May

May

மாணவர் போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் !

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.

கொழும்பு – காலி வீதியில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்திற்கு அருகில் இன்று மாலை இவ்வாறு கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, கொழும்பு கோட்டை பிரதேசத்தின் பல்வேறு வீதிகளிலும் உள்நுழைய, மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய யோர்க் வீதி, மற்றும் ஜனாதிபதி மாவத்தை ஆகிய வீதிகளில் பிரவேசிப்பதற்கும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதற்கும் கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்துக்கு அருகில் இருந்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிஸார் குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

‘கோட்டா – ரணில் சதிப்புரட்சி அரசாங்கத்தை விரட்டியடிப்போம், செயன்முறையை மாற்றுவோம்’ எனும் தொனிப்பொருளில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

பவித்ரா வன்னியாரச்சி மற்றும் அவரது கணவர் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர் !

முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் அவரது கணவரான காஞ்சன கருணாரத்ன ஆகியோர் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளனர்.

வாக்குமூலம் வழங்குவதற்காக அவர்கள் இவ்வாறு குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 9ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

“பிரபாகரனின் கீழ் செயற்பட்டு மரணித்த அந்த இளைஞர்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன்.” – நாடாளுமன்றில் டிலான் பெரேரா !

“தவறான வழியில் சென்றாலும் பிரபாகரனின் கீழ் செயற்பட்டு மரணித்த அந்த இளைஞர்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன்.” என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர்,

இன்று வெற்றி தினம் கொண்டாடப்படுகின்ற நிலையில், அந்த போரில் பலியான படையினருக்கு நாம் மாியாதை செலுத்துகிறோம். அதேநேரம், தவறான வழியில் சென்றாலும் பிரபாகரனின் கீழ் செயற்பட்டு மரணித்த அந்த இளைஞர்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன்.

இதேவேளை அரசியல் வாழ்க்கையில் நான் அதிகமாக விமர்சித்த ரணில் விக்கிரமசிங்க, இன்று பிரதமராக பதவியேற்றமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

அவர் சர்வதேசத்தில் நற்பெயரைக்கொண்டிருக்கிறார். நாடாளுமன்றத்தின் 225 பேர் செய்ய முடியாத காரியமான சர்வதேச செல்வாக்கை, அவர் பெற்றிருக்கிறார். எனவே அவருக்கு நாடாளுமன்றில் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் .நாட்டில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் பொறுப்புக்கூற வேண்டும்.

இதேவேளை நாட்டில் இன்று சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படவில்லை.  நாட்டில், இன்று பொதுமக்கள் உணவுக்காக கஸ்ரப்படும் நிலையில், நாடாளுமன்றத்தில் உணவகம் செயற்படுவது பொருத்தமானது அல்ல. எனவே அந்த உணவகத்தை மூடி விடுமாறும் டிலான் பெரேரா கோரிக்கை விடுத்தார்.  .

இலங்கையர்கள் வைத்திருக்கக்கூடிய ஆகக்கூடிய வெளிநாட்டு நாணயம் எவ்வளவு ? – இரண்டு வாரங்களே அவகாசம் !

இலங்கையர்கள் தமது கையில் பணமாக வைத்திருக்கக்கூடிய ஆகக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி 10 ஆயிரம் அமெரிக்க டொலர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேலதிகமாக வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயங்களை வங்கியின் வெளிநாட்டுக்கணக்கில் வைப்புச்செய்வதற்கோ அல்லது அவற்றை ரூபாவாக மாற்றுவதற்கோ இருவார கால அவகாசம் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேலதிக வெளிநாட்டு நாணயத்தை வங்கியில் வைப்புச் செய்யாமல் கைகளில் வைத்திருப்பவர்கள், அந்த பணம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பதைத் தெளிவுபடுத்துவதற்கும் இரு வார கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.

இருவாரத்தின் பின்னர் உரிய அளவை காட்டிலும் மேலதிகமாக வெளிநாட்டு நாணயத்தை கைகளில் வைத்திருப்பவர்களிடம் அபராதம் அறவிடப்படும் எனவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அது அவர்கள் கையில் வைத்திருக்கும் தொகையை விடவும் அதிகமானதாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இலங்கையர்கள் தமது கையில் பணமாக வைத்திருக்கக்கூடிய ஆகக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி 15 ஆயிரம் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு உதவ சர்வதேசநாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனை – கோத்தாபாய என்ன செய்ய போகிறார்..?

மோசமான பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து நாட்டை மீட்டெடுக்கத் தேவையான நிதியுதவிகளை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச பதவியில் இருக்கும் வரை அந்த நிதியுதவிகளை வழங்க முடியாது என்று சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளதாகவும் எதிர்க்கட்சி  இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து  மீண்டு வருவதற்கு தீர்வாக அப்போதைய நிதியமைச்சர் அலி சப்ரி சர்வதேச நாணய நிதியத்திடம் பல பில்லியன் டொலர் நிதி உதவி கோரியிருந்தார்.

எனினும் அந்த நிதி உதவி கோட்டாபய ராஜபக்ச இல்லாத அரசாங்கத்திற்கே வழங்கப்படும் என இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதென உங்களுக்கு தெரியுமா? புதிய அரசாங்கத்திற்கே நாங்கள் உதவுவோம் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

எனினும் தற்போது புதிய வைன் பழைய போத்தல்களில் அடைக்கப்பட்டுள்ளது. இன்னமும் அமைச்சரவை ஒன்று நியமிக்க முடியாமல் போயுள்ளது. கோட்டாபய இல்லாத அரசாங்கம் ஒன்றிற்கே உதவிகள் கிடைக்கும். எனினும் தற்போது அரசாங்கம் ஒன்றே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

வரிசையில் நிற்காதீர்கள் – நிலமை சீராக ஒன்றரை மாதங்களாகும் என்கிறது லிற்றோ கேஸ் !

நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு நிலைமையை சமாளிக்க இன்னும் ஒன்றரை மாதம் செலவிடப்படும் என லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒரு நாளைக்கு 30,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை வெளியிட நிறுவனம் ஆலோசித்து வருவதாக நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

மோசமான வானிலை காரணமாக சரக்கு கப்பலில் இருந்து எரிவாயுவை இன்னும் இறக்க முடியவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே, எரிவாயு விநியோகம் தாமதமாகும் என்பதால், மக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

வேகமெடுக்கும் குரங்கு அம்மை தொற்று – பாலியல் ரீதியாக பரவலாம் என எச்சரிக்கை !

பிரிட்டனில் கடந்த வாரம் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. ஆப்ரிக்காவில் இருந்து திரும்பியவர்களிடம் இருந்து இந்த நோய் பரவியிருக்கலாம் என கூறப்பட்டது.
இதை தொடர்ந்து இந்த நோய் ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் பரவி 40க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது.
மாட்ரிட்டில் மட்டும் 23 பேருக்கு இந்த குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அமெரிக்காவிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை ஏற்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் கனடாவில் இருந்து திரும்பியதாக கூறப்படுகிறது.
ஆப்ரிக்காவில் ஏற்படும் நோயான இது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பரவி வருவது குறித்து ஆய்வு நடத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
இந்த நோய் அதிக அளவில் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் இது பாலியல் ரீதியாக பரவலாம் என கூறப்படுகிறது. நோயினால் பாதிக்கப்பட்டோர் பயன்படுத்திய பொருட்களை உபயோகிப்பதன் மூலம் பரவலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. உதவிக்குழுவில் பணியாற்றும் பெண் ஊழியர்களும் ஹிஜாப் கட்டாயம் – தலிபான்கள் உத்தரவு !

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள் தங்களின் ஆட்சியில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக பெ ண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையிலான கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதித்து வருகின்றனர்.

சமீபத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சிறுமிகள் 6-ம் வகுப்புக்கு மேல் படிப்பை தொடர தலிபான்கள் தடை விதித்தது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் அனைத்து பெண்களும் ஹிஜாப் அணிவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா. உதவிக்குழுவில் பணியாற்றும் பெண் ஊழியர்களும் இனி கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என தலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெஆப்கானிஸ்தானில் ஐ.நா. பெண் ஊழியர்களும் ஹிஜாப் அணிவது கட்டாயம் என தலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “எந்த பெண் ஊழியராவது ஹிஜாப் அணியாமல் இருந்தால் அவர்களிடம் கட்டாயம் இதை அணிய வேண்டும் என ‘கண்ணியமான’ முறையில் எடுத்துச்சொல்லப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இலங்கையில் இனவாதத்திற்கு சந்தர்ப்பம் இல்லை.”- ஜனாதிபதி கோட்டாபய

சமாதானம் மலர்ந்த தாய்நாட்டில் கடும்போக்குவாதம் அல்லது இனவாதத்திற்கு சந்தர்ப்பம் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

தேசிய இராணுவ வீரர்கள் தினத்தை நினைவுகூரும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் பல்வேறு சவால்கள் எழுந்தபோதும் தேசப்பற்றாளர்களாக இராணுவ வீரர்கள் முன்னோடிகளாக செயற்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதுள்ள சவால்கள் தொடர்பாக கவனமாகவும் விழிப்புடனும் ஆராய்ந்து செயற்பட வேண்டிய பொறுப்பு வரலாற்றின் ஊடாக இராணுவ வீரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார, அரசியல் நெருக்கடியை சாதகமாக பயன்படுத்தி, தேசிய பாதுகாப்பிற்கு அழுத்தம் பிரயோகிக்க உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு குழுக்கள் முயற்சிக்கின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அந்த முயற்சியை ஒன்றிணைந்து தோற்கடிப்பதன் ஊடாகவே வீரமிக்க இராணுவ வீர்கள் நாட்டிற்காக செய்த அர்ப்பணிப்பை பாதுகாக்க முடியும் என ஜனாதிபதி  வலியுறுத்தியுள்ளார்.

“முப்பது வருட யுத்தத்தினால் நான் ஒரு கண்ணை இழந்தேன்.” – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

“நாட்டையோ மனித இனத்தையோ யுத்தத்தின் மூலம் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. அது வெற்றியல்ல.” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

நாட்டையோ மனித இனத்தையோ யுத்தத்தின் மூலம் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது- அது வெற்றியல்ல முப்பது வருடகால இனப்படுகொலையுத்தத்தில் நாங்கள் பெருமளவு விடயங்களை இழந்துள்ளோம்.

தென்பகுதி வடபகுதி தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை இழந்துள்ளனர். நாங்கள் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லீம்கள் என பிளவுபட்டோம். நான் ஒரு கண்ணை இழந்தேன் – யுத்தத்தினால் – மேலும் பல இழப்புகளை எதிர்கொண்டேன்.

யுத்தமுடிவை கொண்டாடும் இந்த தருணத்தில் குரோதத்திற்கு பதில் அன்பை வெளிப்படுத்துவோம். பழிவாங்குவதற்கு பதில் மன்னிப்போம். பிரிந்திருப்பதை விட இணைந்திருப்பதில் மகிழ்ச்சியாகயிருப்போம். எங்கள் இதயத்தில் தீமையை எழுப்புவதற்கு இறைவனை எழுப்புவோம்- இன்றைய நாளை உறுதிப்பாடு மற்றும் சமாதானத்திற்கான நாளாக மாற்றுவோம். உலகிற்கு அன்பை காண்பிப்போம்.” என அவர் பதிவிட்டுள்ளார்.