இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என வலி.மேற்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பிரதேச சபையின் அமர்வு நேற்று (வெள்ளிக்கிழமை) தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றபோதே பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சபை அமர்வின்போது உறுப்பினர் திருமதி ச.சுபாஜினி மேற்படி பிரேரணையை முன்வைத்து உரையாற்றினார். வன்னியில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு தாமும் ஒரு சாட்சியாளர் என அவர் எடுத்துரைத்தார். அங்கு இடம்பெற்ற வேதனைகளையும் வலிகளையும் உணர்ந்தவர் என்ற அடிப்படையில் அது இனப்படுகொலையே என அவர் கூறினார்.
இதன்போது, உறுப்பினர்களான ந.பொன்ரசா, சி.இதயகுமாரன், ச.ஜெயந்தன், சி.குணசிறி ஆகியோரும் இறுதியில் தவிசாளரும் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக தமது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றினர்.
இறுதி யுத்தம் என்ற பெயரில் அரசாங்கம் திட்டமிட்ட இனப்படுகொலையை அரங்கேற்றியது என்பதற்கு பல சான்றாதாரங்கள் உள்ளன என உறுப்பினர் பொன்ராசா தெரிவித்தார்.
அங்கு மூன்று இலட்சம் மக்கள் மட்டுமே சிக்கியிருக்கின்றார்கள் என அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால், கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சிய ஐந்து இலட்சம் வரையான பொதுமக்கள் வவுனியா நலன்புரி நிலையங்களில் தஞ்சமடைந்தனர்.
ஆனால், ஆறு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அங்கு வசிக்கின்றனர் என புள்ளிவிபரங்கள் தெரிவித்திருந்தன. பல இலட்சம் பேரை திட்டமிட்டுக் கொன்றுவிக்கும் நோக்கத்துடனேயே அரசு யுத்தத்தை நடத்தியது என அவர் எடுத்துரைத்தார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஒரு இனப்படுகொலையாளி எனவும் நவாலி சென்.பீற்றர் தேவாலயம், செம்மணிப் படுகொலை உள்ளிட்ட பல படுகொலைகள் அவரது காலத்திலேயே இடம்பெற்றவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று, கொல்லப்பட்ட உறவுகளுக்காக தீபமேற்றி அஞ்சலி செலுத்திய சந்திரிகா அப்படத்தை தமது முகப்புத்தகத்தில் தரவேற்றி முப்பது வருட காலம் இடம்பெற்றது இனப்படுகொலை என பதிவிட்டிருக்கிறார் எனவும் கூறினார்.
உலகில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள், போன்ற இரசாயன ஆயுதங்களை தமிழ் மக்கள் மீது வீசி கொடூரமாக அவர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என உறுப்பினர் ஜெயந்தன் தெரிவித்தார்.
தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை கனேடிய நாடாளுமன்றமே ஏற்று தீர்மானம் நிறைவேற்றியதை சுட்டிக்காட்டிய அவர், சர்வதேசம் இன்று தமிழர் பக்கம் தமது பார்வையைத் திருப்பியிருக்கின்றது எனவும் கூறினார்.
வன்னியில் அப்பாவி மக்கள் திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என உறுப்பினர் இதயகுமாரன் தமது உரையில் தெரிவித்தார். உணவைக்கூட அனுப்ப மறுத்து அரசாங்கம் தமிழ் மக்களை படுகொலை செய்தது என்பதை அவர் எடுத்துரைத்தார்.
இதேவேளை, தாமும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற அடிப்படையில் யுத்தத்தின் கொடூரங்களை எடுத்துரைத்தார் உறுப்பினர் குணசிறி.
கடந்த காலங்களில் தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வருடம் தடையின்றி நடைபெற்றதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இறுதியில், தவிசாளர் தமது உரையில், வன்னியில் எமது மக்கள் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டனர். இதை ஆவணப்படுத்தவேண்டிய, இதற்கு நீதி கோரவேண்டிய வரலாற்றுக் கடமை எமக்கு உண்டு.
உலகமே பார்த்துக்கொண்டிருக்க எமது மக்கள் திட்டமிட்டு இன அழிப்பு செய்யப்பட்டார்கள். நாகரிகம் உள்ள மனித இனம் செய்யாத செயலை இலங்கை அரச படைகள் அரங்கேற்றியிருக்கின்றது.
இங்கு இடம்பெற்றது இனப்படுகொலையே என்ற தீர்மானத்தை நாம் இன்று இந்த உயரிய சபையில் நிறைவேற்றுகின்றோம். ஏனைய சபைகளும் இத்தீர்மானத்தை நிறைவேற்றி, இந்த நூற்றாண்டில் இலங்கை அரச படைகள் நடத்திய அநாகரிகத்தை ஆவணப்படுத்தவேண்டும். – என்றார்.
இதேவேளை, இத்தீர்மானத்தை முன்வைத்து சபை உறுப்பினர்கள் உரையாற்றிக்கொண்டிருந்தபோது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறிச் சென்றிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.