May

May

திருகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கிய ராஜபக்ஷ குடும்பம் – சுற்றி வளைத்து பொதுமக்கள் போராட்டம் !

திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமை முற்றுகையிட்டு தற்போது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அங்கு கூடியுள்ளனர்.

இதே நேரம் நாமல் ராஜபக்சவின் மனைவி மற்றும் மகன் உலங்குவானூர்தியில் {ஹெலிகாப்டரில்} தப்பிச் செல்லும் காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி மற்றும் அவரது மகன் கேசரா ஆகியோர் இன்று காலை கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

“அரச பயங்கரவாதம், இன்று தன் சொந்த மக்கள் மீதே அகோரமாக பாய்ந்துள்ளது.” – மனோகணேசன் விசனம் !

இந்நாட்டில் 2005ம் வருடத்தில் இருந்து தலைவிரித்தாடிய ராஜபக்ச அரச பயங்கரவாதம், உச்ச கட்டத்தை அடைந்து, இன்று தன் சொந்த மக்கள் மற்றும் வாக்களித்து ஆட்சியில் அமர்த்திய மக்கள் மீதே அகோரமாக பாய்ந்துள்ளது.

அதன்மூலம் ராஜபக்சர்களின் கோர பயங்கரவாத முகம், சகோதர சிங்கள மக்கள் மத்தியில் இன்று அம்பலமாகியுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

உலகின் மிக அமைதியான 31-நாள் கொழும்பு காலிமுக திடல் போராட்டம், பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகையில் இருந்து கிளம்பி வந்த அரச பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. இதனால், இனி இலங்கையர்களின் கோ-ஹோம்-கோதா, கோ-ஹோம்-ராஜபக்ச (GoHomeGota & GoHomeRajapaksasa) என்ற கோஷங்கள், இலங்கையை நோக்கிய சர்வதேச சமூகத்தின் கோஷமாகவும் மாற வேண்டும்.

கொழும்பில் இருக்கின்ற மிகப்பல அல்லது அனைத்து வெளிநாட்டு ராஜதந்திரிகளும், கொழும்பு காலிமுகதிடல் போராட்டத்தை, சமகாலத்தில் உலகில் நடைபெற்ற மிக அமைதியான, ஒழுக்கமான போராட்டம் என தனிப்பட்ட முறையிலும், பகிரங்கமாகவும் கூறி இருந்தார்கள். இந்நிலையில் இப்போராட்டம் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம், இன்று இலங்கையின் வெட்கமற்ற அரச பயங்கரவாதம் மீண்டுமொருமுறை அம்பலமாகி உள்ளது.

இலங்கையை மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றோம் – அமெரிக்கா

இலங்கையின் தற்போதைய நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கையின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றோம்.

அமைதியான போராட்டக்காரர்கள் மற்றும் அப்பாவி மக்கள் மீதான வன்முறைளுக்கு எதிராக ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம்.

பொருளாதார மற்றும் அரசியல் சவால்களுக்கு நீண்டகால தீர்வுகளைக் கண்டறிவதிலும் செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்துமாறு அனைத்து இலங்கையர்களையும் கேட்டுக்கொள்கிறோம்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிவுக்கு வரும் ராஜபக்ஷக்களின் ஆட்சி – அலரி மாளிகையை விட்டு வெளியேறும் மகிந்த !

பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ  ராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஏற்றுக்கொண்டுள்ளார். அதனையடுத்து மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் அலரிமாளிகையிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உடைத்து வீழ்த்தப்பட்டது டி.ஏ.ராஜபக்ச நினைவுத் தூபி !

ஹம்பாந்தோட்டை மடமுலனவில் உள்ள டி.ஏ.ராஜபக்ச நினைவுத் தூபி ஆர்ப்பாட்டக்காரர்களால் இடித்தழிக்கபட்டுள்ளது.

கொழும்பு காலி முகத்திடலில் இன்று இடம்பெற்ற போராட்ட வன்முறை சம்பவங்களை தொடர்ந்து நாட்டில் பல இடங்களில் கலவரங்கள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

சேதப்படுத்தப்பட்ட டி. ஏ. ராஜபக்ச நினைவுச் சின்னம்!

இலங்கையில் தொடரும் பதற்றம் – மேலும் இருவர் பலி !

வீரகெடிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 8 பேர் காயமடைந்து வீரகெடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த சிலர் வீரகெடிய வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக தங்காலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வீரகெடிய பிரதேச சபைத் தலைவரின் வீட்டுக்கு தீ வைப்பதற்காக சிலர் வருகை தந்துள்ளனர்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பற்றி எரிகிறது மகிந்தவின் இல்லம் !

மகிந்த ராஜபக்சவின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குருநாகலிலுள்ள அவரது இல்லத்திற்கே ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கலைக்கப்பட்டது அமைச்சரவை !

இலங்கையின் அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பிரதமராக பதவி வகித்த மகிந்த ராஜபக்ச, பதவி விலகுவதாக தன்னுடைய பதவி விலகல் கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்சவிடம் கையளித்துள்ள நிலையில், அமைச்சரவையும் கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் அரச தலைவரின் ஆளுகையின் கீழ் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தீ வைத்து முற்றுகையிடப்படும் ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளின் வீடுகள் !

நாட்டின் சில நகரங்களில் அரசியல்வாதிகளின் கார்கள் மற்றும் வீடுகள் தீ வைத்து எரிக்கப் பட்டுள்ளன.
மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண் டோவின் வீட்டிற்கு ஒரு குழுவினர் தீ வைத்துள்ளனர்.
மொரட்டுவை வில்லோரவத்த பிரதேசத்தில் உள்ள இவரது வீட்டிற்கு வந்த குழுவொன்று அவரது வீட்டை தாக்கி தீ வைத்து எரித்துள்ளதாகவும் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (09) மொட்டுக் கட்சி ஆதரவாளர்களால் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட அரசியல்வாதியான உதேனி அத்துகோரலவின் வீடும் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவின் வீடும் எதிர்ப்பாளர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இதே வேளை முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் வீடும் குருணாகலில் தீ வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

மகிந்தவை கைது செய்யுமாறு எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை !

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்புக்கு ஆதரவாளர்களை அழைத்து வந்த அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.