07

07

“நான் ராஜபக்சர்களுக்கு ஒருபோதும் சரணம் கச்சாமி என குறிப்பிடவில்லை.” – சாணக்கியன் ரணிலுக்கு பதில் !

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ரணிலும் பொறுப்புக் கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘கொலைகாரர்களின் ஆதரவுடன் 2013ஆம் ஆண்டுதொகுதி அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் சபையில் பல தடவைகள் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளேன். பிள்ளையான் 600 பேரை கொலை செய்ததாக குறிப்பிடப்படும் விடயத்தில் முன்னாள் பிரதமர் ரணில்விக்ரமசிங்க எனது பெயரையும் குறிப்பிட்டுள்ளமை பொறுத்தமற்றது. ஏனெனில் நான் 1990 ஆம் ஆண்டே பிறந்தேன். அத்துடன் ராஜபக்சர்களுக்கு ஒருபோதும் சரணம் கச்சாமி குறிப்பிடவில்லை.

இந்தநிலையில் 2015 ஆம்ஆண்டு அர்ஜூன மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக்கி அதன் மூலம் பாரிய மோசடிக்கு ரணில்விக்கிரமசி்ங்க வழிவகுத்தார். அத்துடன் அவரின் உறவினரான அலோசியஸின் மெண்டிஸ் நிறுவனத்துக்கு 3.5 பில்லியன் ரூபா வங்கிஒன்றிடம் கடன் உள்ளது. எனவே அதனை மீண்டும் கொண்டு வருவதற்கு ரணில் விக்கிரமசிங்க உதவவேண்டும்.

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு இவரும் பொறுப்புக் கூற வேண்டும். நான் அவரது இல்லத்தை முற்றுகையிட முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகிய நான் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தை முற்றுகையிடுவது சாத்தியமற்றது.

கோ ஹோம் ரணில் என போராட வேண்டிய தேவை கிடையாது. ஏனெனில் மக்கள் ஏற்கெனவே இவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். தேசிய பட்டியல் ஊடாகவே நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற கோட்பாடுகள் எனக்கு தெரியாது என மொஹமட் முஸாம்பில் குறிப்பிட்டுள்ளார். நான் அவரை போல் தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்படவில்லை. மக்களின் தெரிவின் ஊடாக தெரிவுசெய்யப்பட்டுள்ளேன் என்பதை குறிப்பிட்டுக்கொள்ள விரும்புகிறேன்.’ என குறிப்பிட்டுள்ளார்.

“முக்கியமான வேலை இல்லை என்றால் வீட்டிலேயே இருங்கள்.”- ஆப்கான் பெண்களுக்கு தலிபான்கள் உத்தரவு !

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியப் பிறகு பெண்களுக்கு கடுமையான விதிகளை விதித்து வருகிறது. இந்நிலையில், பொது இடங்களில் வரும் பெண்கள் தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைத்தபடி பர்தா அணிய வேண்டும் என்று தலிபான் அதிரடி கட்டளையை விதித்துள்ளது.

இதுகுறித்து தலிபானின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா பிறப்பிட்ட ஆணையில் கூறியிருப்பதாவது:-

பெண்கள் அனைவரும் தலை முதல் கால் வரை மறைக்கும் பர்தாவை பொது இடங்களில் அணிய வேண்டும். அது பாரம்பரியமானது மற்றும் மரியாதைக்குரியது.

வாலிபர்களை சந்திக்கும்போது தேவையில்லாத கோபங்களைத் தவிர்ப்பதற்காக ஷரியா உத்தரவுகளின்படி, மிகவும் வயதான அல்லது இளைமையாக இல்லாத பெண்கள் கண்களைத் தவிர முகத்தை மறைக்க வேண்டும். பெண்களுக்கு வெளியில் முக்கியமான வேலை இல்லை என்றால் வீட்டிலேயே இருங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அவசரகால பிரகடனம் தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் விசனம் !

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால பிரகடனத்திற்கு எதிராக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய சவால்களைத் தீர்ப்பதற்கு ஜனநாயக மற்றும் அமைதியான அணுகுமுறை அவசியம் மேலும் அனைத்து அடிப்படை உரிமைகளுடன் அமைதியான போராட்டத்திற்கான உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அந்த உரிமைகளைக் கட்டுப்படுத்தும் அவசரச் சட்டங்கள் ஜனநாயக கருத்து சுதந்திரம் மற்றும் தீர்வுகளுக்கு எதிராகச் செயல்படுகின்றன என்றும் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.

