகவியலாளர் கைது !

வன்முறைகளை தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வன்முறையை தூண்டிய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களில் தொலைக்காட்சி ஊடகவியலாளரும் ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாரஹன்பிட்டியவை சேர்ந்த 39 வயது பெண் ஊடகவியலாளரே கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொடையை சேர்ந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

“மாநகரசபையை கலைக்க வேண்டிவரும் என நான் கூறவே இல்லை.” – வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா

ஆரிய குளத்தில் இராணுவத்தினர் வெசாக் கூடு அமைப்பதற்கு அனுமதி கொடுக்காவிட்டால் யாழ் மாநகரசபையை கலைக்க வேண்டிவரும் என எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட வடக்கு ஆளுநர், ஆரியகுளம் பகுதி விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ் மாநகர சபை விடயம் தொடர்பில் நான் தற்போது பேச விரும்பவில்லை. எனினும் நான் மாநகர சபையை கலைப்பதாக யாரிடமும் கூறவில்லை. எனவே அந்த விடயம் தொடர்பில் நான் பேச வேண்டிய தேவை இல்லை எனவும் தெரிவித்தார்

பிரித்தானியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் !

பிரித்தானியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்துள்ளதாக பிரித்தானிய தேசிய புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 2022 நிலவரப்படி பிரித்தானியாவின் நுகர்வோர் விலை குறியீடு, 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. அங்கு கடந்த 12 மாதங்களில் மின்சார கட்டணங்கள் விலை உயர்வு 53.5 சதவீதமாகவும், எரிவாயு விலை 95.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

மின்சாரம், எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரிப்பால் கடந்த ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளியியல் நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணர் கிராண்ட் பிட்ஸ்னர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் உயர்ந்து வரும் இந்த பணவீக்கத்தின் காரணமாக குறைந்த வருமானத்தை உடைய குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.