June

June

1.6 சதவீதத்தால் வீழ்ச்சி கண்ட இலங்கையின் பொருளாதாரம் !

2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 1.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்மிக்க பெரேராவின் சொந்த செலவில் யாழில் குடிவரவு – குடியகல்வு அலுவலகம் !

யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு – குடியகல்வு அலுவலகமொன்றை தனது தனிப்பட்ட செலவில் திறந்து வைக்க எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

 

தனியார் ஊடக நிகழ்வு ஒன்றில்  கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐந்து மாகாணங்களில் மேலும் ஐந்து குடிவரவு – குடியகல்வு அலுவலகங்களைத் திறக்குமாறு ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் முதலாவதாக தனது சொந்தப் பணத்தில் யாழ்ப்பாணத்தில் அலுவலகமொன்றை திறப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எந்த வேலையும் செய்யாதோரின் எண்ணிக்கை திடீர் உயர்வு!

நாட்டில் குறைந்தபட்சமாக வேலைத் தேடுபவர்களை விட எந்தவொரு தொழிலையும் செய்யாதோர் அதிகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் 2021ஆம் ஆண்டிற்கான நாட்டின் வேலைப்படை தரவுகளின் படி, நாட்டின் பொருளாதாரத்தில் செயற்பாட்டில் உள்ள மக்கள் தொகை சுமார் 8.55 மில்லியன் ஆக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேசமயம் நாட்டின் பொருளாதாரத்தில் செயற்பாட்டில் அல்லாதோர் சுமார் 8.58 மில்லியனாகவும் காணப்படுகிறது.

அவர்களில் , 73 சதவீதமானேர் பெண்களாக உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு கால அவகாசம் வழங்குங்கள் – ஐ.தே.க கோரிக்கை!

நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையளித்தால் ஆறு மாதம், ஒரு வருடம், ஐந்து வருடத்தில் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என கூறும் எதிர்கட்சிகள் அந்த கால அவகாசத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்க மறுப்பது ஏன் ? என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர், ருவான் விஜயவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

தொழில் வல்லுநர்களுடன் இன்று (28ம் திகதி ) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ருவான் விஜயவர்த்தன இக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.

 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்று இன்னும் இரண்டு மாதங்கள் பூர்த்தியாகவில்லை என்பதை சுட்டிக்காட்டிய ருவான் விஜேவர்தன, இரண்டு வருடங்கள் சீரழிக்கப்பட்ட நாட்டை சில நாட்களிலேயே நாட்டை கட்டியெழுப்ப கூறுவது, இந்த நெருக்கடி சூழ்நிலையில் அரசியல் இலாபம் தேட முற்படுபவர்களே தவிர நாட்டை நேசிப்பவர்கள் அல்ல எனவும் சுட்டிகாட்டியுள்ளார்.

நாட்டை மீளவும் கட்டியெழுப்ப, முன்பிருந்த நிலைக்கு நாட்டை கொண்டு வருவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு குறிப்பிட்டளவு கால அவகாசத்தை வழங்க வேண்டும் என ருவான் விஜயவர்த்தன் கோரியுள்ளார்.

இலங்கை சிறுவர்களின் போஷாக்கான உணவுக்காக 20மில்லியன் அமெரிக்க டொலர்கள் – பைடன் அறிவிப்பு !

இலங்கையில் உள்ள சிறுவர்களும் உணவு பாதுகாப்புக்காக அமெரிக்காவினால் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற ஜீ – 7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 800,000க்கும் மேற்பட்ட இலங்கை சிறுவர்களுக்கான உணவு பாதுகாப்பு மற்றும் எதிர்வரும் 15 மாதங்களில் 27,000க்கும் மேற்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு உணவு வவுச்சர்களை வழங்குதல், அத்துடன் பாடசாலை ஊட்டச்சத்து திட்டத்திற்கு ஆதரவளிப்பதும் இந்த நிதியுதவியின் நோக்கமாகும்.

அத்துடன், உணவு உற்பத்தியை அதிகரிக்க 30,000 விவசாயிகளுக்கு விவசாய உதவி மற்றும் நிதி உதவியை வழங்குதலும் இந்த திட்டத்தில் உள்ளடங்கும். அதேபோல், இந்த 20 மில்லியன் மனிதாபிமான உதவியானது சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்காவின் முகவரகத்தினால் (USAID) வழங்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் பசியை போக்கு முடியவில்லை என்றால் முடியவில்லை என்றால் பதவி விலகுவேன் என்கிறார் தம்மிக !

