14

14

இஸ்ரேலிய படைகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பெண் பத்திரிகையாளர் !

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மேற்குகரை பகுதி, ஜெருசலேம் நகரம் யாருக்குச் சொந்தம் என்பதில் மோதல் நீடிக்கிறது. இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள அப்பகுதிகளில் இன்னமும் பல லட்சம் பாலஸ்தீனர்கள் வாழ்ந்து வருகின்றனர். இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்து இவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நான் ஷிரீன் அபு அக்லே... இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஊடகக் குரல்! | i am Shireen  Abu Akleh - Latest News on Politics, Movies, General News, World news
பாலஸ்தீன பயங்கரவாதிகளை களையெடுப்பதாக கூறி மேற்குகரை பகுதியில் இஸ்ரேல் வீரர்கள் அடிக்கடி தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். இந்த தேடுதல் வேட்டைகளில்  அப்பாவி பாலஸ்தீன மக்கள் சுட்டுக்கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், மேற்குகரை பகுதியில் ஜெனின் நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமுக்குள் நேற்று காலை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது இஸ்ரேல் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அல் ஜசிரா டி.வி.யின் பெண் பத்திரிகையாளரான ஷிரீன் அபு அக்லே (51), கொல்லப்பட்டார். மற்றொரு பத்திரிகையாளர் படுகாயம் அடைந்தார்.
பாலஸ்தீன அகதிகள் முகாமில் இஸ்ரேல் இராணுவ வீரர்களின் தேடுதல் வேட்டை குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக கத்தார் நாட்டின் அரசு செய்தி சேனலான அல் ஜசிரா தெரிவித்துள்ளது. இதுதொடர்பான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது என இஸ்ரேல் பாதுகாப்புத் துறை மந்திரி தெரிவித்தார்.
இந்நிலையில், இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும். அவரது மரணத்திற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்கவேண்டும் என வலியுறுத்திய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பெண் பத்திரிகையாளர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளது.

பா. உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மரணம் – பிரேத பரிசோதனை அறிக்கையால் அதிர்ச்சி !

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.
இதில், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்யவில்லை என்றும், தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களிலேயே பாராளுமன்ற உறுப்பினர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இலங்கையில் திங்கட்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையின் போது நிட்டம்புவ பிரதேசத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து எம்.பி கட்டிடமொன்றில் தஞ்சம் புகுந்துள்ளார்.
பின்னர் பொதுமக்கள் கட்டிடத்தை சுற்றி வளைத்ததால் அவர் தனது சொந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், வத்துபிட்டிவல வைத்தியசாலையில் நீதித்துறை வைத்திய அதிகாரி நடத்திய பிரேத பரிசோதனையில் அவர் தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் தாக்குதலுக்கு உள்ளானதன் காரணமாக பாரியளவிலான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.யின் மரணம் பல காயங்கள், எலும்பு முறிவுகள் மற்றும் உள் இரத்தப்போக்கு காரணமாக இருந்தது, ஆனால் அவருக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இல்லை” என்று தெரிவிக்கப்படுகின்றது.

“நாங்கள் அந்த பக்கமும் இல்லை – இந்த பக்கமும் இல்லை.”- ரணிலின் அழைப்புக்கு மனோகணேசன் பதில் !

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது. ஆனால், அந்த அரசை உடனடியாக காலில் இழுத்து வீழ்த்தும் எந்தவொரு முயற்சிக்கும் ஆதரவளிக்கவும் மாட்டோம். பொது மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு குறைந்தபட்ச தீர்வுகளை காண புதிய அரசுக்கு அவகாசம் தேவை என்பதை நாம் ஏற்கிறோம்.” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமது அரசில் பங்கேற்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எமக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்புக்கு நன்றி கூறி, கொள்கை அடிப்படையில் அதை நாம் நாகரீகமாக மறுத்து விட்டோம். ஆனால் அதற்காக நாம் கட்சி அரசியல் செய்து கூச்சல், குழப்பம் விளைவிக்க விரும்பவில்லை. வாழ்வாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்க அவரால் இயன்றதை பிரதமர் செய்யட்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூட்டணியின் முடிவை அறிவித்தார்.

