02

02

தலை மன்னாரில் 10 சிறுவர்கள் உட்பட 13 பேர் கைது – பின்னணி என்ன..?

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று (01) ஓய்வை கழிப்பதற்காக தலை மன்னார் கடலுக்கு சென்ற 10 சிறுவர்கள் உட்பட 13 நபர்களை தலை மன்னார் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர் தின விடுமுறையை முன்னிட்டு மன்னாரில் கரையோர பகுதிகளை சேர்ந்த பல குடும்பங்கள் பொழுதை கழிப்பதற்கு கடற்கரை பகுதிக்கு சென்ற நிலையில் சிறுவர் குழு ஒன்றும் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த சிறுவர்கள் இந்தியா செல்ல முயற்சிப்பதாக தெரிவித்து தலை மன்னார் கடற்படையினரால் 13 நபர்களும் கைது செய்யப்பட்டு, தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு மன்னார் நீதவான் முன்னிலையில் இன்று (02) ஆஜர் படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட நபர்கள் சார்பாக சட்டத்தரணி S. டினேசன் ஆஜராகிய நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரும் கடற்கரையை பார்வையிட சென்றதாகவும் கடற்படையினர் வேண்டும் என்று அவர்களை கைது செய்ததாகவும் சமர்பணம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் வழக்கை விசாரித்த மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி 13 நபர்களையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்து அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து அறிக்கையை பார்வையிட்ட பின்னர் குறித்த 10 சிறுவர்களும் பெற்றோர்களுடன் செல்ல அனுமதிக்கப்பட்ட தோடு 3 நபர்களையும் பிணையில் செல்ல அனுமதி அளித்தார்.
கடந்த மாதமும் மன்னார் மாவட்டத்திற்கு சுற்றுலாவிற்கு என வருகை தந்து விடுதி ஒன்றில் தங்கியிருந்த குடும்பம் ஒன்றையும் பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

“உக்ரைன் – ரஷ்யப் போரில் யாரும் வெற்றி பெறப்போவதிவல்லை.” – நரேந்திரமோடி ஆருடம் !

“உக்ரைன் – ரஷ்யப் போரில் யாரும் வெற்றி பெறப்போவதிவல்லை.” என இந்திய பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திரமோடி, அந்நாட்டு பிரதமர் ஸ்கால்சுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் பேசிய அவர்,
இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் பல தொடர்புகள், ஒற்றுமைகள் உள்ளன. உலகில் பல பொருளாதார விளைவுகளை கொரோனா ஏற்படுத்தி உள்ளது. உலகில் பல முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. பெருந்தொற்று ஏற்பட்டதை நாம் போர் என்று குறிப்பிட்டிருந்தோம். இந்தப் போரில் வெற்றி முக்கியமல்ல. அனைவரும் இதில் ஈடுபடவேண்டும். அமைதியாக நாம் இதை எதிர்கொள்ள வேண்டும்.
உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு என கூறியிருந்தோம். இந்தப் போரில் யாரும் வெற்றி பெற மாட்டார்கள் என நாங்கள் நம்புகிறோம்.
உக்ரைன், ரஷியா மோதலால் எண்ணெய் விலை மிகவும் உயர்ந்திருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. நாம் இதை மிகவும் தீவிரமாக எதிர்கொள்ள வேண்டும். இதனுடைய பாதிப்பும் தீவிரமாக இருக்கும்.
இந்தியா இந்த பொருளாதார நிலையை மிகவும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறது. மற்ற நட்பு நாடுகளுடனும் ஏற்றுமதி இறக்குமதியில் பொருளாதார ரீதியாக வளர்ச்சியை எப்படி எட்ட வேண்டும் என்பதற்கு உதவி செய்துகொண்டிருக்கிறது. அவர்களின் கருத்துக்களை பெற்றுக்கொண்டிருக்கிறோம். இந்தியா – ஜெர்மனி நட்புறவில் புதிய தொடக்கம் உருவாகியிருக்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ஜெர்மனி பிரதமர் ஸ்கால்ஸ் பேசுகையில், உக்ரைன் மீதான தாக்குதலின் மூலம், சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை ரஷியா மீறி உள்ளதாக குற்றம்சாட்டினார். பொதுமக்கள் கொல்லப்படுவதை முடிவுக்கு கொண்டு வருவதுடன், உக்ரைனில் இருந்து படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று ரஷிய அதிபர் புதினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு கூட்டமைப்பு எதிராக வாக்களிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.” – எம்.ஏ.சுமந்திரன்

“நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு கூட்டமைப்பு எதிராக வாக்களிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது யார் பிரதமராக வந்தால் நாட்டில் மாற்றம் ஏற்படலாம் என நீங்கள் கருதுகிறீர்கள் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் தற்பொழுது அரசியல் ஸ்திரமற்ற நிலை காணப்படுகின்றது. பிரதமரை மாற்ற வேண்டும் என்று ஒரு குழு விடாப்பிடியாக நிற்கின்றார்கள். எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளது

தற்போதைய பிரதமர் பதவி விலகினால் புதியவர் பிரதமராக வருவார். அவருடன் ஒரு புதிய அமைச்சரவை உருவாகும். அந்த அமைச்சரவையை உருவாக்குவதற்கு ஐவர் கொண்ட குழுவினை உருவாக்கியுள்ளார்கள். அந்த ஐவர் கொண்ட குழுவில் உள்ளோரில் எமக்கு திருப்தியில்லை. அவ்வாறான நிலையில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதன் மூலம் நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.

ஜனாதிபதி நாட்டின் தலைவர். அவர் அவ்வாறே இருப்பார். அதேபோல பிரதமர் பதவி விலகினால் இன்னொரு பிரதமர் வருவார். அவருடன் இணைந்து புதிய அமைச்சரவை உருவாகும். அவ்வாறு உருவாகும் அமைச்சரவை தற்போதுள்ள அமைச்சரவையை விட மிகவும் கொடூரமான அமைச்சரவையாக இருக்குமாக இருந்தால் எவ்வாறு இருக்கும் என ஆழமாக பார்க்கவேண்டும்.

எனவே நாட்டில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி முறையினை ஒழிப்பதன் மூலமே நாட்டில் ஏதாவது மாற்றம் ஏற்படும்.

இந்த நாட்டில் எவர் பிரதமர் பதவிக்கு வந்தாலும் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை. அத்தோடு நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு கூட்டமைப்பு எதிராக வாக்களிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். எனினும் அந்த விடயம் தொடர்பில் நாங்கள் அனைத்து கட்சிகளுடனும் ஆராய்ந்து முதல்கட்டமாக ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

“எங்களை சந்திக்க எந்த அரசியல்வாதியும் வரவேண்டாம்.”- மல்வத்து பீடம் அறிவிப்பு !

எம்மைச் சந்திப்பதற்கு எந்தவொரு அரசியல்வாதியையும் இனி அனுமதிக்கப்போவதில்லை என சீயம் நிகாயாவின் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக 3 பௌத்த பீடாதிபதிகளினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு இதுவரை பொறுப்பானவர்கள் பதிலளிக்காத காரணத்தினால் மகாநாயக்க தேரர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்ற, இடைக்கால அரசாங்கம் அமைப்பது உள்ளிட்ட 6 யோசனைகள் அடங்கிய கடிதத்தை மகாநாயக்க தேரர்கள் அண்மையில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு சமர்ப்பித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த ஆவணத்திற்கு இதுவரை எவரும் சாதகமாக பதிலளிக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சியம் நிகாயாவின் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்காக சர்வதேச நாணய நிதியத்தினை ஊக்குவிப்பதில் சீனா முனைப்பு !

தற்போதைய நிதி நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியைப் பெறுவதற்கு இலங்கைக்கு சீனாவின் முழுமையான ஆதரவை இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong இன்று (மே 02) மீண்டும் வலியுறுத்தினார்.

நிதியமைச்சர் அலி சப்ரியுடனான சந்திப்பின் போது Qi Zhenhong இதனை தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பங்குதாரராக, இலங்கையின் சிரமங்களை சாதகமாக பரிசீலித்து, கூடிய விரைவில் சரியான உடன்பாட்டை எட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தை ஊக்குவிப்பதில் சீனா ஒரு செயலில் பங்கு வகிக்க தயாராக உள்ளதாக Qi Zhenhong மேலும் தெரிவித்துள்ளார்.

