உயிரிழந்த ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விரைவாக நடவடிக்கை எடுத்து நீதியை பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.
“ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவிக்கின்றேன்.
இந்த கொடூர குற்றத்திற்கு அவரது குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்க நான் உறுதியளிக்கிறேன். சிறுமி ஆயிஷா சுவர்க்கம் செல்ல எனது பிரார்த்தனைகள்.” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பண்டாரகம – அட்டலுகம பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா நேற்றையதினம் காணாமல் போயிருந்த நிலையில் இன்று 28 ஓடைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை இன்று நடைபெறும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
……………………………………
யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் வைத்து 19 டிசம்பர் 2000ஆம் ஆண்டு ராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட எட்டு தமிழர்களின் சடலங்கள், கழுத்தறுக்கப்பட்ட நிலையில், மலசலக் குழியொன்றிலிருந்து மீட்கப்பட்டன. மேற்படி நபர்கள் கடத்தப்பட்ட மறுநாள் 20ஆம் தேதி இந்தப் படுகொலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட எட்டுப் பேரில் 05 வயது சிறுவனும், பதின்ம வயதுடைய மூவரும் அடங்குவர்.
மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் ராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க என்பவர், ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ வழங்கிய பொதுமன்னிப்புக்கு இணங்க விடுவிக்கப்பட்டிருந்தார்.
இது போலவே சிறுமி ஹிசாளினி முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட நிலையில் தீக்காயங்களுடன் இறந்திருந்தார். அது தொடர்பாகவும் ஆரம்பத்தில் பெரிதாக பேசப்பட்டு பின்னர் அனைவரும் மறந்து விட தீர்வே கிடைக்கவில்லை. இது தொடர்பில் ராஜபக்ஷ தரப்பு பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவின் காலத்தில் இன்னுமொரு கொலை நடந்துள்ளது. இது பற்றி வாய்திறந்துள்ளார் கோட்டாபாய. முன்னைய இரு சம்பவங்களின் போதும் கோத்தாபாய தான் ஜனாதிபதியாக இருந்தார். இப்போது திடீரென இது பற்றி ஜனாதிபதி பேசியிருப்பது அவர் மீது இப்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பலைகளை சமாளிப்பதற்கானது போலவே தோன்றுகிறது.
இதற்காவது ஒழுங்கான தீர்ப்பு கிடைக்குமா ?