May

May

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 121 ரூபாய்க்கு பெற்றோல் ? – எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல் !

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கும், எரிபொருளுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வரும் தற்போதைய நிலையில், மக்களை ஒடுக்கி அரசியல்வாதிகளின் சிறப்புரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் மற்றும் பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்குத் தேவையான எரிபொருள் தற்போதைய விலையை விட குறைவான விலைக்கே அவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக நேற்றைய தினம் அறிவிப்புகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 121 ரூபாய் 19 சதத்திற்கே அவர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு வெளியான தகவலானது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை தோற்றுவித்துள்ளது.

நாட்டில் இன்னும் இரண்டு நாட்களுக்கு பெற்றோல் கிடைக்காது என அரசாங்கம் நேற்றைய தினம் அறிவித்திருந்தது. எனவே, மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.

இவ்வாறு மக்களுக்கு அறிவித்து விட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் சிறப்புரிமை வழங்கப்படுவது குறித்து மக்கள் கடும் அதிருப்தியினை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொலிஸாரின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருள் வழங்கப்படுகின்றமைக்கு தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த விடயம் குறித்து இன்று (வியாழக்கிழமை) ருவிட்டரில் பதிவிட்டுள்ள எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர,

“பொதுமக்களின் விரக்தியையும் கோபத்தையும் நான் புரிந்துகொண்டாலும் மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பகிரப்பட்ட பதிவுகள் தவறானவை. பொதுமக்களுக்கு தற்போது வழங்கப்படும் சந்தை விலையை விட, யாருக்கும் மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படவில்லை.

ஆம்புலன்ஸ் அத்தியாவசிய சேவைகளைத் தவிர வேறு யாருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சலுகைகள் வழங்கப்படாது” என பதிவிட்டுள்ளார்.

து இலங்கையில் நடந்ததது இனப்படுகொலையே – ஏக மனதாக அங்கீகாரமளித்தது கடொ பாராளுமன்றம் !

இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக நிகழ்த்தப்பட்டது  இனப்படுகொலை என கனடிய பாராளுமன்றம் ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் மே-18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக ஏற்று கனடா பாராளுமன்றம் அங்கீகரித்தது.

இதன் மூலம் இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலையை ஏற்று அங்கீகரித்த உலகின் முதல் பாராளுமன்றமாக கனடா பாராளுமன்றம் அமைந்துள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இதற்கான பிரேரணையை ஸ்கார்பரோ-ரூஜ் பார்க் தொகுதி (Scarborough-Rouge Park) கனேடிய-தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) நேற்று மாலை முன்வைத்தார்.

இந்த பிரேரணேயை பாராளுமன்றில் அனைத்து கட்சிகளும் ஏகமனதாக ஏற்றுக் கொண்ட நிலையில் தமிழ் இனப்படுகொலை தீா்மானம் ஏகமனதாக ஏற்று அங்கீகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை தினமாக ஏற்று அங்கீகரிக்கும் உலகின் முதலாவது பாராளுமன்றம் கனடாவாகும் என ஹரி ஆனந்தசங்கரி ட்வீட் செய்துள்ளார்.

கனடா பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது பல வருடகால உழைப்பு. தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பலரது உழைப்பின் உச்ச விளைவாக இது நடந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட, 26 வருடகால ஆயுதப் போரின் போது, ​​உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகிறோம்.” – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

13 வருட போர் நினைவு அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த துயரத்தின் வலி, அதிர்ச்சி மற்றும் இழப்புடன் தொடர்ந்து வாழும் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் தனது எண்ணங்கள் இருப்பதாகக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவடைந்து 13 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட கனேடியப் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கனடா பிரதமர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஆயுதப் போர் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவடைவதை அனுஷ்டிக்கும் இவ்வேளையில், முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட, 26 வருடகால ஆயுதப் போரின் போது, ​​உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகிறோம்.

தமிழர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் அமைதியான நாட்டிற்கு தகுதியானவர்கள் – கனடா பிரதமர் இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின்காரணமாக மக்கள் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவிப்பது கவலையளிக்கும் விடயமாகும்.

 

எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களின் உரிமை மற்றும் கருத்து சுதந்திரம் மதிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். அத்துடன், வன்முறையில் இருந்து விலகியிருக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்கள், நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடைவதற்கான தற்போதைய அவசியத்தை நமக்கு நினைவூட்டுகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிர் பிழைத்தவர்களுக்கும் நீதி வழங்கும் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் செயல்முறையை ஸ்தாபிப்பதற்கான தனது அர்ப்பணிப்பை நிறைவேற்றுமாறு இலங்கைக்கு கனடா தொடர்ந்தும் அழைப்பு விடுக்கிறது.