இது தொடர்பில் கூட்டணி சார்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

ரணில் விக்கிரமசிங்க, எமது முன்னாள் பிரதமர். அவரது பலமும், பலவீனமும் எமக்கு நன்கு தெரியும். பலவீனம் பற்றி இப்போது பேசி ஜனரஞ்சக அரசியல் செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணியில் எவரும் விரும்பவில்லை. சர்வதேச தொடர்பாடல் தொடர்பான, ரணிலின் பலம் மூலம் நாட்டுக்கு நன்மை நடக்குமாயின் அதை நான் முழு மனதுடன் வரவேற்கிறோம்.

இன்று நாட்டில் உணவு இல்லை. மருந்து இல்லை. எரிவாயு இல்லை. எரிநெய் இல்லை. உரம் இல்லை. மின்சாரம் இல்லை. இவற்றுக்கு குறைந்தபட்ச தீர்வுகளையாவது அவர் தரவேண்டும். பிரதமர் அதை செய்யட்டும். அதற்கு பொறுப்புள்ள கட்சியாக நாம் இடம் கொடுப்போம். ஆகவே இன்றைய சூழலில், பாராளுமன்றத்தில் அவரது அரசின் காலை இழுத்து விடும் எந்தவொரு முயற்சியையும் நாம் ஆதரிக்க மாட்டோம்.

நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் உள்ளன. நமது நாடு வாங்கியுள்ள கடன்களை உரிய காலத்தில் திருப்பி செலுத்த முடியாதுள்ளது. ஆகவே கடன் தந்தோரிடம் பேசி கடன் திருப்பி செலுத்துவதை மறு அட்டவணை படுத்த வேண்டும்.

அத்தியாவசிய தேவைகளை பெற அமெரிக்க டொலர் இல்லாமல் உள்ளது. இதற்காக நட்பு நாடுகளிடம் கடன்வழி உதவிகளை, நாணய மாற்று உதவிகளை பெற வேண்டும். இந்தியா இவற்றை ஏற்கனவே வழங்கி வருகிறது. இவை இன்னமும் அதிகரிக்க வேண்டும். ஏற்கனவே உதவி தரும் நட்பு நாட்டு குழுமம் (Consortium) ஒன்றை ஏற்படுத்த பிரதமர் முயற்சி செய்கிறார். இது நல்லது. வரிகொள்கை சீரமைக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்புரீதியாக, குறைந்தபட்சம், 20 ஐ வாபஸ் வாங்கி, மீண்டும் 19 ஐ கொண்டு வர வேண்டும். நாட்டின் குரலுக்கு மதிப்பளித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக ஒரு கால அட்டவணை தயாராக வேண்டும். இனிமேல் ராஜபக்சர்களுக்கு இந்நாட்டு அரசியலில் இடம் தர மக்கள் தயாரில்லை. இதை பிரதமர் புரிந்துக்கொண்டுள்ளார் என நம்புகிறோம்.

அரசில் இணையுமாறு ரணில் அனுப்பிய கடிதத்துக்கு சஜித் பிரேமதாச வழங்கிய பதில் !

பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்புக்கு எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மறுப்பு தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்பட இருக்கும் புதிய அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியை இணையுமாறு இன்று காலை சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.

குறித்த கடிதத்திற்கு பதிலளித்த சஜித், கோட்டாபயவிடம் கூறிய முடிவில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அதே முடிவில் இனியும் நிலைத்து இருப்பார் எனவும் பதிலளித்துள்ளார்.

இதேவேளை, முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பிரதமருக்கு ஒத்துழைப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமருக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டுட்டுள்ளார்.

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பாதுகாக்க 6 பொலிஸ் அதிகாரிகள் நியமனம் !

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸாரை நியமிக்குமாறு அமைச்சர் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளரிடம் பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது.

அதன்படி, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மேலதிகமாக 04 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அதிகபட்சமாக 6 பொலிஸ் அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக தலா இரண்டு T-56 ரக துப்பாக்கிகளை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு வழங்குமாறும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

“இந்தியாவின் கரிசனையினால் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான தனி நிர்வாக கட்டமைப்பினை உருவாக்க முடியும்.”- சிறீதரன்

