May

May

ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற  தெரிவில் சட்டபூர்வமான அங்கீகாரம் இல்லை – சுமந்திரன்

ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற  தெரிவில் சட்டபூர்வமான அங்கீகாரம் இல்லை என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவி பிரமானம் செய்து கொண்டுள்ளமை குறித்து த இந்து நாளிதழுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி முற்றாக சட்டபூர்வமான தன்மையை இழந்துவிட்டார். மக்கள் அவர் வீட்டிற்கு செல்ல விரும்புவதாகவும் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லா தீர்மானப் பிரேரணைக்கு எதிராக நாடாளுமன்றம் விரைவில் முடிவை காண்பிக்கும், ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற தெரிவில் சட்டபூர்வமான அங்கிகாரம் இல்லை. அவர் தனது தொகுதியில் கூட இம்முறை வெற்றி பெறவில்லை எனவும் எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்ட இராணுவ லெப்டினன்ட் கைது !

ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் வீடுகளுக்கு சேதம் விளைவிக்குமாறு சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து பொதுமக்களை தூண்டிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் ஒருவரை நிட்டம்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயர் இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் வீடுகளுக்கு சேதம் விளைவிப்பதில் கவனம் செலுத்துவதற்காக, அண்மைய குழப்பத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குழுக்களை அழைத்து சந்தேக நபர் தனது முகநூல் கணக்கில் பதிவிட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் நிட்டம்புவ பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று அத்தனகல்லை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

லெப்டினன்டாக கடமையாற்றியபோது முறைகேடான நடத்தை காரணமாக குறித்த சந்தேக நபர் 2020 ஜனவரி 29ஆம் திகதி இராணுவத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

 

ரணிலுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளது – இந்தியா

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நேற்று பதவியேற்றார். இந்த நிலையில், இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தூதரகத்தின் ருவிட்டர் பதிவில், “இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் அடிப்படையில், ஜனநாயக நடைமுறைகளுக்கு இணங்க அமைக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் நம்பிக்கைகொள்கின்றது“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைப்போல இலங்கை மக்களுக்கான உதவிகள் தொடரும் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

“சாத்தியமற்ற விடயங்களை பேசாமல் ரணிலுக்கும் – ராஜபக்ஷக்களுக்கும் தமிழர் தரப்பு ஆதரவு வழங்க வேண்டும்.”- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் !

பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இலங்கை மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்வந்திருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்துக்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் நன்மைகளை உருவாக்கக் கூடிய பிரதமரின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கத் தயார்.

மேலும், 6 ஆவது தடவையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு இருக்கின்ற அனுபவமும் சர்வதேச உறவுகளும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளை இலகுபடுத்தும்.

அத்துடன், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களை பேசிக்கொண்டு இருக்காமல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் உருவாகவுள்ள புதிய அரசாங்கத்திற்கு ஏனைய தமிழ் தரப்புக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகத்தினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“நீங்கள் போராடுங்கள். எந்தத்தடையும் இருக்காது.”- புதிய பிரதமர் ரணில் அறிவிப்பு !

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.

பிரதமராக பதவியேற்றதில் இருந்து, எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதே அவரது முதன்மையான பணியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா மற்றும் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண மேற்குலக நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் பேச்சுவார்த்தைகளும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முன்னதாக ஊடகங்களிடம் பேசியிருந்த அவர்,

‘கோட்டகோகம’ போராட்டம் தொடர வேண்டும் எனவும்  ‘கோட்டகோகம’ போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தலையிடாது எனவும் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்றையதினம் ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு உலக சாதனைகளுடன் பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க !

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்சவின் முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சமூக மற்றும் அரசியல் மட்டத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடந்த திங்கட் கிழமை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் பதவிக்கு நியமிக்க பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

அதன் பின்னர் அவர் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றி புதிய பிரதமரையும், அதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை ஒன்றையும் நியமிப்பது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே தற்போது புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இதே நேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

கடந்த பொது தேர்தலில் ரணில் விக்ரமிங்க வெறும் 20000 என்ற சிறிய வாக்குகளை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தார். எனினும் தேசிய பட்டியலில் உறுப்பினர் பதவி பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

அவ்வாறு தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு வந்து பிரதமராகி வரலாற்றில் இடம்பிடித்த ஒருவர் இலங்கையில் மாத்திரமின்றி உலகத்திலேயே இல்லை என தெரியவந்துள்ளது.

அத்துடன் அவர் ஆறாவது தடவையாகவும் பிரதமராக பதவி பிரமாணம் செய்துள்ளார். இதுவும் ஒரு உலக சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

நாட்டை விட்டு நாம் வெளியேறமாட்டோம் – நாமல் தமிழில் ட்வீட் !

அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக நாம் சந்திக்க தயார் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் நாமல்ராஜபக்ஷ தமிழில் இட்டுள்ள பதிவின் மூலமே இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில் அவர், “கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன். எனது தந்தை மஹிந்த ராஜபக்ஷவுக்கோ எனக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் அறவே இல்லை. அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக நாம் சந்திக்க தயார்” என தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் – மகிந்த குழுவினருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு !

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேருக்கும் பயணத் தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி கொழும்பில் கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கோட்டை நீதவான் இன்று (வியாழக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அதன்படி, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, நாமல் ராஜபக்ஷ மற்றும் சனத் நிஷாந்த உள்ளிட்ட 17 பேருக்கே இவ்வாறு பயணத்தடை விதித்துள்ளனர்.

மேலும், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கும் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள் ஊடாக வன்முறையை தூண்டியவர்கள் கண்டறியப்பட்டால் …, – இலங்கை பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை !

நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது வன்முறையைத் தூண்டியது தொடர்பாக 59 சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் அவற்றின் நிர்வாகிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை காவல்துறை எச்சரித்துள்ளது.

வீடுகள், வாகனங்கள் மற்றும் பிற சொத்துக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்காக பல்வேறு சமூக ஊடக தளங்களில் இயங்கும் குழுக்கள் மூலம் மக்களை திரட்டபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சமூக ஊடக குழுக்கள் மற்றும் நிர்வாகிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறியுள்ள காவல்துறையினர், இது தொடர்பில் ஏற்கனவே சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையின் போது சமூக ஊடகங்கள் ஊடாக வன்முறையை தூண்டியதாக கண்டறியப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்

ரணில் – கோட்டாபய திடீர் சந்திப்பு – பிரதமராகிராறா ரணில்..?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றிருந்தது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழில அடுத்து இருவருக்கமிடையிலான திடீர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் அப்போதைய ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த பின்னரே தமது அதிகாரத்தை கைவிட்டு சொந்த ஊருக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் தென்னிலங்கை ஊடகங்கள் பல ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.