மனித உரிமைக் கடமைகளை நிலைநிறுத்த உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கும், நாட்டில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிச் செயற்படும் அனைவருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் கனடா தனது ஆதரவை தொடர்ந்து வழங்கி வருகின்றது” என அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கின்றோம் – பிரித்தானியா

இலங்கையில் உணவுப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் உட்பட அனைத்து நிலைமைகளையும் உன்னிப்பாக அவதானித்துவருவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

உணவுப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் உட்பட இலங்கையின் பொருளாதார நிலைமையை உன்னிப்பாக அவதானித்துவருகின்றோம் என தெரிவித்துள்ள பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு இலங்கையின் கடன்நிலை தொடர்ந்தும் தாங்கிக்கொள்ள முடியாத விடயம் என சர்வதேச நாணயநிதியம் மதிப்பிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடனை பேண்தகுநிலைக்கு மாற்றுவதற்கு அவசியமான சீர்திருத்தங்கள் நிதி உதவிகள் குறித்து சர்வதேசநாணயநிதியத்துடன் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடி திடீரென உருவாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“புலிகள் எம்மை வெட்டுகின்றனர்” என கூச்சலிட்ட மக்கள் – ஏழு பேர் கைது !

விடுதலைப் புலிகள் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதாகத் தெரிவித்து, அம்பாறை- நவகிரியாவ காட்டிலிருந்து கூச்சலிட்டவாறு ஒடி வந்து கிராமவாசிகளை பயமுறுத்திய ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பக்கிஎல்ல பொலிஸ்ஸார் தெரிவித்துள்ளனர்.“புலிகள் எம்மை வெட்டுகின்றனர்” என கூக்குரலிட்டவாறு சிலர் ஒடி வருவதை அவதானித்த மின் வேலியைப் பாதுகாக்கும் கடமையில் ஈடுபட்டிருந்த சிவில் பாதுகாப்பு தரப்பினரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பக்கிஎல்ல பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அத்துடன் 119 என்ற அவசர பிரிவினருக்கும் அறிவித்துள்ளனர்.

இதற்கமைய, அம்பாறை மற்றும் அரன்தலாவ பொலிஸ் விசேட பிரிவினர், இராணுவத்தினர், பொலிஸார் இணைந்து அப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது சந்தேகநபர்கள் வருகைத் தந்த மோட்டார் சைக்கிள், 3 சைக்கிள்கள் மற்றும் ஓட்டோவொன்று என்பன அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் சந்தேகநபர்கள் 7 பேரும் திவுலான காட்டுப் பகுதியில் மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மீண்டும் முடங்கும் சீனா – அச்சத்தில் உலக நாடுகள் !

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஒரு பகுதியில் கொரோனா கண்டறியப்பட்டால், அந்நகர் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
பூஜ்ய கொரோனா கொள்கையை கடை பிடிக்கும் சீன அரசு கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஷாங்காய் நகரில் வைரஸ் பரவல் அதிகரித்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அங்கு வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும் ஊரடங்கு முழுமையாக நீக்கப்படவில்லை.
அதேபோல் தலைநகர் பிஜிங்கில் சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்தது. இதையடுத்து பிஜிங்கில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்நகரில் தினமும் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க பிஜிங்கில் மக்கள் நடமாட்டம் முடக்கப்பட்டுள்ளது.
பிஜிங்கின் பிரபல சந்தை, மெட்ரோ ரெயில் பணி நடைபெறும் இடம், பஸ் நிலையம், சரக்கு போக்குவரத்து நிறுவனம் ஆகியவற்றில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த இடங்கள் மூடப்பட்டன.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, “கொரோனா தொற்று இல்லாதவர்கள் மட்டுமே பஸ், ரெயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
பிஜிங்கின் 190 பஸ் வழித்தடங்கள், 54 மெட்ரோ ரெயில் நிலையங்களில் கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றனர்.
பிஜிங்கில் உள்ள 16 மாவட்டங்களில் 12 மாவட்டத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது.
பாங்ஷான் மாவட்டத்தில் பஸ், மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. பாங்ஷான் மாவட்டத்தில் 13 லட்சம் பேர் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் அங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பிஜிங்கில் உள்ள பிரபல பிஜிங் பல்கலைக்கழகத்தில் விடுதி மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

“நாட்டின் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் இந்த ஆமதுருக்கள் தான். அவர்களை விரட்டுங்கள்.”- நாடாளுமன்றில் சிங்களத்தில் மனோகணேசன் !