விரைவில் 13வது திருத்தச்சட்டம் இலங்கையில் அமுல்படுத்தப்படும்.”- யாழில் அண்ணாமலை !

இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 13வது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய பா.ஜ. கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை  தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

‘தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை  கருத்திற்கொண்டு அண்டை நாடான இந்தியா இலங்கைக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்குகின்றது. எரிபொருள் மருந்து மற்றும் பண உதவி போன்ற பல்வேறுபட்ட உதவிகளை இந்த அரசாங்கத்திற்கு இந்திய அரசு வழங்கி வருகின்றது.

அதேபோலத்தான் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு நமது இந்திய நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரால் அண்மைய இலங்கை விஜயத்தின்போது இலங்கை ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அது விரைவில் நடைமுறைத்தப்படும் சாத்தியம் உள்ளது.

அதே போல இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நிலையானது விரைவில் சுமுகமான நிலையை எட்ட இறைவன் அருள் புரிய வேண்டும். அதேபோல் தற்போது உள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா வருவோருக்கு  கடுமையான சட்டங்களை பிரயோகிக்க வேண்டாம் என  அறிவுறுத்தியுள்ளோம்.

இலங்கை மக்களை தமிழ் மக்களை  தொப்புள் கொடி உறவுகளை மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் நேசக்கரம் நீட்டி பார்க்கின்றோம்.

தென் இந்திய மீனவர்களால்  வடபகுதி மீனவர்கள்  பாதிப்பினை எதிர்நோக்குகிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அது உண்மைதான். அது கட்டாயமாக தீர்க்கப்பட வேண்டிய விடயம்தான். ஆனால் சிறையில் இருப்பதற்காக எந்த இந்திய மீனவனும் இலங்கை கடற்பரப்புக்குள் வருவதில்லை ஏதோ ஒரு தவறால்  வருகின்றார்கள். அது தொடர்பில் உரிய கவனம் எடுக்கப்படும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

மீண்டும் இணையும் கூட்டணி ?

ஆளும் கட்சியும் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது என்ற பொது நிலைப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் கலந்துகொண்டதாக சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார். அத்தோடு உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச உள்ளிட்ட உறுப்பினர்களும் இந்த விடயம் தொடர்பில் பொது நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் இணக்கம் தெரிவித்துள்ளார்.

“எந்த அயோக்கியனும் காலி முகத்திடலுக்கு சென்றால் அவர் வீரன் ஆகலாம்.”- விமல் வீவன்ச சாடல் !

எந்த ஒரு அயோக்கியனும் காலி முகத்திடலுக்கு சென்றால் அவர் வீரன். இவ்வாறு நெருக்கடியில் வீரனாகுபவர் வீரன் அல்ல அந்த நெருக்கடியை தீர்ப்பதே வீரருடைய செயல் என விமல் வீவன்ச தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற மே தின கூட்டத்தில்  காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

தற்போதைய நிலையில் யாரும் பிரபல்யம் அடைய விரும்பினால் கோட்டாகோகம சென்றால் சாத்தியமாகும். இன்று வீதியில் இருப்பவர்களில் அதிகமானோர் மத்திய வர்க்கத்தினர் தான். இன்று அவர்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல், சவால் ஏற்பட்டுள்ளது. நெருக்கடிக்கு மத்தியில் ஆர்ப்பாட்டங்களில் வீரனாகுவது பெரிய விடயமல்ல.

எந்த ஒரு கோமாளியும் காலி முகத்திடலுக்கு சென்றால் ஹீரோவாகுவது பெரிய விடயமல்ல. நான் அண்மையில் பார்த்தேன் காவல்துறை அதிகாரி ஒருவர் தேசிய கொடியுடன்  சீருடையில் சென்று வீரக் கதைகள் பேசிக்கொண்டிருந்தார்.

பின்னர் அவர் யார் என தேடி பார்த்தால் 5 கிலோ கிராம் கஞ்சாவுடன் சிக்கிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவர். ஒழுக்காற்று விசாரணைகளுக்குள்ளானவர். அவர் அங்கு சென்றதால் வீரனாகிவிட்டார். இவரைப் போன்று இன்னும் சிலரும் உள்ளனர். பெயர்களை குறிப்பிட்டால் அவர்கள் மனமுடைய வாய்ப்புகள் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.