எதிர்வரும் 6 மாதங்களில் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதே தமது இலக்கு என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் பசியை போக்கு முடியவில்லை என்றால், அதிகாரத்தில் இருப்பது அர்த்தமில்லை என தனது தாய் தெரிவித்ததாக, தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

டொலர்களை உள்ளீர்ப்பதற்கான வழிமுறைகளையும் பட்டியலிட்டுள்ளார். வங்குரோத்தடைந்த கம்பனிகளை பொறுப்பேற்று, அதனை கட்டியெழுப்பும் நிர்வாக திறன் என்னிடமுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சவாலையும் வெற்றிகொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

நாட்டு மக்கள் பசியில் இருக்கும் போது நான் மட்டும் உண்பதில் அர்த்தம் இல்லை. ஆக, சென்று எதையாவது செய் எனக்கூறியே அம்மா என்னை நாடாளுமன்றம் அனுப்பி வைத்தார்.

அதனை 6 மாதங்களுக்குள் செய்ய முடியாவிட்டால் அமைச்சு பதவியை துறக்குமாறு மனைவி அறிவுரை கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சு பதவியில் இருந்து நாட்டில் மாற்றத்தை செய்யத் தவறினால் ‘தாத்தா கம் ஹோம்’ என பதாகை ஏந்தப்படும் என பிள்ளைகளும் எச்சரித்துள்ளனர்.

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 54 பேர் கைது !

மட்டக்களப்பு பாலமீன்மடு கடற்கரையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு இயந்திரப் படகு ஒன்றில் சட்டவிரோமாக சென்ற 54 பேரை கிழக்கு கடல் பகுதியில் வைத்து நேற்று (26) இரவு கடற்படையின் கைது செய்து திருகோணமலை கடற்படை முகாமிற்கு இன்று (27) மாலை 3 மணிக்கு அழைத்துவரப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவதினமான நேற்று இரவு மட்டக்களப்பு கிழக்கு கடல் பகுதியில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது மட்டக்களப்பு பாலமீன்முடு கடற்கரையில் இருந்து சிறிய படகுகள் மூலம் கிழக்கு கடலில் தரித்து நின்ற இயந்திர படகிற்கு சட்டவிரோத குடியேற்றகாரர்கள் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அவுஸ்ரேலியாவுக்கு புறப்பட்டு பிரயாணித்து கொண்டிருந்த இயந்திர படகை கிழக்கு கடலில் வைத்து கடற்படையினர் இடைமறித்து சோதனையிட்ட போது அதில் சட்டவிரோமாக அவுஸ்ரோலியாவுக்கு சென்று கொண்டிருந்த 2 பெண்கள் உட்பட 54 பேரை கைது செய்தனர்.

மட்டக்களப்பு, வாழைச்சேனை, திருகோணமலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் பயணித்த படகை கடற்படையினர் இழுத்து கொண்டு திருகோணமலை கடற்படை முகாமிற்கு இன்று மாலை 3 மணிக்கு வந்தடைந்ததுடன் அவர்களிடம் விசாரணைகளை மேற்கோண்ட பின்னர் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஓப்படைத்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் தெரிவித்தனர்.

யாழில் போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்பூட்டல் நடவடிக்கை !

போதைப்பொருள் பாவனை தொடர்பாக விழிப்புணர்வூட்டும் வகையில் பேரூந்துகளில் ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

யாழில் போதைப்பொருள் பாவனை தொடர்பாக விழிப்புணர்வூட்டும் நிகழ்வு !

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட தன்னார்வ அமைப்புக்களின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் உஜித் லியனகே உள்ளிட்ட மாவட்ட செயலக அதிகாரிகள் தன்னார்வ அமைப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உளவளதுணை, சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட 1927 என்கிற உடனடி இலவச தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தும் பதாகை திறந்து வைக்கப்பட்டது.

எரிபொருள் பெறுவதற்காக காத்திருந்த வாகனங்களை மோதித்தள்ளிய பேரூந்து – சாரதி தப்பியோட்டம் !

மட்டக்களப்பு – ஊறணி பகுதியில் எரிபொருள் பெறுவதற்காக காத்திருந்த வாகனங்கள் மீது தனியார் பேருந்தொன்று மோதியுள்ளது.

இன்று காலை இடம்பெற்றுள்ள குறித்த சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஊறணி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்திற்கு முன்னால் இன்று காலை வரிசையில் தரித்திருந்த வாகனங்கள் மீது வீதியில் பயணித்த தனியார் பேருந்தொன்று மோதியுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் காயமடைந்த ஐந்து பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சாரதி தப்பியோட்டம் விபத்தையடுத்து பேருந்தின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆசிரியர்களுக்கு பெற்றோல் கிடைத்தால் போதும் – ஏனையோருக்கு பெற்றோல் தேவையில்லை..? – ஆசிரியர்களின் மனோநிலை தான் என்ன..?