“இலங்கையர்களின் குரல்களை செவிமடுங்கள்.”- ஜூலி சங்

இலங்கையில் மற்றொரு முறை அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறித்து கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமைதியான முறையில் போராடும் இலங்கையர்களின் குரல்களை செவிமடுக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று காலை தனது உத்தியோகபூா்வ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையர்கள் தற்போது எதிர்கொள்ளும் உண்மையான சவால்களுக்கு முகம் கொடுத்து நாட்டை மீண்டும் செழிப்பானதாக கட்டியெழுப்ப வேண்டும். அவசர காலச் சட்டங்கள் போன்றவை இதற்கு உதவாது எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

“15 மணித்தியால மின்வெட்டை எதிர்கொள்ள தயாராகுங்கள்.”- நிதி அமைச்சர் அலி சப்ரி

எதிர்காலத்தில் 15 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி நேற்று அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.

அந்நியச் செலாவணி இல்லாத பொருளாதார நெருக்கடி மோசமாகி விட்டதாகவும், அந்நியச் செலாவணிக் கையிருப்பு 50 மில்லியன் டொலருக்கும் குறைவாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

எதிர்காலத்தில் எரிபொருள் இருப்புகளை இறக்குமதி செய்வது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும், அதற்கமைய மின்சார விநியோகம் பாரிய நெருக்கடியாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு முதலில் நாட்டில் நிலையான அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் அமைச்சரவையில் சுட்டிக்காட்டினார்.

“மக்கள் கொடுக்கும் அதிகாரம் வாழ்நாள் முழுவதும் அல்ல தற்காலிகமானது.”- முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

இடைக்கால அரசாங்கத்திற்கு இடமளித்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் அல்லது அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அரசாங்கத்திற்கு தயாராக இல்லை என்றால் பாராளுமன்ற தேர்தலுக்கு செல்ல வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று ( சனிக்கிழமை ) தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “மக்கள் தங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் வழங்குகிறார்கள். மக்கள் கொடுக்கும் அதிகாரம் வாழ்நாள் முழுவதும் அல்ல தற்காலிகமானது என்பதை அவர்கள் உணர வேண்டும்,” என்றும் கூறினார்.

பௌத்த பிக்குகள், சிவில் சமூகம் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட மதத் தலைவர்களின் வலுவான வேண்டுகோளுக்கு செவிசாய்க்காமல் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

 

இதே நேரம் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவை வழங்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு படகில் கை குழந்தையுடன் செல்ல முற்பட்ட இளம் குடும்பம் – நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு !

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகில் கை குழந்தையுடன் சென்ற இளம் குடும்பம் உட்பட 12 பேரை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று (4) அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மன்னார் மடு தேக்கம் பகுதியை சேர்ந்த பத்து மாத கைக்குழந்தையுடன் இளம் குடும்பம் ஒன்றும் பேசாலை பகுதியை சேர்ந்த 7 நபர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்தும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு பெண்கள் சட்டவிரோதமாக படகில் இலங்கைக்கு சொந்தமான தீடை பகுதியில் இறக்கி விடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 12 பேரும் இன்று (08) மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி A.H.ஹைபதுல்லா முன்னிலையில் மதியம் 3 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதவான் நீதிமன்ற நீதிபதி இரு சிறுவர்களையும் பொற்றோரிடம் ஒப்படைக்குமாறு ஏனைய 10 பேரையும் சுமார் ஐம்பதாயிரம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் !

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு அருகில் தற்போது போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

தற்போது இடம்பெற்றுவரும் இந்த ஆர்ப்பாட்ட இடத்திற்கு கலகத் தடுப்புப் பொலிஸார் வரவழைக்கப்பட்டதனை தொடர்ந்து ஓரளவு எதிர்ப்பு கட்டுப்படுத்தப்பட்டது.

இதேவேளை போராட்டக்காரர்களை சந்திக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார். இதே ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவும் அப்பகுதியில் போராட்டம் ஒன்று அவருடைய ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.