யுத்தம் நடந்து 30 ஆண்டுகள் அதற்கு பின்னர் 12 ஆண்டுகள் கடந்து 42 ஆண்டுகள் இந்த மண்ணிலே கடந்திருக்கின்றது. ஆனால் வடக்கு கிழக்கில் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் ஏற்படவில்லை. என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வடக்கு கிழக்கின் அபிவிருத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பரசியல் பாதிப்படைய செய்யுமல்லவா எனவும், அதற்கான மாற்று திட்டங்கள் உள்ளதா எனவும் ஊடகவியலாளர் அவரிடம் வினவியபோது இவ்விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் 30 வருடங்களிற்கு மேல் பொருளாதார ரீதியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2009க்கு முதலே 30 ஆண்டுகளிற்கு மேலாக தொடர்ச்சியான பொருளாதார தடை, மக்கள் உழைக்கக்கூடிய சூழல் இல்லா நிலை குறிப்பாக 10 ஆண்டுகளாக மின்சாரம் என்றால் என்ன என்று கேள்வி கேட்குமளவிற்கு வடக்கு கிழக்கிலே மக்கள் வாழ்ந்திருந்தார்கள்.

இந்த நிலையில்தான் பொருளாதார ரீதியில் மக்கள் ஒடுக்கப்பட்டு உற்பத்தி தொழில்துறைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. இலங்கை அரசாங்கம் யுத்தத்தை காரணமாக காட்டிக்கொண்டிருந்தார்கள். உலக நாடுகளும் இலங்கை அரசு சொல்வதை கேட்டு வடக்கு கிழக்கில் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு பின்னின்றன.

யுத்தத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கென பெருந்தொகையான நிதியை இலங்கை அரசுக்கு உலக நாடுகள் வழங்கியிருந்தன. அவ்வாறு வழங்கப்பட்ட நிதிகளைக்கூட அதிவேக பாதைகள், தெற்கின் அபிவிருத்திகளிற்கு இலங்கை அரசு பயன்படுத்தியபோது, அதனை கண்காணிக்கக்கூடிய நிலை இல்லாமல் எங்களுடைய பொருளாதாரம் கீழ் நிலைக்கு சென்றுள்ளது.

எங்கள் மக்களின் தற்துணிவும், அவர்களது சுய நம்பிக்கையும் தாங்கள் உழைத்து வாழ்வோம் என்ற எண்ணமும் இருந்தமையால்தான் இன்று பல நீண்ட நாட்களாக வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழர்கள் தங்களது சுய பொருளாதாரத்தில் பொருளாதாரத்தை கட்டி நிமிர்த்தி வருகின்றார்கள். இந்த நிலையிலே இடைக்கால பொருளாதார நிர்வாகம் தொடர்பிலே பேச்சுக்கள் அடிபடுகின்றது. இது ஒரு நல்ல விடயமாக பலராலும் பார்க்கப்படுகின்றது. நானும் அதனை சாதகமான செய்தியாக பார்க்கின்றேன்.

குறிப்பாக யுத்தம் நடந்து 30 ஆண்டுகள் அதற்கு பின்னர் 12 ஆண்டுகள் கடந்து 42 ஆண்டுகள் இந்த மண்ணிலே கடந்திருக்கின்றது. ஆனால் வடக்கு கிழக்கில் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இளைஞர்களிற்கான தொழில்வாய்ப்பு உள்ளிட்டவை குறைந்திருக்கின்றது. இல்லையென்றும் சொல்லலாம்.

இதற்கான வாய்ப்பாக வடக்கு கிழக்கிற்கான தற்காலிக வாய்ப்பாக வடக்கு கிழக்கினை இணைந்த வகையில் குறிப்பிட்ட சில ஆண்டுகளிற்கு பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கான இடைக்கால நிர்வாகத்தினை உருவாக்குவது காலத்திற்கு பொருத்தமானது என கருதுகின்றோம்.

இது தொடர்பில் புத்திஜீவிகள், புலம்பெயர் உறவுகள் உள்ளிட்டவர்கள் மத்தியில் இந்த விடயம் பரவலாக பேசப்படுகின்றது. இதில் மிக முக்கியமாக பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாகும். பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் ஊடாக தமிழ் மக்களினுடைய அரசியல் அங்கிகாரத்தினை பெற்றுக்கொள்ளுதல், அந்த அரசியல் அங்கிகாரம் என்பது வடக்கு கிழக்கு அபிவிருத்தியினால் கட்டப்படுவது தொடர்பில் சிங்கள மக்களிற்கு கூட்டாக அவர்களிற்கு விளங்கும் வகையில் சொல்வதாகும்.