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கோட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோல் வழங்கக் கோரி இன்று திங்கட்கிழமை ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுர சந்தியில் போராட்டம் மேற்கொண்டனர்.
ஓட்டமாவடி பிரதேச சபை முன்பாக இருபக்கமும் வீதியினை மறித்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி வழியாக வருகை தந்து ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுரம் வரை சென்று நான்கு பக்கமும் உள்ள வீதியினை மறித்து வீதியில் அமர்ந்து சுமார் இரண்டரை மணி நேரம் போராட்டம் மேற்கொண்டனர்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையிலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை வழமை போன்று இயங்குமாறு மாகாணப் பணிப்பாளர் அறிவித்த நிலையில் பாடசாலைக்கு செல்வதற்கு அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் இன்மையால் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலைமை காணப்பட்டு வருகின்றது.
ஓட்டமாவடி கோட்டத்தில் 27 பாடசாலைகளில் ஏழு பாடசாலைகள் கஷ்டப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் தூர இடங்களில் உள்ள நிலையில் இங்கிருந்து செல்லும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் போக்குவரத்து பிரச்சனை காரணமாக பாடசாலை வருகை குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் தங்களுக்கு உரிய எரிபொருளிளை வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது எழுத்தறிவித்தவன் நடுத்தெருவில் அவமானம், வேண்டும் வேண்டும் எரிபொருள் வேண்டும். இல்லையேல் போராட்டம் தொடரும், கல்வியை சீரழிக்காதே எரிபொருள் வழங்கு, ஆசிரியர் சமூகத்தினை சீரழிக்காதே, பாடசாலை செல்ல அதிபர், ஆசிரியருக்கு பெற்றோல் வழங்கு என பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
………………………………………………………………
எழுத்தறிவித்தவர்களுக்கு பெற்றோல் கொடுக்க வேண்டும் – அரச சேவைக்கு பெற்றோல் கொடுக்க வேண்டும் என எண்ணுவதெல்லாம் ஒரு பக்க சார்பான மனோநிலை மட்டுமே. இந்த போராட்டங்கள் எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாதவை.
நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை பெற்ற வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர்(படம்)
அண்மை நாட்கள் வரை வைத்தியர்களுக்கு பெற்றோல் அவசியமானது பேசிக்கொண்டிருந்தார்கள். வைத்தியர்களிலும் பலர் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தெரு இடையிலேயே வைத்து பெற்றோல் வாங்கிச்சென்ற சோகங்களும் பதிவாகியிருந்தன். இந்த நிலையில் நேற்றையதினம் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்.ஏ.கேதீஸ்வரன் நீண்ட எரிபொருள் வரிசையில் காத்திருந்து தனது மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் பெற்றுக் கொண்டிருந்தததை நேற்றைய செய்திகளில் அதிகம் கண்டிருந்தோம். ஆரோக்கியமான முன்மாதிரியாக அவர் செயற்பட்டிருந்தார்.
இங்கு அரசு வேலைகள் செய்வோருக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற வாத – விவாதங்கள் ஏற்க முடியாதவை. மாணவர்களின் எதிர்காலத்துக்கு உதவ பெற்றோல் தாருங்கள் – சுயநலம் பார்க்காது நாம் வேலை செய்கிறோம்.” என பெற்றோலுக்காக பேராடும் இதே ஆசரியர்கள் தான் சம்பளம் கேட்டு பாடசாலைகளுக்கே போகாது இருந்தார்கள். அப்போது மாணவர்களினுடைய எதிர்காலம் நாசமாகவில்லையா..?
அடுத்த முக்கியமான விடயம் இவர்கள் என்ன அடிப்படையில் தொழில்களை வகைப்படுத்துகிறார்கள்..? எது அத்தியவசியமானது..? எதற்கு பெற்றோல் வழங்க வேண்டும் என்கிறார்கள்… எல்லாம் முழுமை முரணானது.
நாளாந்தம் கூலி வேலைக்கு செல்பவனின் வீட்டில் அடுப்பு எரிய வேண்டும் என்றால் அவன் தினமும் வேலைக்கு போக வேண்டும். அவன் வேலைக்கு போக வாகனம் தேவை. அதற்கு பெட்ரோல் ல் தேவை. அவன் கூலிக்கு செல்லாமல் தான் 5 நாட்களுக்கும் மேலாக தெருவிலேயே காத்துக்கிடக்கிறான்.   அவன் குடும்பமும் முழுப்பட்டினி தான். அப்படியானால் அவர்கள் அரசாங்க ஊழியர்கள் இல்லை என்பதால் எக்கேடு கெட்டால் என்ன..? என்ற மனோநிலையை கொண்டுள்ளாமா என்ற பக்கமும் உள்ளது.
எல்லாமும் எல்லோர்க்கும் சமனாக கிடைக்க வேண்டும் என்ற சிந்தனை எல்லா தளத்திலும் உருவாகும் வரை – எல்லோர் மனதிலும் உருவாகும் வரை – உருவா்கப்படும் வரை சுயநலம் மட்டுமே மேலோங்கி இருக்கும். இந்த வரிரசகளும் இன்னமும் நீளும் !