09

09

உடைத்து வீழ்த்தப்பட்டது டி.ஏ.ராஜபக்ச நினைவுத் தூபி !

ஹம்பாந்தோட்டை மடமுலனவில் உள்ள டி.ஏ.ராஜபக்ச நினைவுத் தூபி ஆர்ப்பாட்டக்காரர்களால் இடித்தழிக்கபட்டுள்ளது.

கொழும்பு காலி முகத்திடலில் இன்று இடம்பெற்ற போராட்ட வன்முறை சம்பவங்களை தொடர்ந்து நாட்டில் பல இடங்களில் கலவரங்கள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

சேதப்படுத்தப்பட்ட டி. ஏ. ராஜபக்ச நினைவுச் சின்னம்!

இலங்கையில் தொடரும் பதற்றம் – மேலும் இருவர் பலி !

வீரகெடிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 8 பேர் காயமடைந்து வீரகெடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த சிலர் வீரகெடிய வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக தங்காலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வீரகெடிய பிரதேச சபைத் தலைவரின் வீட்டுக்கு தீ வைப்பதற்காக சிலர் வருகை தந்துள்ளனர்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பற்றி எரிகிறது மகிந்தவின் இல்லம் !

மகிந்த ராஜபக்சவின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குருநாகலிலுள்ள அவரது இல்லத்திற்கே ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கலைக்கப்பட்டது அமைச்சரவை !

இலங்கையின் அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பிரதமராக பதவி வகித்த மகிந்த ராஜபக்ச, பதவி விலகுவதாக தன்னுடைய பதவி விலகல் கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்சவிடம் கையளித்துள்ள நிலையில், அமைச்சரவையும் கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் அரச தலைவரின் ஆளுகையின் கீழ் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தீ வைத்து முற்றுகையிடப்படும் ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளின் வீடுகள் !

நாட்டின் சில நகரங்களில் அரசியல்வாதிகளின் கார்கள் மற்றும் வீடுகள் தீ வைத்து எரிக்கப் பட்டுள்ளன.
மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண் டோவின் வீட்டிற்கு ஒரு குழுவினர் தீ வைத்துள்ளனர்.
மொரட்டுவை வில்லோரவத்த பிரதேசத்தில் உள்ள இவரது வீட்டிற்கு வந்த குழுவொன்று அவரது வீட்டை தாக்கி தீ வைத்து எரித்துள்ளதாகவும் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (09) மொட்டுக் கட்சி ஆதரவாளர்களால் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட அரசியல்வாதியான உதேனி அத்துகோரலவின் வீடும் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவின் வீடும் எதிர்ப்பாளர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இதே வேளை முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் வீடும் குருணாகலில் தீ வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

மகிந்தவை கைது செய்யுமாறு எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை !

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்புக்கு ஆதரவாளர்களை அழைத்து வந்த அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 

அமைதியாக போராடிய மக்கள் மீது தாக்குதல் – அமெரிக்க தூதரகம் கண்டனம்!

இன்று (09) அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

“அமைதியாகப் போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

ராஜபக்ஷக்களின் ஆதரவாளர்களை மடக்கிப்பிடித்து தாக்கிய அரச எதிர்ப்பு போராட்டக்காரர்கள் !

பிரதமர் மகிந்தராஜபக்ஷவுக்கு ஆதரவாக இன்று கொழும்புக்கு வருகைதந்து காலிமுகத்திடலுக்குள் புகுந்து தாக்குதலை மேற்கொண்டவர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பல பகுதிகளில் மகிந்தவின் ஆதரவாளர்கள் பயணித்த பேருந்துகளையும் சேதம் விளைவித்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக பிரதமரின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களை பேர வாவிக்குள் தள்ளிவிட்ட சம்பவமொன்று கங்காராம பகுதியில் பதிவாகியுள்ளது.

கொழும்பு காலி முகத்திடலில் கடந்த ஒரு மாத காலமாக நடத்தப்பட்டு வந்த அமைதி வழியான போராட்டம் இன்று குழுப்பப்பட்டது.

பிரமர் மகிந்தவின் ஆதரவாளர்கள் என்றும் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் என்றும் தெரிவித்து பொல்லுகளுடனும் தடிகளுடனும் சென்ற குழுவினர் போராட்டக் களத்தில் உள்ள கூடாரங்களை எரித்தும் அடித்து உடைத்தும் அராஜக செயலில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் காரணமாக போராட்டக் களம் யுத்தப் பூமியாக மாறியதை அடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சுற்றி வளைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் – தற்கொலை செய்துகொண்ட ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் – மோசமடையும் இலங்கையின் நிலை !

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இடம்பெற்ற மோதலில் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்று இன்று மாலை நிட்டம்புவ பிரதேசத்தில் வழிமறிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தில் வந்த குழுவொன்று, அப்பகுதியில் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டில் கிட்டத்தட்ட மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

சம்பவத்தை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்துள்ளதாகவும், சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த இடத்தை விட்டு ஓடி அருகில் உள்ள கட்டிடத்தில் தஞ்சம் அடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் தனது ரிவால்வரை எடுத்து தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகின்றது.

நாட்டை அராஜகமாக்க விரும்பவில்லை – நீண்ட இழுபறிகளுக்கு பின்பு பதவி விலகினார் மகிந்த !

பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவிய இராஜினாமா செய்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் இலாபங்களுக்காக நாட்டை அராஜகமாக்க விரும்பவில்லை என அவர் இன்று (09) தனது விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொழிற்துறை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண ஆகியோரும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.