இந்த ஆமதுருக்கள் அரசியலில் வேண்டாம். கைகூப்பி கோருகிறேன். இவர்கள்தான் இத்தனைக்கும் காரணம்.”

“சும்மா இந்த வன்முறைகளை பற்றி, இந்த பக்கமும், அந்த பக்கமும் மாறி, மாறி குற்றம் சாட்டுவதில் பயனில்லை. அனைத்துக்கும் மூல காரணம் இந்த ஆமதுருகள்தான். இவர்களை பன்சலைக்கு அனுப்புங்கள். அரசியலில் இவர்கள் வேண்டாம்.” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு எம்பியுமான மனோ கணேசன் இன்று பாராளுமன்ற சபையில் சிங்கள மொழியில் ஆவேசமாக தெரிவித்தார்.

ஆளும் கட்சி எம்பிகளின் மீது கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட வன்முறைகள் தொடர்பில் நடந்த விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய மனோ எம்.பி மேலும் கூறியதாவது,

எங்கள் குருக்கள், இமாம்கள், பாதிரிகள் ஆகியோரும் தத்தம் மத ஸ்தலங்களுக்கு போக வேண்டும். நாடு உருப்படும்.

இன்றைய தினங்களில், 2009 ஆண்டில் தமிழ் மக்கள், நூறு, ஆயிர, இலட்சக்கணக்கில், கொல்லப்பட்டார்கள். கண்மூடித்தனமான எறிகணை தாக்குதல்களில் கொல்லப்பட்டார்கள். Indiscriminate shelling and aerial bombing”

இன்று ஆளும் அணி அமைச்சர்களின் வீடு, சொத்துகளை எரித்து கொலை செய்த இந்த வன்முறை, அமரகீர்த்தி என்ற அப்பாவி எம்பியை அடித்தே கொலை செய்த வன்முறைகள், இந்த யுத்தம் மற்றும் 1983, 1977, 1958 இனக்கலவரங்களிலேயே ஆரம்பித்தது.

இந்த தீவைப்பு தமிழர்களாகிய எங்களுக்கு புதிதல்ல. 1983 எங்கள் ஹவ்லக் வீதி வீட்டை கொளுத்தினார்கள். எங்கள் புறக்கோட்டை வியாபார நிலையத்தை கொளுத்தினார்கள்.  ஒரு கம்பீரமான சினிமா கலைஞரான என் தந்தை அதன் பின் மனமுடைந்து சில காலம் வாழ்ந்து இறந்து போனார்.

இதோ இந்த ஆசனத்தில்தான் என் நண்பன் ரவிராஜ் அமர்ந்திருந்தான். இன்றுள்ள டிஎன்ஏ எம்பிக்கள் புதியவர்கள். அவர்களுக்கு அவரை தெரியாது. ஆனால் எனக்கு நன்கு தெரியும். கொழும்பில் வாழ்ந்த நாம் இருவரும் 2001ம் ஆண்டில் இருந்தே நல்ல நண்பர்கள். சிங்கள மக்களுக்கு தமிழர் பிரச்சினையை சிங்களத்தில் சொல்ல முயன்றதற்காக ரவிராஜ் கொல்லப்பட்டார்.

அன்று நானும், ரவியும் சேர்ந்து பலவந்த கடத்தல், சட்ட விரோத படுகொலைகள், வெள்ளை வேன் கலாச்சாரத்துக்கு எதிராக போராடினோம். என்னையும், ராகமை, களுத்துறை, தெமட்டகொடை ஆகிய மூன்று இடங்களில் கொல்ல முயன்றார்கள். இந்த வன்முறை ஆட்டம்தான் இன்றும் தொடர்கிறது.

முதல் அரசியல் கொலையை, 1959ல் பண்டாரநாயக்காவை கொலை செய்து, ஒரு பெளத்த ஆமதுரு ஆரம்பித்து வைத்தார்.  அதன்பின் பெளத்த மதத்தை அரசியலில் கலக்க விட்டு, இந்நாட்டை அழித்து விட்டீர்கள். இந்த ஆமதுருக்கள் அரசியலில் வேண்டாம். கைகூப்பி கோருகிறேன். இவர்கள்தான் இத்தனைக்கும் காரணம்.

நாம் ஆமதுருமார்களை பன்சலைக்கும், குருக்கள்மார்களை கோவிலுக்கும், இமாம்களை பள்ளிவாயல்களுக்கும், பாதிரிகளை தேவாலயங்களுக்கும் போக சொல்வோம். இவர்கள் இங்கே வேண்டாம். அரசியலில் வேண்டாம். இந்த சபையில் ஒரு ஆமதுரு மந்திரி இன்று இருக்கிறார். அவரே இங்கு வந்த கடைசி மந்திரியாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.

