ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் பெண்கள், தங்கள் மாதவிடாயின் போது மாதத்தில் 3 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சிறந்த அறிவிப்பினை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பிற நடவடிக்கைகளை உள்ளடக்கிய இந்த சீர்திருத்தம், வரும் செவ்வாய்கிழமை அன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
மேலும், அங்கு சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு, சானிட்டரி நாப்கின் பேட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் பள்ளிகளில் தேவைப்படும் பெண்களுக்கு சானிட்டரி பேடுகள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டு பெண்களின் நீண்டகால கோரிக்கையான, சானிட்டரி பேட்கள் மற்றும் டம்பன்களின் விற்பனை விலையில் இருந்து வாட் வரியை நீக்க வேண்டும் என்பதும் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.
இந்த முடிவை இதுவரை எந்த ஐரோப்பிய நாடுகளும் எடுத்ததில்லை. இந்த பெருமையை தட்டிச் சென்ற ஒரே ஐரோப்பிய நாடு ஸ்பெயின் தான்.
பெரும்பாலும் பெண்கள் மாதவிடாய் நாட்களில் அசவுகரியமாகவும், உடல்நலமின்றியும் காணப்படுவார்கள். இதனை கருத்தில் கொண்ட ஸ்பெயின் நாட்டு அரசு அந்நாட்டு பெண்களை மகிழ்விக்கவும், அவர்களது நலனில் அக்கறை கொண்டும் இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த விடுமுறை அறிவிப்பினால் அந்நாட்டில் உள்ள பெண்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஜப்பான், தென் கொரியா, இந்தோனேஷியா மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகளில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், சில நிறுவனங்கள் மாதவிடாய் விடுமுறையை வழங்குகின்றன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், உத்தரபிரதேசத்தில் உள்ள பெண் ஆசிரியர்களின் அமைப்பு, கல்வியாளர்களுக்கு மூன்று நாள் ‘மாதவிடாய் விடுமுறை (பீரியட் லீவ்)’ கோரி பிரச்சாரத்தைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.