குறிப்பாக வடக்கு கிழக்கு இணைப்பு, சமஸ்டி என கூறுவது தமிழீழம் எனும் தனிநாடு என சிங்கள மக்கள் மத்தியில் பயக்கின்றது. ஆகவே இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக ஒரு நிர்வாகம் ஒன்று கிழக்கையும், வடக்கையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டால் சிறப்பாக அமையும், ஏற்கனவே இவ்வாறு1987ம் ஆண்டு ஒரு கட்டமைப்பு எழுத்து வடிவிலே பேசப்பட்டு எழுத்துடனேயே போய்விட்டது. சிரான் அமைப்பும் இவ்வாறான நிர்வாக கட்டமைப்பை வரைந்தது. அதுவும் அரசியல் மாற்றங்களால் இல்லாது போனது. அது நடைமுறைப்படுத்தப்படவும் இல்லை.

இப்பொழுது இருக்கின்ற சூழல் இலங்கையின் அரசியலமைப்புக்குள் இந்தியாவினுடைய கூடுதலான கரிசனையில் உதவி வழங்கும் நாடுகளையும் சேர்த்துக்கொண்டால் வடக்கு கிழக்கிற்கான தனி கட்டமைப்பினை உருவாக்க முடியும்.

யுத்த காலத்தில் தென்னிலங்கையில் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அங்கு அபிவிருத்தி அடைந்திருக்கின்றது என்பதுடன், எல்லா மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் மற்றம் துறை சார்ந்த அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வேலைவாய்ப்புக்களும் வழங்ப்பட்டுள்ளது.

ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது. காரணம் யுத்தம். இதனை நிமிர்த்துவதற்கான ஒரு வழியாக இந்த இடைக்கால நிர்வாகத்தினை நாங்கள் பார்க்கின்றோம். இதன் ஊடாக நாட்டுக்கு நிதியை கொண்டுவர முடியும்.

குறிப்பாக உலக நாடுகளின் நிதி, இந்தியாவின் நேரடி கண்காணிப்பில் முதலீடுகளை கொண்டு வருதல், இந்தியாவின் மேற்பார்வையில் கொண்டு வருவதன் ஊடாக பல சலுகைகளையும் எதிர்பார்க்கலாம். புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் முதலீடுகளை வடக்கு கிழக்கிலே அதிகரிப்பதன் மூலம் தொழில் துறைகளை இயக்க முடியும். குறிப்பாக ஆனையிறவில் உள்ள குறிஞ்சாதீவு உப்பளம், மட்டக்களப்பு காகித தொழிற்சாலை உள்ளிட்ட மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை இப்பொழுது இருக்கின்ற காலத்திற்கேற்ற தொழிற்சாலைகளாக மாற்றியமைப்பதன் மூலம் உடனடி வேலைவாய்ப்புக்களை உருவாக்க முடியும்.

அதேபோன்று பரந்தன் இரசாயன தொழிற்சாலையில் கைத்தொழில்பேட்டை ஒன்றை உருவாக்குவதன் மூலம் அதில் பல்வேறுபட்ட தொழில் துறைகளை உருவாக்க முடியும். வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சந்திக்கக்கூடிய பகுதியாக பரந்தன் பகுதி உள்ளது.

அவ்வாறான தொழிற்துறைகளை முன்னெடுப்பதன் மூலம் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி அலையொன்றை அல்லது தொழில் புரட்சியொன்றை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில்தான் இந்த இடைக்கால நிர்வாகம் தொடர்பில் நாங்கள் சிந்திக்கின்றோம். இது தொடர்பில் நாங்கள் பல தடவை சிந்திக்க இருக்கின்றது. இது தொடர்பில் கட்சியின் உயர் மட்டத்திலும் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டிருக்கின்றது.

தொடர்ந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளுடனும் இது தொடர்பில் கூடி ஆராய்ந்து அவர்களின் கருத்துக்களும் பெறப்பட்டு வடக்க கிழக்கில் பொருளாதார ரீதியாக ஒரு நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் அரசியல் உள்ளிட்ட விடயங்களிற்கும் பலத்தை தரும் என்று நாங்கள் கருதுகின்றோம்.

இதேவேளை வனவள திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றால் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புக்களை தடுத்து வடக்கு கிழக்கினை பாதுகாக்க முடியும் என்பதுடன், வடக்கு கிழக்கு என்றால் அது தமிழீழம் அல்ல என்பதையும், உலகத்தில் உள்ள சமஸ்டியின் கூடிய அலகாக இந்த நாட்டில்தான் இருக்கின்றது. அவர்கள் அப்படி வாழ வேண்டும் என்பதில் நியாயம் உள்ள என்பதை சிங்கள மக்கள் உணரக்கூடிய வகையிலான செயற்பாடடை அதன் ஊடாக கொண்டுவர முடியும்.