இந்நாட்டின் இன்றைய சீரழிவுக்கு இவர்கள்தான் காரணம். எவருக்கும் இவர்களது அறிவுரை வேண்டுமென்றால், அவர்களது மத ஸ்தலங்களுக்கு போய் கேட்கலாம். இங்கே வேண்டாம்.

கடந்த தேர்தலின் போது ஒரு கேலிகூத்து நடந்தது. களனி விகாரை ஆமதுரு சொன்னார். களனி கங்கை ஆறு இரண்டாக பிளந்ததாம். ‘டோம்’ என சத்தம் வந்ததாம். பாதாளத்தில் இருந்து நாகராஜன் வந்தாராம். ‘நாட்டை காக்க ஒரு மன்னன் வருகிறான்’ என ஒரு அசரீரி கேட்டதாம். என்ன ஒரு கேலிக்கூத்து இது! இப்படி வெட்கமில்லாமல் சொன்ன அந்த ஆமதுரு இன்று களனி பல்கலைக்கழக உப வேந்தராம். வெட்கம்..!

சும்மா இந்த வன்முறைகளை பற்றி, இந்த பக்கமும், அந்த பக்கமும் மாறி, மாறி குற்றம் சாட்டுவதில் பயனில்லை. அனைத்துக்கும் மூல காரணம் இந்த ஆமதுருகள்தான். இவர்களை பன்சலைக்கு அனுப்பங்கள். எங்கள் குருக்கள், இமாம்கள், மாதிரிகளஆகியோரும் தத்தம் மத ஸ்தலங்களுக்கு போக வேண்டும். நாடு உருப்படும்.” என கூறினார்.

குறுகியகால தலைமறைவுக்கு பின் நாடாளுமன்றம் வந்த மகிந்த ராஜபக்ச !

இலங்கையின்  முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்து   நாடாளுமன்ற அமர்வுகளில் அவர் கலந்து கொண்டிருந்தார்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளைத் தொடர்ந்து  ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில்  நேற்றைய தினம் மீ்ண்டும் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. எனினும் நேற்றைய தினம் அவர் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டிருக்கவில்லை.

இந்தநிலையில் இன்று மகிந்த நாடாளுமன்றத்திற்கு வருகை தந்ததுடன், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவும் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழீழ விடுதலைப்புலிகள் தாக்குதல் – உண்மை இல்லை என்கிறார் சரத் பொன்சேகா !

“தமிழீழ விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தவுள்ளனர் எனவும் தகவல் பகிரப்பட்டு வருகின்றது. இதில் எவ்வித உண்மையும் கிடையாது.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது அவர் மேலும் கூறியதாவது:-

“மக்கள் பாதுகாப்பு கருதியே முன்னர் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது அரசின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. மே – 9 ஆம் திகதி நடைபெற்ற சம்பவம் தொடர்பில் நாமும் கவலை அடைகின்றோம். ஆனால், அலரிமாளிகையில் இருந்துதான் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது என்பதை மறந்துவிட வேண்டாம். எனவே, ஏனைய கட்சிகள்மீது பழிசுமத்திவிட்டு, தப்புவதற்கு ஆளுந்தரப்பு முற்படக்கூடாது. எமது கட்சிக்காரர்கள் தவறிழைத்தால்கூட தண்டனை வழங்கப்படவேண்டும்.

ஆனால், அலரிமாளிகையில் இருந்து வன்முறை தூண்டப்பட்டதால்தான் மக்கள் கொதிப்படைந்தனர் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் பற்றியும் கருத்து வெளியிடப்பட்டது. அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களில் ஒருவர், உங்கள் உங்கள் அணியில் பிரதமராகவும் இருக்கிறார். இதற்கிடையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தவுள்ளனர் எனவும் தகவல் பகிரப்பட்டு வருகின்றது. இதில் எவ்வித உண்மையும் கிடையாது.

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தைக் கைவிடக்கூடாது. தொடர்ந்து போராட வேண்டும். அது இந்நாட்டில் விடுதலைக்கு வழிவகுக்கும்” – என்றார்.

யாழில் முஸ்லிம் மக்களினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி !

யாழ்ப்பாண முஸ்லிம் மக்களினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு  யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இடம்பெற்றது.

ஐக்கியத்திற்கான முஸ்லிம் சமூகத்தினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு  நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு வீதியால் பயணித்தோருக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்கி வைத்தார்கள்.