அதுதான் தென்பகுதி மக்களிற்கும் நன்மையை கொண்டு வரும். ஏனென்றார் நிதி நாட்டுக்குள் கொண்டுவரப்படும்போது இலங்கையின் பொருளாதாரத்திலும் கடுமையான வளர்ச்சியினை கொண்டுவரும். சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ளக்கூடிய இந்த காலத்தில் இடைக்கால நிர்வாகம் என்பது எங்களிற்கு அவசியமானது.

அது தொடர்பில் தூர நோக்கோடும், நல்லெண்ணத்தோடும் ஒவ்வொருவரும் சிந்தித்தால் வாய்ப்பானதாக அமையும் என்று நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்தார்.

இவ்வாறான விடயத்தை நடைமுறைப்படுத்த முற்படுகின்ற பொழுது மத்திய அரசினை நீங்கள் எதிர்க்கின்றபொழுது அவர்களும் இதனை எதிர்ப்பார்கள் அல்லவா என அவரிடம் ஊடகவியலாளர் வினவினார்,

சுனாமி ஏற்பட்ட குறிப்பிட காலத்தில் இவ்வாறான நிர்வாக அலகு ஒன்றை சிரான் அமைப்பு விரைந்து முயற்சி எடுத்தபொழுது ஆட்சியில் ரணில் விக்ரமசிங்க இருந்தார். அதன் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் அது கைவிடப்பட்டது. தற்பொழுது அவர் பிரதமராக இருப்பதால் குறித்த திட்ட வரைபை அவர் மறுக்கமாட்டார் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு !

யாழ்ப்பாணம் நல்லூரடியில் உள்ள தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவுத்தூபியின் முன்னால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இனப்படுகொலை தொடர்பான ஆவணங்கள் ”தமிழினப் படுகொலை நினைவு முற்றம்” என்ற பெயரில் இன்று மூன்றாவது நாளாகவும் காட்சிப்படுத்தப்பட்டு, அங்கு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டுவருகின்றது.

மே 18ம் திகதி வரை தினமும் தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தின் முன்னால் மதிய வேளையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெறும்.

இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டுகிறது நியுசிலாந்து !

இலங்கைக்கு உதவிகளை வழங்க நியூசிலாந்து அரசாங்கம் முன்வந்துள்ளது.

நியூசிலாந்து அரசு இலங்கைக்கு நிதியுதவி! - Eelanadu

இதற்கமைய, நாட்டிலுள்ள விவசாயிகள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக 5 இலட்சம் நியுசிலாந்து டொலர்களை வழங்கவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

உலக உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் ஊடாக இலங்கைக்கு இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் நனையா மஹுடா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் சிறுபோக பயிர்ச் செய்கைக்காக, 65 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரத்தை வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புதிய அரசில் பழைய அமைச்சர்கள் மீண்டும் நியமனம் !

ரணில்-கோட்டபாய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில், புதிதாக நான்கு அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.

அந்த வகையில்,

தினேஷ் குணவர்தன – பொதுநிர்வாகம் அமைச்சு,

ஜீ.எல்.பீரிஸ் – வெளிநாட்டமைச்சு,

பிரசன்ன ரணதுங்க – நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சு,

கஞ்சன விஜேசேகர – மின்சக்தி , வலுசக்தி அமைச்சு

என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவையில் எந்த பதவியும் வேண்டாம் – சஜித் பிரேமதாச மீண்டும் கடிதம்!

நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் எந்தவொரு அமைச்சு பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஏற்க மாட்டார்கள் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நேற்று(வெள்ளிக்கிழமை) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் பதவியை தாம் பொறுப்பேற்க தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரினால் நேற்று ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

எனினும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கான தனது தீர்மானத்தை ஒருபோதும் மாற்ற போவதில்லை என ஜனாதிபதி பதில் கடிதம் மூலம் எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதில் வழங்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் ஒரு முறை ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், பிரதமராக பதவியேற்கவுள்ளதாக தாம் நேற்றைய நாளில் முதன் முதலாக அறிவித்ததாக ஜனாதிபதியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தமை முற்றிலும் தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.